படித்தேன்… ரசித்தேன் -35: நிலத்துக்கு விலை பேச முடியுமா?

படித்தேன்… ரசித்தேன் -35:  நிலத்துக்கு விலை பேச முடியுமா?

'சுழன்றும் ஏர் பின்னது உலகம்’ என்றார் வள்ளுவர். உணவை வேட்டையாடி சேகரித்ததில் இருந்து மாறி, வேளாண்மையாகப் பயிரிடத் தொடங்கிய பிறகுதான் உலக நாகரிகங்கள் வளர்ந்தன. மனிதகுல வரலாற்றில் வேளாண்மைதான் மிகப் பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியது. அதே வள்ளுவர்தான் 'தொட்டனைத்தூறும் மணற்கேணி' என்றும் எழுதினார். எப்படி மண்ணைத் தோண்டத் தோண்ட தண்ணீர் ஊற்றெடுக்கிறதோ, அதேபோல உழவர்கள் மண்ணில் பயிரை வளர்த்தால்தான் உலகம் உயிரோடு இருக்க முடியும், திடமாக வளரவும் முடியும். சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்காமல், இயற்கையோடு இயைந்து வேளாண்மையை மேற்கொள்ளக்கூடிய நடைமுறைகள் தற்போது பரவலாகி வருகின்றன.

ஆனால், இந்த முறையை நோக்கி ஆர்வத்துடன் வருபவர்களுக்கு வழிகாட்டும் முழுமையான களக் கையேடு இல்லை. அதை மனதில் கொண்டு, இயற்கை வேளாண்மை செய்ய விழைபவர்களுக்கு உதவுவதற்காகவே எழுதப்பட்ட புத்தகமொன்றை வாசித்தேன். அது, ‘தொட்டனைத்து ஊறும் அமிழ்தம்’ எனும் தலைப்பில் பாமயன் எழுதி, ’தமிழ் திசை’ வெளியிட்டுள்ள புத்தகமாகும்.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பாமயன் என்ற பாலசுப்ரமணியன், இயற்கை வேளாண் வல்லுநர். அடிசில் என்ற இயற்கை வேளாண் பண்ணை வழியாக இயற்கை வேளாண்மையில் புதிய நுட்பங்களைப் பரிசோதித்துப் பயிலரங்குகள், நேரடிப் பயிற்சிகள் மூலம் பரவலாக்கி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மைப் பற்றி கட்டுரைகள், புத்தகங்களை எழுதிவருகிற இவர் இந்நூலில் பலருக்கும் தெரியாத பல அரிய தகவல்களைக் கொட்டியிருக்கிறார்.

வேளாண்மை என்பது பண்ணையமாக மாறும்போதுதான் அது நீடித்த தன்மை கொண்டதாகவும், ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பைத் தரும் ஒன்றாகவும் மாறும். அந்த அடிப்படையில் இந்த நூல் ஒரு பண்ணையத்தை எப்படி உருவாக்குவது? அதில் என்ன மாதிரியான அமைப்புகளை ஏற்படுத்துவது போன்ற தரவுகளையும், மாதிரிகளையும் விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

நெருப்பும் நீரும் தூரப் போய்விட்டன…

‘இன்றைய உலகம் தொழில்சாலைமயமாக மாறிவிட்ட நிலையால் நிகழ்ந்தது என்ன?’ என்கிற நமது கேள்விக்கு பாமயன் இந்தப் புத்தகத்தில் பதில் எழுதுகிறார்:

‘தொழிற்சாலைமயம் நமது நீரையும் நெருப்பையும் பல கி. மீ. தொலைவுக்குக் கொண்டு சென்றுவிட்டது. ஆறுகளிலும் ஓடைகளிலும் மண்ணடுக்கு முன்பு நன்றாக இருந்தது. அதனால் ஊற்று நீர் அருகிலேயே கிடைத்தது. கிணறுகளில் நீர்மட்டம் கிட்டவே இருந்தது. இன்று ஆழ்துளைக் கிணறுகள் ஆயிரம் அடிகளைத் தாண்டிய பிறகும் நீர் கிடைப்பதில்லை. சென்னை மக்களுக்கு வீராணத்தில் இருந்தோ, ஆந்திராவில் இருந்தோ தண்ணீர் வர வேண்டும்.

நெருப்பு, அதாவது எரிப்பதற்குத் தேவையான விறகு, அருகிலேயே மாத்துண்டுகளாக, சாண எருவாட்டிகளாகக் கிடைத்தன. இன்று 300 முதல் 2 ஆயிரம் வரை நிலத்தைத் துளைத்து எடுக்கப்பட்ட இயற்கை எரிவாயு, சமையல் எரிவாயு சிலிண்டராகப் பல கிலோ மீட்டர் பயணத்தைக் கடந்து நமது அடுக்களைக்கு வருகிறது. ஆக வாழ்க்கையைச் சுகப்படுத்துகிறோம் என்ற பெயரில் சுதந்திரத்தை, தற்சார்பை அடுத்தவர் கையில் கொடுக்கும் முறைக்கு வளர்ச்சி என்று பெயர் வைத்துள்ளோம். நமக்கு வாழ்வளிக்கும் இயற்கை ஆதாரங்களைக் கண்மண் தெரியாமல் சுரண்டி, அறநெறி இன்றிப் பணம் சேர்க்கும் முறையை வளர்ச்சி என்று புகழ்கிறோம்’ என்கிற பாமயனின் குரல் சாதாரணமானதல்ல.

