மௌனம் கலைத்த சினிமா-24: சந்திராவல் (ஹரியாண்வி)

மௌனம் கலைத்த சினிமா-24: சந்திராவல் (ஹரியாண்வி)

ஹரியாணா மாநிலத்தில் பேசப்படும் மொழி ஹரியாண்வி. இதுவும் ஒரு இந்தோ - ஆரிய மொழிதான். டெல்லியிலும் ஹரியாணா மாநிலத்திலும் வாழும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் இந்த மொழியைப் பேசுகிறார்கள். மேற்கு இந்தியாவின் பேச்சுவழக்கு திரிபுபட்ட இந்தி மொழியே ஹரியாண்வி என்றும் சொல்லப்படுகிறது. தேவநாகரி எழுத்து வடிவம் இந்த மொழிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஹரியாணாவி மொழி பேசும் 12 லட்சம் இஸ்லாமியர்கள் தேசப்பிரிவினைக்குப் பின்னர் ஹரியாணா மற்றும் டெல்லியிலிருந்து பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து சென்றார்கள். இப்போது பாகிஸ்தானில் வாழும் முலே ஜாட், ரங்கர் முஸ்லிம்களின் தாய் மொழியாக ஹரியாண்வி உள்ளது. அவர்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஆயிரக்கணக்கான கிராமங்களிலும், சிந்து மற்றும் இதர பகுதிகளின் நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் வாழ்கிறார்கள். விடுதலைக்குப் பிறகு உத்தர பிரதேச ரங்கர்களும் பாகிஸ்தானின் சிந்து மற்றும் கராச்சிக்குக் குடியேறினார்கள். சிறு விவசாயிகளாக அவர்கள் உள்ளார்கள். பலரும் காவல் துறை, ராணுவம் மற்றும் சிவில் சேவைகளில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் உருது மொழி தேசிய மொழியாக உள்ளது.

பண்பாட்டுத் துறையில் ஹரியாணா

ஹரியாணாவின் பாரம்பரிய நாட்டுப்புற இசை தனித்துவமானது. அத்துடன் நாட்டுப்புற நடனங்கள், சாங் எனும் நாட்டுப்புற நாடகக்கலை, ஜாதேரா எனும் மூதாதையர் வழிபாடு போன்றவை அவர்களின் பண்பாட்டு அடையாளங்களில் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. புல்காரி மற்றும் ஷிஷா பூத்தையல் முதலான கலைகளும் அங்கே முக்கியமாகத் திகழ்கின்றன.

ஹரியாணாவின் விவசாயம் மற்றும் தற்காப்பு இயல்புகளின் கலாச்சாரத் தேவைகளை நிறைவு செய்வதை அந்த மக்களின் நாட்டுப்புற இசையும் நடனங்களும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஹரியாண்வி மொழியின் நாட்டுப்புற இசை நாடக வகைகளில் முக்கியமானவையாக சாங், ராசலீலா மற்றும் ராகினி ஆகியன உள்ளன. இவற்றில் சாங் மற்றும் ராகினி நாடக வடிவங்கள் லக்மி சந்தால் பிரபலப்படுத்தப்பட்டன. நாட்டுப்புற நடனங்களும் அதற்கான இசையும் வேகம் மற்றும் ஆற்றல் மிக்க அசைவுகளைக் கொண்டவையாக உள்ளன. பண்டிகை - பருவகால, பக்திச் சடங்குகள், பொழுதுபோக்கு போன்ற வகைகளைக் கொண்டவையாக ஹரியாண்வி நடனங்கள் திகழ்கின்றன.

நகைச்சுவை உணர்வையும் அன்றாட வாழ்வின் கருப்பொருளையும் அடிப்படையாகக் கொண்ட ஹரியாண்வியின் நாட்டுப்புற இசை அதைப் பேணுகிற மக்களின் உணர்வை உயிர்ப்பிப்பதாக விளங்குகிறது. வீரம், அறுவடை, மகிழ்ச்சி, காதல், பிரிவின் வேதனை போன்ற வாழ்வின் அங்கங்களானவற்றை வடிவங்களாகக் கொண்டு ஹரியாண்வி நாட்டுப்புற இசை திகழ்கிறது.

ஹரியாண்வி திரை உலகம்

‘தங்கல்’, ‘சுல்தான்’, ‘தனு வெட்ஸ் மனு: ரிட்டர்ன்ஸ்’ போன்ற பாலிவுட் படங்களில் ஹரியாண்வி மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பின்னணியாகப் பயன்படுத்தியுள்ளனர். இவை இந்தியாவிலும் அயல் தேசங்களிலும் வரவேற்பைப் பெற்றன. இதன் விளைவாக பிறமொழி பேசுவோர் பலரும் ஹரியாண்வியைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியக் கல்வித் துறை, இசை ஆல்பங்கள், தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றில் தனது இருப்பை வெற்றிகரமாக நிலைநிறுத்தியிருக்கிறது ஹரியாண்வி.

