மௌனம் கலைத்த சினிமா - 16: மைன்ஸ் ராத்

மௌனம் கலைத்த சினிமா - 16: மைன்ஸ் ராத்

காஷ்மீர் - பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்தியாவின் தனித்துவமான மண். மாநில அந்தஸ்தை இழந்து, ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது சமகால வரலாறு. வளமான கலாசார விழுமியங்களைக் கொண்ட காஷ்மீர் வன்முறைக் களமானது நீண்டகால சோக வரலாறு. திரைப்படம் எனும் பெயரில் காஷ்மீர் குறித்து யதார்த்தத்திற்குப் புறம்பாகப் பரப்பப்படும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.

ஆனால் நிஜத்தில் மிக நீண்டதொரு நல்லிணக்கப் பண்பாட்டு வரலாற்றினைக் கொண்டதாகவே இருப்பதுதான் காஷ்மீரின் யதார்த்தம். துயரங்கள் தொடர்கதையாகிப்போனாலும் அந்த மக்கள் தங்கள் கலை - பண்பாட்டு நடவடிக்கைகளில் குறை வைக்கவுமில்லைதான். அப்படியானதொரு பார்வையோடுதான் காஷ்மீர் திரைப்பட உலகையும் நாம் காண வேண்டும்.

சண்டைக்குப் பலியான திரையரங்குகள்

காஷ்மீரில் நடந்துவந்த மோதல்களினூடாக ஏற்படும் நெருக்கடிகளில் முதலில் பலியானதென்னவோ திரையரங்குகள்தாம். அவைதாமே திரளான மக்களைக் கூட்டி ஒரு இடத்தில் இருத்தி வைக்கின்றன. எனவே முதலில் மூடுவிழாக் கண்டவையாகத் திரையரங்குகளே கடந்த காலங்களில் இருந்திருக்கின்றன. காஷ்மீரின் திரையரங்குகளின் தொடக்கமும் அவற்றின் முடிவும் அந்த மண்ணின் கொந்தளிப்பான சூழல்களோடு நெருங்கிய தொடர்புடையன.

1931 ஜூலை 13-ம் தேதி நிராயுதபாணியாக நின்ற பொதுமக்களில் சுமார் 20-க்கும் மேலானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். மிகவும் கொந்தளிப்பான அந்தக் காலகட்டத்தில்தான் ஸ்ரீநகரில் முதன்முறையாகத் திரையரங்கம் கட்டப்பட்டது. பஞ்சாபி மொழி பேசும் சீக்கிய வணிகர் பாய் ஆனந்த் சிங் கௌரி ‘பல்லேடியம்’ எனும் பெயரில் அந்தத் திரையரங்கத்தைக் கட்டினார். அது பின்னர் லால் சௌக் எனப் பெயரிடப்பட்டது. நகரின் மையத்தில் அமைந்திருந்த அதனை மக்கள் தங்களின் மிகச் சிறந்த ஆசுவாச கேந்திரமாகக் கண்டார்கள். ஸ்ரீநகரில் ஷேர் -இ - காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனம் எனும் மருத்துவமனைக்காகத் தனது 6.19 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கி, மிகச்சிறந்த பரோபகாரி எனும் பெயரைப் பெற்றவர் பாய் ஆனந்த் சிங் கௌரி.

அந்த மருத்துவமனை திறக்கப்பட்டபோது நான்காம் எண் வார்டுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. அதுவொரு சிறுநீரக சிகிச்சை வார்டு ஆகும். அன்றைய காஷ்மீர் முதல்வர் ஷேக் அப்துல்லா ஆனந்த் சிங் கௌரியின் சேவையை வரவேற்று நன்றிக் கடிதமொன்றை எழுதினார்.

ஆனந்த் சிங்கின் பல்லேடியம் திரையரங்குதான் வடஇந்தியாவிலேயே மிகவும் பழமையானது என்றும், ஆங்கிலப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இல்லாத அந்த நாளிலேயே, டெல்லியில் வெளியாவதற்கு முன்பே ஹாலிவுட் திரைப்படங்கள் பல்லேடியத்தில் திரையிடப்பட்டுவிடும் என்றும் ஆனந்த் சிங்கின் பேரன் மன்மோகன் சிங் கௌரி குறிப்பிடுகிறார். 1940-ல் அந்த அரங்கில் பிரபல நடிகை மும்தாஜ் சாந்தி ஒரு வெரைட்டி ஷோவை நடத்தினார். அதன்மூலம் கிடைத்த வருமானத்தை போர் நிதிக்கு வழங்கினார்.

இப்படி சினிமா அல்லாத வேறு நிகழ்வுகளும் அந்த அரங்கில் நடத்தப்பட்டன. பல்லேடியத்தின் தாக்கத்தால் தொடர்ந்து பல திரையரங்குகள் உற்சாகத்தோடு முளைக்கத் தொடங்கின. சினிமா தொழில் அங்கும் துளிர்விட்டது. இவையெல்லாம் 1989-ம் ஆண்டு வரைதான். ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் வெடித்தபோது திரையரங்குகள் மூடப்பட்டன. மீறிச் செயல்பட்ட அரங்குகளின்மீது கையெறி குண்டுகள் பாய்ந்தன. அப்படியாக 1990 ஜனவரி முதல் நாளோடு அந்த மண் திரையரங்குகளே இல்லாததாக ஆக்கப்பட்டது. உலகில் வேறு எங்கும் இப்படியானதொரு கலை அவலம் நிகழ்ந்திருக்குமா என்று தெரியவில்லை.

