மௌனம் கலைத்த சினிமா - 2: 'ஆலம் ஆரா'

மௌனம் கலைத்த சினிமா - 2: 
'ஆலம் ஆரா'

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அன்று மிக முக்கியத்துவம் பெற்றிருந்தது பம்பாயின் (இன்றைய மும்பை) மெஜஸ்டிக் சினிமா அரங்கம் இருந்த அந்தச் சாலை. மக்கள் வெள்ளமெனத் திரண்டிருந்த அந்த சினிமா கொட்டகையின் பெயர் இந்திய சினிமா வரலாற்றில் தனியொரு முத்திரை பதிக்கப்போகிறது என்பதைப் பற்றியெல்லாம் யாரும் நினைத்திருக்கவில்லை. நாமும் அந்த அதிசயத்தைப் பார்த்துவிட மாட்டோமா என்கிற ஏக்கமே அங்கே திரண்டிருந்தவர்களின் நெஞ்சங்களில் படபடத்துக்கொண்டிருந்தது. காவல் துறையினரின் தடியடிக்குக்கூட அந்தக் கூட்டம் மசியவில்லை. அப்படி என்னதான் அதிசயம் அங்கே நிகழ்ந்தது?

சினிமாவுக்குப் பேச்சு வந்தது...

இந்திய மக்களை நம்ப முடியாத திகைப்பில் ஆழ்த்திய அந்த நிகழ்வு வேறொன்றுமல்ல... அதுவரையில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்த பேசாப்படம் என்ற சினிமா முதன்முதலாகப் பேசியது. அதுவரையில் சினிமா ஒளிர்ந்துகொண்டிருந்த நிலையில் முதன்முறையாக அதிலிருந்து ஒலியும் வெளிவந்தது. அதில் தோன்றப்போகிற கதை மாந்தர்கள் நம்மைப்போலவே தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பாடல்களெல்லாம் பாடினார்கள். அந்தப் புது அனுபவம் பெறும்முன் ரசிகர்கள் மனங்களில்தான் எத்தனை எத்தனை கற்பனைகள்... இந்தியாவின் முதல் பேசும் சினிமாவின் தொடக்க நாள் என்பது அத்தனைப் பரபரப்பூட்டுவதாகத்தானே இருந்திருக்க முடியும் அந்தநாளில்?

‘ஆலம் ஆரா' என்பது அந்த முதல் பேசும் படத்தின் பெயர். அது வெளிவந்த நாள் 1931 மார்ச் 14. படமும் பாடல்களும் பெருவெற்றி பெற்றன. எங்கும் ஆலம் ஆரா என்பதே பேச்சு. குறிப்பாக, ‘தே தே குதா கே நாம் பர்' என்று தொடங்கும் பாடல் மெகா ஹிட். ‘ஆலம் ஆரா’ படம் இந்தியாவின் முதல்பேசும் படம் மட்டுமல்ல, இந்திய சினிமா வழக்கப்படி முதன்முதலில் பாடிய படமும் அதுதான். ஆமாம், உலகம் முழுவதும் சினிமா பேசத் தொடங்கியபோது நம் இந்திய சினிமா பாடவும் தொடங்கிவிட்டது. அந்த வகையில் இந்திய வரலாற்றின் முதல் சினிமாப் பாடலாகப் பெயர்பெற்றது இந்த 'தே தே குதா கே நாம் பர்' பாடல்.

இப்பாடலைப் பாடியதால் வாசிர் முகமது கான் இந்தியாவின் முதல் சினிமா பாடகர் ஆனார். சினிமா இசை எனும் புதிய வகை இசையை இந்தப் படம் தொடங்கிவைத்தது. வாசிர் முகமது கான் வெறும் பின்னணிப் பாடகராக மட்டுமல்ல. இந்தப் படத்தில் நடிக்கவும் செய்தார். இன்னும் சொல்லப்போனால் நடிகர் என்பவர் வேறு, அவருக்காகப் பின்னணியில் பாடுபவர் வேறு என்றெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது அப்போது. எனவே, வாசிர் நடிகராக ஆவதற்கான தகுதிகளுள் பாடும் திறன் முக்கியமானதாக இருந்தது. அதனால் அவர் பாடிக்கொண்டே நடித்தார். இது இந்திய நாடகங்களில் இருந்த வழமைதான்.

