மௌனம் கலைத்த சினிமா - 21: ஆலாயாரன் (போடோ மொழி)

மௌனம் கலைத்த சினிமா - 21: ஆலாயாரன் (போடோ மொழி)

சீன - திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த போடோ வடகிழக்கு வங்காளம், நேபாளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் போடோ இன மக்களால் பேசப்படும் மொழியாகும். அசாம் மாநில ஆட்சி மொழிகளுள் போடோவும் ஒன்று. போடோ - கச்சாரி என்ற இனக்குழுவின் 18 பிரிவுகளில் ஒன்றுதான் போடோ இனம். இந்த வகைப்படுத்துதல் 19-ம் நூற்றாண்டில்தான் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்டது. இவர்களை போரோக்கள் என்றும் அழைப்பர்.

போரோ மதங்கள் பண்பாடு உணவு

பழங்குடி இனமான போடோ இன மக்கள் முன்னொரு காலத்தில் தங்களின் முன்னோர்களை வழிபடும் முறையான பாத்துயிசத்தைக் கடைப்பிடித்து வந்தார்கள். போரோ பிரம்ம தர்மம், சைவ சமயம் போன்றவையும் பின்பற்றப்படுகின்றன. பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சமயமும் சிறிதளவு பரவியுள்ளது. தற்போது இந்து மத நம்பிக்கைகள், சடங்குமுறைகளும் அவர்களிடையே பரவியுள்ளன. பிரம்ம தர்மம், கிறிஸ்தவம் போன்றவற்றின் தாக்கங்களால் அவர்களின் பாரம்பரிய உடையலங்காரங்கள் போன்றவற்றில் பெரிய மாற்றங்கள் வந்துவிட்டன.

அவர்களின் பாரம்பரிய நடனம் பாகுரும்பா. 18 வகையான கெராய் நடனங்களும் உண்டு. காம், சிபுங், செர்ஜா, ஜோதா, ஜப்ஸ்ரிங், கவாங், பிங்கி, ரீஜ் ஆகிய இசைக்கருவிகளை அவர்கள் பயன்படுத்துகின்றார்கள். அரிசி, மீன் மற்றும் பன்றி இறைச்சி அவர்களின் முக்கிய உணவாகும். ஆரம்பத்தில் ரோமன் அசாம் வரிவடிவங்களில் எழுதப்பட்டுவந்த போடோ மொழி 1963-க்குப் பிறகு தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்பட்டு வருகிறது.

போடோலாந்து என்பது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த அசாமில் அமைந்துள்ள சுயாட்சிப் பகுதியாகும். பிரம்மபுத்திரா நதிக்கரையில் பூட்டானையும் அருணாசல பிரதேசத்தையும் எல்லைகளாகக் கொண்டது இந்த போடோலாந்து. போடோ தன்னாட்சிப் பகுதியில் கோக்ராஜார் மாவட்டம், சிராங் மாவட்டம், பாக்சா மாவட்டம் மற்றும் உதல்குரி மாவட்டம் என நான்கு மாவட்டங்கள் உள்ளன. விவசாயமும் நெசவுத் தொழிலும் இந்த மக்களின் பாரம்பரியத் தொழில்களாகும்.

போடோ தனித்த தேசிய இனமாக வாழ்ந்துவந்தாலும் அசாமின் பகுதியாகக் கருதப்பட்டதால் இனரீதியிலான ஒதுக்குதலும் அதனை எதிர்த்த கலகங்களும் வழமையாகின. பிரிட்டிஷ் அரசு பிரித்தாளும் சூழ்ச்சியினால் இந்த மக்களை ஒடுக்கியது. இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து தொலைவிலிருப்பதால் தொடர்பற்ற நிலை இருந்தது. அதனால் கல்வி, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நிலை நீடித்தது. பிரிவினை எண்ணம் வளர்த்த நெருக்கடிகள் விடுதலைக்குப் பின்னர் பழங்குடி மக்கள் எனும் வகையில் பெறப்பட்ட மிகச்சில சலுகைகளால் சிறிது முன்னேற்றம் கண்டனர் போடோ இன மக்கள். எண்ணெய் மற்றும் இயற்கை வாயு உற்பத்தியில் வளம்மிக்க அசாம் பகுதி கடும் சுரண்டலையும் சந்திக்கும் நிலை. தங்கள் நிலங்கள் அசாமிய நிலப் பிரபுக்களாலும் புதிய குடியேற்றக்காரர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டதால் போடோ இன மக்கள் கடும் துன்பங்களுக்கு ஆளானார்கள்.

