மௌனம் கலைத்த சினிமா- 20: என்ன தங்காடி (துளு)

மௌனம் கலைத்த சினிமா- 20: என்ன தங்காடி (துளு)

திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பெரிய மொழிகளில், பேசுவோரின் எண்ணிக்கை அடிப்படையில் ஐந்தாவதாக உள்ள மொழி துளு. இதைத் துளுவம் என்றும் அழைப்பார்கள். கர்நாடகத்தின் தெற்குப் பகுதியான தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் கேரளத்தின் காசர்கோடு மாவட்டங்களில் துளு பேசுவோர் அதிகம் வசிக்கிறார்கள். துளு கலாச்சாரம் நிலவும் இந்தப் பகுதி துளு நாடு என்று அழைக்கப்படுகிறது. தனக்கென தனி மாநிலத்தைக் கொண்டிராத மொழிகளுள் துளுவும் ஒன்று.

துளு மொழி வரலாறு

முன்னொரு காலத்தில் கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தின் சந்திரகிரி ஆற்றின் மேற்கிலிருந்து கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னட மாவட்டத்தின் கோகர்ணா வரை பேசப்பட்ட மொழி துளு இருந்தது. தற்போது துளு பேசுகிற மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளார்கள். மேற்கு ஆசியாவில் செறிவான அளவுக்கு இம்மக்கள் வாழ்கிறார்கள். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சுமார் 18.46 லட்சம் பேர் துளு பேசுபவர்கள் எனத் தெரிகிறது.

துளுவுக்கு நீண்டகாலமாக எழுத்துரு இல்லை. அந்தக் குறையைப் போக்க அசப்பில் மலையாளத்தையொத்த பிராமி லிபியான திலகரி எழுத்துரு உருவாக்கப்பட்டது. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாபாரதம் துளுவில் கிடைத்த பழைய இலக்கியமாகும். மேலும் ‘தேவி மஹாத்மே’ எனும் நூலும் கிடைத்துள்ளது. 17-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ஸ்ரீபாகவதம்’, ‘காவேரி’ ஆகிய துளு நூல்களும் கிடைத்துள்ளன. பின்னாளில் வந்த ஜெர்மானிய மிஷினரிகள் துளு நூல்களை அச்சிட முயன்றபோது திலகரிக்கு பதிலாக கன்னட எழுத்துருக்களைப் பயன்படுத்தினார்கள். அதன் பின்னர் அதுவே வழக்கமானது. எனவே தற்போதுவரையிலும் கன்னட மொழியின் வரிவடிவமே துளுவுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

துளு மொழி தோன்றியது பற்றிய கதை ஒன்று உண்டு. அதன்படி கேரள மன்னனான சேரமான் பெருமாள் தனது ஆதிக்கத்தின் வடபகுதியில் தனது குடியிருப்பை அமைத்துக்கொண்டார். அந்தப் பகுதி மக்களால் அவர் துளுபன் பெருமாள் என்று அழைக்கப்பட்டார். அதனால் அந்தப் பகுதி துளுநாடு என்றானது என்கிறது அந்தக் கர்ண பரம்பரைக் கதை. துளு மொழியும் தொன்மையானது என்கின்றனர் மொழியியல் அறிஞர்கள் சிலர். அதன் தொன்மையை அவர்கள் 2 ஆயிரம் ஆண்டுகள் எனக் குறிக்கின்றனர். இருப்பினும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த கால்டுவெல் அடையாளம் காட்டிய பிறகே துளுவின்மீதான உலகின் கவனம் மேம்பட்டது.. துளு மக்களின் கலை மற்றும் பண்பாட்டு வளமையும் நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்தபோதிலும் அம்மொழியில் திரைப்பட முயற்சி என்பது மிகத் தாமதமாகவே தொடங்கியது.

கோஸ்டல்வுட்

கன்னடத் திரையுலகுடன் நெருங்கிய தொடர்புள்ள துளு சினிமா 1970-களில்தான் தனது பயணத்தைத் தொடங்கியது. துளு சினிமாவுக்கு மிகவும் சின்னஞ்சிறிய சந்தை மட்டுமே உள்ளதால் ஆண்டுக்கு 5 முதல் 7 திரைப்படங்களைத் தயாரிக்கிற கைக்கு அடக்கமான ஒரு திரையுலகம்தான் அது. அதனை கோஸ்டல்வுட் என்று செல்லமாக அழைப்பார்கள்.