நிலம் எப்போதும் மூடியே இருக்க வேண்டும்

வேளாண் பண்ணை என்பது என்னவென்று நாம் அனைவரும் புரிந்து வைத்திருப்பதை கிழித்தெறிகிறார் பாமயன். வேளாண் பண்ணையம் என்பதை வெறும் கட்டிடம் போன்ற அமைப்பாகப் பார்க்கக் கூடாது. அது ஒன்றோடு ஒன்று பிணைப்புக் கொண்டது. விதை, நீராதாரம், வேளாண் பணியாளர்கள் என்று இந்தக் கண்ணி நீண்டுக்கொண்டே போகும் என்கிற பாமயன் மேலும் சொல்கிறார்: ‘பண்ணையத்தில் ஒன்றுக்கொன்று கொடுத்து வாங்கும் அறம் அடிப்படையானது. நிலத்தில் இருந்து நாம் விளைச்சலை எடுக்கிறோம். அதற்கு ஈடாக நிலத்துக்கு எருவைக் கொடுக்கிறோம். எடுப்பதும் கொடுப்பதும் இங்கு இன்றியமையாதது. ஆக, பண்ணையத்தில்தான் கொள்வினையும் கொடுப்பினையும் ஓர் அறமாகவே வளர்கிறது’ என்கிறார்.

பாமயன்
பாமயன்

இந்தப் புத்தகத்தைத் தவறவிடாதது என் பாக்கியம். எவ்வளவு அருமையான தகவல்கள். ‘நிலம் எப்போதும் மூடியே இருக்க வேண்டும்’ என்கிறார். நமது வாகனங்களை மூடிவைப்பது மாதிரி, நிலத்துக்கு எப்படி மூடி போடுவது என்கிற கேள்வியுடன் ஆவல் மேலிட மேற்கொண்டு படித்தேன். பொதுவாக மண் அரிமானத்தால் தனது இயல்பை மண் இழக்காமல் இருக்க வேண்டுமானால், அந்த நிலம் எப்போதும் மூடியிருக்க வேண்டுமாம். மரங்களில் இருந்து இலைகளைக் கொண்டும் , மண்ணில் இருந்து வளரும் கொடிகளைக் கொண்டும் நிலத்தை இயற்கை மூடி வைக்கிறது. இதனால் வளமான காட்டில் மண் அரிப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லையாம்.

இயற்கை செய்கிற இந்த வேலையைப் பண்ணையத்தில் செய்ய வேண்டும். ஒரு காடு தனக்கான உரத்தைத் தானே தயார் செய்துகொள்கிறது. வெளியில் இருந்து எவரும் காட்டுக்கு உரம் போடத் தேவையே இல்லை. அது போல தாவரக் கழிவுகளையும், விலங்கு கழிவுகளையும், மண்ணின் மீது மூடாக்குகளாக மூடி வைத்தோமானால் நிலம் பஞ்சு போல மாறிவிடும். மண் புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவை அமைக்கும் துளைகள் மூலமாக மண்ணுக்குள் நீர் புகுந்து நீர்ப்பிடிப்பு அதிகரிக்கும் என விவசாயிகளுக்கு மட்டுமல்ல; இயற்கையை நேசிப்பவர்களுக்குமான அருஞ்செய்தியாக சொல்கிறார் பாமயன்.

நிலத்தை யாரும் வாங்கவே முடியாது

’விலைபோட்டு நிலத்தை வாங்கியிருக்கிறோம் என மார்தட்டிக் கொள்கிறோம். நிலத்தை யாரும் வாங்குவதில்லை. நிலம்தான் நம்மை வாங்கியிருக்கிறது’ என்று போகிறபோக்கில் ஓரு உண்மையைச் சொல்லிவிட்டுப் போகிற பாமயன், ’ஒரு புலி ஒரே ஒரு மானைக் கொல்கிறது. அந்த மான் உடல் மற்ற உயிர்களுக்கும் உணவாகக் கிடைக்கிறது. பசியில்லாதபோது அருகில் செல்லும் மான்களைப் புலி கொல்வதில்லை. மான் கூட்டத்தையே தேடித் தேடி வேட்டையாடுவதில்லை.

