படித்தேன்… ரசித்தேன் - 22: அம்பேத்கரின் நினைவலைகள்

படித்தேன்… ரசித்தேன் - 22:
அம்பேத்கரின் நினைவலைகள்

இந்தியாவில் காந்தியைக் கொண்டாடுகிற அளவுக்கு அண்ணல் அம்பேத்கரைக் கொண்டாடுவதில் பொதுவான மக்கள் ஏன் சுணக்கம் காட்டுகின்றனர் என்கிற கேள்வி எனது சிறுவயதிலேயே தோன்றிவிட்டது. ஒரு குறிப்பிட்ட சாதிய தலைவராக மட்டுமே அண்ணலை நோக்கும் பொதுப்புத்தியில் படிந்திருப்பதை அறிவுசார் அழுக்காகவே பார்க்கிறேன். எல்லோருக்குமாகச் சிந்தித்த அண்ணலைப் பற்றி அறிந்துகொள்ள தேடித் தேடி பல புத்தகங்களை வாசித்தேன். புனிதபாண்டியனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'தலித் முரசு' இதழில் நண்பன் வே.மதிமாறன் எழுதிய அண்ணலைப் பற்றிய சிந்தனைச் சரங்களும் எனது எண்ணங்களை விரிவுபடுத்தின.

அண்ணல் அம்பேத்கர் எழுதி பேராசிரியர் பெரியார்தாசன் மொழிபெயர்த்திருந்த ‘தம்மபதம்’ நூலின் வழியேதான் புத்தரை நான் புரிந்துகொண்டேன்.

எனது ‘புத்தரின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை’ என்கிற புத்தகத்தில் ‘பசி வந்தாலும் பறந்து போகாத பத்து’ என்ற தலைப்பிலான கட்டுரையில் அண்ணலைப் பற்றி பதிவு செய்திருக்கிறேன்:

அம்பேத்கர் சிறுவயதில் தனது அப்பாவைப் பார்க்கப் போனபோது, தாகத்தில் தவித்திருக்கிறார். அப்போது பாதையில் தீண்டாமைக்கு இலக்காகி, அவருக்குக் குடிக்க தண்ணீர் கொடுக்க மறுத்த நிகழ்வையும், அதைத் தொடர்ந்து அவர் மாடுகள் இறங்கியதால் கலங்கி நிற்கும் ஓடையில் அழுக்கு நீரை மொண்டு குடிக்க நேர்ந்த அனுபவத்தையும் படித்தபோது மனம் வலித்தது.

இதைவிட கொடுமை - அவர் கல்வி அறிவு பெற்று பாரிஸ்டர் என்கிற உயர்ந்த அடையாளத்துடன் திரும்பி… இந்தியாவில் ஓர் அலுவலகத்தில் பணிபுரிந்தபோது, அங்கே பானையில் இருந்த தண்ணீரை மொண்டு குடிப்பதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்ட சம்பவத்தை எல்லாம் படித்தபோது 'இவருக்கே இந்த நிலையென்றால்..?’ என யோசிக்க வைத்தது. அதுதான் தொடக்கப் புள்ளி. நெகிழ்வு மனநிலையோடு ஒன்றை அணுகுவது சரியல்ல என்பது தெரிந்தாலும், நான் உண்மையில் அண்ணலை நேசிக்கத் தொடங்கியிருந்தேன்.

நிர்வாகத் துறையை ஜனநாயகப்படுத்த அவர் பட்டியல் சாதியினருக்கு கோரிய பிரதிநிதித்துவத்தை எவரால் மறைக்க முடியும்? இந்தியாவில் ஒடுக்கப்பட்டோரின், நசுக்கப்பட்டோரின், எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்டோரின் மேன்மைக்கான குரலாக அண்ணலின் குரல் இருந்தது. அது சமநீதிக்கான குரல். மேல்நிலைக் கல்வியைப் பெறுவதன் வாயிலாக மட்டுமே, சமூக பொருளாதார சமத்துவம் கைகூடும் என்பதை முதன்முதலாக அண்ணலின் நூல் வழியாகத்தான் கற்றேன்.

