படித்தேன்... ரசித்தேன் - 39: ஞாநி - எளிய மக்களின் மனசாட்சி!

படித்தேன்... ரசித்தேன் - 39: ஞாநி - எளிய மக்களின் மனசாட்சி!
ஞாநி

‘புத்தரின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை’ என்கிற எனது புத்தகத்தில் 'ஆட்டோக்காரருடன்பேசாமல் என்னால் பயணிக்க முடியாது’ என்று ‘பரீக்‌ஷா’ ஞாநியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருப்பேன். “சக மனிதர்களை மதிக்காமல், அவர்களது உணர்வுகளை மிதித்துவிட்டு அவர்களைக் கடந்துபோக என்னால் முடியாது” என்று விகடனில் நான் பணிபுரிந்தபோது ஒரு தனி உரையாடலின்போது ஞாநி என்னிடத்தில் சொன்னதை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை அது. ஞாநி எனும் மனிதரை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்பதனால் அவருடைய எல்லாப் படைப்புகளையும் நான் படித்திருக்கிறேன். அவரது ‘பரீக்‌ஷா’ குழுவின் சில நாடகங்களையும் பார்த்திருக்கிறேன்.

இப்போது ‘ஞாநி – என்றும் அன்புடன்’ எனும் பொன்.தனசேகரன் தொகுத்துள்ள ஒரு புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். ‘பத்திரிகை, நாடகம், தொலைக்காட்சி, மேடைப் பேச்சு, விவாதம், இலக்கியம், ஓவியம், மனிதவள மேம்பாடு… இப்படி பல்வேறு துறைகளில் தனது தனி முத்திரையைப் பதித்த ஆளுமை ஞாநி, சக மனிதர்கள் மீது அன்புடனும், மனித சமத்துவத்துக்கான ஆவலுடனும் மக்களின் மனசாட்சியாகத் திகழ்ந்தவர் என்கிற புத்தகத்தின் பின்குறிப்பு… ஞாநி எனும் ஆளுமையின் பெரும் உள்ளடக்க வெளிச்சமாகும்.

ஞாநியின் ஆளுமையை, படைப்புகளை, அவரது தொடர் பணிகளை, பத்திரிகை அனுபவங்களை, போராட்டங்களை… நேர்மையை, மனிதாபிமானத்தைப் பற்றி எல்லாம் தமிழகத்தின் ஆகச்சிறந்த ஆளுமைகள் 51 பேர் இப்புத்தகத்தில் கட்டுரை எழுதியுள்ளனர்.

இத்தொகுப்பில் எல்லோரும் குறிப்பிடும் ஒரு விஷயம், கருத்து மாறுபாடுகளுக்காக நட்பின் மலர்ச்சியின் சிறு கீறலும் விழச் சம்மதிக்காதவர் என்பதுதான்.

எஸ்.வி.ராஜதுரை
எஸ்.வி.ராஜதுரை

‘1984 டிசம்பர் 2 அன்று நள்ளிரவில் மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் யூனியன் கார்பைட் எனும் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்த பூச்சுக்கொல்லி மருந்து உற்பத்தித் தொழிற்சாலையில் எற்பட்ட நச்சு வாயுக் கசிவினால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்த, பல்லாயிரக்கணக்காணோர் நடமாடும் பிணங்களாக மாறிய கொடூர நிகழ்ச்சியை அறிந்து பதைபதைத்த மனிநேயம் கொண்டவர்கள் போபாலிலோ, இந்தியாவில் வேறு எந்த இடத்திலோ இத்தகைய போழிவு ஏற்படக் கூடாது என்பதற்காக… சென்னையில் தோற்றுவித்த 'போதும் ஒரு போபால்' இயக்கத்தில் துடிப்போடு செயல்பட்டவர் ஞாநி’ என கடந்த காலத்தில் இருந்து நினைவுகளை மீட்டிருக்கிறார் எஸ்.வி.ராஜதுரை.

நீதியரசர் சந்துரு
நீதியரசர் சந்துரு

நீதியரசர் சந்துரு தனது நினைவுக் குறிப்புகளில், “வறுமையில் வாடும் வக்கீல்கள் என்று ஒரு கட்டுரை ஜூனியர் விகடனில் வெளியானது. ஜூனியர் வக்கீல்கள் பலருக்கு சீனியர்கள் பணமே கொடுப்பது இல்லை, வறுமையில் அவர்கள் மதியத்தில் வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்று அக்கட்டுரையில் பதிவாகியிருந்தது. கொதித்தெழுந்த வக்கீல்களும், அவர்களது சங்கங்களும் விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் மீது குற்றவியல் அவதூறு வழக்குத் தொடர்ந்தனர். ஒரு நாள் மாலையில் என்னிடம் ஞாநி, “அக்கட்டுரையில் கூறப்பட்டிருப்பது உண்மைதானே. ஜூனியர் வக்கீல்களின் நிலைமை பற்றி இந்திய பார் கவுன்சில் எடுத்த ஒரு கணிப்பில் இப்படிப்பட்ட தகவல்கள் வந்துள்ளனவே” என்று சொன்னார். அடுத்த நாளே ஆசிரியரிடம் இருந்து என்னைச் சந்திப்பதற்கு அழைப்பு வந்தது. ஞாநியும் நானும் அவரைச் சந்தித்தோம். அவரது வழக்குகளில் என்னை ஆஜராகும்படி கேட்டுக்கொண்டார். நான் பார் கவுன்சிலிலும் வழக்கறிஞர் சங்கத்திலும் நிர்வாகியாக இருந்திருப்பதனால் முதலில் எனக்குத் தயக்கம். பின்னர் அந்த வழக்குகளில் ஆஜராகி வெற்றியும் பெற்றோம். இதைத் தொடர்ந்து ஞாநி என்னை உற்சாகப்படுத்தி ஜூனியர் விகடனில் ‘ஆர்டர்… ஆர்டர்’ எனும் சட்டத் தொடர்பான கட்டுரைத் தொடரை எழுத வைத்தார்” என்று பதிவுசெய்துள்ளார்.

