படித்தேன்... ரசித்தேன் 36: கார்ல் மார்க்ஸின் கதை தெரியுமா உங்களுக்கு?

படித்தேன்... ரசித்தேன் 36: கார்ல் மார்க்ஸின் கதை தெரியுமா உங்களுக்கு?

'எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் / இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் / வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை / நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை…' - கண்ணதாசன் எழுதி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இந்தப் பாடல் எனக்குச் சிறுவயதிலேயே பிடிக்கும். இதன் உள்ளர்த்தம் புரிந்துதான் இந்தப் பாடலை நான் ரசித்து வந்தேன், இதைத் தொடர்ந்து மாணவப் பருவத்தில் தோழர் வெ.ஜீவக்குமார் கொடுத்த சிறு சிறு பிரசுரங்களும், நான் தேடித் தேடிப் படித்த புத்தகங்களும் எனக்கு ஒரு பெயரை மீண்டும் மீண்டும் நினைவூட்டிக்கொண்டே இருந்தன. அந்தப் பெயர் ஜெர்மானிய தாடிக்காரர் கார்ல் மார்க்ஸ்.

ஒன்றைப் பிடித்துப்போய்விட்டால் அதன் வழியே நம் பயணம் நிகழும் அல்லவா… மார்க்ஸ் புத்தகங்களும், மார்க்ஸைப் பற்றிய புத்தகங்களும் எனக்குள் நிறைய நிழல் பரப்பின. அந்த வகையில் சந்தித்தபோது எனக்கு தோழர் நல்லகண்ணு அய்யா பரிசளித்த ஒரு புத்தகத்தைப் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்தப் புத்தகத்தின் பெயர்: ‘இளையோருக்கு மார்க்ஸ் கதை’. எழுதியவர் ஆதி வள்ளியப்பன்.

இப்புத்தகத்தின் மதிப்புரையில் எழுத்தாளர் ஜா.மாதவராஜ், ‘உலகின் அனைத்து நாடுகளிலும் மார்க்ஸைக் கொண்டாடுவதற்கு மக்கள் இருக்கிறார்கள். பூமியில் எந்தத் தலைவருக்கும் இப்படியொரு மதிப்பும் மரியாதையும் இல்லை. ஆனால், அவர் தலைவரல்ல; மனிதர்களைச் சிந்திக்கத் தூண்டிய மனிதர். மார்க்ஸ் எனும் எளிய மனிதர், எப்படி தன் அர்ப்பணிப்பு உணர்வாலும் சிந்தனைகளாலும் உலகின் மகத்தான மனிதராக ஆனார் என்பதை இப்புத்தகம் சொல்கிறது’ எனச் சொல்லியிருப்பதற்கு நிறைய நியாயம் சேர்க்கிறது இப்புத்தகம்.

கார்ல் மார்க்ஸ் இளம் வயதில் இருந்தே பெரும் பிடிவாதக்காரராக இருந்திருக்கிறார். பிற்காலத்தில் அவர் வெளிப்படுத்திய தீவிரமான உழைப்புக்கும் தெளிவு மிகுந்த கொள்கைகளுக்கும் இந்தப் பிடிவாதம்தான் ஓர் உந்து சக்தியாக இருந்திருக்கிறது.

மார்க்ஸ் வசித்த வீட்டுக்கு அடுத்த வீட்டில் லுத்விக் வான்வெஸ்ட்பாலன் என்கிற ஜெர்மன் அரசு அலுவலர் வசித்தார். இவருடன் மார்க்ஸ் அடிக்கடி வெளியே நடைப்பயிற்சி செய்வார். அப்போதெல்லாம் ‘சோஷலிசம்’ என்கிற சமதர்மக் கொள்கை தொடர்பான ஆர்வத்தை மார்க்ஸிடம் வெஸ்ட்பாலன் விதைப்பார். வெஸ்ட்பாலனுக்கு அழகான மகள் ஒருவர் இருந்தார். நாளடைவில் அந்தப் பெண்ணுக்கும் மார்க்ஸுக்கும் காதல் மலர்ந்தது. மார்க்ஸின் உயிரில் கலந்த மனைவியானர் அந்தப் பெண். அவர்தான் ஜென்னி. காதலர்களாக இருந்தபொழுதில் படிப்புக்காக மார்க்ஸ் வெளிநாடுகளில் தங்கியிருந்த காலகட்டத்தில் இருவரும் எழுதிக்கொண்ட கடிதங்கள் அனைத்தும் பிற்காலத்தில் இலக்கிய அந்தஸ்து பெற்று, உலகப் புகழ் பெற்றிருக்கின்றன.

வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் படித்த பொழுதுகளில் எல்லாம் மார்க்ஸ் அறைக்குள்ளேயே அடைப்பட்டு, எப்போதும் புத்தகங்களுக்கிடையே அறிவு மேய்ச்சலிலேயே இருப்பாராம். தனது 23-ம் வயதில் பெர்லின் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, ‘கிரேக்க தத்துவ சிந்தனையாளர்கள் டெமாகிரடஸ், எபிகியூரஸ் ஆகியோரின் இயற்கை குறித்த தத்துவ சிந்தனைகள் இடையிலான வேறுபாடு’ எனும் கருத்திலான மார்க்ஸின் ஆய்வுக்கு முனைவர் பட்டம் பெற்றார். ஆனால் வாழ்நாளில் எந்த சந்தர்ப்பத்திலும் தனது பெயருக்கு முன்னால் முனைவர் என்று மார்க்ஸ் போட்டுக்கொண்டதே இல்லையாம். அதே போல சட்டம் பயின்றிருந்த அவர், எந்த நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக ஏறி நின்று வாதாடியதே இல்லையாம்.

1841-ல் மோசஸ் ஹெஸ் எனும் சிந்தனையாளர் பெர்லின் பல்கலைக்கழகப் பேராசிரிய நண்பருக்கு மார்க்ஸை அறிமுகம் செய்து ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘இன்று இருப்பவர்களில் ஒரே உண்மையான தத்துவ அறிஞரான மார்க்ஸைச் சந்திக்கத் தயாராகுங்கள். மதம், அரசியலுக்கு அவர் இறுதி அடி கொடுக்கப் போகிறார். அவரை நீங்கள் இப்படி கற்பனை செய்து பார்க்கலாம். ரூசோ, வால்டேர், ஹோல்பாக், லெஸ்ஸிங், ஹீன், ஹெகல் ஆகிய எல்லோரும் சேர்ந்து ஒரு மனிதராக இருந்தால் எப்படியிருக்குமோ அத்தகைய மகத்தான மனிதர் மார்க்ஸ்’ என்று மோசஸ் குறிப்பிட்டிருந்தாராம். அப்போது மார்க்ஸின் வயது 23 தான்!

1842-ம் ஆண்டு தனது 23-வது வயதில் முதன்முதலாக ‘ரைன்லாந்து கெஸட்’ எனும் பத்திரிகையில்தான் கட்டுரை எழுத ஆரம்பித்திருக்கிறார் மார்க்ஸ். அப்பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகளின் ஒட்டுமொத்த சாராம்சமாக இருந்தது ‘மக்களுக்காகத்தான் அரசே தவிர, அரசுக்காக மக்கள் அல்ல’ என்பதுதான். மக்களுக்கான இதழியல் என்பது இப்படித்தான் மார்க்ஸ் மூலமாகவே முதன்முதலாக அறிமுகமாகியிருக்கிறது.

சில சமயங்களில் மார்க்ஸை ‘மை பிக் பேபி’ என்றழைப்பார் ஜென்னி. அன்புக்குப் பஞ்சமில்லாத வாழ்க்கை அவர்களுடையது. ஆனாலும் வாழ்வின் எல்லை வரை அவர்களை வறுமைத் துன்பம் விரட்டிக்கொண்டே இருந்திருக்கிறது. இதற்கு, லண்டனில் தங்கள் குடும்பத்தின் ஒருநாள் வாழ்க்கை குறித்து ஜென்னி மார்க்ஸ், தனது நண்பரான யோஸிப் வெய்டமையருக்கு எழுதிய கடிதமே அத்தாட்சி.

