படித்தேன்... ரசித்தேன் 34: பெருந்தொற்றுக் காலத் துயரங்களின் நாட்குறிப்பு

படித்தேன்... ரசித்தேன் 34: பெருந்தொற்றுக் காலத் துயரங்களின் நாட்குறிப்பு

காலப்பாம்பு தனது சட்டையை உரித்துவிட்டுப் போய்க்… கொ… ண்….டே இருக்கிறது. திரும்பிப் பார்க்கும்போது உள்ளங்கையில் ஞாபக ரேகைக்கள் மட்டுமே மிச்சமிருக்கின்றன.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க உலக உருண்டைக்கூட முகக்கவசம் அணிந்துகொண்டிருக்கிறது. மனிதனின் தலைக்கு மேல் தொங்கும் வைரஸ் வாள்… அவனது காலடியில் அச்சத்தின் நிழல். இயற்கைகூட இரட்டை குழந்தைப் பிறப்பைத் தள்ளிவைத்திருக்கிறது. உயிரின் பல்ப் எப்போது வேண்டுமானாலும் அணையலாம் என்கிற பயத்தின் பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறான் மனிதன்.

இத்தகைய – துயரங்களின் நாட்குறிப்பாகத்தான் துரை நந்தகுமார் எழுதியிருக்கும் இப்புத்தகத்தில் இருக்கும் கவிதைகளை நான் பார்க்கிறேன். இதை கரோனா ஆல்பம் அல்லது கரோனா கவிதை ஆவணம் என்றுகூட சொல்லலாம்.

நாம் இதுவரை… காணாத உலகத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தை காலம் நம் காலடியின்கீழ உருட்டி உருட்டி விளையாடிக்கொண்டிருக்கிறது. இந்தக் கரோனா நாட்களின் வாழ்வியலை விரிவான கட்டுரையாகவோ பெரும் தொடராகவோ பதிவுசெய்துவிட முடியும். துரை நந்தகுமார்…. மூன்று வரிக்களுக்குள் அடக்கியிருக்கிறார். அத்தனையும் பட்டன் கத்தி.

கவிஞர் அறிவுமதி ஒரு கவிதையில் ரயிலை ‘இரும்புப் பிசின்’ என்று சொல்லியிருப்பார். துரை நந்தகுமாரின் சொற்கள் ஒரு தொற்று நோயின் வரலாற்றை இழுத்துச் செல்கின்றன.

இவ்வளவு நுட்பமாகக் கவிதைக்குள் கரோனா நாட்களை சொல்லியிருப்பதனாலேயே இப்புத்தகம் மதிப்பைப் பெற்றுவிடுகிறது.

கரோனா நாட்களில் பள்ளித்தலம் முழுதும் பூட்டு தொங்குகின்றன. தன்னை உதிர்க்கும் சாக்பீஸ்களுக்கு வேலையில்லை. தாமரைப் பூவில் இருந்து கீழிறங்கிப் போய்விட்டாள் சரஸ்வதி. இந்நிலையை மிகத் துல்லியமாக இதோ இந்தக் கவிதையில் பதிவு செய்கிறார் துரை நந்தகுமார் இப்படி:

யாருமற்ற பள்ளிக்கூடம்

அழிக்காத கரும்பலகையில்

இருப்பது நாற்பது.

வாடிய பயிரைக் கண்டதும்

வாடிய நாடு

தெளிக்கிறது கிருமிநாசினி.

என்றெழுதும்போது – கவிதையின் கிராஃப்ட் வாசிப்பவரின் மன வெளியில் பெருந்தொற்றுக் காலத்தின் நோய்மை சித்திரத்தை ஏற்றி வைத்துவிடுகிறது.

