மௌனம் கலைத்த சினிமா-25: ஆதி சங்கராச்சாரியாவும் இன்னும் சில படங்களும்

‘ஆதி சங்கராச்சாரியா’ திரைப்படக் காட்சி
‘ஆதி சங்கராச்சாரியா’ திரைப்படக் காட்சிPicasa

உலகின் முதல் பேசும்படம் தொடங்கி, இந்தியாவின் முதல் பேசும்படம் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழி சினிமாக்களின் மௌனம் கலைந்த கதைகளை இந்தத் தொடரில் பேசி முடித்திருக்கிறோம். இப்போது தொடரின் நிறைவுப் பகுதியை வந்தடைந்துவிட்டோம்.

இதுவரையில் எத்தனை எத்தனை விதவிதமான மொழிகளின் சினிமா உலகங்களைக் கண்டு, அறிந்து வியந்திருக்கிறோம். எத்தனை எத்தனை வியப்புக்குரிய செய்திகளைக் கடந்து வந்துசேர்ந்திருக்கிறோம். பன்முகப் பண்பாடுகளின் சங்கமமான நமது இந்திய மண்ணின் பிரிக்க முடியாத கலையாக சினிமா எவ்வளவு பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ளது!

அந்தந்த மொழிகளின் வளர்ச்சிக்கேற்ப, அவற்றின் பண்பாடுகளோடு இரண்டறக் கலந்த சினிமா எனும் அற்புத அறிவியல் கலை இங்கே என்னென்ன வகைகளிலெல்லாம் முத்திரை பதித்துள்ளது!

அரசமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள மொழிகளில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கிலுள்ள சின்னஞ்சிறிய மொழிகளிலும் சினிமா முயற்சிகள் நிகழ்ந்துள்ளனதான். அவற்றையும் சற்றே பார்த்துவிடுவதுதான் இந்தத் தொடரின் நோக்கத்திற்கு ஒரு முழுமையைத் தரும். எனவே வாருங்கள், வடமொழி என்றறியப்படுகிற சம்ஸ்கிருதம் உள்ளிட்ட இந்தியாவின் சின்னச் சின்ன சினிமா முயற்சிகளையும் ஒருசுற்று பார்த்துவிடுவோம்.

சம்ஸ்கிருத சினிமா

மக்களிடையே பேச்சுவழக்கொழிந்த நிலையிலும் ஒன்றிய அரசின் ஆதரவோடு முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளது சம்ஸ்கிருதம். உலகின் செம்மொழி அந்தஸ்திலிருக்கும் இந்த மொழியில் இதுவரையில் 10 திரைப்படங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளில் மக்கள் வெள்ளமெனத் திரண்டுவந்து படம் பார்க்கிற வாய்ப்பில்லாதபோதிலும் அந்த மொழியின்மீது பற்று கொண்டோரின் முயற்சியால் திரைப்படங்கள் உருவாவதும் சாத்தியப்பட்டிருக்கிறது. சம்ஸ்கிருதத்தில் 1983-ல்தான் முதல் படம் வெளிவந்தது.

இயக்குநர் ஜி.வி.ஐயர்
இயக்குநர் ஜி.வி.ஐயர்

‘கன்னட பீஷ்மர்’ என்றழைக்கப்பட்ட இயக்குநர் ஜி.வி.ஐயர் இயக்கிய படம் அது. அதுதான் ‘ஆதி சங்கராச்சாரியா’ எனும் முதல் சம்ஸ்கிருதத் திரைப்படம். தமிழில் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், தேவிகா நடிப்பில், ஏ.பீம்சிங்கின் இயக்கத்தில் 1965-ல் வெளிவந்த ‘பழநி’ திரைப்படத்தின் கதையை எழுதியவர் ஜி.வி.ஐயர். பின்னர் 1989-ல் தமிழில் வெளிவந்த ‘ராமானுஜாச்சாரியா’ என்ற படத்தை அவர் இயக்கினார். இந்தியிலும் 'சுவாமி விவேகாநந்தா' என்ற படத்தை 1998-ல் எழுதி இயக்கியிருக்கிறார்.

ஆதிசங்கரரின் கதையைச் சொல்லும் ‘ஆதி சங்கராச்சாரியா’, சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 தேசிய விருதுகளைப் பெற்றது.

பிரஜ் மொழி சினிமா

வடக்கே மதுரா, ஆக்ரா, அலிகர் மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ், ராஜஸ்தானின் பாரத்பூர், டோல்பூர் ஆகிய பகுதிகளைக் கொண்ட அறுதியிட்டு வரையறுக்க இயலாத பிரஜ்பாஷா பிராந்தியத்தில் பேசப்படும் மொழி பிரஜ்பாஷா என்பதாகும். இந்த மொழியின் முதல் பேசும்பட முயற்சி 1982-ல் ஷிவ் குமார் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. அப்போது வெளிவந்த படம்தான் ’பிரிஜ் பூமி’. மகத்தான வெற்றியை ஈட்டிய படம் இது.

