மௌனம் கலைத்த சினிமா - 18: சத்ய ஹரிச்சந்திரா (நேபாளி மொழி)

மௌனம் கலைத்த சினிமா - 18: சத்ய ஹரிச்சந்திரா (நேபாளி மொழி)

நேபாளம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் எல்லை மற்றும் திபெத்திய கலாச்சாரங்களின் செறிவான பின்னல் ஆகும். அது ஏறக்குறைய 125 இனக்குழுக்களின் பலதரப்பட்ட பண்பாடுகளையும் கொண்டதாக உள்ளது. உலகின் கவனத்தைக் கவர்வதற்கான இரண்டு உன்னதமான காரணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது நேபாளம். ஒன்று உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரம். மற்றது, மானுடம் வியந்த கௌதம புத்தர் பிறந்த லும்பினி.

நடனக்கலை இமயமலையில்தான் தோன்றியது என்கின்றன இந்த நாட்டின் புராணக் கதைகள். சிவபெருமானின் தலம் என்று இமயத்தைத்தானே குறிப்பிடுகிறார்கள். அதன் அடிப்படையிலேயே இந்த நம்பிக்கைகள். சிவனே ருத்ரதாண்டவம் ஆடுபவர்தானே!

எது எப்படியோ நேபாளத்தின் நடனக்கலைக்கு ஒரு நீண்ட மரபிருப்பது மட்டும் நிஜம். அது பழமையானதும்கூட. அதேபோல அங்கேயுள்ள இசை மரபு. பயிர் அறுவடைக்காலம், திருமணச் சடங்குகள், போர்க் கதைகள், காதலுக்காக ஏங்கிக்கிடக்கும் பெண்ணின் தனிமை, இன்னும் கிராமப்புறத்தின் அன்றாட வாழ்க்கையில் வழமையான பலவகைப்பட்ட கருப்பொருள்களென இசையும் இசைக்கருவிகளும் பலவகைகளில் நேபாளத்தின் தனித்துவம் காட்டுவதாக உள்ளன.

நேபாளத்தில் 123 மொழிகள் பேசப்படுகின்றனவாம். மூன்று மொழியியல் பாரம்பரியங்கள் மொழிக் குழுக்களிலிருந்து அவை உருவாகியுள்ளன. இந்தோ - ஆரிய, திபெத்திய - பர்மிய மற்றும் பூர்வகுடிகள் ஆகியனவே அந்த மூன்றும். 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி அந்நாட்டின் மக்கள்தொகையில் நேபாளி மொழி 44.6 சதவீதத்தினராலும், மைதிலி மொழி 11.7 சதவீத மக்களாலும், போஜ்பூரி மொழி 6 சதவீதத்தினராலும் பேசப்படுகின்றன.

அத்துடன் தாரு, தமாங், மாகர், பஜ்ஜிகா, கிராத் - சுனுவார், லிம்பு, ராய், குருங் போன்ற மொழிகளும் கணிசமாகப் பேசப்படுகின்றன. அங்கே குசுண்டா, மாவலிங்கா, வாலிங் போன்ற மொழிகள் அழிந்துபோனவற்றுள் சில. தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்ட நேபாளி மொழியே அதிகாரபூர்வ தேசிய மொழியாகும். அந்நாட்டில் பிற மதத்தினர் வாழ்ந்தாலும் பெரும்பாலானோர் இந்துக்கள் (81.6 சதவீதம்).

இப்படியானதொரு பண்பாட்டு - மொழியியல் கட்டமைப்புகளைக் கொண்ட, பல்வேறு மொழி - இன - மதங்களின்
சங்கமமானதொரு பூமியான நேபாளத்தின் திரையுலகம் என்பதும் தனித்துவமானதாகவே உள்ளது. நேபாள சினிமாவை ‘நேபாளி சலசித்ர’ என்று அழைக்கிறார்கள். பல்வேறு மொழிகளில் இங்கே திரைப்படங்கள் உருவாக்கப்படுகிறபோதிலும் குறிப்பாக நேபாளி, மைதிலி, போஜ்புரி போன்ற மொழிகளிலேயே அதிகமான படங்கள் தயாரிக்கப்படுகின்றன. நேபாளி திரையுலகமும் ‘கோலிவுட்’ என்றே அழைக்கப்படுகிறது. அதே சமயம் மைதிலி மொழி திரையுலகத்தை ‘மிதிலாவுட்’ என்று அழைக்கிறார்கள்.

டி.பி.பரியாரின் ‘சத்ய ஹரிச்சந்திரா’ எனும் திரைப்படம்தான் நேபாளி மொழியில் படமாக்கப்பட்ட முதல் சினிமாவாகும். 1951 செப்டம்பர் 14 அன்று இந்தப் படம் வெளியிடப்பட்டது. இது படமாக்கப்பட்டது கொல்கத்தாவில்.

அரிச்சந்திர புராணம் என்பது இந்தியாவின் பழங்கதைகளில் ஒன்றுதானே. சினிமா நம் மண்ணுக்கு வந்து, அது பேசாமல் கொஞ்சகாலமும், பேசத்தொடங்கி இன்று வரையிலும் மக்களின் மனங்களை ஆள்கின்ற நிலையில் ஆரம்பகால முயற்சிகளில் இந்த அரிச்சந்திரனின் கதை தவிர்க்க இயலாத ஒன்றாகவே எல்லா மொழிகளிலும் இருந்திருக்கிறது. அத்தனை தாக்கத்தை ஏற்படுத்திய கதையல்லவா அது? அப்படித்தான் நேபாளி மொழியின் முதல் படமும் அரிச்சந்திரன் கதையைத் தன் பிள்ளையார் சுழியாகப் போட்டுக்கொண்டது.

