படித்தேன்… ரசித்தேன்- 20: ஆளுமைகளின் பள்ளி ஞாபகங்கள்

படித்தேன்… ரசித்தேன்- 20: 
ஆளுமைகளின் பள்ளி ஞாபகங்கள்

“மழைக்குத்தான் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினேன்; அப்போதுகூட மழையைத் தான் ரசித்தேன்” என்று சொல்ல கி.ராஜநாராயணனால் மட்டும்தான் முடியும். நம்மைப் போன்ற சாதாரணர்கள் பலரும் பள்ளிக்கூடத்தை ரசித்தவர்கள்தான். “ஒரு விளக்கால் ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம்” என்றார் ரவீந்திரநாத் தாகூர். பள்ளிக்கூடத்துக்குத்தான் இந்தப் பொன்மொழி நூறு சதவீதம் பொருந்தும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சமண முனிவர்கள் தங்கியிருந்த குகைகள் பள்ளிகள் என அழைக்கப்பட்டன. இவர்கள் அந்தக் குகைகளில் தங்கியபடியே தங்கள் துறவுப் பணிகளை மேற்கொண்டதுடன், பல நீதிநூல்களையும் படைத்தனர். பின்னர், அவற்றில் கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட்டதால் பள்ளிக்கூடம் என்றழைக்கப்பட்டன என சமண வரலாறுகள் கூறுகின்றன.

ஒவ்வொரு மனிதரும் அறிவு வெளிச்சம் பெறும் தலைவாசலாக இருக்கும் பள்ளிக்கூடம் பற்றிய ஞாபகங்கள் ஒவ்வொன்றுமே சுவையானவை. தனது தொப்பையைக் காட்டி… அதை பூமி உருண்டையாக பாவிக்கச் சொல்லி… ‘இங்கேதாண்டா ஐரோப்பா இருக்கு’ கொஞ்சம் விரல்களை வேறுபக்கம் நகர்த்தி… ‘இங்கேதாண்டா இந்தியா இருக்கு’ என்று சொன்ன ஏ.டிஆர் என்கிற அருள் துரைராஜ் சாரை என்னால் மறக்கவே முடியாது. ‘கிட்டப்பாவுக்கு குழி வெட்டணும்னு ஞாபகம் வெச்சிக்கோங்க… கிட்டப்பார்வைக்குக் குழி லென்ஸ் என்றும் தூரப்பார்வைக்குக் குவி லென்ஸ் என்றும் விடை கெடைச்சுடும்’ என்று எளிமையாக அறிவியல் பாடம் எடுத்த ஷேக் சாரை எப்படி மறக்க முடியும்? அவரவர் பள்ளிக்கூடங்களைப் பற்றியும்... கல்லூரிகள் பற்றியும்... கல்வி கற்பித்த ஆசிரியர்களைப் பற்றியும் சொல்வதற்கு ஒவ்வொருவரிடம் சுவையான செய்திகள் இருக்கத்தான் செய்யும்.

சுந்தரபுத்தன்
சுந்தரபுத்தன்

அண்மையில் சுந்தரபுத்தன் எழுதிய ‘உள்ளேன் ஐயா’ எனும் புத்தகத்தை வாசித்தேன். புத்தகம் முழுக்கவும் பிரபலங்களின் பள்ளி நினைவுகள் வாடாமலராக மலர்ந்திருக்கின்றன.

அசோகமித்திரனின் ‘வடிவேலு வாத்தியார்’

‘இரண்டாம் ஃபார்ம் பி வகுப்பு வாத்தியார்தான் வடிவேலு வாத்தியார். அவர் என் அப்பா போட்டுக்கொள்ளும் தொப்பிப்போல போட்டுக்கொள்வார். அந்த நாளில் இந்தியர்கள் குடுமி வைத்துக்கொண்டால் அலுவலகத்துக்குப் போகும்போது தலையைக் குல்லாய் பதவிகள் வகிப்பவர்கள் தலைப்பாகை கட்டிக்கொள்வார்கள். வடிவேலு வாத்தியார் தலைமுடி வைத்துக்கொள்ளவில்லை. அப்படியும் அவர் தொப்பி அணிந்துகொள்வார்’ என்று தனது ஆசிரியர் பற்றியும், தனது பள்ளிக்கூடத்தைப் பற்றியும் எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதியிருப்பது நல்லதொரு சிறுகதை போலவே இருக்கிறது.

