மௌனம் கலைத்த சினிமா - 19: ஏக்தா (சிந்தி மொழி)

மௌனம் கலைத்த சினிமா - 19: ஏக்தா (சிந்தி மொழி)

பாகிஸ்தானில் பேசப்படும் ஒரு மொழி சிந்தி. அது இந்தியாவின் அலுவல் மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. பாகிஸ்தானில் வாழும் சுமார் 2.3 கோடி பேர் பேசுகிற சிந்தி, ஒரு இந்தோ - ஆரிய மொழியாகும். அம்மொழி பேசுகிற மக்கள் பெரும்பாலும் பாகிஸ்தானின் தென்கிழக்கு மாகாணமான சிந்து பகுதியில் வாழ்கிறவர்கள். மேலும் பலூசிஸ்தானின் லாஸ்பேலா மாவட்டத்தை ஒட்டியும் இம்மொழி பேசப்படுகிறது.

1947 - 48-ல் தேசப் பிரிவினையின்போது புலம்பெயர்ந்த சிந்தி மக்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் குடியேறினார்கள். வடஅமெரிக்கா, பிரிட்டன், மத்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் சிறிய குழுக்களாக இம்மொழி பேசுவோர் வாழ்கிறார்கள்.

தனித்துவமான சிந்தி - அரபு எழுத்துமுறை

சிந்தி பேசுவோரில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் உண்டு. இந்து வணிக சமூகங்கள் சிந்தியைப் பல்வேறு வரிவடிவங்களைப் பயன்படுத்தி எழுதின. இப்போது அவை வழக்கொழிந்து போயின. முஸ்லிம்கள் சிந்தியின் சில ஒலிகளுக்கேற்ப தேவையான ஏற்பாடுகளுடன் அரபி எழுத்துக்களையே விரும்பிப் பயன்படுத்துகிறார்கள். தற்போது பொதுப் பயன்பாட்டிலுள்ளது தரப்படுத்தப்பட்ட சிந்தி அரபு எழுத்துமுறைகளே. 1800-களின் மத்திய காலத்தில் பிரிட்டிஷ் காலனிய அதிகாரிகளால் இம்மொழி தரப்படுத்தப்பட்டது.

தேவநாகரியில் சிந்தியை எழுத இந்தியாவில் ஊக்கப்படுத்தப்பட்டபோதிலும் சிந்தி - அராபிய எழுத்துமுறையே அவர்களுக்குப் பெருமைக்குரியதாக ஆகிப்போனது. மேலும் அது தனித்துவமான எழுதுமுறையாகத் தோற்றமளித்து அவர்களைப் பெருமிதம்கொள்ளவும் செய்வதாக உள்ளது. எனவே இந்த முறையே பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

குர்ஆனைப் பதிவுசெய்த கிழக்கின் முதல் மொழி

பாகிஸ்தானின் முக்கிய மொழிகளில் ஒன்றான சிந்தி வளமான கலாச்சாரமும் நாட்டுப்புறவியல் மற்றும் இலக்கியம் ஆகியவற்றை விரிவாகக் கொண்ட மொழியாகும்.

அரபு வரலாற்றாசிரியர்களின் குறிப்புகளில் சிந்தி இலக்கியங்களின் ஆரம்ப காலம் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. கிழக்கில் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்ட முதல் மொழி எனும் பெருமையையும் சிந்தி பெற்றிருக்கிறது. சிந்தி மொழிக் கவிஞர்கள் பாக்தாதில் அரபு கலீஃபாக்களுக்கு முன்னால் தங்களின் வசனங்களை ஓதியதற்கான சான்றுகள் உண்டு. எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் வானியல், மருத்துவம், வரலாறு போன்ற துறைகளில் சிந்தி மொழியில் பதிவுகள் எழுதப்பட்டுள்ளனவாம்.

பிர் நூர்தீனின் சிந்தி மொழி சூஃபிசக் கவிதைகள், ஜினான்ஸ் என்றழைக்கப்படும் அவரது வசனங்கள் சிந்திக் கவிதைகளின் முன்மாதிரியாக விளங்கின. இசைத் துறையும் அங்கே செழித்தது. ஆங்கிலக் கல்வியால் ஆங்கில நூல்களும் செய்தித்தாள்களும் எளிதில் புழங்கத் தொடங்கின. ஆங்கில நூல்கள் ஏராளமாக சிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன.

சிந்தியின் திரைத் துறைக் கால்பதிப்பு

இப்படியானதொரு வளமையான பண்பாட்டு, கலை - இலக்கியச் சூழலின் பின்புலத்தோடுதான் அங்கே திரைத் துறையும் உருவாகிச் செழித்தது.

1942-ல் ஹோமி வாடியா இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ஏக்தா’. பம்பாயிலிருந்த வாடியா ஸ்டூடியோவில் உருவானது படம் இது. கரீம் பக்ஸ் நிஜாமானி என்பவரின் நிதியுதவியில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டது. கருப்பு - வெள்ளையில் உருவான இப்படத்தில் நிஜாமானி மற்றும் கௌசல்யா முக்கிய வேடங்களில் நடித்தார்கள்.

சிந்து பகுதியின் மாட்லியில் நிலவுடைமையாளராக இருந்த நிஜாமானி ஒரு சிறந்த எழுத்தாளர், சமூக சேவகர். அவர் எழுதிய ‘கயீ’ நூல், சிந்தி மொழியில் வெளியான சிறந்த தன்வரலாற்று நூல்களில் ஒன்று.

ஹோமி வாடியா எனும் முன்னோடி

அந்நாளைய இந்தித் திரையுலகின் பிரபல இயக்குநர் ஜே.பி.எச்.வாடியாவின் தம்பி தான் ஹோமி வாடியா. பார்சி இனத்தைச் சேர்ந்த வாடியாவின் முன்னோர்கள் குஜராத்தின் சூரத்தில் வாழ்ந்தார்கள்.

