படித்தேன்... ரசித்தேன்-26: முதன்மையான முதல்வர்!

படித்தேன்... ரசித்தேன்-26: முதன்மையான முதல்வர்!
மறைந்த முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

வரலாற்றில் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிற அரசியல் தலைவர்களைப் பற்றி தெரிந்துகொள்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம். அந்த வகையில் அண்மையில் நான் படித்த புத்தகம், எஸ்.ராஜகுமாரன் எழுதியுள்ள ‘முதல்வர்களின் முதல்வர்’!

இன்று அரசியல்வாதிகள், பேச்சாளர்கள், கலைஞர்கள் எல்லோரும் தாங்கள் பேசத் தொடங்கும்போது, 'பெரியோர்களே... தாய்மார்களே’ என்று சொல்லி தொடங்குகிறார்களே... இதனை முதன்முதலில் கையாண்டதுடன், தொடர்ந்து பயன்படுத்தியவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரே ஆவார்.

1947 மார்ச் 23 முதல் 1949 ஏப்ரல் 6 வரை சென்னை மாகாண முதல்வராகப் பதவி வகித்த ஓமந்தூரார், திண்டிவனத்துக்கு அருகில் இருக்கும் ஓமந்தூர் என்ற ஊரில் 1895 பிப்ரவரி 1-ல் பிறந்தார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், 8-ம் வகுப்பு வரையே படித்தார். ஆனால், தனது அயராத உழைப்பால் முன்னேறி, தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவரானார்.

அவரது வரலாற்றைப் படிக்கிறபோது, இவ்வளவு நேர்மையான மனிதர் சுதந்திர இந்தியாவில் - தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் முதலாவது முதல்வராக இருந்திருக்கிறாரே என்று அறிகிறபோது வியப்பெய்துகிறது.

சட்டத்துக்கு முன் அனைவரும் சமமே!

இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஓமந்தூரார், காந்தியச் சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருக்கிறார். காமராஜர் ஆதரவுடன் 1947-ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பதவி ஏற்ற அவர், சட்டத்துக்கு முன்பாக அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்டு, விவசாயிகள், ஏழை, எளியவர்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டிருக்கிறார்.

முதல்வர் பதவியில் இருந்தபோது கட்சிக்காரர்களுக்கோ, தன் குடும்பத்தினருக்கோ எந்த விதச் சிறு சலுகைகளோ வேலைவாய்ப்புகளோ வழங்கவே கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

பட்டியலினச் சமூக மக்கள், ஹரிஜனங்கள் என அழைக்கப்பட்ட அந்தக் காலத்தில், அவர்களுக்கென்று தனித் துறை இல்லை. தொழிலாளர் நலத் துறையின் ஒரு பகுதியாகவே ஹரிஜன நலத் துறை இருந்தது. ஓமந்தூரார் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, அந்தத் துறையை ஆதிதிராவிடர் நலத் துறை எனப் பெயர் மாற்றம் செய்து, தனித் துறையாகப் பிரித்து, அந்தத் துறைக்கென தனியே ஒரு ஆணையரை நியமித்தார்.

அதே போல் அரசாங்க நிலங்களைப் பொதுமக்களுக்கு வழங்கும்போது, ஆதிதிராவிடர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நடைமுறையை அரசாணையாகப் பிறப்பித்தவர் ஓமந்தூரார்.

ஆதிதிராவிடர்கள் ஆலயத்தில் நுழைவதற்கான தடையை முழுவதுமாக நீக்கி, ஆலயப் பிரவேசத்தை எல்லாக் கோயில்களிலும் முறைப்படுத்த ஒரு தனிச் சட்டத்தையும் தோற்றுவித்ததை வரலாறு என்றைக்கும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது

ஓமந்தூரார் முதலமைச்சராகப் பதவியேற்றதும் பிறப்பித்த ஆணை என்ன தெரியுமா? பாராட்டுக் கூட்டங்கள், வெற்றி விழாக்கள் ஆகிய அரசியல் ஆரவாரங்களுக்குத் தடை போட்டதுதான். மிக மிக அவசியமான தருணங்களில் மட்டுமே அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருக்கிறார். தனிப்பட்ட பேட்டிகள், புகைப்படம் எடுப்பது போன்ற எதற்கும் அவரிடம் எளிதில் அனுமதி வாங்கவே முடியாதாம். அதனாலேயே அவரின் புகைப்படங்கள் ஒன்றிரண்டு மட்டுமே இன்று நமக்குக் கிடைக்கின்றன.

முதலமைச்சரைச் சந்திப்பதற்கென வழங்கப்படும் அனுமதிச் சீட்டில், என்ன காரணத்துக்காகச் சந்திக்க வேண்டும் என ஒரு கேள்வியை இணைக்கும்படி முதன்முதலில் உத்தரவிட்டவர் ஓமந்தூரார்தான். நியாயமான காரணத்துக்காக வருவோரை மட்டுமே அவர் சந்தித்துள்ளார். தனிப்பட்ட சலுகைகள், பரிந்துரைகளுக்காக வருவோருக்கு ஏமாற்றத்தைத்தான் அவர் பரிசளித்துள்ளார்.

அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஆலயப் பிரவேசச் சட்டம், ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம், இந்து சமய அறநிலையச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் போன்றவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

எளிய மனிதர்களின் தலைவன்

ஓமந்தூரார் முதல்வராக இருந்தபோது ஒருமுறை அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. அப்போது அரசுப் பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சாதாரண மக்களுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சைதான் தனக்கும் அளிக்கப்பட வேண்டும். தனிப்பட்ட சலுகைகளோ கவனிப்போ தனக்குத் தரக் கூடாது என்றும் வெளிநாட்டில் இருந்து மருத்துவர் மற்றும் மருந்துகளை வரவழைக்கக் கூடாது என்றும் நிபந்தனைகளை விதித்து, எளிய அரசியல் தலைவராக விளங்கியிருக்கிறார்.

முதல்வர் பதவியில் இருந்து விலகிய அன்று பிற்பகலிலேயே அரசுக் குடியிருப்பான கூவம் மாளிகையில் இருந்து வெளியேறி, தனது சொந்த ஊரான ஓமந்தூருக்குச் சென்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து, அரசியல் வாழ்வை முற்றிலுமாகத் துறந்த அவர், ஆன்மிகத்தில் லயித்துப் போய், வள்ளலார் வாழ்ந்திருந்த வடலூரிலேயே வாழத் தொடங்கினார்.

வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவிய ஓமந்தூரார், தொடர்ந்து வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், ராமலிங்கத் தொண்டர் இல்லம் ஆகிய நிறுவனங்களை வடலூரில் ஏற்படுத்தியிருக்கிறார்.

இவ்வளவு சாதனைகளைச் செய்துவிட்டு, நேர்மையின் நிழலாகவும், உண்மையின் தத்துவமாகவும், சாதாரண மனிதர்களின் மக்கள் தலைவராகவும் திகழ்ந்த ஓமந்தூராருக்கு - தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் ஒரு சிலைகூட கிடையாது என்பது துயர் மிகுந்த செய்தி.

ஓமந்தூராரின் அரசியல் வாழ்வையும், தனிப்பட்ட வாழ்வையும் மிக சுவாரசியமான மொழிநடையில் திரட்டித்தந்த ராஜகுமாரன் பாராட்டுக்குரியவர்!

நூல்: முதல்வர்களின் முதல்வர்

ஆசிரியர்: எஸ்.ராஜகுமாரன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

757, அண்ணா சாலை

சென்னை – 600 002

தொலைபேசி: 8056046940

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.