“நாங்கள் சமவயதுக்காரர்களாக இருந்தாலும் ஞாநியை எப்போதும் எனக்கு முன்னால் நடந்து செல்பவராகவே உணர்ந்திருக்கிறேன். விடைபெறுவதிலும் அவர் முந்திக்கொண்டார்” என்று அஞ்சலிப் பூக்களைச் சமர்ப்பித்திருக்கிறார் ச.தமிழ்ச்செல்வன்.

ச.தமிழ்ச்செல்வன்
ச.தமிழ்ச்செல்வன்

“சாதி மறுப்பையும், சுயமரியாதையையும் ஆதரித்தவர் ஞாநி. ஆணவக் கொலைகளை வன்மையாகக் கண்டித்தவர். பாலின சமத்துவம் என்ற நோக்கில் எப்போதும் இயங்க முயற்சித்தவர்’’ என்று தனது கட்டுரையில் பதிவுசெய்துள்ளார், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்.

ஜி.ராமகிருஷ்ணன்
ஜி.ராமகிருஷ்ணன்

ஞாநி வசித்த கே.கே. நகர் வீடு பெரிதாக இருக்கும். வீட்டின் பின்பக்கத்தில் திறந்தவெளியும் ஒரு கிணறும் இருந்தன. அந்தக் கிணற்றைப் பார்த்த ஞாநியின் சிந்தனையில் உதித்தது ஒரு யோசனை. உடனே ‘கேணி’ என்கிற பெயரில் மாதாமாதம் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்த முடிவுசெய்து, முதல் கூட்டத்தில் எஸ்.ராமகிருஷ்ணனை அழைத்துவந்து பேச வைத்தார். தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், ஆளுமைகள், ஓவியர்கள், சினிமா படைப்பாளிகள் எல்லாம் இந்த ‘கேணி’க்கு வந்து பேசியிருக்கிறார்கள்’’ என்கிறார் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி.

பாஸ்கர் சக்தி
பாஸ்கர் சக்தி

“ஞாநியிடம் முரண்பட்ட விஷயங்களும் எனக்குண்டு. கிராமம் சார்ந்த நாஸ்டால்ஜியாவை அவர் பகடி செய்வார். ‘நகரத்தில் வாழ்ந்துகொண்டு… அது தரும் வசதி வாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டு கிராமத்தைக் கொண்டாடுறீங்க’ என்று மட்டையடியாக விமர்சிப்பார். கிராமத்தில் பல வருடங்கள் வாழ்ந்து, பின்னர் நகரத்தில் வாழ நேரும் மனிதர்களின் நுட்பமான மனச்சிக்கல்களை ஞாநி மேலோட்டமாக புரிந்துகொண்டிருக்கிறார் என்று தோன்றும்” என்றும் பதிவுசெய்திருக்கிறார் பாஸ்கர் சக்தி.

“ஒரு சமூகம் பேசத் தயங்குகிற விஷயங்களை எழுத்தாளன் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தீர்கள் ஞாநி. வேட்டி கட்டிக்கொண்டு உள்ளே வருவதை ஒரு கிளப் தடை செய்ததைப் பற்றி பேசுவதற்கு, நீங்கள் என் நிகழ்ச்சிக்கு லுங்கி அணிந்து வந்தீர்கள். ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணியின் யாசின் மாலிக் பற்றி எழுதினீர்கள். இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றச்செயல் என்று சொல்லும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377 நீக்கப்பட வேண்டும் என்றீர்கள். இப்படி ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம் உங்களைப் பற்றி...’’ என்கிறார் ஜென்ராம்.

ஜென்ராம்
ஜென்ராம்

பத்திரிகையாளர்களின் முன்னோடியாக, அடித்தட்டு மக்களின் உரிமைக்கு பங்கம் விளையும்போதெல்லாம் பேனா பிடித்து உரிமைக்குக் குரல் கொடுக்கும் எழுத்துப் போராளியாக வாழ்ந்த ஞாநியைப் பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ள உதவும் புத்தகம் இது. ஞாநி ‘ஓ... பக்கங்கள்’ எனும் தொடரை விகடனில் எழுதி வந்தபோது, அப்பத்திரிகையில் தலைமை உதவி ஆசிரியர் என்கிற பெயரில் இதழ் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்த நான் ஞாநியோடு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.

நூல்: ஞாநி - என்றும் அன்புடன்

தொகுப்பாசிரியர்: பொன்.தனசேகரன்

வெளியீடு: எஸ்.ஆர்.வி தமிழ் பதிப்பகம்

சமயபுரம்

திருச்சிராப்பள்ளி - 621 112

(திங்கள்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.