மௌனம் கலைத்த சினிமா-3: ‘காளிதாஸ்'

டி.பி.ராஜலட்சுமி
டி.பி.ராஜலட்சுமி

1931 அக்டோபர் 31 அன்றுதான் முதன்முதலில் சினிமா தமிழில் பேசியது. அது சாகர் மூவிடோன் தயாரித்த 'காளிதாஸ்'. இந்தப் படம்தான் தமிழின் முதல் பேசும்படம். அர்தேஷிர் இரானியின் உதவியாளராகப் பணியாற்றிய எச்.எம்.ரெட்டி இந்தப் படத்தை இயக்கினார். படத்தின் முதல் காட்சி சென்னையில் கினிமா சென்ட்ரல் எனும் அரங்கில் திரையிடப்பட்டது.

இரானியிடம் தொடர்ந்த விருப்பம்

இந்தியாவின் முன்னணி சினிமாக் கலைஞராகத் திகழ்ந்த அர்தேஷிர் இரானி, முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா' மட்டுமல்ல, தமிழின் முதல் பேசும்படமான 'காளிதாஸ்' படத்தையும் தயாரித்தவர். ஆங்கிலத்தில் பேசிய சினிமாவைப் பார்த்த இரானிக்கு அதில் இந்தி மொழியைப் பதிவுசெய்ய விருப்பம் ஏற்பட்டதன் விளைவாகத்தான் ‘ஆலம் ஆரா’ பிறந்தது. பிற இந்திய மொழிகளிலும் சினிமாவைப் பேசவைக்க வேண்டும் என்ற அவரின் பெருவிருப்பத்தின் விளைவுதான் ‘காளிதாஸ்’. ‘ஆலம் ஆரா’ எடுக்கப்பட்ட அதே செட்டில்தான் காளிதாசும் எடுக்கப்பட்டது.

அந்நாளைய வழக்கப்படி மக்கள் அறிந்துவைத்திருந்த புராணக் கதைகள் மற்றும் கர்ண பரம்பரைக் கதைகளையே பேசாப்பட யுகத்தில் படங்களாக்கிக்கொண்டிருந்த நமது சினிமா முன்னோர்கள், ‘காளிதாஸ்’ படத்தின் கதையையும் அந்த அடிப்படையிலேயே அமைத்துக்கொண்டார்கள். காளியின் மீதான பக்தியின் பயனால் அறிஞனாக உயர்ந்தவனது புராணவகைக் கதையே ‘காளிதாஸ்’. மக்கள் தாங்கள் கேள்விப்பட்டு, படித்து, அறிந்து வைத்திருந்த கதையை சினிமாவாக மீண்டும் பார்க்கிறபோது ஒருவிதமான சிலிர்ப்புக்கு உள்ளானார்கள். இது படம் தயாரிப்போருக்கு லாபத்தை உறுதிப்படுத்தியது. எனவே, இந்தப் போக்கு சிலகாலங்கள் தொடர்ந்தது.

தமிழ்ப் படமா - பன்மொழிப் படமா?

‘ஆலம் ஆரா’வைப்போல அல்லாமல் ‘காளிதாஸ்’ படத்தில் இன்னொரு புதுமையும் இருந்தது. ஆமாம். இப்படம் தமிழில் மட்டும் பேசவில்லை. கதாநாயகி வித்யாதரி பாத்திரம் தமிழில் பேசினால் அதற்கு மறுமொழியாக கதாநாயகன் காளிதாஸ் தெலுங்கில் பதிலளித்தான். கோயில் பூசாரி போன்ற சில கதாபாத்திரங்கள் இந்தியிலும் பேசின. அப்படியென்றால் அது ஒரு பன்மொழிப்படமா? இல்லவேயில்லை, அது தமிழ்ப் படம் என்றுதான் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக்கொண்டு, ஜெர்மன் கருவிகளின் துணையுடன் விட்டாஃபோன் முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. படத்தை எட்டே நாட்களில் எடுத்துமுடித்தார்கள் படக்குழுவினர்.

