மௌனம் கலைத்த சினிமா- 23: சந்தோ லிகோன் (சந்தாலி)

மௌனம் கலைத்த சினிமா- 23: சந்தோ லிகோன் (சந்தாலி)

சொல்வழக்கில் சந்தாரி என்று புழங்குகிற சந்தாலி மொழி, முண்டா இன உபகுழு மக்களால் பரவலாகப் பேசப்படுகிற மொழியாகும். இதனை சந்தால் என்றும் அழைப்பார்கள். ஹோ மற்றும் முண்டாரி மொழிகளுடன் உறவுள்ள ஆஸ்திரோ - ஆசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த சந்தாலி இந்தியாவில் அசாம், பிஹார், ஜார்க்கண்ட், மிசோரம், ஒடிசா, திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் பேசப்படுகிறது.

வரிவடிவம் ஏற்படுத்திய மறுமலர்ச்சி

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணைப்படி பிராந்திய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளில் சந்தாலியும் ஒன்று. வங்கதேசம், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளிலும் சந்தாலி பேசப்படுகிறது. ஆஸ்திரோ - ஆசிய மொழிகளான வியட்நாமிய மற்றும் கெமர் மொழிகளுக்கு அடுத்த நிலையில் ஏறக்குறைய 70 லட்சம் மக்களின் பேச்சுவழக்காக சந்தாலி உள்ளது. 1925-ம் ஆண்டுவரையில் சந்தாலி ஒரு பேச்சு மொழியாக மட்டுமே இருந்துவந்தது. அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அது பண்டிட் ரகுநாத் முர்மு என்கிற மொழியியல் மேதை ஒருவரால் ஏற்பட்ட மாற்றம். சந்தாலிக்கு ஏற்பட்ட ஏற்றம் அது. ஆமாம், அவர்தான் சந்தாலிக்கு எழுத்துமுறை ஒன்றை உருவாக்கினார். அதற்கு ஒல் சிக்கி என்பது பெயர். இந்த ஒல் சிக்கிதான் சந்தாலியின் வரிவடிவம்.

30 எழுத்துக்களைக் கொண்ட சந்தாலியின் உயிர், மெய், உயிர்மெய்க் குறியீடுகளை உருவாக்கி அந்த மொழியின் தரம் உயர்த்தினார் பண்டிட் ரகுநாத் முர்மு. பன்னெடுங்காலமாக ஒரு தலைமுறையின் எண்ணங்களையும் அனுபவச் செறிவுகளையும் வாய்மொழி மூலமாக மட்டுமே அடுத்த தலைமுறைக்குக் கடத்திவந்தது சந்தால் சமூகம்.

பண்டிட் ரகுநாத் முர்மு
பண்டிட் ரகுநாத் முர்மு

இந்நிலையில் 19-ம் நூற்றாண்டு வரையில் சந்தாலி மொழியின் சிந்தனைச் செல்வங்களை முதன்முதலில் பதிவுசெய்ய வங்கம், ஒடியா மற்றும் ரோமானிய எழுத்து வடிவங்களையே ஐரோப்பிய மொழியியல் அறிஞர்களும் கிறிஸ்தவ மிஷனரிகளும் பயன்படுத்தினார்கள். அதுவரையில் சந்தால் மக்கள் தம் தாய்மொழியில் எழுதும் வழக்கமற்றிருந்தார்கள். ஐரோப்பிய மானுடவியலாளர்களும் நாட்டுப்புறவியலாளர்களும் ஏ.ஆர்.கேம்ப்பெல், லார்ஸ் ஸ்க்ரெஃப்ஸ்ருட், பால் போடிங் போன்ற மிஷனரிகளும் முயன்றதால் சந்தாலி அகராதிகள், நாட்டார் கதைகள் போன்றவை பதிப்புகள் கண்டன.

சந்தாலி மொழியின் உருவவியல், தொடரியல் மற்றும் ஒலிப்பு அமைப்பு பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.1939-ல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பண்டிட் முர்முவின் ஒல் சிக்கி எழுத்துருவாக்கம் சந்தாலி சமூகத்தின் பண்பாட்டு அடையாளத்திலேயே ஒரு பொலிவை ஏற்படுத்தியது. ரகுநாத் முர்முவே பாடல்களையும் நாடகங்களையும் பள்ளிப் பாடநூல்களையும் சந்தாலி மொழியில் தான் உருவாக்கிய எழுத்துக்களைக் கொண்டு எழுதி வெளியிட்டு ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

தற்போது ஒல் சிக்கி மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகாரபூர்வ எழுத்துவடிவமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் மட்டும் வங்காள மொழியை சந்தாலிக்குப் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட கூடுதல் அதிகாரபூர்வ மொழியாக சந்தாலி உள்ளது.