நமது நாடகங்களே தொடக்க காலத்தில் சினிமாக்களாகப் புது வடிவமெடுத்தன என்பதால் பாடல்கள் நம் சினிமாவில் தவிர்க்கவியலா இடத்தைப் பிடித்துக்கொண்டன.

அர்தேஷிர் இரானி அன்றைய முன்னணித் திரைப்படத் தயாரிப்பாளர். 1924-ல் இரானி திறமை மிகுந்த இரண்டு இளைஞர்களான பி.பி. மிஸ்ரா மற்றும் நவால் காந்தி ஆகியோருடன் இணைந்து மெஜஸ்டிக் ஃபிலிம்ஸ் எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். இந்தக் கூட்டணியில் இரானி பேசாப் படங்களைத் தயாரித்தார். அந்தப் படங்களை மிஸ்ராவோ அல்லது காந்தியோ இயக்கினர். சுமார் பதினைந்து படங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில் மெஜஸ்டிக் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூடப்பட்டது. இரானி தயாரித்த படங்களின் வெற்றிகளால்கூட அந்த மூடுவிழாவைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

பிறகு சிறிது காலம் ராயல் ஆர்ட் ஸ்டூடியோ என்ற பெயரில் இரானி ஒரு நிறுவனத்தை நடத்தினார். புதிய கவித்துவ அழகு மிகுந்த படங்களால் அந்நிறுவனம் புகழ்பெற்றது. 1925-ல் இம்பீரியல் ஃபிலிம் என்ற கம்பெனியை அவர் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் பெயரில் மட்டும் 62 மௌனப் படங்களை அவர் எடுத்தார். தனது 40-வது வயதில் இந்தியாவின் முக்கியமான படத் தயாரிப்பாளராக இரானி திகழ்ந்தார். முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா'வைத் தந்தது மட்டுமல்ல, இந்தியாவின் முதல் ஆங்கிலப் படமான 'நூர்ஜஹான்' (1934) மற்றும் இந்தியாவின் முதல் வண்ணப்படமான 'கிஸான் கன்யா' (1937) ஆகியவற்றையும் வழங்கி ஹாட்ரிக் சாதனை செய்தவர் அர்தேஷிர் இரானி.

நட்சத்திர வாரிசான ஆலம் ஆராவின் நாயகி

இந்திய சினிமாவில் தனது முதல் குரலைப் பதிவுசெய்ய உண்மையிலேயே சுபைதாவுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்ததென்றுதான் அன்று எல்லோரும் பேசிக்கொண்டிருந்திருப்பார்கள். அது அவ்வளவு சாதாரணமான வாய்ப்பா என்ன?

சுபைதா பேகம் தன்ராஜ்கிர் (1911 - 1988) தனது 20-வது வயதில் இந்தப் புகழை அடைந்துவிட்டார். ‘ஆலம் ஆரா’வில் நடித்தாலும் சுபைதாவுக்கு சினிமா ஒன்றும் புதிய துறையாக இருக்கவில்லை. சூரத்தில் பிறந்த சுபைதா ஒரு நட்சத்திர வாரிசுதான். ஆமாம், அன்றைய பேசாப்படங்களில் ஒளித்தாரகையாக மின்னிக்கொண்டிருந்த பாத்திமா பேகம்தான் சுபைதாவின் அம்மா. சுபைதாவின் சகோதரிகளான ஷாஜாதி மற்றும் சுல்தானா ஆகியோரும் நடிகைகள்தான். சச்சின் நவாப் - பாத்திமா பேகம் தம்பதிகளின் செல்ல மகளான சுபைதா, இயற்கையிலேயே நல்ல பேரழகி. அந்த நாளில் சினிமா என்பது பெண்களுக்கு ஏற்ற தொழிலில்லை என்ற கருத்து இருந்தது. அதையும் மீறி குட்டி தேவதையான சுபைதா தனது 12 வயதிலேயே 'கோஹினூர்' எனும் பேசாப் படத்தில் அறிமுகமானார். 1920-களில் சுபைதாவும், சுல்தானாவும் சினிமாவின் இரட்டைத் தாரகைகளாக ரசிகர்களின் அன்பை வாரி அள்ளிக்கொண்டிருந்தார்கள். அம்மா நடித்துப் புகழ்பெற்ற படமான 'வீர் அபிமன்யூ'வில் இந்தச் சகோதரிகளும் நடித்துக் கலக்கினர். இந்தியாவின் முதல் பேசும்படக் கதாநாயகி, இந்தியாவின் முதல் பெண் இயக்குநர் என்றெல்லாம் கலைத்துறையில் வலம் வந்த சுபைதா 1949 வரையில் தொடர்ந்து சினிமாவில் இயங்கிவந்தார்.

