படித்தேன்… ரசித்தேன் -1

புத்தகங்கள் குறித்துப் பேசும் புதிய தொடர்
படித்தேன்… ரசித்தேன் -1

பெர்னாட்ஷா சொன்னார், “மருத்துவர்கள், நாம் பிணமாக ஆகாமல் பார்த்துக்கொள்கிறார்கள். புத்தகங்கள், நாம் நடைபிணமாக ஆகாமல் பார்த்துக்கொள்கின்றன” என்று. ஆம், உண்மைதான்! நமது உடம்பு உறுப்புகள் நோயால் இன்ன பிற பாதிப்புகளால் பாதிப்பு அடையும்போது, மருந்து மற்றும் சத்து மாத்திரைகளைக் கொண்டு சீர் செய்துகொள்ள முடியும். அதேபோல் நல்ல ஆரோக்கியமான உணவுகள், பழங்கள் மற்றும் காய்கறிகள், கீரைகளால் உடம்பைத் தேற்றிக்கொள்ள முடியும். ஆனால் மருந்தாலோ, சத்துக்களாலோ மூளைக்கு வலுசேர்க்க முடியும் என்பதை இன்னமும் அறிவியலால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால், மூளைக்கு வைட்டமின் மாத்திரை ஒன்று இருக்கிறது. அது – புத்தகங்கள்தான். ஆமாம்... மூளைக்கான வைட்டமின் மாத்திரைகள்தான் புத்தகங்கள் என்பதை, நாம் அனைவருமே ஒத்துக்கொள்வோம்.

அப்படியான சில புத்தகங்களை நான் படித்து, ரசித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். அந்த அடிப்படையில் மலர்ந்ததுதான் இந்தத் தொடர்.

அண்மையில் வாசித்த புத்தகம் ‘காப்பி அடிக்கலாம் வாங்க’ என்றொரு புத்தகம். பிரபல பத்திரிகையாளரும், செயற்பாட்டாளருமாக விளங்குகிற சுட்டி கணேசன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், செய்திக் கிடங்காகவே இருக்கிறது.

காந்தி, பில்கேட்ஸ், ஆங் சான் சூகி, எட்மண்ட் ஹிலாரி, விவேகானந்தர், நெல்சன் மண்டேலா, அன்னை தெரசா, லான்ஸ் ஆம்ஸ்ட்ராங், கபில்தேவ், ரைட் சகோதரர்கள், அண்ணல் அம்பேத்கர், லூயி பிரைல், பிளாரன்ஸ் நைட்டிங்கேல், ஹெலன் கெல்லர், வ.உ.சிதம்பரனார், ஜெஸ்ஸி ஓவன்ஸ், சோய்ச்சிரோ ஹோண்டா, ஜவாஹர்லால் நேரு, அப்துல் கலாம்… என பற்பல ஆளுமைகளின் வாழ்க்கையில் நடந்த சுவையான, நாம் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் சம்பங்களின் தொகுப்பாக இருக்கிறது இப்புத்தகம்.

சுட்டி கணேசன்
சுட்டி கணேசன்

பொதுவாக, பள்ளி வகுப்பறைகளில், தேர்வுக் கூடங்களில் மற்றவர்களைப் பார்த்து எழுதுவது, அதாவது, காப்பி அடிப்பது தவறாகக் கருதப்படுகிறது. ஆனால், இப்புத்தகத்தை எழுதியிருக்கும் சுட்டி கணேசன் பிரபலமான ஆளுமைகளின் வாழ்க்கையை காப்பி அடித்து, அதையொட்டி நம் வாழ்க்கையையும் திட்டமிட்டுக்கொள்வதில் ஒன்றும் தவறில்லை என்பதை அடிநாதமாகக் கொண்டுதான், இப்புத்தகத்தில் சில கருத்துகளை முன்பதிவு செய்கிறார்.

இப்புத்தகத்தில் எல்லா கருத்துகளும் இனித்தாலும், வெல்லப் பிள்ளையாரை எந்தப் பக்கம் கிள்ளித் தின்றாலும் இனிக்கும் என்பதைப்போல, இந்தப் புத்தகத்தில் இருந்து சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

அந்தப் பள்ளியில் அன்று இன்ஸ்பெக்‌ஷன். கல்வி அதிகாரி அந்தப் பள்ளிக்கூடத்துக்கு விஜயம் செய்திருந்தார். மாணவர்களுக்கு வகுப்பு ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஒரு வகுப்புக்குள் கல்வி அதிகாரி நுழைந்து, மாணவர்களின் அறிவுத் திறனை சோதித்துப் பார்க்கப் போகிறேன்…. என்று சொல்லி, ‘கெட்டில்’ என்று ஆங்கிலத்தில் எழுதச் சொன்னார். எல்லா மாணவர்களும் ‘கெட்டில்’ என்று மிகச் சரியாக எழுத, ஒரு மாணவர் மட்டும் தவறாக எழுதியிருந்தார். அதைப் பார்த்த வகுப்பாசிரியர், அந்த மாணவனிடம் பக்கத்தில் இருக்கும் மாணவனைப் பார்த்து கெட்டில் என்பதைச் சரியாக எழுதுமாறு கல்வி அதிகாரிக்குத் தெரியாமல் கிசுகிசுத்தார். ஆனால், அந்த மாணவன் தான் காப்பி அடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தார். வகுப்பாசிரியர் அந்த மாணவனின் காலைத் தனது காலால் நசுக்கி, பக்கத்தில் இருக்கும் மாணவனைப் பார்த்து சரியாக எழுதத் தூண்டினார்.

