மௌனம் கலைத்த சினிமா- 6: ‘பக்தப் பிரகலாதா’

எல்.வி.பிரசாத்
எல்.வி.பிரசாத்

இந்திய சினிமாவில் அதிகப் படங்களை உருவாக்கும் படைப்பூக்கம் கொண்டது தெலுங்குத் திரையுலகம். ஒரு ஆண்டில் என்று கணக்கிட்டால் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் படங்களைத் தயாரிப்பவர்கள் தெலுங்கர்கள்தான்.
உட்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்த அளவில் தெலுங்குத் திரையுலகம் உலகிலேயே இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆந்திராவில்தான் பிற மாநிலங்களைவிட அதிகமான சினிமா கொட்டகைகள் உள்ளன. வேறெந்த மாநில சினிமாவைவிடவும் தெலுங்கு சினிமா நிறைய கின்னஸ் சாதனைகள் படைத்திருக்கிறது என்பதும் ஒரு வியப்பான செய்திதான். உலகிலேயே அதிகமான படங்களை இயக்கிய இயக்குநர் என்றும், அதிகப் படங்களைத் தயாரித்தவர் என்றும், உலகிலேயே மிகப்பெரிய திரையரங்கம் என்றும் பல வகைகளில் தெலுங்கு சினிமா உலக சாதனைகள் புரிந்திருக்கிறது.

தெலுங்கு சினிமா வரலாறு

உண்மையில் சென்னைதான் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களின் தாய் பூமியாகும். 1990-கள் வரை இதுதான் நிலை. பிறகு தெலுங்குப்பட உலகம் மட்டும் இடம் பெயர்ந்து ஐதராபாத்துக்குக் குடிபோனது. அங்கு அதிநவீன படப்பிடிப்பு நிலையங்கள் வந்துவிட்டன. இருந்தபோதிலும் ஏ.வி.எம். ஸ்டுடியோ போன்ற பாரம்பரியமான படத்தயாரிப்பு நிறுவனங்கள் சில அண்மைக்காலம் வரையிலும் தெலுங்குப் படங்களையும் தயாரிக்கத்தான் செய்தன.

தெலுங்கு மொழியில் முதன்முதலில் சினிமா முயற்சியென்பது 1912-லேயே தொடங்கிவிடுகிறது. ரகுபதி வெங்கைய நாயுடுவும் அவரது மகன் ஆர்.எஸ்.பிரகாஷும் இணைந்து உருவாக்கிய 'பீஷ்ம பிரதிக்ஞை'தான் தெலுங்கு மொழியின் முதல் பேசாப்படம். இதன்மூலம் ரகுபதி வெங்கைய நாயுடு தெலுங்கு சினிமாவின் தந்தை என்று பெயர் பெற்றார். அவரும் அவரது மகனும் நீண்டகாலத்திற்கு மதப் புராணவகைக் கதைகளை சினிமாவாக்கிவந்தார்கள். அவற்றில் ‘நந்தனார்’ (நம்மூர் நந்தன் கதைதான்), ‘கஜேந்திர மோட்சம்’, ‘மத்ஸ்யாவதார்’ போன்றவை குறிப்பிடத்தக்கவை.

1931-ல் தயாரிப்பாளர் எச்.எம்.ரெட்டிதான் முதன்முதலில் தெலுங்கு மொழியில் பேசும்படத்தை உருவாக்கினார். அதன் பெயர் 'பக்தப் பிரகலாதா'. இந்தியாவின் முதல் பேசும்படமான ‘ஆலம் ஆரா’வைத் தந்த அர்தேஷிர் இரானியிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஹனுமப்ப முனியப்ப ரெட்டி (எச்.எம். ரெட்டி). தெலுங்கரான இவர்தான் ‘பக்தப் பிரகலாதா’வின் இயக்குநர், தயாரிப்பாளர். இரானி எச்.எம். ரெட்டிக்கு உற்சாகமூட்டினார். தமிழின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ வெளிவருவதற்கு ஆறு வாரங்களுக்கு முன்னதாகவே தெலுங்கின் முதல் பேசும்படமான ‘பக்தப் பிரகலாதா’ வெளியானது. ‘காளிதாஸ்’ படத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள் நடித்ததைப்போல இல்லாமல் முழுக்கவும் தெலுங்கு நடிகர்களே நடித்த இந்தப் படம் தமிழின் ‘காளிதாஸ்’ போலவே பம்பாயில் (இன்றைய மும்பை) தயாரானது.

