இதே தேதி... முக்கியச் செய்தி: விளையாட்டுக்கு நடுவே ஒரு விபரீதம்!

இஸ்ரேல் வீரர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் காணப்பட்ட தீவிரவாதி
இஸ்ரேல் வீரர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் காணப்பட்ட தீவிரவாதி

விளையாட்டு என்பது மனிதர்களின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்குமான சிறந்த எடுத்துக்காட்டு. மனிதர்களுக்கு இடையே நட்புறவும் நல்லிணக்கமும் வளர விளையாட்டுப் போட்டிகள் வழிவகுக்கும் என்பதே பொதுவான நம்பிக்கை. அதேசமயம், விளையாட்டுப் போட்டிகளிலும் பகைமையின் கோர நிழல் விழுந்த சம்பவங்கள் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் மறக்கவே முடியாததுதான் 1972-ல் நடந்த மியூனிக் ஒலிம்பிக் போட்டிகளின்போது நடந்த கடத்தல் நாடகமும் படுகொலைகளும்!

ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் 1936-ல் கடைசியாக ஜெர்மனியில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. அதன் பிறகு பல வருடங்களுக்குப் பிறகு ஜெர்மனியில் நடக்கும் ஒலிம்பிக் போட்டி என்பதால் அந்நாட்டு அரசு ரொம்பவே உற்சாகமாக இருந்தது. யூதர்கள் மீதான இனப்படுகொலையைத் திட்டமிட்டு நிகழ்த்திய ஹிட்லரின் மண்ணில் நடந்த அந்த ஒலிம்பிக் போட்டிகளில், யூதர்கள் நிறைந்த நாடான இஸ்ரேலும் கலந்துகொண்டது முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு தருணமாகப் பார்க்கப்பட்டது. கிழக்கு, மேற்கு என ஜெர்மனி இரண்டாகப் பிளவுபட்டிருந்த காலகட்டம் அது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மேற்கு ஜெர்மனியை ஆதரித்தன. கிழக்கு ஜெர்மனியில் ரஷ்யாவின் ஆதிக்கம் இருந்தது. இந்த ஒலிம்பிக் போட்டிகள் மேற்கு ஜெர்மனியின் மியூனிக் நகரை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டன.

பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை மேற்கு ஜெர்மனி மிகவும் அசட்டையாக இருந்தது. ஒலிம்பிக் கிராமத்துக்குள் யார் வேண்டுமானாலும் சென்றுவரலாம் எனும் நிலை இருந்தது. விளையாட்டு வீரர்கள் சக நாட்டு வீரர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு எந்த அனுமதியும் இல்லாமல் செல்ல முடிந்தது. அதைத்தான் பாலஸ்தீனத் தீவிரவாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

செப்டம்பர் 4-ம் தேதி இஸ்ரேல் வீரர்கள் இஸ்ரேலைச் சேர்ந்த நடிகர் ஷுமுவேல் ரோட்ன்ஸ்கி நடித்த ‘ஃபிட்லர் ஆன் தி ரூஃப்’ நாடகத்தைக் கண்டுகளித்தனர். களிப்புடன் ஒலிம்பிக் கிராமத்துக்குத் திரும்பியவர்கள் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தனர்.

செப்டம்பர் 5-ம் தேதி அதிகாலை ஒலிம்பிக் கிராமத்துக்குள் ப்ளாக் செப்டம்பர் எனும் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த 8 பேர் நுழைய முயற்சித்தனர். முன்னதாக விளையாட்டு வீரர்கள் அணியும் ட்ராக்-சூட் ஆடையுடன் பைகளைச் சுமந்து வந்திருந்த அவர்கள், ஒலிம்பிக் கிராமத்தின் பாதுகாப்பு வேலி மீது ஏற முயன்றபோது, அங்கு வந்த விளையாட்டு வீரர்கள் - அவர்கள் யாரென்று தெரியாமல் - அவர்களுக்கு உதவினர். அந்த வீரர்கள் இரவில் மியூனிக் நகரில் பொழுதைக் கழித்துவிட்டு தாமதமாகத் திரும்பியவர்கள் (முதலில் அவர்கள் அமெரிக்கர்கள் எனச் சொல்லப்பட்டது; பின்னர் அவர்கள் கனடாவைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டது). தங்களைப் போல யாரோ சில வீரர்கள் தாமதமாக ஒலிம்பிக் கிராமத்துக்குத் திரும்பியதாக நினைத்தே அந்த உதவியை அவர்கள் செய்தனர்.