ஹோமி வாடியா
ஹோமி வாடியா

18-ம் நூற்றாண்டிலேயே பம்பாய்க்குப் புலம்பெயர்ந்தது அவர்களின் குடும்பம். அவர்களின் பரம்பரைத் தொழிலாகக் கப்பல் கட்டும் தொழில் இருந்துவந்தது. 1817-ல் பிரிட்டிஷ் போர்க்கப்பலான எச்.எம்.எஸ். திரிகோணமலையைக் கட்டியது இந்த வாடியா குடும்பத்தினர்தான். முதலில் ஹோமி வாடியா தனது அண்ணன் ஜே.பி.எச்.வாடியாவுக்கு உதவியாளராகத் திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அவருடனும் திரைப்பட விநியோகஸ்தர் மன்செர்ஷா பி.பில்லிமோரியா, பர்ஜோர் ஆகியோருடன் இணைந்து வாடியா மூவிடோன் எனும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார்கள். அது சிறிது காலத்தில் அவர் கையைவிட்டுச் சென்றபின் பசந்த் பிக்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஃபியர்லஸ் நாடியா
ஃபியர்லஸ் நாடியா

ஆஸ்திரேலியாவில் பிறந்து இந்தித் திரைப்படத்தில் பிரபலமான ஸ்டன்ட் நடிகை ஃபியர்லஸ் நாடியாவை மணந்தார். மிகச் சிறந்த இயக்குநராகவும் படத் தயாரிப்பாளராகவும் பெயர் பெற்ற ஹோமி வாடியா இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிறுவன உறுப்பினராகவும் செயல்பட்டார். 1981-ல் தொழில் தகராறு காரணமாகத் திரைப்படத் துறையைவிட்டே வெளியேறினார் ஹோமி வாடியா.

சமூக நல்லிணக்கம் பேசிய ‘ஏக்தா’

‘ஏக்தா’ படத்தின் நாயகி கௌசல்யா உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர். சிறந்த நடனக் கலைஞர், பின்னணிப் பாடகி, நடிகை எனப் பன்முகம் கொண்டவர் அவர் தந்தையார் லச்சு மகராஜ் ஒரு தேர்ந்த நடனக் கலைஞர். அவரே கௌசல்யாவுக்கு கதக் கற்றுத்தந்த ஆசிரியர்.

நாயகன் கரீம் பக்ஸ் நிஜாமானியின் நிதிப் பங்களிப்போடும், நடிப்போடும், ராம் பஞ்வானி தயாரித்து வெளிவந்த ‘ஏக்தா’ இந்து - முஸ்லிம் ஒற்றுமையைச் சொன்ன படம். ‘ஏக்தா’ என்றால் ஒற்றுமை என்று அர்த்தம். அந்த வகையில் சிந்தியின் முதல் சினிமாவே சமூக நல்லிணக்கத்தைப் பேசியிருக்கிறது. இந்தப் படத்தின் கதை - வசனத்தை சிந்தியின் புகழ்மிக்க எழுத்தாளர் ஆகா அப்துல் நபி சூஃபி எழுதினார். பிரபல கவிஞர் கியால்தாஸ் ஃபானி படத்தின் பாடல்களை எழுதியிருந்தார். கௌசல்யாவும் குல்ஷன் சூஃபியும் பாடல்களைப் பாடியிருந்தார்கள்.

சிந்துவின் அப்போதைய பிரீமியர் அல்லா பக்ஸ் சூம்ரோவினால் திறந்துவைக்கப்பட்ட கராச்சியின் தாஜ்மஹால் திரையரங்கில் ‘ஏக்தா’ வெளியானது. நிறைந்த பொருளாதார வர்த்தகக் கட்டுப்பாடுகளின் காரணமாக இரண்டு வாரங்களே ஓடிய இப்படம், அதனை ஆசையோடு உருவாக்கியவர்களுக்கு நஷ்டத்தையே பரிசளித்தது. இருந்தபோதிலும் சிந்தியின் திரைத் துறை முயற்சிகள் தொடரத்தான் செய்தன. 1956-ல் ஷேக் ஹாசன் இயக்கிய ‘உமர் மார்வி’ படம் வெளியானது. அதுதான் பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட முதல் சிந்தி திரைப்படம்.

1958-ல் வெளியான ‘அபானா’ படம்தான் சிந்தியின் வசூல் ரீதியில் வெற்றிபெற்ற முதல் திரைப்படம். 1990-கள் வரையில் ஆண்டிற்கு மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் சிந்தி மொழியில் வெளியாகிவந்தன. 1997-ல் வெளிவந்த ‘ஹிம்மத்’ திரைப்படத்திற்குப் பிறகு அங்கே திரையரங்குகளின் நிலைமை மோசமடைந்தது. நிதி நெருக்கடிகள் கடுமையாயின. மக்களின் ஆதரவில் வெளியாகும் இந்தியாவின் இந்தித் திரைப்படங்கள், பாகிஸ்தானின் உருதுப் படங்கள் ஆகியவற்றோடு போட்டியிட இயலவில்லை. தொலைக்காட்சிகளில் திரைப்படங்களை வெளியிடும் மாற்று முயற்சிகளும் பெரிதாக எடுபடவில்லை.

இருந்தாலும், 2010-க்குப் பிறகு சிந்தி திரைப்பட உலகின் மறுமலர்ச்சிக்கான பிரயத்தனங்களும் நடந்துவருகின்றன.

(துளு மொழியின் மௌனம் அடுத்து கலையும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in