முதல் துளு சினிமா

1971 துளுவின் முதல் திரைப்படம் வெளியானது. அதன் பெயர் ‘என்ன தங்கடி’. என் தங்கை என்பது அதன் பொருள். மங்களூர் சித்ரபாரதியின் டி.ஏ. ஸ்ரீநிவாஸ் என்பவரின் நிதிப் பங்களிப்பில் உருவான படம் இது. 35 ஆயிரம் ருபாயை அவர் முதலீடாகத் தந்தார். எஸ்.ஆர். ராஜன் தயாரித்து இயக்கினார். ஆனந்த் சேகர் என்பவர் நாயகன். ஹேமலதா நாயகி. லோகய்யா ஷெட்டி, கவிதா, திலீப் போன்றோரும் நடித்தார்கள். 1970-ல் தயாரிப்பு தொடங்கி, 1971 பிப்ரவரி மாதம் 19-ம் தேதி படம் வெளியானது. மங்களூர் ஜோதி டாக்கீஸில் படம் திரையிடப்பட்டது. இரண்டு வாரங்கள் ஓடிய இந்தப் படம் வெற்றி பெறவில்லை. 35 ஆயிரம் முதலீட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 20 ஆயிரத்தை மட்டுமே வசூலித்துத் தந்தது.

ஐம்பதாவது துளு திரைப்படமும் இனவரைவியல் சினிமாவும்

துளு சினிமா தனது குறுகிய சந்தைப் பரப்பால் அது தொடங்கப்பட்டு 45 ஆண்டுகளில் 60 படங்களைத் தயாரித்து வெளியிட்டிருந்தது. இது சிறிய பிராந்தியப் படஉலகங்களில் குறிப்பிடத்தக்க சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. 2014 மே மாதம் 2-ல் வெளியான ‘பிரம்மஸ்ரீ நாராயண குருசுவாமி’ துளு மொழியின் 50 வது திரைப்படம். துளு சினிமாவின் வழியே துளுவ மக்களின் மானுடவியல் அம்சங்களை ஆய்வறிஞர்கள் கண்ணுறுகின்றார்கள்.

2011-ல் வெளியான ‘காஞ்சில்டா பலே’ என்ற துளு சினிமாவில் உள்ள இனவியல் அம்சங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் ஒரு திரைப்படம் எவ்வளவு நெருக்கமாக இனவரைவியலின் மிக உயர்ந்த தரங்களையும் இலக்குகளையும் அணுகும் என்பதைக் கண்டறிவதே ஆகும். பகுப்பாய்வின் மூலமாக இந்தப் படத்தின் தரமான உள்ளடக்கத்தின் முதன்மைத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இரண்டாம் நிலைத் தரவுகள் ஆய்வு நூல்கள், இணையம் வழி சேகரிக்கப்பட்டன.

நூறாவது துளு சினிமா

துளு மொழியில் வெளிவந்த நூறாவது படம் ‘கர்ணே’. துளுவில் சினிமா முதன்முதலில் வெளிவந்து 47 ஆண்டுகளில் இந்தச் சாதனை நடந்தது. 45 ஆண்டுகளில் 60 படங்கள். அடுத்த இரண்டே ஆண்டுகள் 40 திரைப்படங்கள். எவ்வளவு பாய்ச்சல் வேகம். ‘கர்ணே’ படத்தை ரட்சித் எஸ். கோட்டியன் மற்றும் ரட்சித் எச். சாலியன் ஆகியோர் தயாரித்தார்கள். இயக்கம் சாட்சாத் மல்பே.

‘ஒரியர்தோரி அசல்’ என்ற படம் 2011 மே 27-ல் வெளிவந்து 175 நாட்கள் ஓடிய முதல் துளு சினிமா என்ற சாதனை படைத்தது. விஜயகுமார் கொடியல்பை எழுதிய நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் அது. எச்.எஸ். ராஜசேகர் மற்றும் ரூபா விஜய் இயக்கத்தில் உருவான அந்தப் படம் துளு சினிமா உலகத்திற்கே புத்துயிரளித்தது. அதன்பின் 2012-ல் நான்கு திரைப்படங்கள். 2013 ஒரேயொரு திரைப்படம். ஆனால், 2014-ல் ஏழு திரைப்படங்கள் என துளு சினிமா தன் ஓட்டத்தைக் குறைத்தும் கூட்டியும் இடைவிடாது பயணித்துக்கொண்டே இருந்தது.

எதிர்கால துளு சினிமா

துளு சினிமாவின் தயாரிப்பாளர்கள் சந்தைப்படுத்தும் நுட்பங்களில் கவனம் செலுத்தத் தவறிவிட்டார்கள் என்கிறார் கலை இயக்குநர் தம்மா லட்சுமணா. லாபம் சம்பாதிக்காத நிலையில் முதலீடுகள் வருவதில் தடையிருந்ததும் இயல்பே. இந்த ‘ஒரியர்தோரி அசல்’ படத்தின் மெகா வெற்றிக்குப் பின்னர் துளு சினிமா நம்பிக்கை பெற்றாலும் நகைச்சுவைத் தோரணங்களாக துளு சினிமா மாறிப்போனதைக் குறித்து தம்மா வருத்தமடைகிறார்.

அந்த மொழியின் முதல் சினிமா என்ன தங்காடி வெளிவந்து 50 ஆண்டுகளைக் கடந்த நிலையில் எதிர்காலத்தில் தரமான உள்ளடக்கங்களோடு துளு சினிமா மிளிர வேண்டும் என்பதே பலரின் விருப்பமாகவும் உள்ளது.

(போடோ மொழியின் மௌனம் அடுத்து கலையும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in