படித்தேன்... ரசித்தேன் - 24: ஆண்களின் மனசோடு உரையாடும் எழுத்து!

படித்தேன்... ரசித்தேன் - 24:
ஆண்களின் மனசோடு உரையாடும் எழுத்து!

கரிசல் மண்ணின் வெக்கை தாங்கிய மனங்களின் கதைகளைச் சொன்னவர் என்கிற பெருமைக்கு உரியவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். அவருடைய ‘ஆண்கள் சமைத்தல் அதனினும் இனிது’ என்கிற புத்தகம்தான் நான் முதன்முதலில் வாசித்த அவருடைய புத்தகம். அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து ச.தமிழ்ச்செல்வனின் வேலூர் புரட்சி, அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள், பெண்மை என்றொரு கற்பிதம் ஆகிய அவரது படைப்புகளை வாசித்து, ச.தமிழ்ச்செல்வனின் வாசகராகவே ஆகிவிட்டேன். . அதேபோல, `அரசியல் எனக்குப் பிடிக்கும்' என்ற இவருடைய கட்டுரைத் தொகுப்பு பல நுட்பங்களை எனக்குப் புரிய வைத்த ஆக்கமாகும். இவர் எழுதிய ‘வெயிலோடு போய்' என்ற சிறுகதை என் விருப்பப் பட்டியலில் எப்போதும் இருக்கிறது, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்புப் பகுதியில் ஞாயிறுதோறும் தொடராக வந்தபோது தொடர்ந்து படிக்கவியலாமல் போய்… இப்போது ‘எசப்பாட்டு’ எனும் பெயரில் தொகுப்பாக வந்திருக்கும் இப்புத்தகத்தை அண்மையில் வாசித்தேன்.

இப்புத்தகத்தில் எல்லாப் பக்கங்களிலும் இருக்கும் செய்திகள் அத்தனையும் எனக்குப் புதிது. அவை அத்தனையையும் இங்கே வழங்க இயலாது. எனவே அதில் இருந்து சில செய்திகளை ச.தமிழ்ச்செல்வன் எழுத்திலேயே பகிர்ந்துகொள்கிறேன்.

‘கேட்டர்பில்லர்’  திரைப்படத்திலிருந்து...
‘கேட்டர்பில்லர்’ திரைப்படத்திலிருந்து...

ஆண்மை எனும் கற்பிதம்

‘கேட்டர்பில்லர்’ எனும் ஜப்பானியத் திரைப்படம் பார்த்தேன். சீன - ஜப்பான் போரில் பங்கேற்கும் ஜப்பானிய ராணுவ வீரன் 'குரோகாவா'தான் படத்தின் மையம். முதல் காட்சியில் சீனாவின் ஒரு கிராமத்துக்குள் புகுந்த ஜப்பானிய ராணுவம், அக்கிராமத்தை அழிக்கிறது. குரோகாவாவும் தேசபக்தி கொண்ட ராணுவ வீரனாக, கடமை உணர்வுடன் தப்பி ஒடும் சீன மக்களைச் சுட்டுக் கொல்கிறான். அலறித் துடிக்கத் துடிக்கச் சீனப் பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்கிறான். சொத்துகளைச் குறையாடுகிறான். அடுத்த காட்சியில் போர் முடிந்து குரோகாவா ’பேராண்மை மிக்க போர் நாயகன்’ எனும் தேசிய விருது பெறுகிறான். தேசிய மெடல்களை நெஞ்சில் சுமந்தபடியே அவனது சொந்த கிராமத்துக்குச் செல்கிறான். ஆனால் போரில் இரு கால்கள், இரு கைகள் இழந்து… கேட்கும் திறனையும் பேசும் ஆற்றலையும் இழந்து ஒரு முண்டமாகக் கொண்டுவரப்படுகிறான். ஊரே எல்லையில் நின்று அவனை வரவேற்கிறது. அவனது மனைவி அவனது கோலத்தைப் பார்த்துக் கதறினாலும், அவனைப் பாதுகாக்கும் கடமையை ஏற்று அவனை அழைத்துச் செல்கிறாள்.

