மௌனம் கலைத்த சினிமா - 5: ‘தேனா பாவோனா’

மௌனம் கலைத்த சினிமா - 5: ‘தேனா பாவோனா’

வங்கமொழி சினிமா உலகம் இரண்டு புவியியல்களைக் கொண்டது. ஒன்று, வங்கதேசம் சார்ந்த படஉலகம். மற்றொன்று, நம் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலப் படஉலகம். இரண்டும் அடிப்படையில் ஒரே மொழி, ஒரே பண்பாட்டு அம்சங்களைக் கொண்டவையாக இருந்தாலும் இருவேறு நாடுகள், சட்ட திட்டங்கள் என்பன போன்ற வகைகளில் வேறுபாடுகளோடும் பரிணமித்தன.

மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவிலும், வங்காளதேசத்தில் டாக்காவிலும் வங்க மொழி சினிமா உலகம் செயல்படுகிறது. கொல்கத்தாவில் டாலிகுஞ்ச் எனுமிடத்தில் படப்பிடிப்பு நிலையங்கள் இயங்கிவருவதால் வங்க மொழிப் படஉலகம் டாலிவுட் என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஹாலிவுட் பெயர்த் தாக்கத்தால் முதலாவதாகப் பட்டப் பெயர் சூட்டப்பட்டது இந்த டாலிவுட்டுக்குத்தான். அதன் பிறகுதான் பாலிவுட் (பம்பாய்), கோலிவுட் (சென்னையின் கோடம்பாக்கம்) போன்ற பெயர்களெல்லாம் அந்தந்தப் படஉலகங்களுக்கு வந்து சேர்ந்தன.

கொல்கத்தாவின் பட உலகம் டாலிவுட் என்று 1932-லேயே அழைக்கப்படத் தொடங்கிவிட்டதாக ‘அமெரிக்கன் சினிமாட்டோகிராபர்’ எனும் பத்திரிகையில் வில்போர்டு இ. டிமிங் என்பவர் எழுதியிருந்தார். இந்த வில்போர்டு அமெரிக்காவைச் சேர்ந்த பெறியாளராவார். இவர் இந்தியாவின் முதல் பேசும் படத்தைத் தயாரிப்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். டாலிகுஞ்ச் மாவட்டத்தில் இந்தப் படப்பிடிப்பு நிலையங்கள் செயல்பட ஆரம்பித்தபோது இவர்தான் இதற்கு ‘டாலிவுட்’ என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கினார். இதற்கு ஒரு கூடுதல் காரணமும் இருந்தது. அன்றைய இந்திய சினிமாவின் மையமாக கொல்கத்தா தான் இருந்தது. மும்பையின் படஉலகம் முன்னிலைக்கு வரும் வரையில் எல்லாவகைகளிலும் ஹாலிவுட்டைப் பிரதிபலித்தது இந்த டாலிவுட்.

எது முதல் படம்?

உலகம் போற்றும் இயக்குநர்களை உருவாக்கி இந்தியாவுக்கே புகழ் சேர்த்த வங்க சினிமாவின் வரலாறு என்பது கொல்கத்தா நகரில் முதன்முதலில் பயாஸ்கோப் காட்டப்பட்ட 1890-களிலேயே தொடங்கிவிடுகிறது. அடுத்த பத்தாண்டுகளிலேயே ஹுராலால் சென் கொல்கத்தாவின் சினிமா உலகிற்குத் தனது முதல் விதையை ஊன்றினார். மேடை நாடகக் காட்சிகளைத் திரையில் ஓடவிடும் படங்களைத் தயாரிக்கும் ராயல் பயாஸ்கோப் கம்பெனியை அவர் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து தீரேந்திநாத் கங்குலி என்பவர் 1818-ல் பிரிட்டிஷ் ஃபிலிம் கம்பெனியைத் தொடங்கினார். இதுதான் பெங்காலி ஒருவர் தொடங்கிய முதல் சுதேசி சினிமா கம்பெனியாகும். வங்கத்தின் முதல் முழு நீளக் கதைப் படமான (அதுவும் பேசாப்படம்தான்) ‘பில்வா மங்கல்' 1919-ல் மதன் தியேட்டர்ஸ் என்ற பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டது.

மதன் தியேட்டர்ஸ் தயாரித்த 'ஜமாய் சஷ்தி' எனும் படம்தான் வங்கமொழியின் முதல் பேசும் படமாகும். ஆனால், வங்கமொழியில் முதன்முதலில் தயாரான இந்தப் பேசும் படம் ஒரு குறும்படம்தான். எனவே, வங்கமொழியில் வெளிவந்த முதல் முழுநீளப் பேசும் படம் ‘தேனா பாவோனா’. ‘ஜமாய் சஷ்தி’ 1931 ஏப்ரல் 25-ல் வெளிவந்தது. கொல்கத்தாவின் கிரௌன் சினிமா ஹாலில் அது திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வங்கமொழியின் முதல் முழுநீளப் பேசும் படமான ‘தேனா பாவோனா’ அதே 1931 டிசம்பர் 30 -ல் கொல்கத்தாவின் சித்ரா சினிமா அரங்கில் வெளியானது. ஒரு முழுநீளக் கதைப்படம் என்பதால் இதுவே வங்க மொழியில் வெளிவந்த முதல் பேசும்படம் என்று குறிப்பிடப்படுகிறது.

