இதே தேதி... முக்கியச் செய்தி: உதயமானது ஓபெக்!

இதே தேதி... முக்கியச் செய்தி: உதயமானது ஓபெக்!

இன்றைய உலகம் எதிர்கொள்ளும் பல நன்மை தீமைகளின் பின்னணியில் போர்களின் தாக்கமும், எல்லாவற்றிலும் ஏகபோக உரிமை கொண்டாடும் அமெரிக்காவின் எத்தனிப்புகளும் உண்டு என தாராளமாகச் சொல்லலாம். எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் உதயமானதும், அதன் மூலம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படும் நிலை தொடர்வதும் அவற்றில் ஒன்றுதான்.

இன்றைய தேதியில் உலகின் 81 சதவீத எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியைக் கைவசம் வைத்திருக்கிறது ஓபெக் கூட்டமைப்பு (Organization of the Petroleum Exporting Countries). ஈரான், இராக், குவைத், சவுதி அரேபியா ஆகிய மத்தியக் கிழக்கு நாடுகளுடன், தென் அமெரிக்க நாடான வெனிசுலா இணைந்து உருவாக்கிய அமைப்பு இது.

அதன் பின்னர் கத்தார், இந்தோனேசியா, லிபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் இணைந்தன. சில நாடுகள் அதிலிருந்து விலகி மீண்டும் இணைந்தன. இப்படியாக இன்றைய தேதிக்கு 13 நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

அமைப்பைத் தொடங்கிய ஐந்து நாடுகளும் நிறுவிய உறுப்பினர்கள் எனும் அந்தஸ்துடன் திகழ்கின்றன. மற்றவை முழு நேர உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள் எனப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கச்சா பெட்ரோலிய உற்பத்தியும், ஏற்றுமதிக்கான சூழலும், ஓபெக் உறுப்பு நாடுகளைப் போன்ற அடிப்படைக் கொள்கையும் கொண்ட நாடுகள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். நான்கில் மூன்று பங்கு முழு நேர உறுப்பினர்களின் ஒப்புதலும், நிறுவிய உறுப்பினர்களின் சம்மதமும் கிடைத்தால் ஓபெக் உறுப்பினராகிவிடலாம்.

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில்தான் இந்த அமைப்பின் தலைமையகம் தற்போது செயல்படுகிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால் ஆஸ்திரியா இந்த அமைப்பில் அங்கம் வகிக்கவே இல்லை என்பதுதான். அதுமட்டுமல்ல, இதன் முதல் தலைமையகம் அமைந்திருந்த ஜெனிவா, ஸ்விட்சர்லாந்து நாட்டின் முக்கிய நகரம். ஸ்விட்சர்லாந்தும் இந்த அமைப்பில் உறுப்பினராக இருந்ததில்லை.

சரி, இந்த அமைப்பு உருவான பின்னணி என்ன?

1920-கள் முதல் 1970-கள் வரை எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கோலோச்சியவை ‘ஏழு சகோதரிகள்’ (Seven Sisters) என அழைக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள். உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அதில் அமெரிக்காவின் பங்கு இல்லாமல் இருக்குமா என்ன? ஆம், இதில் ஐந்து ‘சகோதரிகள்’ அமெரிக்காவில் ஜனித்தவர்கள். ஆங்கில - பாரசீக எண்ணெய் நிறுவனமும், ராயல் டச்சு / ஷெல் குழுமம் பிற சகோதரிகள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மெல்ல மீண்டுவந்த நாடுகள், வளர்ச்சிக்கு மிக முக்கியமான வஸ்துவான எண்ணெய் தேவையைப் பூர்த்திசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தன. இன்றைக்கு எண்ணெய்க் கிணறுகளை வைத்தே அடையாளம் காணப்படும் மத்தியக் கிழக்கு நாடுகள் அந்தக் காலகட்டத்தில்தான், எண்ணெய் உற்பத்தியில் வளர்ச்சி பெறத் தொடங்கின.

ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் செழித்துக் கொழுத்த அமெரிக்கா, இந்தத் துறையில் ராஜாவாக வலம் வந்தது. மறுபுறம் சோவியத் ஒன்றியமும் எண்ணெய் உற்பத்தியில் கோலோச்சிவந்தது. ஒருகட்டத்தில் வெனிசுலா உற்பத்தி செய்த எண்ணெய், மத்தியக் கிழக்கு நாடுகளில் உற்பத்தியான எண்ணெய் போன்றவற்றின் விலையை வல்லரசு நாடுகளின் நிறுவனங்கள் குறைத்தன. இது அந்நாடுகளைக் கொந்தளிக்க வைத்தது.

குறிப்பாக, அதிகமான எண்ணெய் வளம் கொண்ட தேசமான வெனிசுலா தீயாக வேலை செய்யத் தொடங்கியது. மத்தியக் கிழக்கு நாடுகளுடனான மாநாடுகள், பேச்சுவார்த்தைகள் பலன் தந்தன.

இராக் தலைநகர் பாக்தாதில் 1960 செப்டம்பர் 10-ல் தொடங்கிய மாநாட்டின் முடிவில், செப்டம்பர் 14-ம் தேதி ஓபெக் கூட்டமைப்பு உதயமானது. அதன் பின்னர் சில நாடுகள் அதில் சேர முன்வந்தன. 1960-களில் மெல்ல வலுப்பெற்ற ஓபெக், 1970-களில் உலக அளவில் எண்ணெய் தேவையில் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பின்னர், பிரதானமான இடத்துக்கு வந்தது. ஓபெக் நிர்ணயிக்கும் விலையில் எண்ணெய் விற்பனையானது.

அதன் பின்னர் பல்வேறு முரண்கள், புவி அரசியல் காரணிகள் எனப் பல நிகழ்வுகளுக்குப் பின்னர் ஓபெக் ப்ளஸ் எனும் கூட்டமைப்பு உருவானது. ஓபெக்கில் அங்கம் வகிக்காத நாடுகள் அஜெர்பைஜான், பஹ்ரைன், புருனே, ரஷ்யா போன்ற நாடுகள் இணைந்து ஓபெக் ப்ளஸ் எனும் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை, இரண்டு கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது. குறிப்பாக, உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், அந்நாட்டிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தவிர்க்குமாறு இந்தியாவுக்குப் பல விதங்களில் அழுத்தம் கொடுத்துவருவதும், இந்தியா அதைப் பொருட்படுத்தாமல் ‘சலுகை விலை’யில் ரஷ்யா தரும் எண்ணெய்யைத் தொடர்ந்து இறக்குமதி செய்வதும் சமகால வரலாறு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in