தொடக்கத்தில் பரிவுடன் அவனைக் கவனிக்கிறாள். ஆனாலும், அவளுக்குப் போருக்கு முந்தைய பழைய வாழ்க்கை நினைவுக்கு வந்துகொண்டே இருக்கிறது. அவனது முரட்டுத்தனமான பாலியல் ஆவேசத்தில் மூச்சுத்திணறிய இரவுகள் அவள் நினைவில் புரள்கின்றன. அவளது உணர்வுகளைச் சற்றும் மதியாத அவனது அலட்சியம் அவள் நெஞ்சில் முள்ளாய் நிற்கிறது. இப்போது அவனுக்குக் கையும் இல்லை; காலும் இல்லை. ஆனால் தின்ன ஒரு வாய் இருக்கிறது. பாலுறவு கொள்ள ஆணுறுப்பு மிச்சமாய் இருக்கிறது. இதை வைத்துக் கொண்டு தினசரி அவளை இம்சிக்கிறான். அவளிடம் கோருவது அவனது 'உரிமை' எனக் கருதுகிறான். அவன் குணம் மாறவில்லை. அவன் அதே ஆணாகவேதான் இப்போதும் இருக்கிறான். அவன் வாய்க்குச் சமைத்துப்போடவும் அவனது பாலியல் தேவைக்குத் தன் உடலைத் தரவும் மனைவி என்கிற அவளை நிர்ப்பந்திக்கின்றன. 'கடமை' அவன் முன்னர் செய்த கொடுமைகளுக்குப் பழிதீர்க்கும் உணர்வு அவளுக்கு மேலோங்குகிறது. கருணைக்கும் பழி தீர்க்கும் உணர்வுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் அவளது உளவியல்தான் கதையின் மையம்.

ச.தமிழ்ச்செல்வன்
ச.தமிழ்ச்செல்வன்

இந்தப் படம் பார்த்தபோது, முதலில் எனக்கு ஏற்பட்டது குற்றவுணர்ச்சிதான்.

ஆண்மை என நாம் நம்புகிற எல்லாவற்றையும் இந்தப் படம் கலைத்துப் போட்டது. ஆண்மை, பெண்மை என்பதெல்லாம் வெறும் கற்பிதங்கள்தான். சமூகமும் அந்தச் சமூகத்தில் நிலவும் பண்பாடும் கட்டமைத்த கற்பிதங்கள். பெண்மை என்பதோடு பல குணாதிசயங்களை இணைக்கிறார்கள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, நளினம், அழகு, சேவை மனப்பான்மை, தன்னல மறுப்பு அப்புறம் இந்தத் தாய்மை எனப் பல இணைப்புகள் பல சமயங்களில் இந்த இணைப்புகளே முன்னின்று 'இதுதான் பெண்மை' என நம்மை வைக்கின்றன. அதேபோல ஆண்மை என்கிற கற்பிதத்தைக் கட்டமைக்கும் பல இணைப்புகள் இருக்கின்றன. வீரம், ஆளுமை (பெண்ணை ஆளுதல் முக்கியம்). அதிகாரம் செலுத்துதல், மதம் காத்தல், தேசியப் பெருமிதம் செலுத்துதல், சாதி காத்தல் எனப் பெரிய பட்டியலே இருக்கிறது. பெண்ணுக்கு ஒரு குழந்தையைக் கொடுப்பது ஆண்மையின் லட்சணங்களில் ஒன்றென உலகமே நம்புகிறது. அதற்கு வாய்ப்பு இல்லாதவரை ஆண்மையற்றவன் என விளிப்பது, வழக்கமாக இருக்கிறது. ஆண்மை என்றாலே இதுதான் என நம்பும் உலகமாகவும் இருக்கிறோம்.

பிறசாதிப் பெண்கள் மீது கை வைப்பதன் மூலம் அச்சாதியை இழிவுபடுத்தித் தன் சாதியின் ஆதிக்கத்தை நிலைநாட்டுதல் என்பது கண்முன்னால் அன்றாடம் நிகழ்கிறது. நிலவுடைமை கோலோச்சிய நாட்களில் பண்ணையடிமைகளின் வீட்டுப் பெண்களைப் பெண்டாளும் ஆண்டைகள் பற்றிய கண்ணீர்க்கதைகள் எத்தனை.

ஆண்மை அங்கே சாதியுடன் கை கோர்க்கிறது. இதன் உச்சமாக தூத்துக்குடி மாவட்டம் டிசங்கரலிங்கபுரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது என்று அவ்வூர் உயர்சாதியினர் ஊர்க் கட்டுப்பாடு விதித்திருந்த செய்தி கேட்டுத் தமிழகமே அதிர்ச்சியடைந்தது.

பார்வை ஒன்றே போதுமே...