பண்ணையம் என்பதும் பல்லுயிர்களின் கூடமாக இருக்க வேண்டும். பண்ணையத்துக்கு வந்து செல்லும் பறவைகள் மண்ணுக்கு சாம்பல் (பொட்டாஷ்) சத்தை வழங்குகின்றன. கிடைக்காத அபூர்வமான விதைகளைக் கொண்டுவருகின்றன. கறையான்கள் இயக்குநீர்களை (ஹார்மோன்களை) யும், மண்புழுக்கள் கதிர்க் காளான்களை (ஆக்டினோமைசிஸ்)யும், களைகள் என தூற்றப்படுவைகூட மண்ணுக்குப் பேருதவி செய்கின்றன. எருக்கிளை போரான் சத்தையும், ஆவாரஞ்செடி செம்புச் சத்தையும், துத்திச்செடி சுண்ணாம்புச் சத்தையும் மண்ணுக்கு வழங்குகின்றன’ என்று சொல்லி வியக்க வைக்கிறார்.

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவோ…

புத்தகத்தின் இன்னோர் இடத்தில் இயற்கை நமக்குப் பன்மடங்கு அள்ளித் தருகிறது என்பதை விளக்க பாமயன் எடுத்துக்காட்டும் உதாரணம் இன்னொரு வியப்பைத் தருகிறது. ஒரு கிலோ உள்ள பச்சைச் செடியைக் காயவைத்தால் காய்ந்த பிறகு அதன் எடை சுமார் 300 கிராம் இருக்கும். அதையே எரித்தால் செடியைப் பொறுத்து சுமார் 30 முதல் 70 கிராம் வரையில் கிடைக்கும். காய்ந்தபோது நீரானது ஆவியாகிவிடுகிறது. எரிக்கும்போது கார்பன் டை ஆக்சைடு கரிப்புகையாக வெளியாகிறது. இரண்டிலும் எஞ்சியிருக்கும் சாம்பல் மட்டுமே மண்ணில் இருந்து எடுக்கப்பட்டது. அப்படியானால் மண்ணில் இருந்து எடுக்கப்பட்டது 30 கிராம் என்றால், அந்த மண் விளைச்சலாகக் கொடுத்தது 1,000 கிராம் ஆகும். அப்படியானால் இயற்கை நமக்கு எத்தனை மடங்காகத் திருப்பித் தந்திருக்கிறது பாருங்கள் என்பதுதான் அந்த வியப்பு.

எதுவும் தனித்து வாழ சாத்தியமில்லை

மனிதர்களுக்கு இறையுணர்வும் முக்கியமானது என்பதற்காகச் சொல்லப்பட்ட ‘மனிதன் ரொட்டித் துண்டால் மட்டுமே வாழ முடியாது (Man does not live Bread alone)’ என்கிற பைபிள் சொற்றொடரை பாமயன் எடுத்துக்காட்டி, ‘ரொட்டித் துண்டு எனும் மரக்கறி உணவை மட்டும் உண்டு வாழ முடியாது என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். இந்த இடத்தில் உயிர் இரக்கம் அல்லது ஜீவகாருண்யம் எனப்படும் உயரிய அறத்தையும் உணவுப் பழக்கத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும்’ என்கிறார்.

எதுவும் தனித்து வாழ சாத்தியமில்லை என்கிற கருத்துக்கு வலு சேர்க்க, ‘மண்ணில் புற்கள் முளைக்கின்றன. புற்களைத் தின்று பூச்சிகள் வளர்கின்றன. அவற்றைத் தின்று தவளைகள் வளர்கின்றன. அவற்றின் தலைப்பிரட்டைகளைத் தின்று மீன்கள் வளர்கின்றன. மீன்களைத் தின்று மனிதர்கள் வளர்கின்றனர். இந்த அடுக்குமுறை என்பது ஒரு பெருமேடு போலக் காணப்படும். ஏனெனில், பல மனிதர்கள் வாழப் பல மீன்கள் தேவை; சில மீன்கள் வாழப் பல தவளைகள் தேவை; சில தவளைகள் வாழப் பல பூச்சிகள் தேவை; சில பூச்சிகள் வாழப் பயிர்கள் தேவை. எதுவும் தனித்து வாழ்வது இங்கு சாத்தியமில்லை’ என்கிற பதிவை வாசித்தபோது, தான் மட்டுமே நலமுடன் வாழ வேண்டும் என்று பேராசையுடன் மனிதர்கள் தனக்குள்ளேயே வாழ்வதை எண்ணி சிரித்துக்கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தபோது, கதை, கவிதை எனும் புனைவுகளை மட்டுமே வாசிக்காமல் இயற்கை சார்ந்த பேருண்மைகளைப் பொதுவெளியில் பதிவு செய்கிற இதுபோன்ற அபுனைவுகளையும் இனி தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்கிற பேரவா எழுந்தது.

நூல்: தொட்டனைத்து ஊறும் அமிழ்தம்

ஆசிரியர்: பாமயன்

வெளியீடு: ‘தமிழ் திசை’ பதிப்பகம்

124, வாலாஜா ரோடு

அண்ணா சாலை

சென்னை – 600 002

போன்: 7401296562

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in