படித்தேன்… ரசித்தேன் - 41: நிழலற்ற பாதையின் பயணி

படித்தேன்… ரசித்தேன் - 41: நிழலற்ற பாதையின் பயணி

கடந்த ஒரு வாரமாக எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லை. அதற்குக் காரணம்… எனது நண்பர், தொழிற்சங்கத் தோழர் பொள்ளாச்சி ரகுபதி தனது முகநூல் பதிவில், பெரா என்பவருடைய ஒரு கவிதையைப் பதிவு செய்திருந்ததுதான்.

அம்மணம்

ஆட்சி செய்தால்

ஆடையில்

தீப்பிடிக்கும்

என்கிற கவிதைதான் அது. ‘ஒரே நாடு ஒரே கொள்கை’ என நாடு போய்க்கொண்டிருக்கிற காலத்தில், ஆடை விஷயத்தில்கூட அவரவர் சுதந்திரம் பறிக்கப்படும் சூழல் நிலவும் இக்காலகட்டத்தில் இந்தக் கவிதை எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. கடந்த வாரத்துக்கு இது போதுமானதாக இருந்தது. அதையடுத்து நான் வாசித்தது தஞ்சை தவசி எழுதிய ‘நிழலற்ற தூரம்’ என்கிற கவிதைப் புத்தகமாகும்.

புத்தகத்தின் உள்ளே நுழைவதற்கு முன்பு, ‘இருத்தலில் உழலும் உளத் துயர்களைப் பேசும் கவிதைத் தொகுப்பு’ என்கிற முன்னறிவிப்புக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் எல்லா கவிதைகளும் எழுதப்பட்டுள்ளன.

‘மனதின் பசியுடன் உரையாடும் வழக்கமுடையவனாக இருந்திருக்கிறேன். பித்து போலும் நினைவும் நனவும் இழைந்த சமயம் எழுத ஆரம்பித்திருக்கிறேன்’ என்று தனது என்னுரையில் தஞ்சை தவசி எழுதியிருப்பதை மனதில் இருத்தி, அதன் ஞாபகத்தின் முதல் படிக்கட்டில் நின்றுகொண்டுதான் இக்கவிதைத் தொகுப்பை வாசிக்க வேண்டும்.

சித்தர்களின் மரபு வழியில் சொற்களைக் கண்டெடுத்து, கொஞ்சம் சர்ரியலிசத்தின் சார்பு நிலையில்தான் இப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளன. இதை அறிந்தே கவிஞர் சென்றடைந்தாரா, இல்லை பித்த நிலை மயக்கத்தில் கொட்டிய கற்பனைச் சரமா என்பதை கவிஞர்தான் நமக்கு விளக்க வேண்டும்.

கவிதைத் தளத்தில் தனக்கென்று ஒரு குறுநிலப் பரப்பை விஸ்தீரணமாக்கியுள்ள தஞ்சை தவசியின் கவிதைகள் எவருடைய சாயலும் இல்லாமல், தனித்ததொரு மொழியைக் கொண்டிருப்பதுதான் இங்கு சிறப்பெனக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மொத்த புத்தகத்திலும் உள்ள சில கவிதைகளை எடுத்துக்காட்டுவதை விட, எல்லா கவிதைகளிலும் ஆங்காங்கே நெளிந்தோடும் மனப்புதையலைக் காட்டும் விதத்தை எடுத்துக்காட்டலாம் என்றே நினைக்கிறேன்.

அம்மாவைப் பற்றி எழுதும்போது ‘அம்மா சிரித்த முகம் / அவ்வளவு அழகு / அலுக்காத ஆச்சர்யம் / இருப்பின் பூப்பூத்தல்’ என்கிறார். இருப்பின் பூப்பூத்தல் எனும் சொல்லாடலில் அலங்காரமில்லாத அலங்காரத்தை சொல்லிச் செல்கிறார். நித்திய கல்யாணி என்கிற ஒரு பூவின்பெயர் எனக்கு நிரம்பப் பிடிக்கும்.இப்பூவுக்கு பெயர் சூட்டியவன் ஒரு ஜீவிதனாகத்தான் இருக்க வேண்டும். இருப்பின் பூப்பூத்தலை வாசித்தபோது எனக்குள் நித்திய கல்யாணி மலர்ந்தது.

‘பூர்வீக பொம்மை’ என்கிற கவிதையில் ‘மாயமானை விரட்டியோடும் உப்பு பாலைவனம் / படிந்துகிடக்கும் களங்கம் நினைத்தபடி நிறம்மாறும்’ என்கிற இரு வரிகள் நாட்களின் கதகதப்பில் வாழ்வெனும் மாயமானைத் துரத்தும் மனிதர்களின் மனவெளியை எடுத்துரைக்கின்றன. ‘காணடித்த இடத்தில்தான் தேட வேண்டும்’ என்கிற பிரயோகத்தின் இன்னொரு கணிதவியல் சமன்பாடாகத்தான் இவ்வரிகளை நான் வரிந்துகொள்கிறேன்.

‘இருளில் எதிரொலிக்கிறது உங்கள் அறிவின் கனம்’ என்பதில் பின் நவீனத்து வத்தின் குரலைக் கேட்கிறேன்.