தயாரிப்புச் செலவு வெறும் 8 ஆயிரம் ரூபாய்தான். வசூல் எவ்வளவு தெரியுமா? 75 ஆயிரம் ரூபாய்க்கும்மேல். அந்த நாளில் இது ரொம்பப் பெரிய தொகை என்றால் படத்தின் வெற்றி எத்தனை மடங்கு மகத்தானது என்று யோசியுங்கள்.
‘தமிழ், தெலுங்கு முதலிய பாஷையில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும் படக்காட்சியைக் கேளுங்கள். மிஸ் டி.பி. ராஜலட்சுமி நடிக்கும் காளிதாஸ் முழுதும் பேச்சு, பாடல், நடனம் நிறைந்த காட்சி. இம்பீரியல் மூவிடோன் கம்பெனியாரால் தயாரிக்கப்பட்டது. உயர்ந்த கீர்த்தனங்கள், தெளிவான பாடல்கள், கொரத்தி நாட்டியங்கள், பாதி கெஜட் காட்சிகளும் காண்பிக்கப்படும்’ - இது அன்றைய ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் வெளியான ‘காளிதாஸ்’ பட விளம்பரத்தின் வாசகம். அதில் தமிழோடு தெலுங்கு மொழியும் குறிக்கப்படுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது. என்றாலும் தமிழ்ப்படம் என்றேதான் ‘காளிதாஸ்’ அடையாளப்படுத்தப்பட்டது.

அதே ‘சுதேசமித்திரன்’ 1931 அக்டோபர் 29-ம் நாளே ‘காளிதாஸ்’ படத்தின் விமர்சனத்தைப் பிரசுரித்துவிட்டது. அந்த விமரிசனத்திலும் டி.பி. ராஜலட்சுமியே பிரதானமாகப் பேசப்பட்டிருந்தார். ‘தென்னிந்திய நாடக மேடைகளில் கீர்த்தி வாய்ந்து சிறந்துவிளங்கும் மிஸ் டி.பி. ராஜலட்சுமி முதன்முறையாக சினிமாவில் தோன்றுவதைப் பாருங்கள். இவளை நாடக மேடையில் கண்ணுற்ற அனைவரும் பார்க்க இது சமயமாகும்' - என்று குறிப்பிட்டிருந்தது. அதாவது, ‘காளிதாஸ்’ வெளியானபோது டி.பி. ராஜலட்சுமி மட்டுமே மக்கள் அறிந்த பிரபலமாக இருந்திருக்கிறார். அதாவது, படத்தின் வெற்றியை உறுதிசெய்ய சினிமாவின் தொடக்கத்திலேயே நட்சத்திர அந்தஸ்து உள்ள, மக்கள் அறிந்த பிரபலங்களை வைத்துப் படமெடுக்கும் இப்படிப்பட்ட உத்தியும் வந்துவிட்டது எத்தனை வியப்பு! அதுமட்டுமா? படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ஒரு பத்திரிகை அந்தப் படத்தைப் பற்றி எழுதியிருக்கிறதென்றால், முதன்முதலில் பேசும்படம் வெளிவந்தபோதே பத்திரிகையாளர்கள் உட்பட்டோர் பங்கேற்கும் சிறப்புக் காட்சித் திரையிடல் நிகழ்ந்திருக்கிறதாகத் தெரிகிறது. இதுவும் வியப்பைத் தருவதுதானே?

வறுமை தந்த நாயகி...

‘காளிதாஸ்’ படத்தின் நாயகி டி.பி. ராஜலட்சுமி. தமிழ் நாடக மேடைகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர். அதனைத்தொடர்ந்து மௌனப்படங்களில் முகம் காட்டியவர். தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி என்று பெயரெடுத்த டி.பி. ராஜலட்சுமிக்கு சொந்த ஊர் தஞ்சையை அடுத்துள்ள திருவையாறு. அங்கு ஆச்சாரம் நிறைந்த பஞ்சாபகேச அய்யரின் மகளாகப் பிறந்த ராஜலட்சுமிக்கு மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. படிப்பு வாசனை மட்டுமல்ல... அந்தச் சிறுமிக்கு இளம்பிராயத்து சந்தோஷங்கள் எதுவுமே வாய்க்கவில்லை. புகுந்தவீடு போன ராஜலட்சுமியை வரதட்சணைக் கொடுமை துரத்த, வேறு வழியின்றி அவள் பிறந்தகம் திரும்பினாள். அங்கே தந்தையின் மரணம் இன்னொரு இடியென அவள் தலையில் விழ, கதியற்றவளாகிப்போனாள் அந்தச் சிறுபெண் ராஜலட்சுமி.