இதேபோன்ற காரணங்களால் மேகாலயா உருவானதுபோல தங்களுக்கான தனி மாநிலக் கோரிக்கையும் வலுவாக எழுந்தது. மாணவர்கள் போராடினார்கள். உபேந்திரநாத் பிரம்மா தலைமையில் இந்த உரிமைப் போராட்டங்கள் நடந்ததால் அவரை போடோ இனத்தின் தந்தை என்று அழைக்கிறார்கள். பல்வேறு திருப்பங்களோடு இப்போராட்டம் சில தீர்வுகளோடு முடிவுக்கு வந்தது. அதில் முக்கியமானதுதான் தன்னாட்சிப் பிரதேசம். போடோவின் தன்னாட்சி அமைப்பிற்கு இப்படியான ஒரு நீண்ட வரலாறு உண்டு. அசாமின் ஒரு பகுதியான இங்கு சீரற்ற வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள், தனி மாநிலம் கோரிப் போராடினார்கள். அது நீண்டகாலம் தொடர்ந்தது.

தன்னாட்சி பெற்ற போடோலாந்து தன்னாட்சி பெற்ற போடோலாந்தில் பிராந்திய கவுன்சில் எனும் தனி நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு அதன் கைகளில் சில சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அதன்படி இந்திய அரசோ அல்லது அசாம் அரசோ போடக்கூடிய எந்த உத்தரவும் இந்தக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டால்தான் ஏற்கப்படும். அதனை நிராகரிக்கவும் இந்தக் குழுவுக்கு அதிகாரம் படைத்துள்ளது. இருந்தாலும் பல்வேறு குளறுபடிகளால் பிரச்சினைகள் அங்கே முற்றுமுழுதாகத் தீர்ந்தபாடில்லை.

முதல் போடோ சினிமா

பாரம்பரியமிக்க போடோ பழங்குடி மக்களின் கலை மற்றும் பண்பாட்டுக் கூறுகள் தனித்துவமானவை. அவற்றின் வளமையும் செழுமையும் இன்றளவும் பேணப்படுபவை. இதன் தொடர்ச்சியாகத்தான் அறிவியலின் குழந்தையாய் உருவான சினிமா அந்த மொழியையும் தழுவிக்கொண்டது.

போடோ மொழியில் வெளிவந்த முதல் திரைப்படம் 'ஆலாயாரன்'. அதன் பொருள் விடியல் என்பதாகும். அது 1986 மார்ச் 13-ல் வெளியானது. போடோலாந்தின் கோக்ராஜார் எனும் நகரத்தில் கங்கா டாக்கீஸில் அது முதன்முதலாகத் திரையிடப்பட்டது. படத்தை இயக்கியவர் ஜுவங்டாவோ பொடோசா. நீல்கமல் பிரம்மாவும் ஹிரம்பா நர்சாரியும் திரைக்கதையை எழுதினார்கள். பிரம்மா எழுதி 1985- ல் சிரினை மந்தரில் வெளியாகிய சிறுகதையான ‘மிவ்துவி ஆரவ் குவல்விம்துவி’யைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

இப்படத்தில் அமர் நர்சாரியும் ரோஹிலா பிரம்மாவும் முக்கிய பாத்திரங்களில் நடித்தார்கள். படத்தின் பாடல்களை எழுதி அவற்றிற்கு இசையையும் வழங்கினார் மாஹினி நர்சாரி. சுலேகா பாசுமாதரி மற்றும் அருண் நர்சாரி ஆகியோர் பாடல்களைப் பாடினார்கள்.