இன்னொரு கவிதையில் ‘நான்’ செத்த பிறகுதான் ஆனந்த யாத்திரை என்றெழுதுகிறார் தஞ்சை தவசி. இவர் சொல்படி பார்த்தால் இங்கு எவருமே இவர் பரிந்துரைக்கும் ஆனந்த யாத்திரையை அடையவே முடியாது. அவரவரும் அவரின் ‘நான்’ என்கிற ஈகோவை சுமந்தலைகின்றனர்.

வண்ணத்துப் பூச்சியின் உயிர் அதன் றெக்கையில்தான் இருக்கிறது. அதைப் போல ‘நிழலற்ற தூரம்’ கவிதையின் கடைசி வரியில்தான் இக்கவிதைக்கான உயிரே துடிக்கிறது. ‘புரிந்தவர்க்குப் புரியட்டும்/ ஆகாசம் ரொம்பப் பெரிசு’ என்கிற வரிகள் எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. ’மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு’ என்கிற வள்ளுவ சித்தம் இதில் புரிபட்டுப் போகிறது.

மற்றுமொரு கவிதையில் ‘கண்டடைய கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகும்’ என்கிறார். தேடுதல் என்பதற்கு ஆராய்தல், துருவி நாடுதல், விசாரித்தல், ஒம்புதல், முயலுதல் ஆகிய சொற்கள் தமிழில் இருந்தாலும் ‘கண்டடைதல்’ என்கிற பதத்துக்கு இணையாக எதையும் சொல்லிவிட முடியாது. அவரவர் நிழலை மொண்டு மொண்டு மனப்பத்தாயத்துக்குள் சேகரிக்கிற நிகழ்த்துக் கலைதான் கண்டடைதலாகும். அதன் விஸ்தீரணத்தை மிக நுட்பமாக சிறு கவி வரிகளாக்கியுள்ள தஞ்சை தவசியை மனதாரப் பாராட்டலாம். இந்த கண்டடைதலைதான் ‘கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்’ என்கிறார் கண்ணதாசன்.

‘காதலிக்காதவர்கள் கடவுளை அறிவதில்லை’ என்கிறார் தவசி. ஆம் உண்மைதான். பூர்ண சரணாகதித்துவமும், அன்பே சிவமென்று சொல்வதும், பாரதி ‘காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம்’ என்று சொல்வதும் இதைத்தானே!

‘விண்வெளியே கேள்; மண்ணுலகே செவிகொடு’ என்பது பைபிள் வாக்கியம். தஞ்சை தவசியின் கவிதைகளில் இருக்கும் மொழி நுட்பம் ஒரு மந்திரக் குரல். மாய வசியம்.

‘அழுகிப் போகும் உடல்/ஒளிந்துகொள்வதே வாழ்க்கை’ இது தவசி சித்தரின் யோக முத்திரை. நிலையாமையையும் அதன் தனித்துவத்தையும் உணர்த்தும் வரிகள். இதைப் புரிந்துகொண்டால் வன்மம், கொடுமை, துரோகம் போன்ற கெடுமதியை விட்டொழிப்பான் மனிதன். ஆனால் அவன் பல காலம் இங்கே கால் ஊன்றி நிற்க வந்தவன்போல மமதை ஊஞ்சலில் அல்லவா உட்கார்ந்து ஆடுகிறான்.

‘நாம் இழந்தவற்றிற்கான வலியை குணப்படுத்துவது மறதி’ என்கிற சிரோ-வின் வரிகளை நினைவூட்டும் சிலம்ப வரிகளும் சில கவிதை வயல்களில் நெல்லாடுகின்றன. இந்தப் பித்த மொழிதான் தஞ்சை தவசியின் அடையாளமாகவே உள்ளது.

‘விமர்சனமாக இத்தொகுப்பைப் பற்றி சொல்லியாக வேண்டும் ‘உருவாக்கம் என்பது சுதந்திரத்தின் ஒரு வடிவம்’ என்றான் கலீல் ஜிப்ரான். தஞ்சை தவசியின் எல்லாக் கவிதைகளிலும் இந்த சுதந்திரம் ஆயிரம் கிளை விரிதாடுகின்றன. இதன் விளைவாக பல கவிதை வரிகள் நமக்குள் திக்பிரமையை பயிர்விக்கின்றன. சில கவிதைகளை படிக்கத் தொடங்கும்போதே புரிபடாத பாடத்தை தாண்டிச் (ஒமிட்) செல்லும் மாணவனாகிவிட வேண்டியிருக்கிறது. இதுபோன்ற கவிதைகளில் தொனிக்கும் பித்தம் கொஞ்சம் தெளிந்தால்தான் அது பார்வையாளனை உள் நுழைய வைக்கும்.

நூல்: நிழலற்ற தூரம்

ஆசிரியர்: தஞ்சை தவசி

வெளியீடு: அமிர்தாலயம்

4/79, அம்மா வீடு

மாங்காளியம்மன் கோயில் தெரு

செயிண்ட் தாமஸ் மவுண்ட்

சென்னை – 600 018

போன்: 98406 55604

(திங்கள்கிழமை சந்திப்போம்)

ஓவியங்கள்: வெ.சந்திரமோகன்

Related Stories

No stories found.