'பிளாக் டிக்கெட்’டை அறிமுகம் செய்த பிரகலாதா

1931 செப்டம்பர் 15-ல் ‘பக்தப் பிரகலாதா’ திரையரங்குகளுக்கு வந்தது. அதுவும் சென்னையின் கெயிட்டி, காக்கிநாடாவின் கிரௌன் திரையரங்கம், விஜயவாடாவின் மாருதி, மசூலிப்பட்டணத்தின் மினர்வா ஆகிய சினிமா
கொட்டகைகளில் முதன்முதலாகத் தெலுங்கு மொழியில் பேசிய, பாடிய அந்த சினிமாவை மக்கள் அதிவியப்போடு பார்த்தார்கள். கொட்டகைகள் நிரம்பிவழிய, இந்தியாவின் முதல் கறுப்புச் சந்தை (பிளாக் மார்க்கெட்) டிக்கெட் விற்பனையையும் இந்தப் படமே தொடங்கிவைத்ததாம். ஆமாம், டிக்கெட் ஒன்றுக்கு நாலணா விலையைத் தியேட்டருக்கு வெளியே நான்கு ரூபாய், ஐந்து ரூபாய் என்று ரசிகர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருந்ததாம். (தெலுங்கின் இந்த முதல் சாதனையும் கின்னஸில் இடம்பெற்றதோ இல்லையோ தெரியவில்லை!)

எச்.எம்.ரெட்டி
எச்.எம்.ரெட்டி

ஹனுமப்ப முனியப்ப ரெட்டி

‘பக்தப் பிரகலாதா’வை உருவாக்கிய எச்.எம்.ரெட்டி எனும் ஹனுமப்ப முனியப்ப ரெட்டி, ஆந்திர மாநிலத்தில் 1892 ஜூன் 12-ல் பிறந்தார். சொந்தமாகப் படங்களை எடுப்பதற்கு முன்னர் அர்தேஷிர் இரானியிடம் உதவியாளராகப் பயிற்சி பெற்றார். ‘பக்தப் பிரகலாதா’, ‘காளிதாஸ்’, ‘சாவித்திரி’, ‘மாத்ரு பூமி’, ‘தெனாலி ராமகிருஷ்ணா’ உள்ளிட்ட சுமார் 20 படங்களை இயக்கினார். ‘பக்தப் பிரகலாதா’, ‘கிருஹலட்சுமி’, ‘பிரதிக்ஞை’ போன்ற படங்களைத் தயாரித்தார்.

‘பக்தப் பிரகலாதா’வின் இமாலய வெற்றி எச்.எம்.ரெட்டியைப் புகழின் உச்சிக்கே கொண்டுசென்றது. தன் காலத்தின் மிக முக்கிய சினிமா கலைஞராகவே அவர் பேசப்பட்டார். 1960 ஜனவரி 14-ல் தனது 68- வது வயதில் ரெட்டி மறைந்தார்.

தர்மாவரம் ராமகிருஷ்ணமாச்சார்யுலு
தர்மாவரம் ராமகிருஷ்ணமாச்சார்யுலு

தர்மாவரம் ராமகிருஷ்ணமாச்சார்யுலு

1853-ல் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தில் பிறந்த ராமகிருஷ்ணமாச்சார்யுலு மிகச் சிறந்த நாடக ஆசிரியர். இவரது ‘பக்தப் பிரகலாதா’ நாடகம்தான் தெலுங்கின் முதல் பேசும்படமாக உருவானது. எனவே, அப்படத்தின் கதை - வசனகர்த்தா தர்மாவரம் ராமகிருஷ்ணமாச்சார்யுலுதான். இளம் வயதிலேயே தந்தையை இழந்த இவருக்குக் குடும்பத்தின் சுமை வந்துசேர்ந்தது. முதலில் பள்ளி ஆசிரியராகவும், பின்னர் அரசுப் பணியிலும் சேர்ந்த கிருஷ்ணமாச்சார்யுலு தனது சகோதரர்களுடன் நாடகங்களை நடத்தத் தொடங்கினார்.