டி.பி.ராஜலட்சுமி
டி.பி.ராஜலட்சுமி

தாயும் மகளும் கால்போனபடி நடந்தார்கள். திருச்சியில் சில நாடகக் கம்பெனிகள் அவர்களுக்கு அடைக்கலம் தந்தன. ராஜலட்சுமிக்கு இயற்கை நல்ல குரல் வளத்தைத் தந்திருந்தது. அதை அவளது பெற்றோர் சிறுவயது முதற்கொண்டே பட்டை தீட்டியிருந்தனர். அவளது குரல் அவர்களுக்குச் சோறு போட்டது. வசீகரம் மிக்க அவளது குரலுக்கு ரசிகர்கள் உண்டானார்கள். விரைவிலேயே டி.பி.ராஜலட்சுமி முன்னணி நாடகக் கலைஞராக உயர்ந்தார். அதன் தொடர்ச்சியாக அவருக்குப் பேசாப் படங்களில் வாய்ப்புகள் தேடி வந்தன. மௌனப் படங்களில் நடித்ததால் ஏற்பட்ட புகழ் நாடகத்திலும் ராஜலட்சுமியை உச்சத்தில் ஏற்றியது.

அந்தச் சூழலில்தான் அர்தேஷிர் இரானி தென்னிந்திய சினிமாவை உருவாக்கத் திட்டமிட்டிருந்தார். புகழ்பெற்ற தமிழ் இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் பரிந்துரையின் பேரில் மும்பை சென்ற ராஜலட்சுமியின் குரல் வளத்தில் இரானியும் மனதைப் பறிகொடுத்தார். ‘காளிதாஸ்’ படத்தில் டி.பி. ராஜலட்சுமி நாயகி என்று முடிவானது. வறுமை தந்த காயத்திற்கு மருந்தாக வரலாற்றில் இடம்பிடித்தார் டி.பி.ராஜலட்சுமி. அவர் பாடிய தியாகராஜர் கீர்த்தனைகளும், காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்துவந்த தேசபக்தப் பாடல்களும் அந்தக் காலத்து சினிமா ரசிகர்களைச் சொக்கிப் போட்டுவிட்டன. பேசும், பாடும் சினிமாவைப் பார்த்துவிட மக்கள் துடியாய்த் துடித்தனர். அந்த முதல் அனுபவத்தைப் பெற்றிடும் பேராவல் மக்களுக்கு. இதனால் ‘காளிதாஸ்’ பெருவெற்றி பெற்றது என்பதில் என்ன வியப்பு?

டி.பி.ராஜலட்சுமி
டி.பி.ராஜலட்சுமி

1956-ல் ‘தமிழ் சினிமா’ எனும் பத்திரிகையின் தீபாவளி மலருக்குப் பேட்டியளித்த டி.பி. ராஜலட்சுமி இப்படிச் சொல்லியிருந்தார்:
"தமிழில் பேசும் படத்தை எடுத்துச் சோதித்துப் பார்க்க நினைத்த இம்பீரியல் கம்பெனியினர் தமிழ்க் கதாநாயகியைத் தேடிக்கொண்டிருந்தபோது எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் நான் என்ன பெரிதாகச் செய்திருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? இரண்டு கீர்த்தனைகளை, இரண்டு தேசபக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறேன். அத்தோடு ஒரு குறத்தி நடனம் ஆடியிருக்கிறேன். அவ்வளவுதான்!"
‘காளிதாஸ்’ பட வெற்றியைத் தொடர்ந்து டி.பி. ராஜலட்சுமியின் புகழ் உச்சத்திற்குப் போனது. அவரை ரசிகர்கள் 'சினிமா ராணி' என்று செல்லமாக அழைத்தனர்.

படக்கதையும் பாடல்களும்...

நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வடமொழி மகாகவி காளிதாஸின் கதைதான் படத்தின் கதை. ‘காளிதாஸ்’ பாத்திரத்தில் பி.ஜி.வெங்கடேசன் நடித்திருந்தார். காளிதாஸ் படிப்பறிவில்லாத ஓர் ஆட்டிடையன். தனது தந்தையின் அமைச்சரின் சூழ்ச்சியால் இளவரசி வித்யாதரி காளிதாஸை மணக்க நேர்கிறது. காளியிடம் அவளது வேண்டுதலின் பலனாகக் காளிதாஸ் மிகப்பெரிய அறிஞனாகிறான். மகா கவிஞனாகிறான்.
படத்தில் ரொம்ப அதிகமில்லை, வெறும் ஐம்பது பாடல்கள்தான்(!)

