மௌனம் கலைத்த சினிமா - 17: மொகாச்சோ அவுன்தோ (கொங்கணி)

மௌனம் கலைத்த சினிமா - 17: மொகாச்சோ அவுன்தோ (கொங்கணி)


இந்தியாவின் தனித்துவமான ஒன்றியப் பிரதேசம் கோவா. கோவா, டையூ, டாமன் ஆகிய பகுதிகள் ஒரே ஒன்றியப் பிரதேச நிர்வாகத்தின்கீழ் வருவதற்கு அது போர்த்துக்கீசிய காலனியாக இருந்ததே அடிப்படைக் காரணம். பிரிட்டிஷ் கலாச்சாரத்திலிருந்து மாறுபட்டதாக இருந்தது போர்த்துக்கீசிய கலாச்சாரம். கிறித்துவ - ஐரோப்பிய ஒருமையின் கூறுகள் இருந்தபோதிலும் போர்த்துக்கீசியப் பண்பாடு பல அம்சங்களிலும் தனித்துவமானதுதான். அதன் கலை - இலக்கிய வளமையும் தனி அழகு பொருந்தியவை.

கொங்கணி: மொழி, பண்பாடு, கலை

கொங்கணி மொழி ஒரு இந்தோ- ஆரிய மொழியாகும். இது இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் கொங்கணி இன மக்களால் பேசப்படுகிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுள் ஒன்றும், கோவா மாநிலத்தின் அதிகாரபூர்வ மொழியுமாகும். தவிர கர்நாடகம், மகாராஷ்டிரம், கேரளம், குஜராத் மற்றும் தாத்ரா நாகர்ஹவேலி, டையூ, டாமன் ஆகிய பகுதிகளிலும் கொங்கணி சிறுபான்மை மொழியாக உள்ளது. இம்மொழியில் கிடைத்துள்ள முதல் கல்வெட்டு கி.பி. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். கடலோர மகாராஷ்டிரத்தின் மால்வணி, சித்பவானி, கிழக்கிந்தியாவின் கோலி, ஆக்ரி போன்ற பேச்சுவழக்குகளும், பிற இந்திய மொழிகளும் கொங்கணி மொழிக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

2013-ல் மங்களூருவில் நடந்த கொங்கணி மொழி பற்றிய விமரிசனம் மற்றும் வரலாற்று ஆய்வு நூலான ‘கேல் ராஜன்வ்’ எனும் புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய பிரபல இலக்கியவாதி நா டிசோசா கூறிய கருத்து கவனிக்கத்தக்கது. கொங்கணியைப் போல வேறு எந்த பிராந்திய மொழியும் தனது இருப்புக்காகக் கடுமையாகப் போராடவில்லை என்றார் அவர். அந்தளவுக்கு அந்த மொழி நெருக்கடிகளுக்குள்ளாகி இருக்கிறது. கொங்கணி கலாச்சாரமும் போர்த்துக்கீசியம் போன்ற அந்நியப் படையெடுப்புகளால் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, தியாத்ரா எனும் கோவாவில் தோன்றிய கலை ஒரு நாடகக் கலை வடிவமாகும். வளமானதாக அது திகழ்ந்தபோதிலும் அது காலப்போக்கில் தனது அங்கீகாரத்தை இழந்துவிட்டது.

இதுபோன்ற பல கலை வடிவங்கள் இன்று அழியும் நிலையிலுள்ளன என்கிறார் நா டிசோசா. ஒரு காலத்தில் இலக்கிய வளமை மிக்க மொழியாகக் கொங்கணி இருந்ததை அவர் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார். “நாட்டுப்புற வரலாறு பற்றிய ஆய்வு என்பதாக மட்டுமல்லாமல் இலக்கியம் என்பது சமூக சேவைக்கான ஊடகமாகவும் விளங்க வேண்டும்” என்கிறார் ‘கேல் ராஜன்வ்’ நூலாசிரியர் பால் மோராஸ்.