இந்தியாவின் நீர் மேலாண்மைக்கு அம்பேத்கர் ஆற்றிய பங்களிப்புதான் நதிகளை இணைக்க வேண்டும் என்கிற இன்றைய குரலுக்கு அடிப்படை.

இந்தியாவில் சட்டத்தின் அடிப்படையில்தான் உரிமைகளைப் பெற முடியும் என்பதை அழுத்தமாக பதிவு செய்த முதல் தலைவராக அண்ணலை நான் புரிந்துகொண்டேன்.

'கல்வியும் - வேலைவாய்ப்பும் வஞ்சிக்கப்பட்ட மக்களின் தேவைகளாக, இலக்குகளாக அமையும்போது இடஒதுக்கீடு என்பது அவற்றின் கொள்கையாகிறது' என்கிற அண்ணலின் முதல் மனிதாபிமான குரல்... இன்னமும் சாத்தியப்படாமலே இருக்கிறது என்பதை தங்கை அனிதாவின் மரணம் இப்போதும் நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது.

* மேலே நீங்கள் படித்தவை எனது ‘புத்தரின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை’ நூலில் பதிவு என்னால் செய்யப்பட்டவை.

அண்ணலைப் பற்றிய எனது தேடுதல் பயணத்தில் அண்மையில் ‘நீலம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ள பூ.கொ.சரவணன் மொழிபெயர்த்துள்ள ‘விசாவுக்காக காத்திருக்கிறேன்’ என்கிற புத்தகமும் சேர்ந்துகொண்டுவிட்டது. டாக்டர் அம்பேத்கரின் சொந்த கையெழுத்தில் எழுதப்பட்ட நினைவலைகள்தான் இப்புத்தகம். மக்கள் கல்விக் கழகத்தின் சேகரிப்பில் இருந்த இக்குறிப்புகள் 1990-ல் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அதைத்தான் பூ.கொ.சரவணன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

வகுப்பின் மூலையில் ஒரு இருக்கை

இப்புத்தகத்தில் இருந்து சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்:

இது நடந்தபோது நான் 9வயதுச் சிறுவன். என் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்ட சம்பவம் இது. இச்சம்பவம் நடப்பதற்கு முன்பே, தீண்டத்தகாதவர்கள் சில அவமானங்கள். ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். எடுத்துக்காட்டாக – என் வகுப்பில் ரேங்க் அடிப்படையில் பிற மாணவர்களோடு நான் உட்கார வைக்கப்படாமல், வகுப்பறையின் ஓரத்தில் அமர வைக்கப்பட்டேன். நான் உட்காருவதற்கு என தனி சாக்குப்பை இருக்கும். வகுப்பைச் சுத்தம் செய்யும் பணியாளர் என் சாக்குப்பையை மட்டும் தொட மாட்டார். எனது சாக்குப் பையை மாலை வீட்டுக்கு எடுத்துச்சென்று, அடுத்த நாள் கொண்டுவர வேண்டும். என் பள்ளியில் தீண்டத்தகுந்த பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களுக்குத் தாகம் எடுத்தால், குடிநீர்க் குழாய்க்குச் சென்று, அதைத் திறந்து நீர்பருகலாம். என்னுடைய நிலையோ வேறு. நான் குழாயைத் தொடக் கூடாது. தீண்டத்தகுந்த வகுப்பைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் குழாயினைத் திறக்காவிட்டால். என்னுடைய தாகத்தைத் தணித்துக்கொள்ள முடியாது. எனக்குத் தண்ணீர் திறந்துவிடப் பள்ளியின் சீப்பத்தியை ஆசிரியர் அனுப்பிவைப்பார். அவர் பள்ளிக்கு வராமல் போனால் எனக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது.

