படித்தேன்… ரசித்தேன் - 21: கவலை அதிகமா? கொஞ்சம் நடிங்க பாஸ்!

படித்தேன்… ரசித்தேன் - 21:
கவலை அதிகமா? கொஞ்சம் நடிங்க பாஸ்!

நம் எண்ணங்களே நமது எல்லா செயல்களையும் வடிவமைக்கின்றன. ஒவ்வொரு சூழலிலும் ஒரு மனிதன் தன்னை எப்படி தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்கிற பட்டறிவைத் தன் சொந்த அனுபவங்களில் இருந்து மட்டுமல்ல; புறச்சூழலில் இருந்தும் கற்றுக்கொள்ளலாம். வாழ்க்கையில் நம்மை முன்னேற விடாமல் நமக்குள்ளேயே பல மனத்தடைகள் ஏற்படலாம். அப்படிப்பட்ட தடைகளால் நாம் ஒரு கோட்டையே கட்டிக்கொண்டு, அதற்குள் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொண்டு நம்மை நாமே சிறைப்படுத்திக்கொள்கிறோம்.

பாசாங்குகள் ஏதுமற்ற நேரடியான காட்சிச் சித்திரங்கள், வழிப்போக்கனின் எளிய அவதானிப்புகள், அன்றாட வாழ்வின் உரையாடல்கள் வழியே வாழ்க்கையின் திசையை மாற்றும் கருத்துகளை முன் வைக்கும் புத்தகம் ஒன்றை வாசித்தேன். டாக்டர் ஆர்.கார்த்திகேயன் எழுதியிருக்கும் ‘மனசு போல வாழ்க்கை 2.0’ என்கிற புத்தகம்தான் அது. தி இந்து ‘தமிழ் திசை’ வெளியிட்டுள்ள இப்புத்தகத்தை வாசித்து முடித்தபோது மனசுக்கு றெக்கை முளைத்தது போல இருந்தது. சாதாரணமாக, சுயமுன்னேற்றச் சிமிழுக்குள் இந்தப் புத்தகத்தை அடக்கிவிட முடியவில்லை. ‘தானாக நிகழ்வதுதான் தரிசனம்’ என்பார் அல்லவா லா.ச.ரா, அப்படியான தரிசனம் ஒருவருக்குள் நிகழ ஆர்.கார்த்திகேயனின் கருத்துகள் பாதை போடும் என்று நிச்சயம் நம்பலாம்.

‘சுய முன்னேற்றப் புத்தகங்கள் என்றாலே அறிவுரைகள் என்றிருந்த வழக்கை மாற்றி, பெரும் உளவியல் விதிகளைத் தோழமையுடன் உரையாட வேண்டும் என்கிற முயற்சிதான் இந்தப் புத்தகம்’ என்று தனது என்னுரையில் குறிப்பிட்டுள்ள கார்த்திகேயன், அந்த ஜீப்ரா கிராசிங்கில் இருந்து ஓரடி ஸ்கேல் தூரத்தைக்கூட தாண்டவில்லை. எழுத்தில் அவ்வளவு செய்நேர்த்தி. இப்புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமும் என்னைக் கவர்ந்தாலும்… சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

மனமாற்றம் என்பதே எண்ண மாற்றம்தான்

நம் வாழ்வின் எல்லாப் பிரச்சினைகளையும் உணர்வுகளைக் கொண்டு சீர் செய்யலாம். வாழ்வின் மிகச் சிறிய சம்பவங்கள்கூட உணர்வுநிலைகளை மாற்றி அமைக்கும். ஒரு பூங்காவில் காத்திருக்கிறீர்கள். காலை மணி 8. வெயில் ஆரம்பிக்கிறது. அது உங்கள் முகத்தில் படுகிறது. எப்படி இருக்கும்? அதை உங்கள் உணர்வுநிலைதான் முடிவு செய்யும். உங்கள் காதலி வருகைக்காகக் காத்திருக்கிறீர்கள். மனதில் ஒரு எதிர்பார்ப்பும் ஏக்கமும் இருக்கும். பூங்காவின் சூழல் கவிதையை யோசிக்க வைக்கும். வெயில் இதமாக முகத்தை வருடுவதாகத் தோன்றும்.

