மௌனம் கலைத்த சினிமா - 7: சதி சுலோச்சனா

மௌனம் கலைத்த சினிமா - 7: சதி சுலோச்சனா

இந்திய சினிமா உலகில் கன்னடப் பட உலகமும் முக்கியமானது. பெரும்பாலும் கன்னட மொழியிலும், சொற்ப அளவில் கொங்கணி மற்றும் துளு ஆகிய மொழிகளிலும் சினிமாக்களை வழங்கிவரும் இதனை ‘சாண்டல்வுட்’ என்றும் செல்லமாக அழைப்பார்கள். அதென்ன சாண்டல்வுட் என்கிறீர்களா? கோலிவுட், பாலிவுட் போல கன்னடப் பட உலகத்திற்கு இந்தப் பெயர். சந்தன மரத்திற்குப் பேர் போனதல்லவா மைசூரு! அதனால்தான் இந்தப் பெயர்.

பி.ஆர்.பந்துலு, ஜி.வி.அய்யர், குப்பி வீரண்ணா, கு.ரா.சீத்தாராம சாஸ்திரி என்ற குராசீ, டாக்டர் ராஜ்குமார், புட்டண்ணா கனகல், பாலகிருஷ்ணா, ஸ்ரீநாத், சுனில்குமார் தேசாய், சங்கர் நாக், ஆனந்த் நாக், கிரீஷ் கர்னாட், கிரீஷ் காசரவள்ளி, விஷ்ணுவர்த்தன், அம்பரீஷ், பண்டரிபாய், பி.சரோஜாதேவி, சௌகார் ஜானகி, பாரதி என்று கன்னடத் திரையுலகம் எத்தனையோ கலைஞர்களை உருவாக்கியிருக்கிறது. இவர்களில் குராசீ 1950-களின் தொடக்கத்திலேயே சிங்கப்பூர் சென்று மலாய் மொழியில் இரண்டு படங்களை இயக்கிய பெருமைக்குரியவராவார். அன்றைய மலேயாவில் - இன்றைய மலேசியாவில் ‘இமாம்’ என்ற மலாய் மொழிப் படத்தை இயக்கியதற்காக சர்வதேச விருதும் அவருக்குக் கிடைத்தது.

இசையமைப்பாளர்களான ஆர்.ரத்னா, வெங்கட்ட ஸ்வாமி, எம்.ரங்காராவ், ஜி.கே.வெங்கடேஷ், விஜயா பாஸ்கர், ராஜன் - நாகேந்திரா போன்றோர் கன்னட சினிமாவைத் தங்களது இசைத் திறனால் மிளிரச் செய்திருக்கின்றனர். தேசிய - சர்வதேச அளவில் கவனிப்புகளைப் பெற்ற கன்னட சினிமாவின் தொடக்க காலமென்பது மிகவும் சிரமங்கள் நிறைந்ததாகவே இருந்தது. கன்னடப் பட உலகத்துக்கென்று தனியே ஸ்டுடியோக்கள் ஏதுமில்லாத அந்த நாளில் இந்திய - தமிழ் பேசும் படங்கள் வெளிவந்த 1930-களில்தான் கன்னடத்திலும் பேசும்பட முயற்சி நடந்தது. தென்னகத்தின் முதல் பேசும் சினிமாவான தமிழின் ‘காளிதாஸ்’ 1931-ல் வெளிவந்தது என்று பார்த்தோம். ஆனால், கன்னடத்தில் பேசும்பட முயற்சியானது 1934-ல்தான் நிறைவேறியது.

கன்னடத்தின் முதல் பேசும்படம் ‘சதி சுலோச்சனா’. மைசூரு, பெங்களூரு என கர்நாடகத்தின் எந்தப் பகுதியிலும் சினிமா ஸ்டியோ இல்லாத நிலையில் கோலாப்பூரின் சத்ரபதி ஸ்டுடியோவில்தான் ‘சதி சுலோச்சனா’ உருவானாள். ஒலிப்பதிவு மற்றும் தொழில்நுட்ப வேலைகள் அனைத்தும் அன்றைய மதராஸில் - இந்நாளைய சென்னையில்தான் நடந்தன. புதிய சினிமா முயற்சி என்பதால் படத்துக்கு முதலீடு செய்ய ஆள் கிடைப்பதே படு சிரமமான ஒன்றாக இருந்தது. ‘சதி சுலோச்சனா’வுக்குப் பின்னும் மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் கன்னடப் படங்களை அந்தக் காலகட்டத்தில் உருவாக்க முடிந்தது.