அதில் ஜென்னி மார்க்ஸ் எழுதியிருக்கிறார் இப்படி: ‘என் குழந்தைக்கும் பால் கொடுக்க செவிலித்தாயை ஏற்பாடு செய்யலாம் என்றால், அதற்குப் பெரும் செலவு ஆகும் என்பதால் முதுகு வலியையும் மார்பு நோயையும் பொறுத்துக்கொண்டு என் குழந்தைக்கு நானே பால் கொடுத்தேன். அழகும் துரதிருஷ்டமும் வாய்ந்த அந்த பூஞ்சை குழந்தை என்னிடம் எவ்வளவு பால் குடித்தானோ, அதே அளவுக்கு என்னுடைய துக்கத்தையும் சேர்த்தே குடித்தான். எப்போதும் அவன் அழுதுகொண்டே இருந்தான். எப்போதும் ஜன்னியும் வலிப்பும் அவனுக்கு வந்துகொண்டே இருந்தன. ஒரு முறை வலிப்பு ஏற்பட்ட நேரத்தில் என்னிடம் பால் குடித்துக் கொண்டிருந்ததால் என் மார்பு புண்ணானது. அத்துடன் பாலையும் ரத்தத்தையும் சேர்த்து அவன் குடித்துவிடுவான்’ என்று ஜென்னி எழுதிய கடிதத்தை இப்புத்தகத்தில் வாசிக்குபோதே மனம் கசிகிறது.

ஜென்னி இக்கடிதத்தில் குறிப்பிட்ட ஹென்ரி எட்வர்டு கய் என்கிற அந்த ஆண் குழந்தை அதன்பிறகு இறந்துவிடுகிறது. இதைத் தொடர்ந்து மார்க் –ஜென்னியின் பிரான்சிஸ்கா என்கிற அடுத்த பெண் குழந்தையும் ஒரு வயதில் நிமோனியா காய்ச்சலில் உயிரிழந்துவிடுகிறது. அக்குழந்தையை அடக்கம் செய்வதற்கு சவப்பெட்டி வாங்கக்கூட கையில் காசில்லாமல் மார்க்ஸ் குடும்பத்தினர் தவித்திருக்கிறார்கள். இதைப் பற்றி ஜென்னி, ‘என் குழந்தை பிரான்சிஸ்கா இப்போது நிரந்தரமாக உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவள் பிறந்தபோது அவளுக்குத் தொட்டில் வாங்க எங்களிடம் காசு இல்லை. இப்போது இறந்தபிறகோ சவப்பெட்டியும் உடனடியாக கிடைக்கவில்லை’ என்று எழுதியிருக்கும் குறிப்பை வாசிப்பவர்களால் அந்த வார்த்தைகளை வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது.

இப்புத்தகத்தில் கார்ல் மார்க்ஸுக்கும் ஏங்கெல்ஸுக்கும் இடையிலான உன்னத நட்பின் ஈரம், வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த மார்க்ஸின் தீரம், ‘கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோ’ என்கிற பொதுவுடைமை தத்துவப் பிரகடனம், அதன் பின்னணி ஆகியவையும் அழகுறப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சுருக்குப் பைக்குள் சீனப்பெருஞ்சுவரை அடக்குவது போல 96 பக்கங்களுக்குள் ஒரு மாபெரும் சிந்தனையாளரின் வரலாற்றை எளிமையாக எழுதியுள்ள ஆதிவள்ளியப்பனுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

நூல்: இளையோருக்கு மார்க்ஸ் கதை

ஆசிரியர்: ஆதி வள்ளியப்பன்

வெளியீடு: ’புக்ஸ் ஃபார் சில்ரன்’

(பாரதி புத்தகாலயம்)

7, இளங்கோ சாலை,

தேனாம்பேட்டை,

சென்னை – 600 018.

(திங்கள்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.