நாங்கள் வசித்த சத்தாராவில் சலவைக்காரர்கள் இருந்தார்கள்.அவர்களுக்குக் காககொடுக்க முடியாத நிலையிலும் நாங்கள் இல்லை. எங்களைத் திண்டத்தகாதவர் என்று சொல்லி எங்கள் வீட்டுத் துணிகளை எந்தச் சலவைக்காரரும் துவைக்க மாட்டார். வீட்டுத்துணிகளைத் துவைக்கிற வேலையை என் அக்காக்களே மேற்கொண்டார்கள்.

அதேபோல சத்தாராவில் நாவிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்குரிய கட்டணம் தருமளவுக்கு எங்களிடம் பணமும் இருந்தது. எங்களை தீண்டத்தகாதவர் என்று சொல்லி எங்களுக்கு முடிவெட்ட நாவிதர்கள் மறுத்தனர். எங்கள் குடும்ப சிறுவர்களுக்கு எங்கள் பெரிய அக்காவே முடி வெட்டிவிடுவார். முகச்சவரமும் அக்காவே செய்துவிடுவார். இவை எல்லாம் எனக்குத் தெரிந்தே இருந்தன.

இந்தச் செய்திகளைப் பதிவு செய்கிற அண்ணல் மேலும் குறிப்பிடுகிறார். மேலே நான் சொல்லியிருக்கும் நிலையானது… சாதாரண நிகழ்வுகள் என்று சொல்லும் வகையில் இதைவிட அவமானகரமான நிகழ்வு ஒன்றை பதிவு செய்கிறேன் என்று சொல்லி ஒரு வேதனை குறிப்பை எழுதுகிறார்:

சத்தார் மாவட்டத்தின் கோரேகான் எனுமிடத்தில் அண்ணலில் தந்தை காசாளராகப் பணிபுரிந்து வந்தார். சத்தாரின் அத்தையிடம் வளர்ந்து வந்த அண்ணலும், அவரது அண்ணனும், அவரது அக்கா மகன்கள் இருவர் உட்பட நான்கு பேரும் கோடை விடுமுறைக்கு அப்பா வேலை பார்க்கும் கோரேகானுக்கு ரயிலில் சென்றனர். மசூர் என்கிற ரயில் நிலையத்தில் இறங்கிக்கொண்ட நால்வரும், தங்களை அழைக்க அப்பாவோ, அப்பாவின் உதவியாளரோ வராதது கண்டு திகைத்தனர். அப்போது மசூர் ரயில் நிலைய மாஸ்டர் வந்து, புத்தம்புதிய ஆடைகள், கழுத்தில் சங்கிலி, கையில் மோதிரங்கள் அணிந்திருந்த இச்சிறுவர்களைப் பார்த்து, இவர்கள் உயர் சாதியினர் என்கிற அவதானிப்புடன் இவர்கள் ஏன் திகைப்புடன் இங்கு நிற்கின்றனர் என்று கருணையுடன் விசாரித்துள்ளார். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லிய ஸ்டேசன் மாஸ்டர், ‘பிள்ளைகளா… நீங்கள் எந்தச் சாதியை சேர்ந்தவர்கள்?’ என்று கேட்க, உண்மை மட்டுமே பேசத் தெரிந்த அம்பேத்கர், ‘நாங்கள் மகர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்’ என்று சொல்லிவிடுகிறார். (பம்பாய் மாகாணத்தில் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் சமூகங்களில் ஒன்றே மகர்) இதைக் கேட்ட ஸ்டேசன் மாஸ்டர் எதுவுமே பேசாமல் தனது அறைக்குத் திரும்பிவிடுகிறார். செய்வதறியாது நெடுநேரமாகியும் அங்கேயே அவர்கள் நிற்பதைக் கண்ட ஸ்டேசன் மாஸ்டர், கொஞ்சம் மனம் இளகி, ரயில் நிலையத்துக்கு வெளியே அவர்களை அழைத்துச் சென்று, அங்கே நின்றுகொண்டிருந்த மாட்டு வண்டியை வாடகைக்கு அமர்த்தி சிறுவர்கள் கோரேகானுக்கு அனுப்பி வைக்க முயன்றுகொண்டிருந்தார்.