மார்வாடி உருவாக்கிய படக் கம்பெனி

பெங்களூரு அன்றைக்கு மைசூர் மாநிலத்தின் தலைநகரில்லை. ஆனால், அது ஒரு தொழில் நகரம். அங்கே ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த அஹோர் என்ற ஊரைச் சேர்ந்த மார்வாடி ஷா சமன்லால் டோங்காஜி என்ற தொழிலதிபர் இருந்தார். 1932-ல் அவர் சௌத் இந்தியா மூவிடோன் என்ற படக் கம்பெனியைத் தொடங்கினார். ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தை அவர் எடுக்க முடிவு செய்தார். ராவணனின் மகன் இந்திரஜித். அவனது மனைவி சுலோச்சனா. ராவணனின் மனைவி மண்டோதரி. இந்த நான்கு பேரை அடிப்படைப் பாத்திரங்களாக வைத்துப் பின்னப்பட்ட கதைதான் ‘சதி சுலோச்சனா’. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எரகுடிப்பாடி வரதாராவிடம் (ஒய்.வி.ராவ்) டோங்காஜி தனது படத்தை இயக்கும் பொறுப்பைத் தந்தார். வரதாராவ் லட்சுமணன் பாத்திரத்திலும் நடித்தார்.

இந்திரஜித்தாக எம்.வி.சுப்பையா நாயுடு...
இந்திரஜித்தாக எம்.வி.சுப்பையா நாயுடு...

திரைக்கதை, வசனம், பாடல்களை அன்றைய கன்னட நாடகத்திலும், பின்னாளில் சினிமாவிலும் முன்னணியிலிருந்த பெல்லவெ நரஹரி சாஸ்திரி எழுதினார். ஏற்கெனவே மௌனப் படங்களில் தலைக்காட்டியிருந்த நாகேந்திர ராவ் ராவணனாக நடித்தார். தயாரிப்பு மேலாளராகவும் நாகேந்திர ராவ் செயல்பட வேண்டியிருந்தது. கன்னட நாடக மேடைகளில் கோலோச்சிய ஹார்மோனியம் கலைஞரும் இசை மேதையுமான எச்.ஆர். பத்மநாப சாஸ்திரி இந்தப் படத்தின் இசையமைப்பாளராகப் பணியாற்றினார். இவருக்கும் உதவியாக இசைப் பணிசெய்தார் நாகேந்திர ராவ். எம்.வி.சுப்பையா நாயுடு இந்திரஜித் பாத்திரத்திலும், லட்சுமி பாய் மண்டோதரியாகவும், திரிபுரமாம்பாள் சுலோச்சனாவாகவும் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

இப்படித்தான் உருவானது ‘சதி சுலோச்சனா’

கோலாப்பூரில் இருந்த சத்திரபதி ஸ்டுடியோவில் 1933 டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கியது. இரண்டே மாதங்களில் படம் தயாராகிவிட்டது. வியப்புக்குரிய செய்தி என்னவென்றால் அந்நாளிலேயே முழுவதும் சூரிய ஒளியிலேயே படப்பிடிப்பு நடந்ததாம். கையால் செய்யப்பட்ட ரிஃப்ளக்டர்கள் பயன்படுத்தப்பட்டன. படம் தயாரிக்க ஆன மொத்த செலவு 40 ஆயிரம் ரூபாய்தான். போர்க்களக் காட்சி ஒன்றை இந்தப் படத்தில் முதல் முறையாக இரண்டு கேமராக்களைக் கொண்டு எடுத்தார் இயக்குநர். இரண்டு கேமராக்களை ஒரே காட்சிக்குப் பயன்படுத்துவதும் அந்நாளில் கேள்விப்படாத புதுமை என்கிறார்கள்.

ஒய்.வி.ராவின் திறமைமிக்க இயக்கத்தில் உருவான ‘சதி சுலோச்சனா’ 1934 மார்ச் 3-ல் பெங்களூருவின் பாரமௌன்ட் சினிமா தியேட்டரில் வெளியானது (பின்னாளில் இது பரிமளா டாக்கீஸ் என்று அழைக்கப்பட்டது). 16 ஆயிரம் அடி நீளம் கொண்ட, 170 நிமிடங்கள் ஓடிய இந்தப் படம் கன்னட மொழியின் முதல் பேசும் சினிமா என்று வரலாற்றில் இடம் பிடித்துக்கொண்டது. அரங்கு நிறைந்த காட்சிகளாக 6 வாரங்கள் ஓடியது இந்த ‘சதி சுலோச்சனா’.