கோவா அளித்த கொடை

2000 முதல் சர்வதேச சினிமாக்களைக் காண நாடெங்கிலும் இருந்து திரைப்பட ஆர்வலர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கோவாவிற்குப் படையெடுப்பது வாடிக்கையாகியிருக்கிறது. கொங்கணியைத் தாய்மொழியாகக் கொண்ட கோவா மக்களின் கலை மற்றும் பாண்பாட்டில் போர்த்துக்கீசியத் தாக்கம் ஊடுருவியதன் மூலமாக உருவான புதியதொரு கலவையைப் பிரதிபலிப்பதாகவும் கொங்கணி சினிமா இருக்கிறது. கொங்கணி கலையுலகம் அதன் சொந்த மண்ணின் கலைப் பங்களிப்புகளைத் தாண்டி இந்திய அளவிலான கலையுலகங்களுக்கும் விரிவாகக் கொடையளித்திருக்கிறது என்பதைக் கேட்க வியப்பாக இருக்கிறதா? அதையெல்லாமும் சேர்த்தே இங்கு பார்ப்போம்.

கோவாவின் கலை - தொழில்நுட்ப ஆர்வலர்கள் ஆரம்ப நாட்களில் மும்பையின் சினிமா ஸ்டூடியோக்களில் வேலை தேடிச் சென்றார்கள். இப்படிச் சென்றவர்களில் எண்ணற்றோர் அந்தத் திரைப்பட உலகிற்கு மிகப்பெரிய பங்களிப்புகளை வழங்கினார்கள். பேசாப்பட யுகத்தில் இந்திய சினிமாவில் கோவாவைச் சேர்ந்த எர்மிலீன் கார்டோஸ் என்ற நடிகையொருவர் அன்றைய பம்பாயிலும் கல்கத்தாவிலும் பத்திற்கும் மேற்பட்ட மௌனப் படங்களில் நாயகியாக நடித்தார். அழகிய தோற்றம் கொண்ட அவருக்கு ரசிகர்கள் உருவாகினர். தனது நடுத்தர வயதுவரையில் அவர் திரையுலகில் கோலோச்சினார்.

இப்படி ஏராளமான தொழில்நுட்ப வல்லுநர்களையும் உதவியாளர்களையும் மும்பை, கல்கத்தா, சென்னை, பெங்களுர் போன்ற நகரங்களுக்கு அந்தந்தப் பிரதேச சினிமாக்களில் பணியாற்ற அனுப்பிக்கொண்டேயிருந்தது கோவா. புகழ்பெற்ற இசையமைப்பாளர்களும் கோவாவிலிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் புறப்பட்டார்கள். கோவாவின் இப்படியான திறன்வாய்ந்த ஏற்றுமதிக்கு நல்ல உதாரணம்தான் லதா மங்கேஷ்கர் குடும்பம். முதல் உலகப் போரின்போது பேசாப்பட காலத்தில் பம்பாயில் வெளிநாட்டினரின் வருகை கணிசமாக இருந்துவந்தது. அந்தச் சூழலில் இசை வர்த்தகத் துறையில் கோவாவின் இசைக்கலைஞர்களே முன்னணியில் இருந்தார்கள். சினிமா பேசத் தொடங்கியபோது அந்த கோவா இசைக்கலைஞர்களால் மராத்தி மற்றும் இந்தி சினிமாவில் முக்கிய இடம்பெற அவர்கள் பெற்றிருந்த அந்த அனுபவம் கைகொடுத்தது. ‘ஹெளரா பிரிட்ஜ்’ (1954) படப் புகழ் பிரபல டிரம்பெட் கலைஞர் சிக் சாக்லெட் அமெரிக்காவின் ஜாஸ் இசைக்கலைஞர்களுடன் போட்டியிடும் அளவு உயர்ந்திருந்தார்.

இத்தனை இருந்தும் போர்ச்சுக்கீசியக் காலனியாக இருந்ததால் இந்தியத் துணைக்கண்டத்தில் சினிமாவுக்கு ஒலி வரும்வரையில் கோவாவில் சினிமாவுக்கான விழிப்பு தோன்றவேயில்லை. போர்ச்சுக்கல் நாடு பொருளாதாரத்தில் வறுமைக்கும் சற்றே மேம்பட்டிருந்தது. அதனால் மா போன்ற பாரம்பரிய பணப்பயிர்களிலும், கனிமங்களுக்கான சுரங்கங்களிலும் மட்டுமே அதன் காலனி நிறுவனங்கள் கவனம் செலுத்தின.