சுபத்தில் முடிந்த காதல்...

'ஆலம் ஆரா' ஒரு காதல் கதைதான். ஆனால், அது ஒரு அரசகுமாரனுக்கும் ஒரு நாடோடிப் பெண்ணுக்குமிடையிலான காதல். ஜோசப் டேவிட் எழுதிய பார்சி மொழி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்தப் படம். பின்னாளில் இரானியின் பட நிறுவனத்திற்குக் கதை எழுதுபவராகவே ஆகிவிட்டார் டேவிட்.

கற்பனை ராஜ்ஜியமான குமாரபுரத்தின் அரச குடும்பத்தை மையமாகக் கொண்டு ‘ஆலம் ஆரா’ கதை நகர்கிறது. அரசனும் சதா சண்டையிட்டுக்கொண்டிருக்கும் அவரது இரண்டு மனைவிகளான தில்பகார் பேகம், நவ்பகார் பேகம் ஆகியோரும்தான் கதையின் முக்கியப் பாத்திரங்கள். அரசனின் வாரிசை நவ்பகார் பெற்றெடுப்பாள் என்று ஒரு சன்னியாசி ஆரூடம் சொல்ல, அவர்களிடையேயான சண்டை உச்சத்தை அடைகிறது. அரண்மனையின் முக்கிய அமைச்சர் ஆதில் கான் என்பவருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டுகிறாள் தில்பகார். அது தோல்வியில் முடிகிறது. அதனால் கோபமுற்ற தில்பகார் அந்த மந்திரியைச் சிறையிலடைக்கிறாள். அவனது மகளான ஆலம் ஆராவை நாடு கடத்துகிறாள்.

ஆலம் ஆராவை நாடோடிகள் காப்பாற்றி வளர்க்கின்றனர். பின்னர் நாடு திரும்பிய ஆரா, அரண்மனையில் இளம் அரசகுமாரனைச் சந்திக்கிறாள். காதலில் விழுகிறாள். முடிவில் ஆராவின் தந்தைக்கு விடுதலை கிடைக்கிறது. தில்பகார் தண்டிக்கப்படுகிறாள். காதலர்கள் சுபமாக இணைகின்றனர். இதுதான் கதை.

ஆனாலும் சோகத்தில் முடிந்த வரலாறு...

‘ஆலம் ஆரா’ படத்தின் முடிவென்னவோ சுபம்தான். ஆனால், இந்தப் படத்திற்கு நிஜத்தில் ஏற்பட்டது என்னவோ பெரும் சோக நிகழ்வு. ஆமாம், புணேயில் இருக்கும் நேஷனல் ‘ஆர்கைவ் ஆஃப் இந்தியா’ கடந்த 2003- ல் தீப்பிடித்து எரிந்தபோது, இந்தியாவின் முதல் மௌன சினிமாவான ‘ராஜா ஹரிச்சந்திரா’ போன்றவற்றோடு ‘ஆலம் ஆரா’வின் படச் சுருள்களும் பொசுங்கிப்போனது. இன்று மூலப் பிரதியில்லாமல் நினைவுகளில் மட்டுமே வாழ்கிறாள் 'ஆலம் ஆரா' எனும் அந்தச் சரித்திர நாயகி!

(தமிழின் மௌனம் அடுத்து கலையும்...)

பெட்டி செய்தி:

யாரிந்த இரானி?

1886 டிசம்பர் 5-ல் புணேயில் ஒரு பெர்ஷிய - சோராஷ்டிரிய இனக் குடும்பத்தில் பிறந்தவர் இரானி. கான் பகதூர் அர்தேஷிர் இரானி எனும் முழுப் பெயர் கொண்ட அவர் தனது 19 -வது வயதிலேயே, 1905-ல் அமெரிக்காவின் மிகப் பழமை வாய்ந்த யுனிவர்சல் ஸ்டூடியோஸின் இந்தியப் பிரதிநிதியானார். அதன் 'அலெக்ஸாண்டர்' சினிமாவைப் பல ஆண்டுகள் மும்பையில் காட்டினார். இந்த அனுபவம் அவருக்கு சினிமாவின் மேல் காதலை ஏற்படுத்தியது. சினிமாவின் நுட்பங்களைக் கற்கத் தொடங்கினார். 1917-ல் தனது முதல் பேசாப்படமான 'நளதமயந்தி'யைத் தயாரித்தார். அது 1920-ல் தான் வெளியானது.