கதையமைப்பு

ராமனுக்கும் ராவணனுக்குமிடையே நடக்கும் யுத்தத்தை சுலோச்சனாவின் கோணத்திலிருந்து பேசியது படம். ராமன் போரில் வெல்கிறான். ராவணனின் மகன் இந்திரஜித்தை லட்சுமணன் கொல்கிறான். பெருந்துயரத்தை உணரும் சுலோச்சனா, சதி எனும் உடன்கட்டை ஏறி உயிர் துறக்கிறாள். இதுதான் கதை. மக்களுக்கு அறிமுகமான கதையையே எடுத்துக்கொள்வது என்பது சினிமாவின் தொடக்ககால வழக்கமாக இருந்தது. சினிமா என்ற புதுமைக் கலையை, அது பேசத்தொடங்கிய அதிசயத்தைக் காணத்துடித்த மக்கள், அதன் உள்ளடக்கத்தில் அதிக எதிர்பார்ப்பைக் காட்டாததில் வியப்பேதுமில்லை. தாங்கள் அறிந்துவைத்திருக்கும் கதைகள் ஒரு புதிய ஊடகத்தின் வாயிலாகச் சுவைக்கக் கிடைக்கிறது என்பதே அவர்களுக்குப் போதுமான ஈர்ப்பை உண்டாக்கக்கூடியதாகத்தானே அந்நாளில் இருந்திருக்கும்?

கண்ணீர் சிந்தாத கதாநாயகி

படப்பிடிப்பின்போது இன்னொரு வேடிக்கையும் நடந்தது. அந்நாளில் கண்ணீர் வரவழைக்கும் கிளிசரின் கிடையாது. கணவனை இழந்த சுலோச்சனா அழுது துடிக்கவேண்டும் என்பது காட்சி. அவரை அழவைக்க இயக்குநர் படாதபாடுபட்டார். தெலுங்கில், தமிழில், கன்னடத்தில் ஏன் ஆங்கிலத்தில்கூட ஆபாச வார்த்தைகளையெல்லாம் சொல்லித் திட்டிப்பார்த்தார். நடிகை அழவேயில்லை. கன்னத்தில் ஒரு அறை விட்டார். அப்போதும் அசையவில்லை. பிறகு பச்சை வெங்காயத்தை அவரது கண்ணில் பிழிந்தார். ஊகூம். கோலாப்பூரில் விளையும் சின்ன மிளகாய் காரம் நிறைந்தது. அதை வரவழைத்து அவரது கண்ணின் பட்டையில் தேய்த்தார். கண்கள் சிவந்தனவே அல்லாமல் கண்ணீர் சொட்டுகூட வெளியேறவில்லை. அதிசயக் கண்கள்தான். பிறகு என்ன செய்ய? வேறு வழியில்லாமல் தண்ணீரைக் கன்னங்களில் வழியவிட்டு அந்தக் காட்சியை எடுத்துமுடித்தார் இயக்குநர். போர்க் காட்சியை மிக நேர்த்தியாக எடிட் செய்தார் ராவ். அதனால் மிகச்சிறப்பாக அந்தக் காட்சி அமைந்து வியப்பேற்படுத்தியது.

முதல் காட்சியின்போது மக்கள் அரங்கில் நிறைந்திருந்தனர். படம் திரையிடப்போகும் சமயத்தில் கதவுகள் சாத்தப்பட்டன. மின்விளக்குகள் முழுதும் அணைக்கப்பட்டன. இருளில் ஒரு கணம் பார்வையாளர்கள் என்னவோ ஏதோ என்று பயந்துபோனார்களாம். அலறினார்களாம். அடுத்த நொடியில் திரையில் வெளிச்சம் பாய, தங்களின் தாய்மொழியான கன்னடத்தில் முதன்முதலாக அந்த சினிமா பேசத் தொடங்கியபோது அவர்களிடையே எழுந்த ஆரவார ஒலி அரங்கமே அதிரும்படி இருந்ததாம். ரசிகர்களின் அந்த உற்சாகம்தான் இந்திய சினிமாவின் மூலதனங்களுக்கெல்லாம் மூலதனம் என்பது இன்றுவரையில் நீடிக்கும் நிஜம்தானே?

(மராத்தி மொழியின் மௌனம் அடுத்து கலையும்...)

பெட்டிச் செய்தி:

ஒய்.வி.ராவ் எனும் பன்மொழிக் கலைஞன்

கன்னடத்தின் முதல் பேசும்படமான ‘சதி சுலோச்சனா’வை இயக்கிய ஒய்.வி.ராவ் 1903-ல் ஆந்திர மாநிலத்தில் நெல்லூரில் பிறந்தார். அப்போது அது பிரிட்டிஷ் இந்தியாவின் மதராஸ் ராஜதானியில் இருந்தது. வசதியான குடும்பத்தில் பிறந்த ராவ் கலைத்தாகம் மிக்கவராக விளங்கினார். நாடகங்களில் நடிக்க விரும்பி, தனது கல்லூரிப் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டார் ராவ். சில நாடகங்களில் நடித்த பின்னர் அவர் மௌனப் படங்களில் நடிக்க எண்ணி கோலாப்பூருக்கும், பம்பாய்க்கும் பயணமானார். 1920-களின் பிற்பகுதியில் சென்னைக்கு வந்துசேர்ந்தார்.