இதைக் கவனித்துவிட்ட கல்வி அதிகாரி, அந்த மாணவனை அழைத்து நடந்ததை கேட்டறிந்தார். ஆசிரியரே சொல்லியும் காப்பி அடிக்காமல் நேர்மையைக் கடைபிடித்த மாணவரை பாராட்டிவிட்டுச் சென்றார். அந்த மாணவரின் பெயர்: மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி.

ஆசிரியரே சொன்னாலும்கூட, நமக்குத் தெரியவில்லை என்றால் அதைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டுமே தவிர, மற்றவர்களைப் பார்த்து காப்பி அடிக்கக் கூடாது என்ற விஷயத்தைத்தான், நாம் காந்தியிடமிருந்து காப்பி அடிக்க வேண்டும்.

1700-ம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்கா, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்கு வந்தது. ஆங்கிலேயர்கள், தென் ஆப்பிரிக்க பழங்குடிகளை சிறைப்படுத்தி, அவர்களைக் கொண்டே அந்த நாட்டில் சுரங்கங்களை அமைத்து அங்கிருந்த தங்கத்தையும் வைரங்களையும் சுரண்டி தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.

தமது இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதையும், தமது இனத்தாரிடம் நிலவும் ஒற்றுமை இன்மையையும் ஒரு இளைஞர் உற்று கவனித்துக்கொண்டிருந்தார்.

தம் இனத்தவரிடம் முதலில் ஒற்றுமையை ஏற்படுத்தினால்தான் ஆங்கிலேயர்களை ஒடுக்க முடியும் என்பதை அறிந்த அந்த இளைஞர், ‘ஆப்பிரிக்கா ஆப்பிரிக்கர்களுக்கே’ என்கிற கோஷத்துடன் ‘ஆப்பிரிக்கன் தேசிய காங்கிரஸ்’ என்கிற அமைப்பை ஏற்படுத்தி, அடிமைப்பட்டுக் கிடந்த தென் ஆப்பிரிக்க பூர்வீகக் குடிகளை ஒருங்கிணைக்கத் தொடங்கினார். காந்தி அடிகளின் அஹிம்சை போராட்டத்தை முன்பே அறிந்திருந்த அந்த இளைஞர், காந்திய வழியில் தனது போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்.

இந்நிலையில் அந்த இளைஞர் வெளியில் இருந்தால் நமக்கு ஆபத்து என உணர்ந்த ஆங்கிலேய நிறவெறி அரசு, அந்த இளைஞருக்கு 1964-ம் ஆண்டு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அவரைச் சிறைக்குள் தள்ளியது.

இதைத் தொடர்ந்து பல போராட்டங்களுக்குப் பிறகு, தென் ஆப்பிரிக்க ஆங்கிலேய நிறவெறி அரசுக்கு எதிராக உலகத்தின் கண்கள் தென் ஆப்பிரிக்காவின் பக்கம் குவியத் தொடங்கியது. உலக நாடுகளால் தென் ஆப்பிரிக்கா தனிமைப்படுத்தப்பட்டது. இதையடுத்து – தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி அரசு தனது நிறவெறிக் கொள்கையை கைவிட முயற்சித்தது. இதன் அடையாளமாக, சிறைத் தண்டனை பெற்ற அந்த ஆளுமையை விடுதலை செய்தது. அப்படி 1990-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி விடுதலை செய்யப்பட்டவர்தான், நெல்சன் மண்டேலா.

நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா

சிறையில் இருந்து வெளியில் வந்த அவருக்கு, அந்த நாட்டு மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து, 1994-ம் ஆண்டு நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் ஆனார். நாம் – நெல்சன் மண்டேலாவிடம் இருந்து, தன் மக்களுக்காக இடைவிடாமல் போராடிய போராட்டக் குணத்தை ஏன் காப்பி அடிக்கக் கூடாது?

இதுபோல நாம் நம் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள, நம் நாட்டை வளப்படுத்திக்கொள்ள… மேலே குறிப்பிட்ட ஆளுமைகளிடம் இருந்து காப்பி அடித்து நடைமுறைப்படுத்திக்கொள்ள ஏன் முயற்சிக்கக் கூடாது என்பதைத் தெளிவுற எடுத்துச் சொல்லும் இப்புத்தகம், அரிய தகவல் தொகுப்பாக இருக்கிறது.

குறிப்பாக, இளைய தலைமுறை அவசியம் படித்தறிய வேண்டிய புத்தகம் இது. எளிய நடையில் சுவைபட எழுதியிருக்கும் சுட்டி கணேசன் இப்புத்தகத்தை எழுதியிருப்பதற்குப் பெரிதும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்!


நூல் : காப்பி அடிக்கலாம் வாங்க

ஆசிரியர் : சுட்டி கே.கணேசன்

வெளியீடு : வர்ஷினி புக்ஸ்,

9, திருஞான சம்பந்தர் தெரு, புதுப்பெருங்களத்தூர்,

சென்னை – 600 063

அலைபேசி : 98401 38767

(புதன்கிழமை சந்திக்கலாம்)

Related Stories

No stories found.