மௌனம் கலைத்த சினிமா-22: தி அங்கிரேஸ் (டெக்கானி)

மௌனம் கலைத்த சினிமா-22: தி அங்கிரேஸ் (டெக்கானி)

அந்த மொழியை உருது என்று சொல்வது தவறு. ஹைதராபாத் இந்தி என்பதும் பிழை. அப்படியென்றால் அதனை என்னவென்று அழைப்பது? டெக்கானி என்றுதான். தக்காணப் பீடபூமியின் மொழி என்பது அதன் பொருள். ஹைதராபாத் பகுதியில் மட்டுமல்லாமல் மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற பகுதிகளிலும், தமிழகத்தின் வேலூர் பகுதியிலும் டெக்கானி பேசப்பட்டுவருகிறது. பாரசீகம், தெஹல்வி (பழைய உருது), அரேபியம், மராத்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளின் சொற்கள் டெக்கானியில் கலந்துள்ளன. டெக்கானியை உள்ளூர்மயமாக்கப்பட்ட உருது என்கிறார்கள். அதுவும் தவறு என்கிறார்கள் டெக்கானியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் ஹைதராபாத்தினர். டெக்கானியைத் தக்னி என்றும் தக்கினி என்றும் அழைக்கிறார்கள்.

அது தற்போது ஒரு பேசுமொழி மட்டுமே. எழுதுவதற்கும் படிப்பதற்கும் டெக்கானியர்கள் தரப்படுத்தப்பட்ட நவீன உருதுவையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்தத் தரப்படுத்தப்பட்ட நவீன உருதுவை அவர்கள் அதிகம் பேசுவதற்குப் பயன்படுத்துவதில்லை.

தக்னியின், பாரசீகத்தின் பல சொற்களும் 15, 16 -ம் நூற்றாண்டிலேயே தெலுங்கு மொழியில் நுழைந்துவிட்டன. எடுத்துக்காட்டாக ரோஸ் எனும் பாரசீகச் சொல்லுக்கு நாள் என்பது பொருள். அதுதான் தெலுங்கில் ரோஜு என்றாகியிருக்கிறது. டெக்கானியை உருதுவின் பேசுமொழி என்று பலரும் தவறாகக் கருதுகிறார்கள்.

ஹைதராபாத்தை நிர்மாணித்த முகமது குலி குதுப் ஷா (1580 - 1611) தக்னியின் மிகச்சிறந்த இலக்கியப் பங்களிப்பாளராவார். அவர் எழுதிய குல்லியாத் 50 ஆயிரம் கவிதை வரிகளைக் கொண்டுள்ளது. அவருக்குப் பின் 18-ம் நூற்றாண்டில் தக்காணத்தின் முகலாய வெற்றிகள் மற்றும் நவீன உருதுவின் உருவாக்கம் காரணமாக கவிஞர்கள் உருதுவுக்கு மாறத் தொடங்கினார்கள். 1724-ல் நிஜாம்கள் ஆளுநர்களாக முதலாயர்களால் நியமிக்கப்பட்டார்கள். டெக்கானி மொழி - உருது இரண்டும் ஒரு புதுவிதமான சமூக - பண்பாட்டுச் சூழ்நிலையை உருவாக்கின. பாரசீக மொழியும் உருதுவும் அவர்களின் கீழ் ஆட்சிமொழிகளாக ஆக்கப்பட்டன. ஆரம்பத்தில் எழுத்து மொழியாகவும் இருந்த டெக்கானி இன்றுவரையில் பேச்சுமொழியாக மட்டுமே நீடித்துவருகிறது. உண்மையில் தெஹல்வி மொழிதான் உருது மற்றும் டெக்கானி ஆகிய மொழிகளின் வேர்களைக் கொண்டுள்ளது. அதனால் தெஹல்விக்குப் பழைய உருது என்றும் பெயர்.

14-ம் நூற்றாண்டில் முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து மகாராஷ்டிரத்தின் துக்ளகாபாத்திற்கு மாற்றி, தக்காணத்தைக் கைப்பற்றுவதற்கு முன் டெல்லியில் நூறு ஆண்டுகள் புழக்கத்திலிருந்தது தெஹல்வி மொழியாகும். சூஃபிகள் தெஹல்வியைத் தாராளமாகப் பயன்படுத்தினார்கள். 14-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தெஹல்வியின் பேச்சு வழக்குகள் மராத்தியுடன் கலந்தன. பின்னர் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுடன் கலந்து டெக்கானி பிறந்தது. ஆக, டெக்கானி அல்லது தக்னி என்பது பெர்சியன், தெஹல்வி, கன்னடம், மராத்தி, தெலுங்கு ஆகியவற்றின் கலவை மொழியாகும்.

