படித்தேன்… ரசித்தேன் - 42: பனை எனும் வரம்

படித்தேன்… ரசித்தேன் - 42: பனை எனும் வரம்

எனது கிராமத்து வீட்டில் ஏகப்பட்ட தென்னை மரங்களும், ஒரு நாரத்தம் மரமும் இருந்தன. ஆம் இருந்தன. இப்போது இல்லை. அதில் ஒரு தென்னை மரம் வீட்டுக்கு மேலே எந்த நேரத்திலும் சாய்ந்துவிடுமோ என்று அஞ்சுவது மாதிரி சாய்ந்திருக்கும். அதற்கு ’கோணத் தென்ன மரம்’ என்று நாங்கள் பெயர் வைத்திருந்தோம்.

ஒருகட்டத்தில் வீட்டை விற்றுவிட்டு, மொத்த குடும்பமும் சொந்த கிராமத்தைவிட்டு அருகில் இருக்கும் சிறு நகரத்துக்கு நகர்ந்தோம். எங்கள் வீட்டை வாங்கியவர் செய்த முதல் வேலை என்ன தெரியுமா? அந்தக் கோணத் தென்ன மரத்தை வெட்டியதுதான்.

இப்படி மரம் என்பது எனது உணர்வுகளின் அருகிலேயே இருப்பதால்… மரம் தொடர்பான எந்தப் புத்தகத்தையும் விட்டுவைப்பதில்லை. அப்படி அண்மையில் நான் படித்தது ‘பனை மரமே… பனை மரமே’ என்கிற ஆ.சிவசுப்பிரமணியன் எழுதிய புத்தகம் ஆகும்.

பொதுவாக நாம் அனைவரும் பயணங்களில் சாதாரணமாகக் கடந்து சென்றுவிடுகிற மரம் இது. இம்மரத்தைப் பற்றிய அரிய தகவல்களைக் கொண்டிருக்கிற இப்புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டும் என்கிற பெருவிருப்பத்தில்… இதில் நான் படித்து அறிந்துகொண்ட தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு சமூகத்தின் வரலாறு மற்றும் பண்பாடு போன்றவற்றுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட ஒரு மரம் என்றால், அது ஓங்கி வளர்ந்த பனை மரம் மட்டுமே. பனை மரம் தானாக வீழ்வது கிடையாது. அதை யாராவது வெட்டி வீழ்த்தினால்தான் வீழும் என்கிற முதல் தகவலே… மேலும் இம்மரத்தைப் பற்றிய செய்திகளைப் படித்துத் தெரிந்துகொள்ள வைக்கிறது. தமிழர்களின் சமூகப் பண்பாட்டோடும், வரலாற்றோடும் தொடர்புடைய தாவரம் இது. நமது மாநில மரமே பனைதான் என்பது தமிழர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆ.சிவசுப்பிரமணியன்
ஆ.சிவசுப்பிரமணியன்

செம்மண் நிலம், களிமண் மற்றும் மணற்பாங்கான நிலப் பகுதிகளில் பனங் (பனை விதை) கொட்டையை ஊன்றி பனையை வளர்க்கலாம் என்று இப்புத்கத்தில் கூறுகிறார் சிவசுப்பிரமணியன். ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ஆயிரம் பனை மரங்களை வளர்க்கலாமாம். ஆதி தமிழர்கள் தங்களின் இலக்கியம், இலக்கணங்களைப் பனை ஓலையில்தான் எழுதி பாதுகாத்தனர். பழமையான தமிழ் ஓலைச்சுவடிகள் எல்லாம் கிடைக்காமல் போயிருந்தால் நம் தமிழின் பெருங்காப்பியங்களும், சங்கத்தமிழும், திருக்குறளும் நமக்குக் கிடைக்கவே கிடைத்திருக்காது.

வாய்க்கால், குளம், ஏரி போன்ற நீர்நிலைக் கரைகளிலும், புன்செய் நிலங்களின் எல்லைப் பகுதிகளிலும், நன்செய் நிலப் பகுதிகளின் இடையிலும், கடற்கரை ஓரங்களிலும் பனை மரங்கள் வளரும் என்கிற அதன் புவியியல் சார்ந்த தகவல் படிப்பவர்களை மேலும் மேலும் பல பக்கங்களைத் தொடர்ந்து வாசிக்க வைக்கிறது.

பொதுவாக செம்மண், கரிசல், மணற்பாங்கான நிலப் பகுதிகளில் வளரும் பனை மரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் பதநீர், நுங்கு, பனங்கிழங்கு போன்றவற்றுக்குத்தான் சுவை கூடுதலாக இருக்குமாம். தமிழகத்தில் வளரும் பனை பால்மே (Palmae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் Flabellifer என்பதாகும். கிளைகள் இல்லாத தாவர வகையான பனை 30 அடி உயரம் வரையில் வளருமாம். ஒரு பனை மரம் 120 ஆண்டுகள் வரையில் வாழும் என்கிற செய்தியைப் படிக்கிற நீங்கள்… இனிமேல் பனை மரத்தைப் பார்த்தால் அண்ணாந்து பார்த்து அதிசயிப்பீர்கள். நிலத்தில் விழும் தண்ணீரைத் தேக்கி, அப்பகுதியில் ஈரப்பதம் நிலைத்திருக்க பனை மரத்தின் நீண்ட சல்லி வேர்கள் பயன்படுகின்றன.