கவிஞர் துரை நந்தகுமார்
கவிஞர் துரை நந்தகுமார்

துரை நந்தகுமாரின் இந்த ஹைக்கூ கவிதைகள் ‘கரோனா’ துயர நாட் களின் நாட்குறிப்பாக இருந்தாலும்… அதை இவர் முடைந்து தந்திருக்கிற பின்னலில் ஒரு வசீகர நிழல் மெழுகியிருக்கிறது. எல்லா கவிதைகளிலும். வெறும் சொற்களால் இவர் ’சீ – ஸா’ ஆடவில்லை. சாதாரண குருவிக்கூட்டுக்கும் தூக்கணாங்குருவி கூட்டுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கத்தானே செய்கிறது. அந்த அழகியல் படிமம் முகங்காட்டுகிறது இக்கவிதைகளில்.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு… தொற்றுக் கிருமியிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள ஒவ்வொரு மனிதனும் போராடுவதை… அழகியல் நுட்பத்துடனும் அதேவேளையில் ஆலாபனை ஜரிகை வெளியே தெரியாமல் நெய்வதென்பது அசாத்தியமானது. அதை நிரூப்பிகிறது இதோ இந்தக் கவிதை:

இளைப்பாறுதலின்றி தவிக்கிறது

வெளிச்சம்

மனித நிழல்களில்லை.

***

எனக்கு மிக மிக பிடித்த கவிதை இது. இக்கவிதையில் ஒரு பறவையின் சிறகால் மனித வாழ்வின் நோய்மை நாட்களை வரைகிறார் துரை நந்தகுமார். பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவை… அந்த உறவு பிரிந்து கடக்க வேண்டிய கட்டாயத்தை…. அவிழ்க்கிறது இந்தக் கவிதை முடிச்சு.

மரத்தின் கீழ் வசித்த

குடும்பங்களைத் தேடுகிறது

குஞ்சுகளோடு பறவை.

***

கூட்டுக் குடும்ப வாழ்வு சிதைந்து… மனிதன் தனித் தீவானதற்கு பின்னணியில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகால வரலாறு உண்டு. இந்நிலையில் இந்தக் கரோனா நாட்களில் நம் நினைவுச் சுவரை முட்டி மோதும் ஞாபகங்களைப் பதிவு செய்யும் இக்கவிதை – சொற்களின் புகைப்படப் பதிவு:

சமூக இடைவெளியில்

சிக்கித் திணறும்

கூடி வாழ்ந்த வாழ்வு.

நெல் தந்தவன்

அரிசி இல்லாதிருக்கிறான்

கவலையில் கிளி.

-இந்தக் கவிதை கிளி ஜோசியனின் வாழ்வு சித்திரம் மட்டும்தான் என்று சொல்லிவிட முடியாது. இதில் நம் இந்திய விவசாயின் பேசி தீராத பெருங் கொடுமையும்… தொழிலாள வர்க்கத்தின் பசித்திருக்கும் மானுடமும் சொல்லப்பட்டுள்ளது.

இக்கவிதையை வாசிக்கிறபோது…

காலுக்கு செருப்புமில்லை...

கால் வயிற்று கூழுமில்லை..

பாழுக்கு உழைத்தோமடா

என் தோழா

பசையற்றுப் போனோமடா…’ என்கிற ஜீவாவின் பசியின் பாடல்தான் எனக்கு நினைவில் நின்றது.

நெருக்கத்தைத் தவிர்க்கும் சிறுமி

சிலேட்டின் இருபுறத்தில்

அ ஆ… இ ஈ

இந்தக் கவிதையில் குழந்தைமையைக்கூட பாதித்த சமூக இடைவெளியின் நுட்ப அவலம் பதிவாகியிருக்கிறது.

இன்னும் சில பல ஆண்டுகள் கழித்து – இலக்கியத்தில் இந்த கரோனா நாட்கள் பதிவாகியிருக்கிறதா என்று ஆய்வாளர்கள் ஏடு புரட்டும்போது… நிச்சயம் துரை நந்தகுமாரின் பெயர் பரிசீலிக்கப்படும்.

***

விரல் விட்டு விரலுக்கு

பூசப்படுகிறது

மருதாணி

இந்தக் கரோனாவின் சமூக இடைவெளியை - இவ்வளவு அழகியலோடு துரை நந்தகுமாரால் மட்டும்தான் சொல்ல முடியும்.

நூல்: தடையின் தடத்தில்

ஆசிரியர்: துரை நந்தகுமார்

வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

பெரம்பூர்.

போன்: 9444901356

(புதன்கிழமை சந்திப்போம்)


Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in