'அவற்றுள் ராட்டினமாம் காந்தி கை பானமாம்', 'இந்தியர்கள் நமக்குள் ஏனோ வீண் சண்டை' ஆகிய பாடல்கள் பிரபலமடைந்தன. படம் புராணப் படம்தான் என்றாலும் அதிலும் தேச விடுதலைச் சிந்தனையை நம்மவர்கள் புகுத்தத் தவறவில்லை. ஒரு காட்சியில் கதாநாயகன் சிறையில் கை ராட்டையைச் சுழற்றிக்கொண்டே காந்தியைப் புகழ்ந்து பாடினான். கர்நாடக இசையை சினிமாவுக்கு ஏற்றபடி ஜனரஞ்சகப்படுத்துகிற முறையை இந்தப் படம் தொடங்கிவைத்தது. பாடத்தெரிந்தவர்களே நடிக்க வர முடியும் என்ற போக்கையும் இந்தப் படம்தான் ஆரம்பித்துவைத்தது.

படப்பெட்டிக்கே திருவிழா...

மும்பையிலிருந்து படப்பெட்டி கிளம்பி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தார்கள். படப்பெட்டிக்கு ரோஜா மாலைகள் சூட்டப்பட்டன. தேங்காய்கள் உடைக்கப்பட்டன. பத்தி கொளுத்தல், சூடம் காட்டல் என்று அமர்க்களப்பட்டது. வால்டாக்ஸ் சாலையில் படப்பெட்டியுடன் பெரிய பேரணிபோல கூட்டம் கினிமா சென்ட்ரல் திரையரங்கு வரை வந்தது. இப்படி பலவகைகளிலும் ‘காளிதாஸ்’ மக்கள் கொண்டாட்டங்களுடன் அந்த நாளின் அதிசய சினிமா ஆனது.

(மலையாள மொழியின் மௌனம் அடுத்து கலையும்)

பெட்டிச் செய்தி:

மௌனம் கலைவதற்கு முன்...

தென்னிந்திய சினிமாவின் வரலாறு என்பது நடராஜ முதலியாரின் 'கீசக வதம்' (1917) எனும் மௌனப் படத்துடன் தொடங்குகிறது. எஸ்.எம்.தர்மலிங்கம் என்பவரோடு இணைந்து நடராஜ முதலியார் 1916-ல் சென்னையில் ஒரு சினிமா கம்பெனியைத் தொடங்கினார். அதற்கு முன்பு எம்.எட்வர்டு என்பவர் சென்னை விக்டோரியா ஹாலில் முதல் சினிமா காட்சியைக் காண்பித்தார். இது நடந்தது 1897-ல். அதன்பின்னர் 1900-ல் சென்னை மவுன்ட் ரோட்டில் (இன்றைய அண்ணா சாலையில்) மேஜர் வார்விக் என்பவரால் எலக்ட்ரிக் தியேட்டர் எனும் சினிமா அரங்கம் கட்டப்பட்டது. இதுதான் தென்னிந்தியாவின் முதல் சினிமா தியேட்டர்.

சாமிகண்ணு வின்சென்ட் சென்னையில் 1905-ல் முதல் டூரிங் சினிமா கொட்டகையை உருவாக்கினார். அவர் தனது சினிமா கொட்டகையுடன் பல இடங்களுக்கும் பயணப்பட்டார். ‘குழந்தை ஏசு’ போன்ற குறும்படங்களை அதில் காட்டிவந்தார். மருதப்ப மூப்பனார் என்பவர் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூட்டுவிழாவை 1911-ல் படம்பிடித்தார். பின்னர் அதுவும் சென்னையில் திரையிடப்பட்டது. 1914-ல் ஆர்.வெங்கையா கட்டிய கெயிட்டி தியேட்டர்தான் இந்தியாவின் இந்தியர் ஒருவரால் கட்டப்பட்ட முதல் சினிமா கொட்டகை. 1921-ல் சென்னையின் ஈஸ்ட் ஃபிலிம்ஸ் கம்பெனி நட்சத்திரங்களான ஆர்.வெங்கையா, ஆர்.பிரகாஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவான ‘பீஷ்ம பிரதிக்ஞை’ படம்தான் தென்னிந்தியாவின் முதல் முழு நீளப் பேசாத் திரைப்படம் ஆகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in