
இந்தியாவின் கடைசி முகலாய மன்னர் இரண்டாம் பகதூர் ஷா, ஆங்கிலேயப் படைகளால் கைதுசெய்யப்பட்ட தினம் இன்று. அத்துடன் சிப்பாய்க் கலகம் மெல்ல மெல்ல முடிவுக்கு வந்தது. ஆயுதப் புரட்சி மூலம் பிரிட்டிஷாரை வெளியேற்றிவிட முடியும் எனும் இந்தியர்களின் கனவும் தகர்ந்தது.
1857 மார்ச் மாதம் மங்கள் பாண்டே எனும் பிரிட்டிஷ் சிப்பாய் இந்தப் புரட்சிக்கு முக்கியமான தொடக்கப்புள்ளியாக அமைந்தார். கிழக்கிந்திய கம்பெனியின் வங்காளப் பிரிவின் 34-வது ரெஜிமென்டைச் சேர்ந்த அவர், ஒரு சிறு படையுடன் பைரக்பூர் கோட்டையைத் தாக்கி ஆங்கிலேய அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினார். அதில் இரு அதிகாரிகள் காயமடைந்தனர். பின்னர் அவரைக் கைதுசெய்த பிரிட்டிஷார் அவரைத் தூக்கிலிட்டனர். அவரது வீர மரணம், கிழக்கிந்திய கம்பெனியின் படையில் பணிபுரிந்த சிப்பாய்களுக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
1857 மே 10-ல் சிப்பாய்கள் டெல்லியை நோக்கி நகர்ந்தனர். ஆக்ரா, கான்பூர், லக்னோ ஆகிய நகரங்களில் சிப்பாய்க் கலகம் பரவியிருந்தது. சிப்பாய் கலகத்தை ஆரம்பத்தில் டெல்லி மன்னர் இரண்டாம் பகதூர் ஷா ஆதரிக்கவில்லை. எனினும், அந்தக் கலகத்தை முகலாய வம்சத்தை மீண்டும் நிறுவிக்கொள்வதற்கான அரிய வாய்ப்பாகக் கருதிய அவர், சிப்பாய்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். இந்து தாய்க்குப் பிறந்தவர் என்பதால் இந்துக்கள், முஸ்லிம்கள் என்று இரு மதத்தினரும் அவர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தனர்.
புரட்சியாளர்கள் டெல்லியைக் கைப்பற்றிய காலகட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனியால் உடனடியாகப் பதில் தாக்குதல் நடத்த முடியவில்லை. காரணம் பல படைப்பிரிவுகள் வெகு தொலைவில் உள்ள இடங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன. அவற்றை உடனடியாகத் திரும்பப் பெற்று அணி திரட்ட ஆங்கிலேயர்களுக்கு அவகாசம் தேவைப்பட்டது.
டெல்லி நகருக்குள் 30,000-க்கும் மேற்பட்ட புரட்சியாளர்கள் தங்கியிருந்தனர். நகருக்கு வெளியே ஒரு மேட்டுப் பகுதியைக் கைப்பற்றிய பிரிட்டிஷ் படையினர் உரிய தருணத்துக்காகக் காத்திருந்தனர். காலரா, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளும் அவர்களை நிலைகுலையச் செய்திருந்தன.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகப் படைகள் சேர்ந்தது பிரிட்டிஷ் படைகளுக்குத் தெம்பூட்டியது. பிரிகேடியர் ஜெனரல் ஜான் நிக்கல்ஸன் தலைமையிலான 2,000 பேர் பஞ்சாபிலிருந்து வந்து சேர்ந்தனர். பின்னர் சீக்கியப் படைகள், பஞ்சாபிகள், கூர்க்கா படையினர் என மொத்தம் 9,000 பேர் சேர்ந்ததும், செப்டம்பர் 8-ல் டெல்லி மீது தாக்குதலைத் தொடங்கினர் கிழக்கிந்திய படையினர்.
கிழக்கிந்திய கம்பெனிப் படைகளின் கை ஓங்கியதும், அரண்மனையைவிட்டு வெளியேறி ஹுமாயுன் கல்லறையில் தன் குடும்பத்துடன் பதுங்கியிருந்தார் பகதூர் ஷா.
ஆனால், மேஜர் வில்லியம் ஹாட்ஸன் செப்டம்பர் 20-ம் தேதி பகதூர் ஷாவையும் அவரது குடும்பத்தினரையும் கைதுசெய்தார். மன்னரின் இரண்டு மகன்களும் பேரனும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பகதூர் ஷா நிலைகுலைந்தார்.
பின்னர் செங்கோட்டையில் அவர் மீதான விசாரணை தொடங்கியது. 1858 ஜனவரி 27-ல் தொடங்கிய அந்த விசாரணை 41 நாட்கள் நடந்தது. சிப்பாய் கலகத்துக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். பலவீனமான நிலையில் இருந்த தன்னால் சிப்பாய்களுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியவில்லை என அவர் முன்வைத்த வாதங்கள் எடுபடவில்லை.
இரண்டு மனைவிகள் மற்றும் இரண்டு மகன்களுடன் பர்மாவுக்கு அனுப்பப்பட்டார். 1862 நவம்பர் 7-ல் ரங்கூன் சிறையில் மரணமடைந்து அங்கேயே புதைக்கப்பட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு, புனிதத் தலமாக்கப்பட்டது. உள்ளூர் முஸ்லிம்கள் அவரைத் தற்போது சூஃபி துறவியாக வழிபடுகிறார்கள்.