உங்கள் கடன்காரன் உங்களிடம் பாக்கி வசூலிக்க வருகிறான். எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் நிற்கிறீர்கள். பயமும் எரிச்சலும் சுயபச்சாதாபமும் கலந்து நிற்கிறீர்கள். இப்போது பூங்கா ரம்மியமாகத் தெரியவில்லை. முகத்தில் படும் வெயில் சுள்ளென்று எரிகிறது. உணர்வுகள் வண்ணக் கண்ணாடிகளாக உங்கள் அனுபவங்களை மாற்றிக் காண்பிக்கும் வல்லமை படைத்தவை என்பது புரிகிறதா’ என்று கார்த்திகேயன் எழுதியுள்ளதை வாசித்தபோது ‘அட, ஆமாம்ல’ என்று சொல்லத் தோன்றுகிறது.

மனதைக் காட்டிக்கொடுத்துவிடும் உடல்

ஒருவரைப் புரிந்துகொள்ளச் சிறந்த வழி அவர் உணர்ச்சிவசப்படும்போது. அவரைக் கவனிப்பதுதான். இதுவும் ஓர் இயற்பியல் ஆய்வு போலத்தான், ஓர் உலோகத்தின் தன்மையை அறிய என்ன செய்ய வேண்டும்? அதை உடைத்துப் பார்க்க வேண்டும். அமிலத்தில் கரைத்துப் பார்க்க வேண்டும். தீயில் கட்டுப் பார்க்க வேண்டும். மொத்தத்தில் அதன் இயல்பு நிலையை மாற்றியமைக்கும்போதுதான் அதன் தன்மை தெரியும். எவ்வளவு வளையும்? எந்த வெப்பத்தில் உருகும்? எப்படி உருமாறும் என்றெல்லாம் கணிக்க முடியும். இதே விதி மனிதர்களுக்கும் பொருந்தும். அமைதியான சூழலில், நிதானமான உணர்வில், யாவும் நன்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அனைவரும் கிட்டத்தட்ட நன்றாகத்தான் தென்படுவார்கள்.

ஆனால், ஒரு சிக்கல் வந்து உணர்ச்சிவசப்படும்போதுதான் மூடிக்கிடந்த அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்துவார்கள். மனோதிடம் அதிகம் தேவையான பணிக்குரிய நேர்முகத் தேர்வுகளில், கண்டிப்பாக மன உளைச்சலைத் தூண்டும் கேள்விகளைக் கேட்பார்கள். இதற்கு ‘ஸ்ட்ரெஸ் இன்டர்வியூ’ என்று பெயர். எவ்வளவு மறைத்தாலும் உடல்மொழியும், பதில்களும் ஒருவரின் மன உறுதியை அல்லது மன உறுதியின்மையைக் காட்டிக்கொடுத்துவிடும். நம் வாழ்வின் ஒவ்வொரு சிக்கலையும் ஒரு ‘ஸ்ட்ரெஸ் இன்டர்வியூ’ என்றே நினைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒரு சிக்கலின்போது நம் உடலும் மனமும் எப்படி நடந்துகொள்கின்றன என்று கவனிக்க முடியும்.

ஆர்.கார்த்திகேயன்
ஆர்.கார்த்திகேயன்ம.பிரபு

பொய்கூட நிஜமாகும்!

அஃபர்மேஷன்’ எனும் நேர்மறை சுய வாக்கியங்கள் உங்கள் கற்பனையைத் தூண்டக்கூடியவை. அதன் வீரியம் கூடிட, அந்த வாக்கியத்தை ஒரு கதையாக மனதில் கற்பனை செய்து பாருங்கள். இதற்கு ‘கிரியேட்டிவ் விஷுவலைசேஷன்’ என்று பெயர்.