1999-ல் ஸ்ரீநகரில் மூன்று திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன. மிகவிரைவிலேயே அவையும் கையெறி குண்டுகளை எதிர்கொண்டு ஓரிரு உயிர்ப் பலியையும் கண்டன. அத்தோடு சினிமாவுக்கே முழுக்குப்போட்டு, அவை வணிக வளாகங்களாக, மருத்துவமனைகளாக மாறின. இன்னும் சில அரங்குகள் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டன. காஷ்மீர் திரைத் துறையை மட்டும் இப்படியான அவலங்களுக்கு ஊடாகத்தான் அறிமுகம் செய்துவைக்க வேண்டியதாகியிருக்கிறது, என்ன செய்ய?

காஷ்மீரின் முதல் திரைப்படம்

எம்.ஆர்.சேத் தயாரிப்பில் ஜக்கி ராம்பால் இயக்கிய ‘மைன்ஸ் ராத்’ படம்தான் காஷ்மீரின் முதல் முழுநீளத் திரைப்படம். முதல் படமே மிக நுட்பமான கதையம்சத்தைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஓம்கார் நாத் ஐமா கதாநாயகன் சுல்லாவாகவும், சுல்தானா முக்தா நாயகி சாராவாகவும் நடித்தார்கள். மோகன்லால் ஐமாவின் நேர்த்தியான இசையமைப்பும்; கவிஞர், எழுத்தாளர், ஓவியர் ஜி.டி.சந்தோஷ் எழுதிய பாடல்களும் வெகுவாகப் பேசப்பட்டன.

சந்தோஷ் எழுதிய காஷ்மீரி நாட்டுப்புறப் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய மதிப்பைப் பெற்றுத்தந்தன. தலைமுறை கடந்தும் அங்கே பேசப்படுகிற திரைப்படமாகத் திகழும் ‘மைன்ஸ் ராத்’ படத்தின் கதை எது குறித்துப் பேசுகிறது பார்ப்போமா?

அனாதையாகிவிட்ட தனது சகோதரியின் மகனைத் தன் குடும்பத்தில் சேர்த்துக்கொள்கிறார் அந்த நபர். அப்படியானதொரு காட்சியுடன் தொடங்குகிறது படம். அவரின் இளம் மகள் அந்தப் பையனிடம் பிரியம் காட்டுகிறாள். சின்னவயதுக் காதல் துளிர் விடுகிறது. வில்லனாக வருகிறான் அந்த கிராமத்தில் கெட்ட நடத்தையுள்ள இன்னொரு சிறுவன். அந்தச் சின்னஞ்சிறு காதலர்களை சமூகம் எப்படிப் பார்க்கிறது, அவர்களுக்கு எதிராக எப்படிச் சதி செய்கிறது, அவற்றையெல்லாம் மீறி அவர்களிடையிலான காதல் எப்படி ஜீவித்திருக்கிறது என்பதை மிகநுட்பமாகச் சித்தரிக்கிறது படம்.

அலி முகமது லோன் எழுதிய இந்தக் கதையை மேலோட்டமாகப் பார்க்கிறபோது புதிதாக எதுவுமில்லாததைப் போலவே தோன்றுகிறதல்லவா? இப்படியான எத்தனையோ கதைகள் நமது சினிமாக்களில் வந்தவைதானே என்றும் தோன்றுகிறதல்லவா? ஆனால் இந்த எளிய காஷ்மீரிக் கதை சொல்லப்படுகிற சமூகப் பின்னணி, காஷ்மீரின் பண்பாடு, அந்த மண்ணின் இசை, மொழி, பேச்சுவழக்குகள், அந்த மக்களின் பண்பாட்டு அசைவுகள் என அத்தனையையும் இந்தப் படம் பார்ப்போர் உள்ளங்களில் அழகிய அனுபவமாகப் பதியப் பண்ணுவதுதான் இந்தப் படம் இன்றைக்கும் ஒரு பேசுபொருளாக இருப்பதன் ரகசியம்.

காஷ்மீரின் ரசனைமிக்க ரசிகர்களுக்குக்கூட இந்தப் படம் பரவசத்தை வழங்கக்கூடியதாகத் திகழ்வதாக விமர்சகர்கள் பெருமையோடு கருத்துரைக்கின்றனர்.

அதன் காரணமாகத்தான் 1964-ல் இந்தியக் குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கத்தை வென்று, தலைமுறைகள் கடந்தும் காஷ்மீரிகளின் மனங்களில், நினைவுகளில் நிலைத்திருக்கிறது இந்த ‘மைன்ஸ் ராத்’.

(கொங்கனி மொழியின் மௌனம் அடுத்து கலையும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in