இந்நிலையில் ரயில் நிலையத்தில் ‘நாங்கள் மகர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்’ என்று ஸ்டேசன் மாஸ்டரிடம் சிறுவனான அம்பேத்கர் சொல்லியிருந்த தகவல்… ஸ்டேசனுக்கு வெளியே நின்றிருக்கும் மாட்டு வண்டிக்காரர்கள் வரை பரவியிருந்தது. ‘தீண்டத்தகாத மகர்களுக்கு நாங்கள் வண்டியோட்ட மாட்டோம்’ என்று அவர்கள் வர மறுத்தனர். அப்போது, ‘நீங்கள் இவர்களுக்கு வண்டி ஓட்ட வேண்டாம். இந்தச் சிறுவர்களே வண்டியில் உட்கார்ந்துகொண்டு அவர்களே வண்டியோட்டிக் கொள்வார்கள். நீங்கள் வண்டிக்குப் பின்னால் நடந்து சென்றால் போதும். அதுமட்டுமல்ல… இரண்டு மடங்கு கட்டணமும் இச்சிறுவர்களைத் தரச் சொல்கிறேன்’’என்று ஸ்டேசன் மாஸ்டர் வண்டிக்காரரிடம் பேசி, அவரைச் சம்மதிக்க வைக்கிறார்.

தனக்குத் தீட்டு எதுவும் ஏற்படாமல் காப்பதோடு, இரு மடங்கு சம்பாதிக்கும் வாய்ப்பையும் வழங்கியதால் இந்த யோசனையை வண்டிக்காரர் ஏற்றுக்கொள்கிறார்.

இந்தச் சம்பவத்தை இப்புத்தகத்தில் பதிவுசெய்துள்ள அண்ணல், ‘எனது 9 வயதில் என் வாழ்வில் நடந்த இச்சம்பவம்தான் பின்னாட்களில் நான் பல சமூக நீதியுடன் கூடிய சிந்தனைகளையும் முடிவுகளையும் என்னை எடுக்க வைப்பதற்கான முதல் புள்ளியாக அமைந்துவிட்டது’ என்றெழுதுகிறார்.

வேதனை மிகுந்த ஒரு கடிதம்

காந்தி நடத்திவந்த ’யங் இந்தியா’ இதழில் 12 டிசம்பர் 1929 -ல் இக்கடிதம் காணப்படுகிறது.

அப்போதுதான் குழந்தையை ஈன்றிருந்த ஆசிரியர் ஒருவர், அவர் மனைவிக்குச் சிகிச்சை அளிக்குமாறு இந்து மருத்துவர் ஒருவரைச் சம்மதிக்க வைக்க, அவர் பட்ட பாட்டை விவரிக்கிறது அக்கடிதம். மேலும் அவரது மனைவியும், குழந்தையும் போதுமான மருத்துவக் கவனிப்பின்றி இறந்து போனதையும் தெரிவிக்கிறது.

இந்த மாதம் 5-ம் தேதியன்று எனக்கொரு குழந்தை பிறந்தது. ஏழாம் தேதி என் மனைவி உடல்நலமின்றி பேதியால் அவதிப்பட்டார். அவருடைய உடம்பின் களையெல்லாம் வற்றிப்போய், நெஞ்சம் பற்றியெரிய ஆரம்பித்தது.