பதினோராம் வகுப்பு மாணவ - மாணவியர் பங்கேற்ற ஒரு இலக்கியப் பயிலரங்கில் ,’வாழ்க்கையில் இலக்கியத்துக்கான இடம்’ பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். இதில் பங்கேற்ற 30 பேரையும் வட்டமாக உட்கார வைத்து, நடுவில் நான் நின்று பேசிக்கொண்டிருந்தேன். உற்சாகத்துடன் போய்க்கொண்டிருந்தது அமர்வு. அதில் - இரண்டு மாணவர்கள் மட்டும் நான் பேசியதைச் சற்றும் கவனிக்கவில்லை. இன்னும் சரியாகச் சொன்னால், நான் ஒருத்தன் இருப்பதையே அவர்கள் சட்டை செய்யவில்லை. பெண்கள் மீது வைத்த கண்ணை எடுக்காமல் முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். பார்வைக்கு இலக்கான பெண்கள், இயல்பாக இருக்க முடியாமல் பார்வை என்மீதும் கவனமும் அசூயையும் அப்பையன்கள் மீதுமாக இருந்தார்கள்.

அவர்களுடைய கவனத்தை எனது பக்கம் திருப்ப நான் எடுத்த முயற்சிகள் (கனைப்பது, செருமுவது, குறுக்கே போய் நிற்பது போல) எதுவுமே பலிக்கவே இல்லை. இதுதாண்டா சான்ஸ், இதை விட்றாதே என்பதாக இருந்தது அப்பையன்களின் அணுகுமுறை. வகுப்பாசிரியராக இருந்தால் ’கெட் அவுட்’ என்று சொல்லிப் பிரச்சினையை முடித்திருக்கலாம். நான் எழுத்தாளன் என்று அங்கு போயிருக்கிறவன். அப்படிச் செய்வது எழுத்துக்கும் அழகல்ல. அந்த 2 மணி நேரமும் அப்பையன்கள் இருவரையும் இலக்கியத்தின் பக்கம் ஈர்க்க முடியாமலே தோற்றுத் திரும்பினேன்.

இந்த ‘ஆண் முறைப்பு’ என்பது ஆண்மையின் லட்சணங்களில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு மாற்றாகப் ’பெண் முறைப்பு’ என்பது இந்த அளவுக்கு இருப்பதில்லை. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்கிற கண்ணியமான எல்லைக்குள் அது நின்றுவிடுகிறது. சுற்றி இருக்கும் உலகத்தையே மறந்து முறைப்பது என்பது ஆணுக்கே உரிய பண்பாக இருக்கிறது. இது உளவியல் ரீதியாகப் பெண்களை மிகவும் பாதிக்கும் செயல்பாடாக இருக்கிறது.

சில ஆயிரம் ஆண்டுகளாகத் தொடரும் பெண் மீதான இந்த ஒடுக்குமுறையின் விளைவாக ’பெண் முறைப்பு’ என்பது உள்ளொடுங்கிவிட்டது. கற்புடைப் பெண்டிர் ஆடவரை முறைப்பது அழகல்ல. இதுகூடப் பரவாயில்லை. இன்னும் ஒருபடி மேலே போய் ‘கற்பெனப்படுவது பிற ஆடவர் நெஞ்சு புகாமை’. அதாவது ‘நீயொரு ஆம்பளை மனசுக்குள்ளே பூந்துட்டா அது அவன் தப்பில்லை. உன் தப்பு’ என்று பெண்களுக்கு விதி செய்யப்பட்டது.

இந்தக் கட்டுப்பாடு எதுவுமே விதிக்கப்படாத நம் ஆண் குதிரைகள், கால்வெளி முழுவதும் கட்டற்றுத் துள்ளிக் குதித்தே பாய்ந்து வருகின்றன.

கண்களைப் பழக்குவது....

லெக்கின்ஸ் அணிவது சரியா தப்பா என்று பத்திரிகைகளில் விவாதங்கள் நடந்த நாட்களில், கிராமப்புறப்பெண்கள் அதிகமாகப் பங்கேற்ற ஒரு பயிலரங்கில் இந்தக் கேள்வியைத்தான் முன்வைத்தேன். அந்தப் பெண்கள் தப்பு என்றுதான் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். அதற்குப் பிறகு அவ்விவாதத்தை எந்தத் திசையில் கொண்டு செல்லலாம் என்று என் நகரத்து மூளை திட்டமிட்டுக்கொண்டிருந்தது. ஆனால், அவர்கள் வேறு ஒரு கேள்வியைப் போட்டு என் மூளையின் போக்கை நிறுத்தினார்கள்.