அதைத் தொடர்ந்து ‘ஜமுனா கினாரே’, ‘பிரிஜ் காவ் பிர்ஜு’ போன்ற படங்களும் தொடர்ந்து வெளிவந்தன.

சக்மா மொழி சினிமா

வடகிழக்கின் திரிபுராவிலும் மிசோரமிலும், வங்கதேசத்தின் சிட்டகாங் மலைப் பகுதிகளிலும் பேசப்படுகிற மொழி சக்மா. ‘தன்யாபி ஃபிர்டி’ திரைப்படம் அந்த மொழியில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். சதரூப சன்யாலின் முயற்சியில் 2005-ல் இப்படம் வெளிவந்தது. தன்யாபி ஃபிர்டி என்றால் தன்யாபி ஏரி என்று அர்த்தம்!

சத்தீஸ்கரி சினிமா

மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் மொழியான சத்திஸ்கரி மொழியின் படவுலகம் சாலிவுட் என்றழைக்கப்படுகிறது. கறுப்பு - வெள்ளையில் 1965-ல் வெளிவந்த ‘கஹி தேபே சந்தேஷ்’ படம்தான் சத்தீஸ்கரியில் வெளியான முதல் சினிமா. மனுநாயக் என்பவரின் பங்கேற்பில் உருவான இந்தப் படத்திற்குப் பிறகு அந்த மொழியில் 2000-ம் ஆண்டுவரையில் எந்தவொரு திரைப்பட முயற்சியும் நடக்கவே இல்லை.

அதன் பின்னர்தான் ‘மோர் சைன்ஹா புயின்யா’ என்ற ஒரு திரைப்படம் சத்தீஸ்கரியில் வெளிவந்தது.

நாக்புரி சினிமா

ஜார்க்கண்ட் மாநிலத்தில் புழக்கத்திலுள்ளது நாக்புரி மொழி. இந்த மொழியில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும்படம் ‘சோனா கர் நாக்பூர்’.

ஷெர்டுக்பென் சினிமா

வடகிழக்கின் அருணாசல பிரதேசத்தில் பேசப்படும் மொழி ஷெர்டுக்பென். இந்த மொழியில் உருவான முதல் பேசும்படம்தான் ‘கிராசிங் பிரிட்ஜ்’. இது 2014-ல் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தின் இயக்குநர் சொன்கே டோர்ஜீ துங்டாக்.

படகா சினிமா

படகர்கள் அல்லது படுகர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கிற மக்கள். அவர்களின் மொழிதான் படகு. அந்த மொழியில் தயாரிக்கப்பட்ட முதல் பேசும்படம் ‘காலா தப்பித்த பயிலு’. 1979-ல் உருவான இந்தப் படம் ஒரு கறுப்பு - வெள்ளைப் படம். அதன்பின்னர் 2006 ல்தான் படகா மொழியில் அடுத்த திரைப்பட முயற்சி நடந்தது. ‘ஹோசா முங்காரு’ அதன் பெயர். இது அம்மொழியில் உருவான முதல் வண்ணப்படமாகும். 2009-ல் ‘கவவ தேடி’ எனும் படம் வெளியானது. ‘அன்பைத் தேடி’ எனும் பொருள்படும் இந்தப் படத்தில் படகர்களுடன் நீலகிரியின் பூர்வ குடிகளான தோடர்களும் நடித்திருந்தார்கள். நல்லிணக்கத்தையும் குடும்ப விழுமியங்களையும் போற்றிய இந்தப் படம் நீலமலையின் இயற்கைக் காட்சிகளையும் அள்ளித் தந்தது.

நிறைவாக... இதுவரையில் இந்தியாவின் 30-க்கும் மேற்பட்ட மொழிகளின் திரையுலகங்கள் பற்றியும் அவற்றின் முதல் பேசும்படங்கள் பற்றியும் வரலாற்று ரீதியிலான அவற்றின் பங்களிப்புகள், தாக்கங்கள் பற்றியும் பார்த்தோம். மகத்தான இந்திய தேசத்தின் பல்வேறுபட்ட கலைகளின் கூட்டுவடிவமான இந்திய சினிமாவின் பன்முக தரிசனம் என்பதே வியப்பை வாரிவழங்க வல்லது. அந்த வியப்பை இயன்றவரையில் வாசகர்களுக்கு அப்படியே வழங்க பிரயத்தனப்பட்டிருக்கிறேன் என்றே நம்புகிறேன்.

இந்திய மொழிகளின் மௌனங்கள் இவ்வாறு கலைந்து, இந்தப்படியாக மிளிர்கின்றன. நம் திரைப்படக் கலை ஒலியும் ஒளியுமாக நம் உள்ளங்களையெல்லாம் பண்படுத்தி நிறையட்டும். மேலும் மேலும் உலகம் வியக்க நுட்பத்தாலும் தரத்தாலும் மனித வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக அது மேன்மையுறட்டும்!

(முற்றும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in