பனையின் வேர், தூர் பகுதி, மாம், காம்பு, ஓலை என. ஒட்டுமொத்த மரமும் மனிதர்களுக்குப் பயன் தருவதால் 'கற்பக விருட்சம்' என்ற சிறப்பு பெயரிட்டு இம்மரத்தை தமிழர்கள் அழைத்திருக்கிறார்கள். பனை மரத்துக்கு ‘பயன் மரம்’ என்கிற இன்னொரு சிறப்பு அடைமொழியையும் நம் தமிழ் பெரியோர் வழங்கியிருக்கின்றனர்.

வரலாற்றில் பாடல்பெற்ற மரமாகப் பனை திகழ்கிறது. ஊர் புரத்து எல்லைப் பகுதிகளில் பனை மரங்களை வளர்ப்பதற்குரிய உரிமைகளைத் தங்கள் நாட்டு மக்களுக்கு சோழ மன்னர்கள் வழங்கியிருக்கும் வரலாற்று தகவல்களும் இதில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

பனை மரத்துக்கு ஆணி வேர் கிடையாது. ஆனால் ஏகப்பட்ட சல்லி வேர்களைக் கொண்டதாம். இந்த சல்லி வேர்கள் பல தூரத்துக்கு நீண்டு சென்று உறுதியாக, இறுக்கமாக மண்ணைப் பற்றிக்கொண்டுவிடுமாம். எனவேதான் – கடும் புயல் காலத்தில் மற்ற எல்லா மரங்களும் வீழ்ந்துவிட்டாலும்கூட, பனை மரம் மட்டும் புயலிலும் உறுதியாகத் தலை நிமிர்ந்து நிற்கிறது.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனங்காய், நுங்கு, பனை ஓலை, பனை மட்டை, பனம் பழம், பனங்கொட்டை, மரப்பகுதி அனைத்தும் பயன்தரக் கூடியவை. இம்மரத்தில் உருவாகும் ஒரு குலை பத்து காய்களைக் கொண்டிருக்கும். பனையின் பாளையில் பனங்காய் உருவாகும். இந்தப் பாளையை நறுக்கினால் அல்லது சீவிவிட்டால் கிடைப்பதுதான் கள் மற்றும் பதநீர்.

பனை மரத்தில் ஆண் மரம், பெண் மரம் என்ற வகைமையும் உள்ளதாம். பனையின் பாளையில் பூப்பூப்பதை வைத்து, அது ஆண் பனை என்றறியலாம் என்பது சிவசுப்பிரமணியன் தரும் அடையாளக் குறிப்பு. ஆண் பனையின் வடலி பருவத்தில் அதன் பாளையில் உருவாகும் மகரந்தம் காற்றில் பரவி, வேறொரு பக்கத்தில் வளர்ந்து பரந்து விரிந்திருக்கும் பெண் பனையின் வடலி பருவத்து மடல்களில் போய் பரவுமாம். பெண் பனை கருவுற்று பாளைகள் உருவாகுமாம். இதற்கு காற்றுதான் உதவி செய்கிறது. ஆண் பனை மரத்தில் குரும்பை, பனங்காய், நுங்கு, பனம்பழம் எதுவுமே கிடைக்காது என்பதால் ஆண் பனையின் பாளையைச் சீவி கள், பதநீர் போன்றவற்றைப் பெறுவர். பனையில் இருந்து பெறும். நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பதநீர், கள், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டவை என்கிற சிவசுப்பிரமணியன், இந்தப் பொருட்களின் மருத்துவ குணங்களை நீளமாகப் பட்டியலிடுகிறார்.

இது மட்டுமல்ல பனை ஓலை விசிறி, பனை ஓலை வேலி, பனை ஓலைக் கூறை, பனை ஓலை தடுப்பு, பனை ஓலை தடுக்கு மற்றும் தொப்பி, சிறு கூடைகள், பைகள், உட்காரப் பயன்படும் பனை ஓலைத் தடுக்கு, பனை ஓலைப் பாய், பனை ஓலை பொம்மைகள், குழந்தைகளுக்கான கிலுகிலுப்பைகள் போன்ற கைவினைப் பொருட்கள் என எண்ணற்ற வகையில் பனை ஓலைகள் பயன்படுகின்றன.

இவ்வளவு சிறப்புமிக்க, தமிழர்களின் தொன்ம குறியீடாகவே திகழும் பனைமரமும் அதன் வளர்ப்பும் பெரும் பாதிப்பை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று கவலைப்படுகிறார் சிவசுப்பிரமணியன்.

அது பனையைப் பற்றிய கவலை மட்டும்தானா என்ன!

நூல்: பனை மரமே! பனை மரமே!

ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்.,

669, கே.பி.சாலை

நாகர்கோவில் – 629001.

போன்: 91 – 4652 - 2727

Related Stories

No stories found.