அப்துல் ரகுமானின் வில்லுப்பாட்டு

கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு அவ்வை நடராசன் ஆசிரியராக இருந்திருக்கிறார் என்பது சுவையான தகவல். இதைச் சொல்லும் கவிக்கோ, “நான் படித்த மதுரை தியாகராஜர் கல்லூரியில் மறைமலையடிகள் தினம் கொண்டாட இருந்தோம். அப்போது எங்கள் கல்லூரியில் டியூட்டர் பணிக்கு வந்த அவ்வை நடராசனிடமும் என்னிடமும் விழா பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. மறைமலையடிகள் வாழ்க்கை வரலாற்றை வில்லுப்பாட்டாக அரங்கேற்றலாம் என்று யோசனை சொன்னார் அவ்வை. எனக்கு அதெல்லாம் தெரியாதே என்றேன். ‘நான் அவருடைய வரலாற்றை உரையாடலாகச் சொல்லச் சொல்ல நீ பாடல்களாக எழுது’ என்றார். அவர் உரையாகச் சொல்லச் சொல்ல நான் பாடலாக எழுதினேன். கவிஞர் அபியும் நானும் விழா மேடையில் அப்பாடலை பாடினோம். விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ படத்தின் இயக்குநர் ஏ.கே.வேலன் பாடல் எழுதிய என்னை அழைத்து… சென்னைக்கு வந்து என்னைப் பார் என்றார். அப்போதே நான் சென்னை வந்து ஏ.கே.வேலனைச் சந்தித்திருந்தால் சிறந்த திரைப்படப் பாடலாசிரியராகியிருப்பேன்” என்று கவிக்கோ சொல்லியுள்ளதை சுவைபட சுந்தரபுத்தன் ஏந்தித் தந்திருக்கிறார் இப்புத்தகத்தில்.

வைரமுத்துவின் வடுகப்பட்டி பள்ளி

“வடுகப்பட்டி தாமரைக்குளத்தின் கரையில் இருந்தது ஆரம்பப்பள்ளி. அங்குதான் அகரம் எனக்கு அறிமுகமானது. கால் சட்டையை மூழ்கடிக்கும் புதுச்சட்டையொன்று அணிவிக்கப்பட்டு, அந்தச் சின்னப் பள்ளிக்கூடத்தில் நான் சேர்க்கப்பட்டேன். அந்த நாள் எனக்கு மகிழ்ச்சியில்லை. நான் புதிதாகச் சேர்க்கப்பட்டதன் அடையாளமாக அத்தனை மாணவர்களுக்கும் நாட்டுச் சர்க்கரையும் தேங்காய்த்துண்டும் வழங்கப்பட்டன. என் பங்கு மட்டும் எனக்கு வந்து சேரவில்லையே. எப்படி நான் மகிழ்வேன்’’ என்று தனது பாடசாலையைப் பற்றி பகிர்கிறார் கவிஞர் வைரமுத்து.

வண்ணதாசனை எழுதவைத்த வாத்தியார்!

“போர்டில் இந்து எலிமெண்டரி ஆரம்பப் பாடசலை என்றிருந்தாலும். அதை சிவக்கொழுத்து வாத்தியார் பள்ளிக்கூடம் என்றுதான் சொல்வார்கள். எங்களுடைய சபாபதி சித்தப்பா அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர். அவர் பக்கத்தில் நிற்க, செண்பகம் பிள்ளை சார்வாள் மடியில் உட்கார்ந்துதான், அவர் என் விரலைப் பிடித்துச் சொல்லித்தர நான் ஆனா... ஆவன்னா எழுதினேன். இந்தக் கட்டுரை எழுதுகிறவரை, இந்த வரியில்கூட, என் விரலை அவரது விரல்களே பிடித்து எழுதுகிறது. செண்பகம் பிள்ளை சார்வாளை எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு அப்படி நான் பார்த்திருக்கவே கூடாது. அவர், மற்ற யாசகர்களோடு ஒருவராக நெல்லையப்பர் கோவில் வாசலில் அன்னதான உண்டகக்கட்டிக்கு காத்துக்கொண்டு நின்றார்’’ என்று கவிஞர் கல்யாண்ஜி என்கிற எழுத்தாளர் வண்ணதாசன் சொல்லியிருப்பதை வாசித்தபோது மனம் அடைந்த நெகிழ்ச்சியும் துயரமும் வார்த்தையில் அடங்காதவை.

டிராட்ஸ்கி மருதுவின் ஞாபக எண்ணெய் ஓவியங்கள்

“திருமலை நாயக்கர் மகால் அருகில் உள்ள தூய மரியன்னை பள்ளியில் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் படித்தேன். என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வாத்தியார்கள் பணிபுரிந்த பள்ளிக்கூடம். லாசர் மாணிக்கம், சுப்ரமணிய அய்யர், தமிழாசிரியர் காந்தி, அருட்தந்தை மத்தாய், அம்புரோஸ் என அக்கறையும் அன்பும் காட்டி போதித்த ஆசான்களின் பெயர்கள் இன்னமும் மனதில் நிற்கின்றன. இன்று நானொரு அறியப்படுகிற ஓவியனாக இருப்பதற்கு அடித்தளமிட்டவர் ஓவிய ஆசிரியர் அகஸ்டின்” என்று தனது ஆசான்களைப் பற்றிப் பேசும் ஓவியர் டிராட்ஸ்கி மருது - வாசிப்பவர்களின் மன கேன்வாஸில் ஞாபக எண்ணெய் ஓவியங்களை வரைந்து செல்கிறார்.