ஒருகட்டத்தில் சகோதரருடன் முரண்பாடு வந்தது. தானே சொந்தமாக முதலில் 1886-ல் கன்னட மொழியில் நாடகம் ஒன்றை எழுதினார். 1800-களில் தெலுங்கு மொழி நாடகத்திற்கு உகந்ததல்ல என்ற நம்பிக்கை இருந்தது. அவரது கன்னட நாடகத்திற்கு மக்களின் பேராதரவு கிடைத்தது. தெலுங்கில் பாதி எழுதப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட ‘சித்ரா நாளியம்’ எனும் நாடகத்தை எழுதி முழுமைப்படுத்தினார் ராமகிருஷ்ணமாச்சார்யுலு. 1887-ல் அதை அவரே இயக்கினார். அதில் முக்கியப் பாத்திரத்தில் அவர் நடிக்கவும் செய்தார். அந்த நாடகம் பெரும் வெற்றி பெற்றது. நாடகத்திற்கு லாயக்கற்றது தெலுங்கு மொழி என்ற அவப்பெயர் இதன் மூலம் தீர்ந்தது.

வரிசையாக மேலும் 29 நாடகங்களை அவர் உருவாக்கினார். 1891 ல் சென்னை வந்து, விக்டோரியா பப்ளிக் ஹாலில் அவர் நாடகம் நடத்தியபோது பம்மல் சம்பந்த முதலியார் அவரது நாடகங்களால் பெரிதும் கவரப்பட்டார். அதன் தாக்கத்தால் சுகுன விலாஸ் சபாவை சம்பந்த முதலியார் துவக்கினார். தமிழில் சுமார் 90 நாடகங்களை எழுதினார் பம்மல் சம்பந்த முதலியார். தர்மாவரம் ராமகிருஷ்ணமாச்சார்யுலுவைத் தனது ஆசான் என்று முதலியார் சொல்வது வழக்கம். பின்னாளில், 'தெலுங்கு மொழி நாடகத்தின் பிதாமகர்' என்ற விருதை ஆந்திர அரசு அவருக்கு அளித்துக் கௌரவித்தது.

மும்மொழியிலும் முத்திரை பதித்த எல்.வி.பிரசாத்

தென்னிந்திய சினிமா தொடங்கி, இந்திய சினிமா உலகில் தனித்துவப் புகழ்பெற்ற நடிகர், இயக்குநர், தயாரிப்பாளரான எல்.வி.பிரசாத் (முழுப்பெயர் அக்கினேனி லட்சுமி வர பிரசாத ராவ்) இந்தியாவின் முதல் பேசும்படமான ஆலம் ஆராவில் சுல்தான் சலீம் கான் வேடத்திலும், தமிழின் முதல் பேசும்படமான காளிதாசில் கோயில் பூசாரி வேடத்திலும் இந்தத் தெலுங்கின் முதல் பேசும்படமான பக்தப் பிரகலாதாவில் மொத்தப்பாய் (அப்பாவிப் பையன்) வேடத்திலும் நடித்திருக்கிறார். பின்னாளில் பிரபலமடைந்து திரையுலகின் உச்சம் தொட்ட எல்.வி.பிரசாத் மட்டுமே மூன்று முதல் பேசும்படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்த ஒரே கலைஞர். தொடர்ந்து அவர் தெலுங்கிலும் தமிழிலும் இந்தியிலும் படங்களை இயக்கவும் தயாரிக்கவும் அவற்றில் நடிக்கவுமாக இருந்தார். 1949-ல் தெலுங்கில் தனது ‘மன தேசம்’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் எல்.வி.பிரசாத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் என்.டி. ராமாராவ்.

வழக்கமான புராணக் கதை

'பக்தப் பிரகலாதா'வின் கதை நமது புராணத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான். திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்வதுதான் கதை. இரணியனின் மகனான பிரகலாதன் திருமால் பக்தன். மக்களுக்கு ஏற்கெனவே அறிமுகமாகி, அவர்கள் மனங்களில் நன்மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்த கதைகளைப் படமாக எடுக்கிற அந்த ஆரம்பகாலப் பழக்கத்தால் தயாரான இந்தப் படம் அதை உருவாக்கியவர்களுக்கு எதிர்பார்த்ததைவிட அதிகமாகப் புகழையும் பணத்தையும்கொட்டிக் கொடுத்தது. தெலுங்கு மொழியின் முதல் பேசும்படம் என்பதால் இப்படத்திற்கு வரலாற்றுப் புகழும் வந்துசேர்ந்தது.

(கன்னட மொழியின் மௌனம் அடுத்து கலையும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in