பன்முகக் கலைஞன் எடுத்த படம்

சரத்சந்திர சட்டோபாத்யாயா எழுதிய சிறுகதை ‘தேனா பாவோனா’. கொல்கத்தாவின் பழம்பெரும் நியூ தியேட்டர்ஸ் நிறுவனம் இந்தச் சிறுகதையை அதே பெயரில் சினிமாவாகத் தயாரிக்க நினைத்தது. ஆனால், அது ஒன்றும் அத்தனை எளிதாக இருக்கவில்லை. இந்தியாவின் முதல் பேசும்படமான ‘ஆலம் ஆரா’ வெளிவந்த கையோடு இந்திய மொழிகள் பலவற்றிலும் பேசும்படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் மும்முரம் பெற்றன. வங்கத்தின் இந்த முயற்சியைக் கையிலெடுத்தவர் இயக்குநர் பிரேமன்கூர் அட்டோர்த்தி (1890-1964).

நாவலாசிரியர், பத்திரிகையாளர், இசைக் கலைஞர், நடிகர், இயக்குநர் என வங்கத்தின் பலகலை வல்லுநராகத் திகழ்ந்தவர் பிரேமன்கூர் அட்டோர்த்தி. பிரம்ம சமாஜத்தின் பிரச்சாரகராக இருந்த மகேஷ் சந்திர அட்டோர்த்தியின் மகனான பிரேமன்கூர் அட்டோர்த்திக்கு இளம்வயதில் பல பள்ளிகளில் படித்தும் கல்வியில் அத்தனை நாட்டமில்லை. கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு ஓடினார். கற்பனைத் திறனும் படைப்பு மனமும் சிறுவயதிலேயே வரப்பெற்ற அட்டோர்த்தி மும்பையில் இசையறிஞர் உஸ்தாத் கரமத்துல்லாவிடம் சித்தார் பயின்றார்.

சிறிது காலத்திற்குப்பின் கொல்கத்தா திரும்பிய அவர் அங்கே சௌரிங்கியில் விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் வேலை செய்தார். பின்னர் அகில இந்திய வானொலியின் வங்கமொழிப் பத்திரிகையான 'பேத்தர் ஜகத்'தின் ஆசிரியரானார். 'புனர்ஜென்மா' என்ற வங்கமொழிப் படத்தில் நடித்தது மூலம் அவரது சினிமா உலகப் பிரவேசம் நடந்தது. முதன்முதலில் அவர் இயக்கியது லாகூரிலிருந்த ஒரு ஸ்டூடியோவிற்காக ஒரு வங்க மொழிப் படத்தைத்தான். பிறகு கொல்கத்தாவின் நியூ ஸ்டூடியோவில் இணைந்தார். 1927-ல் தொடங்கிய சினிமா வாழ்க்கையில் நடிகராக ஆரம்பித்து, மிகச் சிறந்த இயக்குநராகப் பரிணமித்தார். இரண்டு படங்களில் நடிகராகப் பணியாற்றிய அவர் ஏறத்தாழ 19 படங்களை இயக்கினார். இதில் ஒன்றில் நடித்தும், இயக்கியும் பணியாற்றினார். ‘அனார்கலி’ (1925), ‘பாஜிகர்’ (1929), ‘சாஷர் மேயே’ (1924), ‘தக்த் தாவுஸ்’, ‘மகாஸ்தாபிர்’ (3 பாகங்கள், 1944-54) போன்றவை அவரது முக்கியமான நாவல்கள். பிரேமன்கூர் சிறுகதைகளும் சில நாடகங்களும்கூட எழுதியிருக்கிறார்.

பெண்ணை முதன்மைப்படுத்திய படைப்பு

மலையாள சினிமாவைப் போலவே இந்தப் படமும் சமூகப் பிரச்சினையைப் பேசியது. அதுவும் ஒரு தற்செயல் நிகழ்வுதான். 19-ம் நூற்றாண்டு வங்காளத்தில் நிலவிய பெண்ணடிமைத்தனத்தைத் தனது களமாக எடுத்துக்கொண்டது ‘தேனா பாவோனா’. அமர் மல்லிக், துர்காதாஸ் பானர்ஜி, ஜஹார் கங்குலி, நிபனாய் தேவி, பானு பந்தோபாத்யாய், பூமன் ராய், சிசுபாலா, உமாசசி போன்றோர் நடித்த இந்தப் படத்தின் கதை முற்போக்கானது.