15-ம் நூற்றாண்டில் நிஜாமி எழுதிய கதம் ராவ் பதம் ராவ் முதல் எழுத்துபூர்வ டெக்கானி இலக்கியமாகும்.

தாராளமய யுகத்தில் பிறந்த டெக்கானி திரையுலகம்

அதிகபட்சமாக டெக்கானி மொழி பேசுவோர் முஸ்லிகள்தான். அவர்களின் சமூக - பண்பாட்டு வாழ்வில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய காலமென்பது 1990-களின் பொருளாதார தாராளமய காலம்தான். அமைதியும் நம்பிக்கையுமாக நகர்ந்துகொண்டிருந்த அவர்களிடையே தாக்கங்களைத் தந்தது தாராளமய பொருளாதாரச் சீர்திருத்தம். அது நகரங்களைப் பொருளாதாரத்தின் குவி மையங்களாக மாற்றியது. உலகளாவிய சந்தைக்கான சேவை மையங்களாக மறுகட்டமைக்கப்பட்டன நகரங்கள். இந்திய நகரங்கள் உலகின் சாயல்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டன. அவற்றின் இயல்பும் வாழ்க்கை முறைகளும்கூட மாற்றங்களால் திணறத் தொடங்கின.

ஹைதராபாத் நகரைப் பொறுத்தளவில் உலக நகரமாக அது மாற்றங்காணும் பொழுதொன்றில் எதிர்காலம் குறித்த கனவுகளோடு நிகழ்காலத்தின் யதார்த்தம் முரண் கொண்டு பதற்றங்களைத் தோற்றுவித்தது. புதிய ஹைடெக் நகரை உருவாக்கும் முனைப்பில் அதன் மதம் சார்ந்த பழமை எண்ணம் கொண்டவையெல்லாம் அந்த வளர்ச்சிக்கு வெளியே அந்நியமாக்கப்பட்டன.

இந்த ஒரு இக்கட்டான காலத்தில்தான் ஹைதராபாத் டெக்கானி பட உலகம் பிறக்கிறது. பழைய நகர வனப்புக்கும் புதிய ஹைடெக் கான்கிரீட் வனங்களுக்கும் இடையிலான முரண்கள் நகைச்சுவை மற்றும் நையாண்டிகள் வழியே காட்சிகளாகத் திரைகளில் விரிகின்றன. அது அந்த முரண் அரசியலைப் பேசுகிறது. தெலங்கானாவின் ஹைதராபாத்தைத் தளமாகக் கொண்ட டெக்கானி மொழியின் படவுலகிற்கு டோலிவுட் என்று செல்லப்பெயர். டெக்கான் பகுதியில் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் உருது பேசக்கூடிய உலகின் பிற பகுதிகளிலும் இந்த டெக்கானி சினிமாக்களுக்கு வரவேற்பு உண்டு. அடிப்படையில் தென்னிந்தியப் பகுதியின் பேசு மொழியான டெக்கானி மொழியென்பது இந்தோ ஆரிய, திராவிட இந்துஸ்தானி எனும் கலவை மொழியென்பதால் டெக்கானி அல்லாத வேறு சில மொழிப்பிரிவினராலும் புரிந்துகொள்ள இயலும் என்பது டெக்கானி திரைப்படங்களின் வீச்சுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

சில படங்களில் தரப்படுத்தப்பட்ட உருது மொழியைப் பாடல்களில் பயன்படுத்துவதும் அதன்மீதான ஈர்ப்பை அதிகரிப்பதாக உள்ளது. தொடக்கத்தில் ஒன்றிய அரசின் திரைப்படத் தணிக்கை வாரியத்தால் இந்தித் திரைப்படம் என்றே சான்றளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது அதன் சொந்த மொழியான டெக்கானியின் பெயரிலேயே தணிக்கைச் சான்று வழங்கப்படுகிறது.