முளைவிட்ட திரையரங்க முயற்சிகள்

கோவாவில் திரைப்படங்களைத் திரையிட முதன்முதலில் திரையரங்கு ஒன்றைக் கட்டும் முயற்சியில் இறங்கினார்கள். பனாஜி முனிசிபல் கார்ப்பரேஷன் கட்டிடம் அமைந்திருக்கும் இடத்தினருகே ஒரு கொட்டகையில் அந்தத் திரையரங்கம் உருவாக்கப்பட்டது. அது ஈடன் சினிமா என்று அழைக்கப்பட்டது. சோகம் என்னவென்றால் அது வெளிநாட்டினருக்கானதாக மட்டுமே செயல்பட்டது. உள்நாட்டினரில் சினிமாவை ஆதரிப்போர் அரிதாகவே இருந்த நிலைமையை அதற்கான காரணமாகக் காட்ட அவர்களால் முடிந்தது. இதன் காரணமாக ஈடன் சினிமாவுக்கு அருகிலேயே ஒரு சுதேசி சினிமா கொட்டகையையும் நம்மவர்கள் உருவாக்கினார்கள். அதற்கு ‘சினி டீட்ரோ நேஷனல்’ என்று பெயரிடப்பட்டது. அதுதான் கோவாவில் கட்டப்பட்ட முறையான திரையரங்கமும் ஆகும். தொழிலதிபர்களான தேஷ்பாண்டே சகோதரர்கள் தங்களுக்குச் சொந்தமான காசாராவ் எனும் வணிக நிறுவனத்தின் சார்பில் இதைக் கட்டினார்கள்.

டெகோ பாணியில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்தத் திரையரங்கம் கோவாவின் அன்றைய கவர்னரால் 1935 நவம்பர் 25-ல் திறந்துவைக்கப்பட்டது. இந்த சுதேசியத் திரையரங்கிலும் முதன்முதலில் ஒரு ஹாலிவுட் சினிமாதான் திரையிடப்பட்டது. ‘தி கிட் ஃப்ரம் ஸ்பெயின்’ எனும் இசைச் சித்திரம் அது. அதற்கு அடுத்ததாக ‘ஸ்கை டெவில்ஸ்’ திரையிடப்பட்டது. இருக்கைகளை ஏ, பி, சி, டி என்று தரம் பிரித்திருந்தார்கள். இன்றைய நமது 50 பைசாவுக்கு இணையாக அதன் அதிகபட்சக் கட்டணங்கள் இருந்தனவாம். பெண் பார்வையாளர்கள் மர்தானா, சனானா என்றெல்லாம் பெயரிடப்பட்ட பகுதிகளில் தனியாக அமரவைக்கப்பட்டார்களாம்.

முதல் கொங்கணி திரைப்பட முயற்சி

இப்படியான பின்னணியோடும் முன்னோட்டங்களோடும்தான் கொங்கணி சினிமாவின் வரலாறு தொடங்குகிறது. அது நடந்தது 1949-ம் ஆண்டு. கொங்கணி தியேட்டரின் உள்ளுர் கலைஞர்களின் குழுவானது திரைப்படம் ஒன்றினைத் தயாரிக்கிற சோதனை முயற்சியில் இறங்கியது. அந்த முயற்சியின் பலனாய் விளைந்ததுதான் ‘மொகாச்சோ அவுன்தோ’ அல்லது ‘லவ்ஸ் கிராவிங்’ என்ற கொங்கணி மொழி திரைப்படம்.