மூச்சுவிட முடியாமல் கஷ்டப்பட்டார். நான் டாக்டரை அழைக்கச் சென்றேன். ஆனால் அவர் ஒரு ஹரிஜன் வீட்டுக்கு வர முடியாது என்று சொல்லிவிட்டார். அடுத்த ஊரில் இருந்த ஒரு மருத்துவரை சந்தித்து உதவுமாறு மன்றாடினேன். மருத்துவருக்கு உரிய இரண்டு ரூபாயை தந்துவிடுவேன் என உறுதியளித்தேன். ஒருவழியாக மருத்துவர் வந்தாலும், அவர் ஹரிஜன் காலனிக்கு வெளியே நின்றே மருத்துவம் பார்ப்பேன் என்று நிபந்தனை விதித்தார்.

என்னுடைய மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் காலனியைவிட்டு வெளியே அழைத்து வந்தேன். மருத்துவர் தன்னுடைய தெர்மா மீட்டரை முஸ்லிம் ஒருவரிடம் கொடுத்தார். அவர் என்னிடம் அந்த தெர்மா மீட்டரை கொடுப்பார். அதனை நான் என் மனைவியிடம் கொடுத்தேன். இதே முறையில் தர்மா மீட்டரைப் பயன்படுத்திவிட்டுத் திருப்பத் தந்தோம். மணி இரவு 8 இருக்கும். மருத்துவர் விளக்கு வெளிச்சத்தில் தெர்மா மீட்டரைப் பார்த்துவிட்டு, என் மனைவி நிமோனியாவில் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இரண்டு ரூபாய் கட்டணத்தைப் பெற்றுக்கொண்ட மருத்துவர், பின்னர் பஜாரில் இருந்து மருந்தை அனுப்பி வைத்தார். மறுபடியும் சிகிச்சை அளிக்க அழைத்தபோது வர மறுத்ததுடன், இந்த நோய் அயாயகரமானது. கடவுள் மட்டுமே உங்களைக் காக்க முடியும் என்று கைவிரித்துவிட்டார். இன்று நண்பகல் இரண்டு மணியளவில் என் மனைவி காலமாகிவிட்டாள். என் வாழ்வின் ஒளி அணைந்துவிட்டது.”

காந்தியின் ‘யங் இந்தியா’ இதழில் இந்தக் கடிதத்தை எழுதியிருந்த அந்தப் பள்ளி ஆசிரியரின் பெயர் தரப்படவில்லை. அந்த மருத்துவரின் பெயரும் இடம்பெறவில்லை. தனக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கைகள் நிகழக்கூடும் என்று அஞ்சிய ஆசிரியரின் கோரிக்கையின்படியே பெயர்கள் வெளியிடப்படவில்லை.

நன்றாகக் கல்வி பெற்றிருந்த ஒரு மருத்துவர் தெர்மாமீட்டரை நோயாளியிடம் தானே பயன்படுத்தவும், கவலைக்கிடமான உயிருக்குப் போராடும் நிலையில் உள்ள பெண்ணுக்குச் சிகிச்சை அளிக்கவும் மறுத்திருக்கிறார். இறுதியில் அந்தப் பெண் இறந்தே போனார். மருத்துவத் தொழிலில் பின்பற்ற வேண்டும் என்று உறுதியேற்றுக்கொண்ட பிரமாணத்தைக்கூட சற்றும் உறுத்தலின்றி மனசாட்சியில்லாமல் புறந்தள்ள அந்த மருத்துவருக்கு எப்படி முடிந்தது?

மனிதத் தன்மையைவிட அவருக்கு சாதிதானே உயர்வாகிவிட்டது.

அம்பேத்கரின் நினைவலைகளை உள்ளடக்கிய இச்சிறுப் புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டும். மதத்தையும் சாதியத்தையும் விட மனிதம்தான் உயர்வானது என்பதை உணர வைக்கும் ஒளிப் புத்தகம் இது.

நூல்: விசாவுக்காக காத்திருக்கிறேன்

(டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவலைகள்)

வெளியீடு: நீலம் பதிப்பகம்

5, நல்ல தம்பி தெரு,

திருவல்லிக்கேணி.

சென்னை – 600 014

போன்: 9994204266


(புதன்கிழமை சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in