டோலிவுட் எனும் டெக்கானியின் முதல் சினிமா

டெக்கானி மொழியில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘தி அங்கிரேஸ்’ (The Angrez). (ஆங்கிலேயர்கள் என்பது அதன் பொருள். ஆங்கிலேயர்களையும் வெளிநாடு வாழ் இந்தியர்களையும் குறிப்பதான சொல்தான் அங்கிரேஸ். ஆங்கில மொழியைக் குறிக்க இந்தியில் பயன்படுத்தப்படும் வார்த்தை அங்கிரேஸி).

2005-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் அது வெளிவந்த காலத்தில் புதிய தடம் பதிக்கும் டிரெண்ட் செட்டராகவே கருதப்பட்டது. நகைச்சுவை ததும்பும் சிறந்த கதையமைப்பைக் கொண்டிருந்தது இந்தத் திரைப்படம். இதனை இயக்கியவர் குன்ட்டா நிக்கில். பழைய நகரான ஹைதராபாத்தின் டெக்கானி பேச்சுவழக்கில் படம் அமெரிக்காவின் பொருளாதாரத்தின் மீதான ஈர்ப்பையும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சுற்றியுள்ள பரபரப்பையும் அது தோற்றுவித்த வாழ்க்கைமுறையையும் கலாச்சாரத்தையும் இந்தத் திரைப்படம் சித்தரிக்கிறது. படம் மூன்று வகையான கதை மாந்தர்களைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து இங்கே ஒரு கால் சென்டரில் வேலை செய்ய வருகிறார்கள் இரண்டு இளைஞர்கள். அவர்கள் ஒரு வகை. உள்ளூர் பழைய நகரின் இஸ்மாயில் பாய் மற்றும் அவரது குழுவினர் இரண்டாவது வகை. மூன்றாவது வகையினர் மாமா ஏ.கே.ஏ. அண்ணா கும்பல். இவர்களைச் சுற்றிய கதையமைப்பு.

பிரனாய் மற்றும் ரோசாக் இருவரும் அயலக இந்தியர்கள். ஹைதராபாத்திலுள்ள தங்களின் நண்பனின் நிறுவனத்தில் பணியாற்ற வந்து அங்கே தங்குகிறார்கள். இஸ்மாயில் பாய் மற்றும் அவரது குழுவினருக்கு சார்மினார் அருகில் சந்தித்துக் கும்மாளமடிப்பதே வாடிக்கை. அயலக இளைஞர்களான பிரனாய் மற்றும் ரோசாக் இஸ்மாயில் பாயுடன் பகை கொள்கிறார்கள். அடிதடி நடக்கிறது. அவர்களை மீட்கும் கூலிப்படையாக மாமா குழு செயல்படுகிறது. அந்த மூன்று குழுவினரும் இப்படி ஒருவருடன் ஒருவர் முரண்பட்டு மோதிக்கொள்வதன் வாயிலாகத் தக்காணத்தில் ஏற்பட்டுவரும் நவீன தாராளமயச் சுரண்டல் அம்பலப்படுத்தப்படுகிறது.

குன்ட்டா நிக்கில்
குன்ட்டா நிக்கில்

வியக்க வைத்த முன்தயாரிப்புகள்

குன்ட்டா நிக்கில், கணேஷ் வெங்கட்ராமன், தீர்சரண் ஸ்ரீவத்சவ், மாஸ்தி அலி, ஆசிஸ் நாசர், கரந்தி கிரண் காமராஜு, ரகு கருமஞ்சி, ஜீவன் சேகர் ரெட்டி, தாரா டி சோசா, சௌமியா பொல்லப்பிரகடா, ஆர்.கே., ஷேஹ்நாஸ் முதலானவர்கள் இப்படத்தில் நடித்தார்கள். முக்கிய வேடத்தில் நடித்த குன்ட்டாதான் கதை, திரைக்கதை மற்றும் இயக்கம். அவர் அமெரிக்காவில் ஏற்கெனவே திரைப்படத் துறையில் உதவி இயக்குநராகப் பணி செய்தவர். கதை உருவாக்கத்திற்காக இரண்டு வருடங்களுக்கும் மேலாகக் கடும் வேலை செய்திருக்கிறார். பலதரப்பட்ட மக்களைச் சந்தித்திருக்கிறார். ஹைதராபாத்தில் வசிக்கும் அயலகத்து இந்தியர்களின் பண்பாடு குறித்து விசாரித்து அறிந்திருக்கிறார். கால் சென்டர்களில் பணி நிலைமைகளை அறிந்திருக்கிறார்.