‘சத்ய ஹரிச்சந்திரா’ நேபாளி மொழியின் முதல் திரைப்படம் என்றாலும் அது இந்தியாவின் கொல்கத்தாவில் உருவானது என்பதால் நேபாளத்திலேயே தயாரான முதல் படமாக ‘ஆமா’ திரைப்படமும் அங்கே நினைவுகூரப்படுகிறது. ‘ஆமா’ என்றால் அம்மா என்பது பொருள். அது ‘சத்ய ஹரிச்சந்திரா’ வெளியாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகே சாத்தியமாகியிருக்கிறது. 1964 அக்டோபர் 7-ல் ‘ஆமா’ வெளிவந்தது. நேபாள அரசாங்கத்தின் தகவல் துறையால் தயாரிக்கப்பட்டதுதான் இந்தப் படம்.

‘ஆமா’ திரைப்பட போஸ்டர்
‘ஆமா’ திரைப்பட போஸ்டர்

துர்கா ஸ்ரேஸ்தா, சைத்யா தேவி ஆகியோர் எழுதிய கதையை மையமாகக் கொண்டு ஹிரா சிங் கத்ரி இயக்கிய படம் இது.

அரசுத் துறையால் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தைத் தொடர்ந்து 1966 இறுதியில் சுமோனாஞ்சலி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் ‘மாய்தீகர்’ எனும் திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டது. அதுதான் நேபாளத்தின் தனியார் திரைப்பட நிறுவனமொன்றின் முதல் சினிமா முயற்சி.

இதுவொரு நேபாளத் திரைப்படம் என்றாலும் இந்தியர்கள் பலரும் அதன் உருவாக்கத்தில் பங்களித்துள்ளனர். இந்தி நடிகையான மாலா சின்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் சிதம்பர பிரசாத் லோஹானியுடன் நடித்தார். சிறப்புத் தோற்றத்தில் சுனில் தத், நகைச்சுவை நடிகர் ராஜேந்திரநாத் ஆகியோர் நடித்தார்கள். பாலிவுட் இசையமைப்பாளர் ஜெய்தேவ் இசையமைத்தார். மன்னா தே, லதா மங்கேஷ்கர், உஷா மங்கேஷ்கர் பாடல்களைப் பாடினார்கள். பி.எஸ்.தாபா இயக்கினார். இத்தனை இந்தியக் கலைஞர்களின் நல்லுதவிகளோடுதான் நேபாளத்தின் ஆரம்பகட்ட சுதேசி முயற்சிகள் ஊக்கம் பெற்றன. இப்படியான கவனிக்கத்தக்க விசயங்களையும் நேபாள சினிமா வரலாறு குறித்தே வைத்துள்ளது.

‘மன்கோ பாந்த்’ திரைப்பட போஸ்டர்
‘மன்கோ பாந்த்’ திரைப்பட போஸ்டர்

நேபாள அரசாங்கம் 1971-ல் நிறுவிய ராயல் ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்த முதல் திரைப்படம் ஜெய் ராணா இயக்கி, 1973 ல் காட்மாண்டுவில் திரையிடப்பட்ட ‘மன்கோ பாந்த்’. 1978-ல் ‘குமாரி’ எனும் திரைப்படம் வெளிவந்தது. இதுதான் நேபாள சினிமாவின் முதல் ஈஸ்ட்மேன் கலர் படம். 1980-களில் தனியார் திரைப்பட முயற்சிகள் வளரத் தொடங்கின. சாந்தி
தடால் நேபாள சினிமாவின் முதல் பெண் இசையமைப்பாளர் எனும் பெயரைப் பெற்றார். அது நேபாள சினிமாவின் பொற்காலம் என்று அறியப்படுகிறது.

1990-களில் மன்னராட்சிக்கு எதிராக மக்களின் எழுச்சி விளைவித்த அரசியல் மாற்றங்களால் நேபாள சினிமாவிலும் மாற்றங்கள் வந்தன. திறந்த, துடிப்புமிக்க சமூகமாக நேபாள சமூகம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. இதனால் நேபாள சினிமாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் வீக்கமும் உண்டாகின. சந்தையும் திரையரங்குகளும் கணிசமாக அதிகரித்தன. 1990-களின் நடுப்பகுதியில் அரசியல் நெருக்கடிகளால் அது கடுமையான வீழ்ச்சியைக் கண்டது. நேபாளத்தின் திரைக் கலைஞர்கள் பலரும் வெளிநாடுகளில் வேலை தேடி ஓடும் நிலையும் உண்டானது.

நவீன தொழில்நுட்பங்களோடும் சமூக உள்ளடக்கங்களோடும் இன்றைய நேபாள சினிமா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விடாது முயன்றுவருகிறது. அறிவியல் புனைவுகளும் நகைச்சுவையும் பிரதான பங்கு வகிக்கிற நேபாள சினிமாவின் இன்றைய யதார்த்தத்துக்கு முதன்முதலில் தூபமிட்டதென்னவோ நமது புராண அரிச்சந்திரன்தான் என்பதையும் அவர்கள் மறக்கவில்லை!

(சிந்தி மொழியின் மௌனம் அடுத்து கலையும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in