அ.மார்க்ஸ் ஆசிரியரின் அறம்

தான் பயின்ற ஒரத்தநாடு பள்ளியில் ஜி.எஸ் என்றழைக்கப்பட்ட சம்பந்தம் வாத்தியாரைப் பற்றி அ.மார்க்ஸ் எழுதியிருப்பதை வாசித்தபோது, ஆசிரியப் பணி என்பதை எவ்வளவு அறம் சார்ந்த உழைப்பாக சம்பந்தம் என்ற அந்த வாத்தியார் கருதியிருக்கிறார் என்றுணர முடிந்தது. பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது கிராமத்தில் இருந்து பஸ் ஏறி ஒரத்தநாடு போய் படிக்கும் அலைச்சலைக் குறைக்க, பள்ளிக்கு அருகிலேயே இருந்த வாத்தியார் சம்பந்தம் சாரின் வீட்டிலே தங்கிக்கொண்டு படித்ததையும், ஏற்கெனவே வாத்தியார் வீட்டில் இரண்டு மாணவர்கள் தங்கிப் படிப்பதையும் அ.மார்க்ஸ் எழுதும்போது, இனி இப்படி ஆசிரியர்கள் கிடைப்பார்களா, அன்பும் அறனும் கொண்ட அந்தத் தலைமுறையின் மரபுச் சங்கிலி எங்கே வெட்டுபட்டது என்கிற கேள்விகள்தான் எஞ்சுகின்றன.

ஜெயமோகனின் ‘ஆசான்’

ஜெயமோகன் தனது கல்லூரிப் பேராசிரியர் பற்றிச் சொல்லியிருப்பது, கல்விப் புலத்தில் அறிவுசார் ஆளுமைகளின் மகத்துவத்தை உணர்த்துகிறது.

“நாகர்கோயில் பயோனியர் குமாரசாமி கல்லூரியில் வணிகவியலுக்குச் சேர்ந்தேன். எங்கள் துறைத் தலைவர் மனோகரன். வகுப்புக்கு அவர் அலட்சியத்துடன் வருவார். கட்டைக்குரலில் தமிழில் வகுப்பை ஆரம்பிப்பார்.

ஒருநாள் வகுப்புக்கு வந்தவர், ‘ஏலே, எவனாம் இன்னைக்கு பேப்பர் படிச்சியளாலே?’ என்றார். ‘ஆமா சார்’ என்றோம். ‘பேப்பர்லே என்னலே விசேஷம்?’ கேட்டார். அவர் எதிர்பார்ப்பதைப் பலர் சொன்னார்கள். ஆனால். நாங்கள் சொல்லக் கூடாதென நினைத்ததை, அவர் சொன்னார்.

‘நடிகை சரிதா கேஸை பாத்தியளாலே?’ என்றவருக்குப் பதில் சொல்லாமல் நாங்கள் முனகினோம். அவரே அதை விளக்கினார்.

நடிகை சரிதா நடிக்க வருவதற்கு முன்னரே ஒருவரை மணந்திருந்தாராம். அவரை விட்டுட்டு வந்து நடிகையாகியிருக்கிறார். மனைவியைத் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று, சரிதாவின் கணவர் வழக்குத் தொடுத்திருக்கிறார். சரிதா விவாகரத்து கோர ஒரு நியாயமும் இருக்கவில்லை. ஆனால், ஒருவரை அவரது விருப்பத்துக்கு மாறாக வாழும்படி கட்டாயப்படுத்த அரசுக்கு உரிமை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அதைச் சுட்டிக்காட்டி, ‘திருமணம்ங்கிறது ஒரு கான்ட்ராக்ட். ஒப்பந்தம் பலது இருக்கு… சமூக ஒப்பந்தம், வணிக ஒப்பந்தம்னு. பாத்தியள்னா… ” என ஆரம்பித்து மானுட வரலாற்றின் சட்டபூர்வ ஒப்பந்தம் எப்போது உருவாகியது, அதன் பரிணாமம் என்ன என்பதை மனோகரன் சார் விளக்கினார். ஒரு மணிநேரம் வாய் பிளந்து அமர்ந்திருந்தோம். இதற்கு முன்னரே எனக்கு நல்லாசிரியர் பலர் இருந்தனர். ஒரு நவீனப் பேராசிரியர் என்றால் யார் என்தை மனோகரனிடம்தான் கண்டேன்’’ என்று ஒரு நாவலின் இடையில் வரும் அத்தியாயத்தைப் போன்று தனது ஜெயமோகன் சொல்லியிருப்பது…. மனோகரனைப் பின் தொடரும் ஜெயமோகனின் நிழலின் குரலாகவே இருக்கிறது.

‘உள்ளேன் ஐயா’ என்ற இந்தப் புத்தகத்தில் – பல ஆளுமைகளைச் சந்தித்து, அவர்கள் படித்த பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி, அவர்களது ஆசிரியர்களைப் பற்றி… மிக அருமையாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் சுந்தரபுத்தன். நெகிழ்வூட்டும் புத்தகம்!

நூல்: உள்ளேன் ஐயா

ஆசிரியர்: சுந்தரபுத்தன்

வெளியீடு: பரிதி பதிப்பகம்

ஜோலார்பேட்டை.

தொடர்புக்கு: 7200693200

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in