1986-ம் ஆண்டில் நடந்த 33-வது தேசிய திரைப்பட விருது விழாவில், போடோ மொழியின் சிறந்த படம் எனும் விருது இப்படத்துக்குக் கிடைத்தது. ‘ஆலாயாரன்’ வெளியாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே 1984-ல் போடோ மொழியில் அமர் ஹசாரிகா இயக்கத்தில் ‘தாயனா’ என்ற படம் வெளிவந்தது. ஆனால் அது ஒரு ஆவணப் படம். போடோ ஃபிலிம் சொசைட்டி தயாரிப்பில் உருவானதுதான் இந்தப் படம். அதன் பின்னர் 1985-ல் ‘ஜாரிமின்னி கோங்கோர்’ என்ற குறும்படமும் வெளிவந்தது. எனவே இவை இரண்டும் முழுநீளத் திரைப்படமாகக் கணக்கில் கொள்ளப்படவில்லை.

அவலங்களும் நம்பிக்கையும்

போடோ சினிமாக்கள் ஆரம்பத்திலிருந்தே அந்த மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தன. தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால், போடோ திரைப்படங்கள் வெகுமக்களின் ரசனைக்கேற்ப பொழுதுபோக்கு நுகர்வுக்காக உருவாக்கப்பட்டவையாகத்தான் இருந்தன. போடோ மக்கள் வசிக்கும் நான்கு பகுதிகளில் மட்டுமே அந்த மொழிப்படங்களுக்கான திரையரங்குகள் இருந்தன. மற்ற நகரங்களில் பார்வையாளர்கள் இல்லாததால் போடோ மொழித் திரைப்படங்களை அங்கு திரையிட இயலவில்லை. ஆனாலும், சந்தையின் அளவுக் குறைவு அவர்களின் திரைப்படத் தயாரிப்பைக் குறைத்துவிடவில்லை. போடோ மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு அந்தப் படங்கள் எடுத்துச்செல்லப்பட்டுத் திரையிடப்பட்டன. திருவிழாக்கள், பணக்காரர்களின் வீட்டு விசேஷங்கள் போன்றவையும் போடோ சினிமாக்களின் சந்தைகளாயின.

இப்படியாக போடோ மக்களின் கலாச்சார அடையாளங்களில் பிரதானமான ஒன்றாகவே சினிமா ஆகிப்போனது. தொழில்நுட்பப் பற்றாக்குறை, ஆய்வக வசதிகளின்மை, ஒலி, ஒளிப்பதிவுக்கூடங்களுக்கு அசாமிலிருந்து புணே, கொல்கத்தா என்று வெகுதூரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை போன்றவற்றால் சிரமங்களுக்கு உள்ளாகியது போடோ திரைப்படத் துறை. போடோ சினிமாவைப் பிற பகுதிகளில் சந்தைப்படுத்த விளம்பர ஏஜென்சிக்கள் இல்லாத குறையும் இருந்தது.

இவை அனைத்தையும் கடந்து இன்று சமூக உணர்வுமிக்க சினிமாக்களை அங்கே உருவாக்குவது அதிகரித்திருக்கிறது. அது புரட்சிகரமான படங்களைத் தயாரிப்பதுவரை சென்றிருக்கிறது. மறுபுறம் போடோ சினிமா மேம்படவில்லை என்கிற விமர்சனங்களும் உண்டு. இவற்றையெல்லாம் உள்வாங்கியபடி உலகின் எந்தவொரு பகுதியின் திரைப்படத் துறை போலவே போடோ சினிமா உலகமும் நம்பிக்கையோடு தன் பயணத்தின் தடத்தைப் பதித்து வருகிறது.

(டெக்கானியின் மௌனம் அடுத்து கலையும்...)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in