சந்தாலி குறித்த வரலாற்றுக் குறிப்பு

முண்டா மொழிகள் இந்தோனேஷியப் பகுதியிலிருந்து இந்தியாவின் ஒடிசா கடற்கரைப் பகுதிக்கு சற்றேறக்குறைய 4,000 முதல் 3,500 ஆண்டுகளுக்கு முன் வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்பது மொழியியல் அறிஞர் பால் சித்வெல்லின் கருத்தாக உள்ளது. அது இந்தோ - ஆரியர்களின் ஒடிசா வருகைக்குப்பின் வேறு பல இடங்களுக்கும் பரவியிருக்க வேண்டும் என்பதும் அவரது கணிப்பு. பேச்சுவழக்குகளின் அடிப்படையில் சந்தாலி மொழி கமாரி - சந்தாலி, கர்மலி (கோலே), லோஹாரி - சந்தாலி, மஹாலி, மஞ்சி, பஹாரியா என பல பிரிவுகளைக் கொண்டுள்ளது.

முதல் முயற்சி

‘சாலிவுட்’ என்ற செல்லப்பெயர் பெற்ற சந்தாலி திரைப்படத் துறை என்பது ஒரு சின்னஞ்சிறு உலகம்தான். இந்தியாவின் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், அசாம், ஒடிசா, நேபாளத்தின் ஒரு பகுதி ஆகிய சந்தால் மக்கள் வாழுமிடங்களில் சந்தாலி மொழி சினிமாவுக்கு ஓரளவுக்கு வரவேற்பிருக்கிறது. சந்தாலி சினிமாவை ஆதரிக்க சில முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆனாலும் தொடக்கத்தில் பெரிய திரையை அடைந்தவை மூன்று சந்தாலி மொழிப் படங்கள் மட்டுமே. அவற்றுள் ‘சந்தோ லிகோன்’ எனும் 35 எம்.எம் திரைப்படம்தான் சந்தாலியின் முதல் சினிமாவாகப் பேசப்படுகிறது. அது 2001-ம் ஆண்டில் வெளியானது. உமேஷ் மரண்டி எழுத்தில், பிரேம் மரண்டி, அமின்ஷு கிஸ்கு, அஞ்சலி, புஷ்பா போன்றவர்களின் நடிப்பில், சுனில் ஒளிப்பதிவில், சந்தன் பாஸ்கி இசையில் உருவான படம் இது. கோல்டு டிஸ்க் நிறுவனத்திற்காக கங்காராணி தபா தயாரித்திருந்தார். படத்தை இயக்கியவர் தசரத் ஹன்ஸ்தா.

தசரத் ஹன்ஸ்தா
தசரத் ஹன்ஸ்தா

இப்படத்தைத் தொடர்ந்து ‘சாகுன் ஏனா சோஹக் துலர்’ என்ற சந்தாலியின் இரண்டாவது திரை முயற்சி 2003-ல் வெளிவந்தது. பாலிவுட்டில் 1982-ல் வெளிவந்த இந்திப் படமான ‘நதியா கே பார்’ படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. 2009-ல் தயாரான ‘ஜூவி ஜூரி’ திரைப்படம் ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் பிற மாநிலங்களில் பரவலாக வெளியீடு முயற்சி கண்டது. நேபாளத்தில் தயாரான முதல் சந்தாலி மொழிப்படம் எனும் வரலாற்றுச் சிறப்புடன் வெளிவந்த ‘போனடல்’ என்ற படம் 2016-ல் வெளிவந்தது.

ஆதரவளிக்காத அரசுகள்

மற்ற மொழிகளைப் போலல்லாமல் சந்தாலி சினிமாவால் தனித்த ஒரு திரைத் துறையை உருவாக்க இயலவில்லை. திரையரங்குகள் சந்தாலிக்கு என்று கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. மக்கள்தொகைக் குறைவு காரணமாக லாபமில்லாத ஒரு முயற்சியை எவரும் மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதும் இயல்பே. இந்த நிலையில்தான் சந்தாலி திரையுலகினர் வருடத்திற்கு 8 முதல் 10 படங்களை வெளியிடுகிறார்கள். அவர்களுக்குத் துணைபுரிவது குறுந்தகடு வணிகமுறை மட்டுமே.

மாநில அரசுகளும் சந்தாலி சினிமாவுக்குப் பெரியளவு ஆதரவு தருவதில்லை. குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் சந்தாலி திரைப்படங்களைவிட இசை ஆல்பங்களின் வணிகம் மேம்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள். ஜார்க்கண்ட் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் போன்ற அமைப்பு எதுவும் இல்லாத நிலையில் சந்தாலி திரைப்பட உலகின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. என்றபோதிலும் சந்தாலியின் இளைய சமுதாயம் இந்த விஷயத்தில் சற்றே விழிப்பு பெற்றுவருவது நம்பிக்கையை விதைக்கிறது!

(ஹரியாண்வியின் மௌனம் அடுத்து கலையும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in