இந்திய சினிமாவின் தந்தையான தாதா சாகிப் பால்கேயின் இந்துஸ்தான் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மேலாளராக இருந்த போகிலால் தவேயுடன் இணைந்து 1922-ல் ஸ்டார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார் இரானி. நியூயார்க் புகைப்படப் பள்ளியில் பட்டம் பெற்றவர் போகிலால் தவே. அவர் ஒளிப்பதிவு செய்ய, அன்றைய நட்சத்திரம் பாத்திமா பேகம் நடிக்க, இரானி தயாரித்து இயக்கிய பேசாப் படம் 'வீர் அபிமன்யூ' 1922 ல் வெளிவந்தது. ஸ்டார் ஃபிலிம்ஸ் நிறுவனம் 17 படங்களைத் தயாரித்த நிலையில் தவே - இரானி கூட்டணி முறிந்துபோனது. அதன் பின்னர் மெஜஸ்டிக் ஃபிலிம்ஸ், ராயல் ஆர்ட்ஸ் ஸ்டூடியோ, இம்பீரியல் ஃபிலிம்ஸ் என்று தனது கனவுத் தொழிற்சாலைகளை ஒன்றன் பின் ஒன்றாகத் தொடங்கிக்கொண்டேயிருந்தார் இரானி.

மிகுந்த துணிவுடன் சினிமா தயாரிப்பில் இறங்கிய இந்த இந்தியர், அவரையொட்டி பின்னாளில் பலரும் சினிமாத் தொழிலில் கால்பதிக்க நம்பிக்கையூட்டுபவராகத் திகழ்ந்தார். மிகவும் விரிந்தளவான அவரது கதைத் தேர்வுகளால் இரானி தயாரித்த 150 படங்களின் கதையாடல்களை இந்திய சினிமா இன்றளவும் பெரிதாக மீறிவிடவில்லை என்கின்றனர் சினிமா ஆய்வாளர்கள். இந்தியாவின் இணையற்ற நடிகர்கள் பலரும் இரானியால் அறிமுகமானவர்கள். குறிப்பாக, பிரிதிவ்ராஜ் கபூர், மெகபூப் கான் போன்றோர்.

இரானி தனது தாய்மொழியான பெர்சிய மொழியில், பெர்சிய சினிமாவின் தந்தை அப்தோல் ஹொசேன் செபன்டாவுடன் இணைந்து 1933 -ல் தயாரித்த படமான ‘தோக்தார் இ லோர்’ (திலோர் கேர்ல்) தான் பெர்சியாவின் (இன்றைய இரானின்) முதல் பேசும்படம். தமிழின் முதல் பேசும்படமான 'காளிதாஸ்' படத்தையும் தயாரித்தவர் இரானிதான்.

சினிமா பேசத் தொடங்கியபோது இரைச்சல் மிகுந்த வெளிப்புறப் படப்பிடிப்புகள் இடையூறு செய்தன. யோசித்தார் இரானி. படப்பிடிப்புத் தளத்தில் இரவு நேரங்களில் மிகப் பெரிய மின்சார பல்புகளைக்கொண்டு படப்பிடிப்பை நடத்திப் பார்த்தார் அவர். காட்சிகள் அவர் எதிர்பார்த்தபடி வந்தன. இந்தவகையிலும் செயற்கை ஒளியில் உள்ளரங்கில் படம்பிடிக்கும் புதிய முறையையும் தொடங்கிவைத்த பெருமை இந்தியாவில் இரானியையே சாரும். மொத்தம் 25 ஆண்டுகள், இந்த ஒளிமிக்க காலத்தில் இந்தி, ஆங்கிலம், தமிழ், ஜெர்மன், பெர்சியன், உருது ஆகிய மொழிகளில் இரானி கொடுத்தவை 158 படங்கள். 1969 அக்டோபர் 14 -ல் அர்தேஷிர் இரானி என்ற அந்தச் சாதனையாளர் தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in