ஆம், வங்கத்தின் இந்த முதல் பேசும்படமே பெண்ணுக்கு உயர்வு செய்தது. பெண்ணை முதன்மைப்படுத்தியது. அன்றே 'ஹீரோயின் சப்ஜெக்ட்'டைக் கையாண்டது. ஒரு கிராமத்தின் குடிகார ஜமீன்தார் ஜிபானந்தா. பணத்துக்காக அவன் செய்யும் எல்லா சமூக விரோதச் செயல்களிலும் துணையிருக்கும் அவனது 'அல்லக்கை' ஏக்காரி. இவர்களின் அடாவடித்தனங்களில் சிக்கித் தவிக்கும் அந்தக் கிராமத்தின் கோயில் பெண் பூசாரிதான் சொராஷி. இவள் ஜமீன்தார் ஜிபானந்தாவின் முன்னாள் மனைவி. அப்போது அவள் பெயர் அலாகா. பின்னாளில் அவனது அட்டகாசங்களைப் பொறுக்காமல் அவனைவிட்டுப் பிரிந்து, சன்னியாசம் ஏற்றுக் கோயில் பூசாரியானவள் சொராஷியானாள். கிராம மக்களின் சாபங்களுக்கும் வெறுப்புக்கும் ஜமீன்தார் உள்ளாகிற நிலையில் அந்த மக்களின் நன்மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவளாக இருக்கிறாள் சொராஷி.

சரத்சந்திர சட்டோபாத்யாயா
சரத்சந்திர சட்டோபாத்யாயா

தினமும் குடி போதையிலேயே கிடக்கும் ஜமீன்தாரின் மாளிகையில் நிர்ப்பந்தம் காரணமாக ஒரு இரவு முழுதும் சொராஷி தங்கியிருக்கும்படி நேர்கிறது. ஜமீன்தார்தான் அவளைக் கடத்திவிட்டார் என்று கருதிய ஊரார் ஜிபானந்தாவுக்கு எதிராக பஞ்சாயத்தைக் கூட்டுகிறார்கள். போலீஸ் தலையிட்டு ஜமீன்தார் ஜிபானந்தாவைக் கைது செய்கிறது. தன்னை ஜமீன்தார் கடத்தவில்லை என்று சொராஷி போலீஸுக்கு விளக்கமளிக்கிறாள். அதனால் ஜமீன்தார் விடுவிக்கப்படுகிறான். ஆனால், இதை ஏற்க மறுக்கும் ஊர்ப் பஞ்சாயத்தார் சொராஷி இனியும் கிராமப் பூசாரியாக நீடிக்கக் கூடாது என்கின்றனர். சொராஷியின் நல்ல பண்புகளால் கவரப்பட்டிருந்த நிர்மல் அந்தப் பஞ்சாயத்தாரில் ஒருவரான சபேஸ்வர் என்பவரின் மருமகன். அந்த நிர்மல் இதனை எதிர்க்கிறான்.


இதற்கிடையே, ஜமீன்தார் ஜிபானந்தா சொராஷியை மீண்டும் அடைய விரும்புகிறான். அதை அவள் மறுக்கவே கோபம் கொண்ட ஜமீன்தார் அவளை அவள் தங்கியிருக்கும் வீட்டிலிருந்து அடித்துத் துரத்திவிட ஏற்பாடு செய்கிறான். சொராஷியின் ஆதரவாளரான சகனும் அவனது ஆட்களும் ஜமீன்தாருடன் சண்டையிட அவளின் அனுமதியைக் கேட்கின்றனர். ஆனால், சொராஷியோ எந்த உணர்வுமற்றவளாகக் கோயிலைவிட்டு வெளியேறுகிறாள். முடிவில் ஜமீன்தார் ஜிபானந்தா தன் தவறுகளை உணர்ந்து சொராஷியிடம் மன்னிப்பு வேண்டி சரணடைகிறான்.

இந்தக் கதையினூடாக அந்நாளைய பெண்ணடிமைத்தனத்தைச் சுட்டிக்காட்டி விமர்சித்தது இந்தப் படம். இந்திய - உலக சினிமாவுக்கு வங்க சினிமா வழங்கிய அளப்பரிய கொடைகளான இயக்குநர்கள் சத்யஜித் ரே, மிருணாள் சென், ரித்விக் கட்டக் போன்ற பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் உருவாக ஏற்றதொரு களமாகப் பரிணமித்த வங்க சினிமாவின் ஒரு தொடக்ககால விதையாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது ‘தேனா பாவோனா’!

(தெலுங்கு மொழியின் மௌனம் அடுத்து கலையும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in