படித்தேன்… ரசித்தேன் - 27: சேர்ந்திசைப்போம் நம் தொன்ம இசைக்கருவியை!

படித்தேன்… ரசித்தேன் - 27: சேர்ந்திசைப்போம் நம் தொன்ம இசைக்கருவியை!

தஞ்சாவூர் மாவட்டத்தில் முடிகொண்டான் என்கிற கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு, சிறுவயதிலேயே பறை இசையின் மீது சொல்லவியலாத ஈர்ப்பு உருவாகிவிட்டது. அந்த இசைக் கருவியின் அதிர்வுகள் இன்னமும் மனசுக்குள் கூடுகட்டி குந்திக் கிடக்கின்றன. எங்கள் கிராமத்தில் பகல் பொழுதில் மக்களுக்கு செய்தி சொல்பவர் தண்டோராவை முழக்கியபடி செல்வார். அதுதான் பறை இசையின் முதல் அறிமுகம் எனக்கு. அதன் பின்னர், சுவாமி புறப்பாட்டின்போது சாமி எங்கேயோ வந்துகொண்டிருக்க, அதற்கு அரை பர்லாங் முன்னாடியே பறையை இசைத்தபடி அந்த இசைக் கலைஞர்கள் செல்வார்கள். அதிலும் மன்று என்கிற மாபெரும் இசைக் கலைஞர் அதை இசைத்துச் செல்வதை ஊரே நின்று கேட்கும். ஆனால் நான் வளர்ந்த பிறகு, பறை இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, அவர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை போன்றவை மனசை பிசைந்தன.

இந்நிலையில் சமீபத்தில் ‘தமிழர் அனைவரும் இசைத்த பறை’ எனும் சிறு புத்தகம் படிக்கக் கிடைத்தது. முனைவர் சு.மாதவன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் பறை எனும் அந்த இசைக் கருவியைப் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள வைத்தது.

என்னை அதிர வைத்த பறை இசைக் கருவியைப் பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆசை.

ஆதி மனிதரோடு இருந்த ‘பறை’

இப்புத்தகத்தில், எடுத்த எடுப்பிலேயே ‘வேட்டைச் சமூகத்தில் உருவாகி, வேளாண் சமூகத்தில் உருமாறி, தொழில்நுட்பச் சமூகத்தில் கரு மாறி நிற்கிறது ‘பறை’ என்று சொல்கிற மாதவன், பறையின் தோற்றத்தையும், அதன் பரிணாமம் மற்றும் பரிமாணத்தையும் அழகுற விளக்கியிருக்கிறார். மேலும் அவர், “சமூக வளர்ச்சிக்கான வேட்டைச் சமூகத்தின் உணவுத் தேடலில் எல்லா மனிதரோடு இருந்த ‘பறை’ காலப்போக்கில் குறிப்பிட்ட சாதியினரின் இசைக் கருவியாகக் கருதப்பட்டது. அந்நிலையில் இருந்து மீட்டுருவாக்கம் செய்து, இன்று மீண்டும் பொதுவெளியை தன் அதிர்வலைகளால் நிறைக்கும் பயில்கலைக் கருவியாக மாறியுள்ளது” என்று மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறார்.

வேட்டைச் சமூகத்தில் தனியொரு மனிதனாக உணவுத் தேடச் சென்று, தேவையான அளவு உணவு கிடைக்காத நிலையில், குழுவாகச் சென்று வேட்டையாட முயற்சி செய்திருப்பார்கள். அப்போது மனிதக் குழுக்களைக் கண்டு விலங்குகள் பயந்தோடி காட்டின் புதர்களுக்குள் ஒளிந்திருக்கும். மொழி தோன்றாத, திசைகளுக்குப் பெயர் எதுவும் வைக்கப்படாத அந்தக் காலகட்டத்தில், சங்கேத ஓசையை எழுப்பி குறியீட்டுத் திசையை உணர்த்தவும், விலங்குகளை மிரட்சிக் கொள்ளச் செய்யவும் மனிதன் உருவாக்கிக்கொண்ட முதல் தோல் கருவியாகத் தான் பறை இருந்திருக்கும்.

அதுமட்டுமல்ல; வேளாண் சமூகத்தில் ஒரு குழுவினரை ஓரிடத்தில் கூட்டித் திரட்டவும் இந்தப் பறை பயன்பட்டிருக்கலாம் என பறையின் உருவாக்கத்துக்கான காரணத்தை விளக்குகிறார் இப்புத்தகத்தின் ஆசிரியர். மேலும், பறை எனும் இசைக்கருவி எவ்விதம் உருவாகியிருக்கும் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.

பறையின் தோற்றம்

மனித குலம் உயிர் வாழ்வதற்கான முதல் தேவையே உணவு தேடுதல்தான். இயற்கையாகப் பயிராகும் காய் மற்றும் கனிகளைச் சேகரித்து உண்டு வாழ்ந்த மனிதச் சமூகம், பின்னாட்களில் காய் கனிகளைப் போலவே விலங்குகளின் இறைச்சியையும் உணவாக உண்ணலாம் என்பதைக் கண்டறிந்தது. உண்ட இறைச்சி போக எஞ்சிய தோலைத் தூக்கியெறிந்தனர். அவ்வாறு தூக்கி எறியப்பட்ட விலங்குகளின் தோல், மரக்கிளைகளில் தொங்கி நீண்ட நாள் காய்ந்த பிறகு, அதில் காற்று, மரக்கிளைகள், மரத்தின் குச்சிகள், இலைகள் ஆகியவற்றால் உரசப்பட்டு அதுவரை கேட்டறியாத ஓசையை அக்கால மனிதன் கேட்டறிந்தான். அத்துடன் மனித சிந்தனையும் இணைந்து உருவான தோல் கருவிதான் பறை என்று ஆசிரியர் அழகாக விளக்கும்போது பறை இசைக் கருவியின் ஆதிக்காலம் நமக்குப் புரிபடுகிறது.