ராவின் பொலிவான தோற்றத்தையும் சுறுசுறுப்பையும் கண்டு அவருக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கியது அன்றைய மதராஸ் சினிமா உலகம். ‘கருட கர்வ பங்கம்’, ‘கஜேந்திர மோட்சம்’, ‘ரோஸ் ஆஃப் ராஜஸ்தான்’ என்று ஏராளமான மௌனப் படங்களில் கதாநாயகனாக நடித்தார் ராவ். படிப்படியாக முன்னேறி 1930-களின் தொடக்கத்தில் மௌனப் படங்களின் இயக்குநராக உயர்ந்தார்.

வி.வி.ராவ்
வி.வி.ராவ்

‘பாண்டவ நிர்வாணா’ (1930), ‘பாண்டவ அஞ்ஞாதவாசம்’ (1930), ‘ஹரி மாயா’ (1932) போன்ற அந்நாளைய வெற்றிப் படங்களைத் தந்தார் ராவ். இந்தக் காலகட்டத்தில்தான் சினிமா பேசத் தொடங்கியது. அதுவரையில் மௌனப்படங்களைக்கூட அதிசயித்துப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு மேலும் வியப்பைத் தந்தது பேசும் சினிமா. ராவின் தனித் திறமையால் கன்னடத்தின் முதல் பேசும் சினிமாவை இயக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. 1932-ல் அவரது இயக்கத்தில் வெளிவந்தது ‘சதி சுலோச்சனா’. மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தந்தது இந்தப் படம். அதனால் ராவின் புகழ் மேலும் உயர்ந்தது.

அதன் உச்சமாகத்தான் 1937-ல் தமிழில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை ஒய்.வி.ராவ் பெற்றார். அதுதான் தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிந்தாமணி’. தமிழ் சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்த இந்தப் படம்தான் பாகவதருக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது. இந்தப் படத்தின் லாபத்தில்தான் மதுரையில் சிந்தாமணி என்ற பெயரிலேயே ஒரு திரையரங்கைக் கட்டினார்கள். பிறகு தெலுங்கிலும் தமிழிலும் சில படங்களைத் தந்தார் ராவ். அவரது முதல் மனைவி நடிகை ராஜம். இவரை நாயகியாக வைத்து ‘ஹரி மாயா’வை உருவாக்கினார். அவர் இயக்கிய ‘விஸ்வமோகினி’ (1940) திரைப்படத்திலும் ராஜம்தான் நாயகி. அந்தக் காலத்திலேயே முக்கோணக் காதலையும், சினிமா உலகத்தை அன்றைக்கே நையாண்டி செய்வதாக அமைந்த கதையையும் கொண்ட படம் அது.

அதேபோல ஷாஜஹானின் அரசவையில் பணியாற்றியதாகக் கூறப்படும் கவிஞர் பண்டிட் ஜெகந்நாதனின் வாழ்க்கையைச் சொல்லும் படமான ‘லவங்கி’யைத் (1946) தமிழில் தந்தார் ராவ். இதில் நாயகியாக நடித்தவர் அந்நாளைய நடிகையும் நடனக் கலைஞருமான நுங்கம்பாக்கம் ஜானகியின் மகள் குமாரி ருக்மணி. இவரை இரண்டாவதாக மணந்தார் ராவ். ருக்மணியின் மகள்தான் தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்த நடிகை லட்சுமி. 1950-களில் ராவ் தனது சரிவைச் சந்திக்கத் தொடங்கினார். பொருளாதார நெருக்கடி. அத்துடன், மனைவி ருக்மணியையும் பிரிந்தார். வழக்குகள் அவரை இழுத்தடித்தன. புகழின் உச்சத்திற்குச் சென்ற அந்தக் கலைஞனின் அந்திமக் காலம் நிம்மதியற்றதாகவே கழிந்தது. 1973-ல், தன் 70-வது வயதில் அவர் தனது மூச்சை நிறுத்திக்கொள்ளும்வரையில் இந்நிலை மாறவில்லை. ஆம்! மகிழ்ச்சியற்ற மனிதனாகவே மரித்தார் ஒய்.வி.ராவ்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in