பழைய நகரின் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள அந்த மக்களின் உணர்வு வெளிப்பாடுகளை ரகசியமாகப் படம் பிடித்து ஆய்வு செய்துள்ளார். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை ஒரு வீடியோ காமிராவைப் பயன்படுத்தி அரை மணிநேரம் ஓடக்கூடிய வகையில் எடுத்திருந்தார். எனினும், படத்தைத் தயாரிக்க எவருமே விரும்பவில்லை. நகரின் முழு பண்பாட்டையும் வெளிச்சமிட்டுக்காட்டும் இந்தப் படத்தின் கதையால் கவரப்பட்ட ஸ்ரீதர் ராவ் இதனைத் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தார்.

வெளிவந்தது அங்கிரேஸ்

ஆரம்பத்தில் ஹைதராபாத்தின் நான்கு திரையரங்குகளில்தான் ‘தி அங்கிரேஸ்’ வெளியானது. அதன்பின் தாமதமாகத்தான் பல திரையரங்குகளிலும் அது திரையிடப்பட்டது. 25 வாரங்கள் ஓடிய பின்னர்தான் ஹைதராபாத்தில் அமைந்த வீடியோ கம்பெனியான ஷாலிமர் வீடியோ இந்தப் படத்தினை சி.டி வடிவிலும் டிவிடி வடிவிலும் வெளியிட்டார்கள். இந்தப் படத்தை எல்லோரையும் காணும்படி செய்வதன் மூலம் ஹைதராபாத்தின் மீதான மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யலாம் என்று சுற்றுலா வளர்ச்சித் துறைக்கு இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஒரு மனுவை எழுதிப்போட்டார். ஹைதராபாதி பண்பாட்டை முழுமையாக - பாரம்பரிய பிரியாணி முதல் நவீன பப் வரை - இந்தப் படம் விரிவாகப் பதிவு செய்திருப்பதாக இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நம்பினார்கள். ‘ஹைதராபாதி பிரியாணி’ என்று தொடங்கும் ஐந்து நிமிட ராப் பாடலுக்கு நகரின் 77 முற்றிலும் மாறுபட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

சிறப்பான வெற்றி

ஒரே திரையரங்கில் அரங்கு நிறைந்த 25 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது ‘தி அங்கிரேஸ்’. மெல்ல மெல்ல நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. படத்தின் வீடியோ காட்சிகளை உள்ளடக்கிய 50 லட்சத்துக்கும் அதிகமான விசிடி-க்கள் விற்பனையாகின. திரைத்துறையின் பிரதான போக்கில் ‘தி அங்கிரேஸ்’ தாக்கங்களை ஏற்படுத்தத் தவறினாலும் ஹைதராபாதி கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட நகைச்சுவைத் திரைப்படங்கள் பலவும் ஒரு தொற்றைப்போல உருவாக அது ஒரு தூண்டுதலாக அமைந்துபோனது.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளிலேயே ‘கல் கா நவாப்’, ‘ஹைதராபாத் நவாப்ஸ்’, ‘ஆதப் ஹைதராபாத்’, ‘ஹங்காமா இன் துபாய்’ முதலான அரை டஜன் நகைச்சுவைப் படங்கள் டெக்கானியில் வெளியாகின. ஆனாலும், ‘தி அங்கிரேஸ்’ அளவிற்கு அவை ஒன்றுகூட அழகியல் ரீதியில் விளைவுகளை ஏற்படுத்தவில்லை. ’தி அங்கிரே’ஸில் இருந்த இயல்பான நகைச்சுவை பிற படங்களில் செயற்கை வாடையுடன் இருந்தன. எனினும் பழைய நகரவாசிகள் மத்தியில் அவை பிரபலமடைந்தன. இணையத்தாலும் அசல் மற்றும் போலி டிவிடிக்களாலும் அவை ஆந்திரா மற்றும் பிற இந்தியப் பகுதிகளையும் தாண்டி மத்திய கிழக்கு நாடுகளிலும் அமெரிக்காவிலும் பிரபலமடைந்தன. இதனால் போலி டிவிடிக்களின் வேட்டையும் லட்சக்கணக்கில் பறிமுதலும் நடந்தது.

(அடுத்ததாக சந்தாலியின் மௌனம் கலையும்...)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in