அவர்கள், ‘யார் அணிவது சரியா தப்பான்னு கேளுங்க’ என்றார்கள். ’மெட்ராஸ் மாதிரி மாநகரத்து பெண்கள் லெக்கின்ஸ் அணியலாம். நாங்கள் அணிய வேண்டியதில்லை' என்று கருத்துரைத்தார்கள்.

அந்த விவாதத்தில் திரண்டு வந்த மையக் கருத்து என்னவெனில், ஆண்களின் கண்களை ஈர்க்காத உடைதான் பெண்ணுக்குப் பொருத்தமான / பாதுகாப்பான உடை என்பது. ’அப்போ பெண்களின் உடையை ஆண்கள்தான் தீர்மானிக்கணுமா? அது உங்கள் சுதந்திரத்தைப் பாதிக்காதா? உடைத்தேர்வு உங்கள் உரிமை இல்லையா?’ என்று கேட்டபோது, ’என்னா சார் பண்றது? இதுங்களோடதானே வாழ்ந்தாக வேண்டியிருக்கு?’ என்றார்கள்.

ஒரு புகழ்பெற்ற ஜோக் உண்டு. பாரிஸில், ஒரு ஓவியக் கண்காட்சிக்குக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றார்களாம். அங்கே ஒரு ஆணும் பெண்ணும் ஆடையின்றி நிர்வாணமாக நிற்பதுபோல ஓர் ஓவியம் இருந்ததாம். அப்படத்தைக் காட்டி, ’இதில் ஆண் யார்… பெண் யார்?’ என்று ஆசிரியர் கேட்டபோது, ’ஆடை அணியாமல் இருக்கிறார்களே எப்படி ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியும்?’ என்று குழந்தைகள் பதில் சொன்னார்களாம்.

நாம் பிறந்த சமூகம்தான் நமக்கு ஆடையணிவிக்கிறது. ஆணுக்கு ஒருவிதமாகவும் பெண்ணுக்கு இன்னொரு விதமாகவும் அப்படியே பார்த்துப் பார்த்துப் பழகிய கண்கள், அதில் ஏதேனும் மாற்றம் செய்தால் துணுக்குற்று ஆட்சேபிக்கத் தொடங்கிவிடுகிறது. குறிப்பாகப் பெண்களின் உடை குறித்த ஆட்சேபங்கள் ஆண்களின் கண்களில் இருந்துதான் புறப்பட்டு வருகின்றன.

ஆம்பளைங்க சமாச்சாரம்…

உலகில் அதிகமான பாலியல் வன்முறைகள் நிகழும் நாடுகளின் பட்டியலில் 2-வது இடத்தை இந்தியா பிடிக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களின் மீது ஏறி நிற்கும்போது, நம் மனச்சாட்சி சில கேள்விகளை எழுப்புகிறது. இந்திய ஆண்கள் என் இப்படி, இவ்வளவு மோசமாகத் தங்கள் பெண்களிடம் நடந்துகொள்கிறார்கள்? அதன் காரணங்களைக் கண்டறிந்து வேரில் இருந்து சிகிச்சையை இனியாவது தொடங்க வேண்டாமா?

மலரினும் மெல்லிய காமம்… இந்தியாவில் ஏன் கொல்லும் வன்மத்துடன் அலைகிறது? இதை மாற்றுவதில் அரசின் தலையீடு, தண்டனைகள் என இவற்றுக்கெல்லாம் முக்கியப் பங்கு இருக்கிறது. அத்துடன் காமம் சார்ந்து இந்திய ஆண் மனம் எவ்விதம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்வதும் அவசியம். அவர்களின் காம உலகத்து ரகசியங்களைப் பொதுவெளியில் கிழித்துப்போட்டு விவாதிப்பதும், காமம் ஏன் ஒரு நோய்க்கூறாக ஆண் மனதில் உருமாற்றம் பெற்றுள்ளது என்பதை ஆராய்வதும் இதற்கான வைத்தியத்துக்கான வழிகளைத் திறக்க உதவும்.

நூல்: எசப்பாட்டு: ஆண்களோடு பேசுவோம்

ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

7, இளங்கோ சாலை.

தேனாம்பேட்டை

சென்னை – 600 018

போன்: 044 – 243324245

(திங்கள்கிழமை சந்திப்போம்)

ஓவியங்கள்: வெ.சந்திரமோகன்

Related Stories

No stories found.