அல் ஜெர்ரி பிரகான்சா
அல் ஜெர்ரி பிரகான்சா

கெட்டுச் சீரழிந்துபோன இளைஞன் ஒருவனுக்கும் ஏழைப் பெண்ணுக்கும் இடையிலான காதலைச் சொன்னது இந்தப் படம். டயோகின்ஹோ டெமேலோ என்பவர் ‘மொகாச்சி ஓத்’ என்ற பெயரில் எழுதிய நாவல்தான் இந்தப் படம். இதனைத் தயாரித்து இயக்கியவர் அல் ஜெர்ரி பிரகான்சா (முழுப் பெயர்
அந்தோனியோ லாரன்ஸ் ஜெர்ரி பிரகான்சா) மாபுசாவைச் சேர்ந்த அவர் இந்தப் படத்தை எடிகா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாக்கினார். எக்ஸ்சேஞ்ச் டாக்கீஸ் ஆஃப் இந்தியா, சைனா அண்ட் ஆஃப்ரிக்கா என்பதன் சுருக்கமே எடிகா (ETICA) என்பது. 1950 ஏப்ரல் 24-ல் மபூசா திரையரங்கில் திரையிடப்பட்டது இந்தப் படம். இந்த நாளை அன்றிலிருந்து கொங்கணி சினிமா நாள் என்று கொண்டாடுகிறார்கள் கோவாக்காரர்கள். இயக்குநர் அல் ஜெர்ரி பிரகான்சாதான் கொங்கணி சினிமாவின் தந்தை ஆவார்.

ஆர்வம் பொங்க உருவாக்கப்பட்ட இந்தப் படத்தைக் கணிசமான பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்தார்கள். மிதமான வணிக வெற்றியை இது கண்டது. போர்த்துக்கீசிய கோவாவிலிருந்து இந்தப் படத்தை பம்பாய்க்குக் கொண்டு சென்றார்கள். அங்கே மாதுங்காவின் ரிவோலி, ஃபோர்ட் ஏரியாவின் லிபர்ட்டி, மஸ்கானின் ஸ்டார் முதலான திரையரங்குகளில் காலைக் காட்சியாக இப்படம் திரையிடப்பட்டது. இவ்வளவுக்குப் பிறகும் கொங்கணியின் முதல் சினிமாவான இந்த ‘மொகாச்சோ அவுன்தோ’ கொங்கணி திரையுலகின் பிறப்பிற்கான வழித்தடத்தை உருவாக்கிவிடவில்லை. போர்த்துக்கீசிய கோவாவின் நிலைமை அத்தனை நெகிழ்வோடு இருக்கவில்லை.

அது விடுதலை வேட்கை நிரம்பிய அரசியல் சூழல் நிலவிய நேரம். கோவாவில் சோஷலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோஹியா தலைமையில் சுதந்திரத்திற்கான இயக்கம் தொடங்கியிருந்ததால் கலைகளில் பொதித்துவைத்து வழங்கப்பட்ட எழுச்சிகரமான தேசியவாதத்தைக் கண்டு காலனித்துவ நிர்வாகம் அஞ்சிக்கிடந்தது. எனவே, புதிய கொங்கணி திரைப்படங்களை உருவாக்கும் எந்தவொரு முயற்சிக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தாய்மொழி நாடகங்களுக்கும் ஊக்கமளிக்கப்படவில்லை. அவற்றுக்குக் கடுமையான தணிக்கைமுறைகள் அமலில் இருந்தன.
எனவே, 1961-ல் இந்தியாவின் ஒரு பகுதியாக கோவா மாறும்வரையில் கொங்கணி மொழியில் இன்னொரு திரைப்படம் தயாரிக்கப்படவே இல்லை. 1963-ல் வெளியானது கொங்கணியின் இரண்டாவது திரைப்படம் ‘அம்சம் நோக்சிப்’. அதன் பொருள் எங்கள் அதிர்ஷ்டம். இதுவொரு சிறிய முயற்சிதான். ஆனால், பெருவெற்றியைப் பெற்ற முயற்சி. இதன் தொடர்ச்சியாக கொங்கணி நாடகக் கலைஞர்களுக்குத் திரைப்படங்களில் பங்கேற்க ஆர்வமேற்பட்டது.

இதில் சொல்ல வேண்டிய இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், ‘மொகாச்சோ அவுன்தோ’வுக்கு முன்னமேயே கொங்கணி மொழியில் ஒரு முழுநீளத் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அதன் பெயர் சுக்கி கோன். ஜி.எம்.பி. ரோட்ரிக்ஸ் 1949-ல் தயாரித்த இந்தப் படம் வெளியாகவே இல்லை. அதனால்தான் கொங்கணி மொழியின் முதல் சினிமா என்ற வரலாற்றுப் பெருமையை ‘மொகாச்சோ அவுன்தோ’ பெற்றுக்கொண்டது.


(நேபாளி மொழியின் மௌனம் அடுத்து கலையும்...)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in