வசூல் ரீதியில் வெற்றிபெற்ற முதல் ஹரியாண்வி படம் ’சந்திராவல்’. 1984 மார்ச் மாதம் இப்படம் வெளிவந்தது. ‘சந்திராவல்’ படத்திற்கு முன்னர் இரண்டு பட முயற்சிகள் தோல்லியில் முடிந்த காரணத்தால் இதுவே அம்மொழியின் முதல் சினிமா என்று கருதப்படுகிறது. ஸ்ரீதேவி சங்கர் பிரபாகர் எழுத்தில் உருவான இந்தப் படத்தை உஷா சர்மா தயாரிக்க, ஜெயந்த் பிரபாகர் இயக்கினார். ஜே.பி.கௌசிக் இசையமைத்தார். நசீப் சிங் குன்டு, ஜெகத் ஜெகர், உஷா சர்மா, தர்யவ் சிங் மாலிக், மன்பூல் சந்த் தாங்கி முதலானோர் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கதைச்சுருக்கம்

காடியா லோஹர் பழங்குடியினரின் தலைவர் ஜோதா சர்தாரின் பேத்தியான சந்திராவல், ஜாட் வகுப்பைச் சேர்ந்த சூரஜ் என்ற இளைஞனைக் காதலிக்கிறாள். காடியா லோஹர் பழங்குடியின ஆண்கள் கடும் உழைப்பாளிகள். அவர்கள் தங்கள் இனப் பெண்களைப் பிற சாதியினர் திருமணம் செய்துகொள்வதைச் சிறிதும் விரும்பாதவர்கள். இந்த நிலையில் ஜோதா சர்தார் சந்திராவலைக் கண்டந்துண்டமாக வெட்டுவேன் என்று எச்சரிக்கிறார். அதையும் மீறி சந்திராவலும் சூரஜும் நீண்ட பிரிவிற்குப்பின் சந்தித்துக்கொள்கிறார்கள். கோபமடைந்த சர்தார் தன் நீண்ட வாளை சந்திராவல் மீது வீசுகிறார். அதை சூரஜ் தன்மேல் வாங்கிக்கொண்டு, தன் காதலியின் உயிரைக் காப்பாற்றுகிறான். கத்தி பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரியும் சூரஜ் உடலிலிருந்து கத்தியை உருவி, அதைக் கொண்டு தன்னையும் மாய்த்துக்கொள்கிறாள் சந்திராவல்.

இந்தக் கதையில் இன்னொரு உட்கதையும் உண்டு. காடியா லோஹர் பழங்குடியினர் தங்களை மகாராணா பிரதாப்பின் வழித்தோன்றல்கள் என்று பெருமிதம் கொள்பவர்கள். அவரது தோல்விக்குப் பின் சித்தூர் கோட்டையில் அவர்களது கொடி இறங்குகிறது.

அந்தக் கொடியை மீண்டும் ஏற்றும்வரை ஒரு கூரையின்கீழ் நிரந்தரமாகக் குடியிருக்க மாட்டோம் என்று சபதம் செய்துவிட்டு நாடோடிகளாகச் சுற்றித் திரிகிற வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள் லோஹர் இன மக்கள். இந்த நாடோடி வாழ்க்கையின் போக்கில்தான் சந்திராவல் - சூரஜ் சந்திப்பு நிகழ்கிறது.

அபார வரவேற்பைப் பெற்ற ‘சந்திராவல்’

ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசம், டெல்லி மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் வெளியாகி, பரவலான மக்களின் வரவேற்பைப் பெற்றது ‘சந்திராவல்’. உண்மையில் இந்தப் பகுதிகளில் பிரபல பாலிவுட் மெகாஹிட் படங்களான ‘பாபி’, ‘ஷோலே’ போன்ற படங்களின் வசூல்களையும் தாண்டி அமோகமான வெற்றியை ஈட்டியது. இப்படத்தின் வெள்ளிவிழா ஃபரிதாபாத்தின் ககன் திரையரங்கில் கொண்டாடப்பட்டது.

இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கு ஆன மொத்த செலவையும் அந்த ஒரு திரையரங்கின் வசூலிலேயே பெற்றுவிட்டது என்பதும் இன்னொரு வியப்புச் செய்திதான். கிராமம் கிராமமாக மக்கள் டிராக்டர்களிலும், லாரிகளிலும் கூட்டம் கூட்டமாக இத்திரைப்படத்தைப் பார்க்கப் படையெடுத்தார்கள். இப்படத்தைப் பார்த்த ஹரியாணா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட ரசிகர்களை படத்தின் தயாரிப்பாளர்கள் கௌரவித்தார்கள். காரணம், அவர்கள் எல்லோரும் இந்தப் படத்தை 200 முறைக்கு மேல் பார்த்திருந்தார்களாம்.

ஹரியாண்வியின் நாட்டுப்புறப் பாடல்கள் இந்திய இசைத்துறையில் நவீன இந்திய இசை வடிவத்தை எட்ட இந்தப் படத்தின் பாடல்கள் பெரும்பங்காற்றின. 2012 ஏப்ரல் 4 அன்று ‘சந்திராவல்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.

(சம்ஸ்கிருதத்தின் மௌனம் அடுத்து கலையும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in