அக்காலத்தில் வெண்கடம்ப மரத்தால் பறை செய்யப்பட்டுள்ளது; அப்பறை யானையின் காலடிப் பாதத்தைப் போன்று இருந்துள்ளது என்கிற பொழிப்புரையுடன், ‘மரா அம் பறைகண் டன்ன நோன் தாள்’ என்று அகநானூறு வரிகளை முனைவர் மாதவன் எடுத்துக்காட்டும்போது பறையின் பின்னால் இருக்கும் தொன்மம் நமக்கு தெளிவாகிறது.

முனைவர் சு.மாதவன்
முனைவர் சு.மாதவன்

இதே போல குறிஞ்சி நில மக்கள் தினைப்புலத்தைக் காவல் காக்கின்றபோது கிளி, குருவி, பன்றி உள்ளிட்ட உயிரினங்களை விரட்டத் தொண்டகச் சிறு பறை, பன்றிப் பறை போன்றவற்றை இசைத்துள்ளனர் என்பது மலைபடுகடாம் நூலில் சொல்லப்பட்ட செய்திகளில் இருந்து அறிய முடிகிறது என்கிறார்.

நமது தொன்ம அடையாளம்

அறுவடைக் காலத்தில் வயலில் சிலர் இறங்கி நெல் கதிர்களை அறுக்க, அவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில், வயல் வரப்பில் இருந்தபடி ஓரிருவர் தங்களது பாம்பு விரல் மற்றும் பெருவிரலை பறையின் மீது தேய்த்து இசைத்துள்ளனராம். இதற்கு அக்காலத்தில் நெல்லரிப் பறை என்று பெயராம். இதே போல், அறுவடைக் காலத்தில் நெல் கதிரின் அடித்தாளை அறுக்கின்றபோது எழுகின்ற ‘சரட் சரட்… கறுக் முறுக்’ என்கிற ஓசையைப் போலவே பறையில் ஓசை எழுப்பி இருக்கின்றனர். இதற்கு அரிப்பறை என்று பெயர் வைத்துள்ளனர். போர்க்காலத்தில் மனிதர்களைத் திரட்ட பயன்பட்ட பறையை போர்ப்பறை என்று அழைத்துள்ளனர்.

இத்தகவல்களை எல்லாம் புறநானூறு, அகநானூறு, நெடுநல்வாடை, பதிற்றுப்பத்து, மதுரை காஞ்சி, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை போன்ற இலக்கியப் படைப்புகளில் இருந்து திரட்டி தந்து பறை எனும் அற்புத இசைக் கருவியை நம் மனதில் நிலை நிறுத்துகிறார் ஆசிரியர்.

வேட்டையாட, பெருகி வரும் வெள்ளத்தை அடைக்க, வீரர்களைத் திரட்ட, வேலையின்போது உற்சாகமூட்ட, அறுவடை செய்ய, வழிபட, பாட்டுக்கட்ட, மணவிழாவைக் கொண்டாட, செய்தியை அறிவிக்க, உழவரை வயல் வேலைக்கு அழைக்க, வெற்றியைக் கொண்டாட, விதைக்க, விலங்கு மற்றும் பறவைகளை விரட்ட, கூத்துக்கட்ட, விழாவைச் சிறப்பிக்க, இறப்பைத் தகவலாக அறிவிக்க என மனித வாழ்வின் பலகட்டங்களில் பறை இசைப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள 427 பழங்குடி மக்கள் பிரிவுகளில் 63 சதவீதத்தினர் மலைப் பிரதேசங்களில் வாழ்கின்றனர். இவர்கள் ஆடல், பாட, வழிபாடு, செய்தித் தொடர்பு அனைத்திலும் பறையானது இன்று வரை பயன்பாட்டில் இருந்துவருவதாக முனைவர் மாதவன் குறிப்பிடுகிறார்.

இச்சிறு புத்தகத்தைக் கட்டாயம் அனைவரும் வாசிக்க வேண்டும். நமது தொன்மச் சிறப்போடு பல்வேறு வாழ்வியல் கட்டங்களில் நம்மோடு உறவாடிய அந்த இசைக் கருவியை மீட்டுருவாக்கம் செய்வது எவ்வளவு அவசியம் என்பதை உணர்வதற்காகவாவது இந்நூலை அனைவரும் வாசிக்க வேண்டுகிறேன்.

நூல்: தமிழர் அனைவரும் இசைத்த பறை

ஆசிரியர்: முனைவர் சு.மாதவன்

வெளியீடு: செம்மொழி

197, அனந்தநாபன் நகர்,

மண்ணிவாக்கம் விரிவு,

சென்னை - 600 048

போன்: 9585034134

(திங்கள்கிழமை சந்திப்போம்)

ஓவியம்: வெ.சந்திரமோகன்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in