பின்னர் இஸ்ரேல் வீரர்கள் தங்கியிருந்த கட்டிடத்துக்குள் தீவிரவாதிகள் அதிரடியாக நுழைந்தனர். அதைத் தடுக்க முயன்ற இஸ்ரேல் மல்யுத்த பயிற்சியாளரும் பளு தூக்கும் வீரரரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அங்கிருந்த சில இஸ்ரேலிய வீரர்கள் தப்பிச் சென்றனர். எஞ்சிய 9 பேரைத் தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாகப் பிடித்துவைத்துக்கொண்டனர்.

இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 234 பாலஸ்தீனப் போராளிகளை விடுவிக்க வேண்டும் எனத் தீவிரவாதிகள் நிபந்தனை வைத்தனர். ஆனால், தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை எனப் பிரதமர் கோல்டா மெய்ர் தலைமையிலான இஸ்ரேல் அரசு உறுதியாகச் சொல்லிவிட்டது.

மேற்கு ஜெர்மனி அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 11 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கெய்ரோவுக்குத் தப்பிச் செல்ல விமானம் ஏற்பாடு செய்வதாக ஒப்புக்கொண்டனர். இரவு 10 மணிக்கு 8 தீவிரவாதிகள், 9 பிணைக்கைதிகளுடன் ஒலிம்பிக் கிராமத்திலிருந்து ஹெலிகாப்டர் ஒன்று கிளம்பியது. அந்த ஹெலிகாப்டர் ஃபியுர்ஸ்டென்ஃப்லெட்புருக் விமானப் படைத்தளத்தைச் சென்றடைந்தது. அப்போது அங்கு தயாராக இருந்த மேற்கு ஜெர்மனி படையினர் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். அப்போது பதிலடியாக பிணைக்கைதிகள் இருந்த ஹெலிகாப்டருக்குள் குண்டுவீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் வீரர்கள் 9 பேரும் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இவ்விஷயத்தில், மேற்கு ஜெர்மனி ஆரம்பம் முதலே நிறைய குளறுபடிகளைச் செய்தது இஸ்ரேலை அதிருப்தியடையச் செய்தது. நள்ளிரவில் அந்நாட்டின் செய்திதொடர்பாளர், இஸ்ரேல் வீரர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்தார். இதை நம்பி இஸ்ரேலியர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த நிருபர்கள்தான் உண்மை நிலவரத்தைக் கண்டறிந்தனர். அதன் பின்னரே நடந்தது என்ன என உலகத்துக்குத் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் இஸ்ரேலியர்களிடம் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இஸ்ரேல் வீரர்களின் படுகொலையில் தொடர்புடைய அனைவரும் கொல்லப்பட வேண்டும் என இஸ்ரேலியர்கள் கொந்தளித்தனர். இதையடுத்து இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாட் களத்தில் இறங்கியது. இதன் பின்னணியில் இருந்த பாலஸ்தீனத் தீவிரவாதிகளை அடுத்த 20 ஆண்டுகளில் வேட்டையாடிப் பழி தீர்த்தது. 1973-ல் பெய்ரூட் நகரில் பெண் வேடமிட்டு மொஸாட் உளவுத் துறையினர் முகமது யூசுப் அல்-நஜ்ஜார், கமால் அட்வான், கமால் ரஸீர் ஆகிய தீவிரவாதிகளைக் கொன்ற சம்பவம் அவற்றில் ஒன்று.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in