உதாரணமாக - உங்களுக்கு மேடையில் பேசப் பயம் என்றால் உங்கள் பயம் நீங்கள் தடுமாறுவதைப் போன்ற கற்பனையைத்தான் தரும். அதற்கு பதில், “நான் இயல்பாக ரசித்துப் பேசுகிறேன்!" என்று ஒரு அஃபர்மேஷனைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதைக் கற்பனை சக்தி மூலம பலப்படுத்தலாம்.

உங்கள் கற்பனை கீழ்க்கண்டவாறு இருக்கலாம். "நான் மேடை ஏறும்போது கரகோஷம் கேட்கிறது. நான் உற்சாகமாக ஏறி மைக்கைப் பிடிக்கிறேன். மக்கள் என்னை ஆர்வத்தோடு எதிர் நோக்குகிறார்கள். நான் மிகவும் இயல்பாகப் பேச்சை ஆரம்பிக்கிறேன். நகைச்சுவை தானாக வருகிறது. ஒவ்வொரு சிறப்பான கருத்துக்கும் கைத்தட்டல் கிடைக்கிறது. எனக்குப் பேசப் பேசத் தெம்பு பிறக்கிறது. கூட்டம் என் கட்டுப்பாட்டில் இருப்பதை உணர்கிறேன். என் பேச்சாற்றல் எனக்குப் பெருமையை அளிக்கிறது!"

இல்லாத ஒன்றை இருப்பது போலவே கற்பனை செய்தாலும் பொய்க்கும் நிஜத்துக்கும் பேதம் கிடையாது, மனதளவில். அதனால் உங்களுக்கு எது

தேவையோ அதை அடைந்ததுபோலவே கற்பனை செய்யுங்கள். நீங்கள் அதுவாகவே மாறுவீர்கள். சந்தோஷமாக இல்லையா? சந்தோஷமாக இருப்பதைப் போல கற்பனை செய்யுங்கள். நடியுங்கள். நம்புங்கள். உங்களுக்கே தெரியாமல் உங்கள் மனம் மாறியிருக்கும். ’Fake it till you Make it’ என்று இதைச் சொல்வார்கள். இதன் அடிப்படையில் நம்பிக்கையும் கற்பனையும் கலந்த சுய வாக்கியங்கள் கண்டிப்பாக இருக்கும்.

சச்சின் டெண்டுல்கர் அபாரமாக விளையாட அவர் கையாளும் உத்தி என்ன தெரியுமா?

விளையாடப் போகும் முன்னரே, அதாவது 15 நிமிடங்கள் முன்னரே, அவர் ஆட வேண்டிய ஆட்டத்தை மனதால் கற்பனை செய்து பார்ப்பாராம். அது ஊக்கத்தையும் கவனக் குவியலையும் தரும். உங்களை வாட்டும் பிரச்சினைக்கு ஒரு கற்பனை சிகிச்சை செய்து பாருங்களேன்.

என்ன வாசகர்களே மேலே கார்த்திகேயன் எழுதியிருக்கும் பத்திகளை வாசித்தீர்களா? எவ்வளவு தீர்க்கமான, புத்தம் புதிய நம்பிக்கை செய்திகளைத் தந்துள்ளார் பாருங்கள். இப்புத்தகத்தின் சில செய்திகளைத்தான் உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். அவசியம் முழுப் புத்தகத்தையும் வாங்கிப் படியுங்கள். இது உங்கள் நண்பர்களுக்குப் பரிசளிக்க ஏற்ற புத்தகமும்கூட!

நூல்: மனசு போல வாழ்க்கை 2.0

ஆசிரியர்: டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

வெளியீடு: ‘தமிழ் திசை’ பதிப்பகம்

124. வாலாஜா ரோடு

அண்ணா சாலை

சென்னை – 600 002

போன்: 7401296562

(திங்கள்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in