மௌனம் கலைத்த சினிமா - 13: கங்கா மையா தோஹே பியரி சடைபோ

மௌனம் கலைத்த சினிமா - 13: கங்கா மையா தோஹே பியரி சடைபோ

இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த போஜ்புரி மொழி இந்தியாவின் போஜ்பூர் - பூர்வாஞ்சல் பகுதி மற்றும் நேபாளத்தின் தராய் பகுதி ஆகியவற்றைப் பூர்விகமாகக் கொண்டதாகும். பிஹாரின் மேற்குப் பகுதி, கிழக்கு உத்தர பிரதேசம், மேற்கு ஜார்க்கண்ட், மத்திய பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதி, சத்தீஸ்கரின் வடகிழக்குப் பகுதி, நேபாளத்தின் தராய் பிரதேசங்களில் போஜ்புரி பிரதானமான மொழியாகப் பேசப்படுகிறது.

போஜ்புரியின் முக்கியத்துவம்

போஜ்புரி மொழியானது செவ்வியல் இந்தி மொழியின் பேச்சுவழக்கு மொழி என்று பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும், போஜ்புரியின் இலக்கிய வளமும், இலக்கணமும் எப்போதும் இந்தியுடனான ஒரு விவாதப் பொருள்தான். உண்மையில் இந்தி மொழி மத்திய இந்தோ - ஆரிய மொழி என்றால், போஜ்புரி கிழக்கு இந்தோ - ஆரிய மொழியாகும். மட்டுமல்லாமல், ஃபிஜி தீவுகள், கயானா, மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா, சூரிநாம், டிரினிடாட், டோபாகோ ஆகிய நாடுகளிலும் போஜ்புரி சிறுபான்மை மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் அங்கீகரிக்கப்பட்டதொரு தேசிய மொழியாக அது உள்ளது.

ஃபிஜியில் இந்தி ஒரு அலுவல் மொழி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோ - ஃபிஜியர்கள் பேசுகிற இந்தியானது அவதீ மற்றும் போஜ்புரியின் மாறுபட்ட வடிவமாகவே உள்ளது. கரீபியன் இந்துஸ்தானியும் அவாதி மற்றும் போஜ்புரியின் மாறுபட்ட வடிவமே.

தாமதமாகவே தொடங்கிய பயணம்

இந்திய மொழிகளில் பரவலாகப் பேசப்படுகிற போஜ்புரி மொழியின் சினிமா உலகத்தை ‘போஜ்வுட்’ என்பார்கள். அது உத்தர பிரதேசத்தின் வாராணசியைத் தலைமையிடமாகக் கொண்டது. போஜ்புரி மொழியில் சினிமா முயற்சி என்பது மிகவும் தாமதமாகவே தொடங்கியது. தற்போது அது எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மிக விரிந்து வளர்ந்திருக்கிற ஒரு தொழிலாக உள்ளது. தற்போதைய அதன் சந்தை முதலீடு 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என்கிறார்கள்.

போஜ்புரி மொழியின் முதல் திரைப்படமே பேசும் படம்தான். படத்தின் பெயர் ‘கங்கா மையா தோஹே பியரி சடைபோ’ . அதன் பொருள், ‘கங்கை அன்னையே உனக்கு மஞ்சளாடையைக் காணிக்கையாக்குகிறேன்’. படம் வெளிவந்தது 1963-ம் ஆண்டில்தான். படத்தைத் தயாரித்தவர் விஷ்வநாத் பிரசாத் ஷாஹாபாதி. குந்தன் குமார் என்பவர் இயக்கினார்.

இப்படத்துக்கு முதலில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்தான் திட்டமிடப்பட்ட பட்ஜெட்டாக இருந்தது. படம் தயாரிக்கப்பட்டு முடிக்கும்போது சுமார் 5 லட்ச ரூபாயாகச் செலவு எகிறியது. கும்கும், அஷீம் குமார், நாசர் உசேன், ராமாயண் திவாரி, ஹெலன், பத்மா கன்னா, சுஜித் குமார், லீலா மிஸ்ரா, டுன் டுன், பகவான் சின்ஹா முதலானோர் நடித்தார்கள். படத்துக்கு இசையமைத்தவர் சித்ரகுப்தா. பாடல்களை இயற்றியவர் ஷைலேந்திரா. இந்தியின் பிரபலங்களான முகமது ரஃபி, லதா மங்கேஷ்கர், உஷா மங்கேஷ்கர், சுமன் கல்யாண்பூர் ஆகியோர் பாடல்களைப் பாடினார்கள்.

பட்னாவின் ‘வீணா சினிமா’ எனும் திரையரங்கில் 1963 பிப்ரவரி 22-ல் இப்படம் வெளியானது. முன்னதாக, அந்நாளைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாதுக்கு ஒரு சிறப்புக் காட்சியாக பட்னாவின் சதக்கத் ஆசிரமத்தில் இந்தப் படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்து ரசித்த குடியரசுத் தலைவர் உடனே அதனை வெளியிடுமாறு வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து படம் திரைக்கு வந்தது.

புரட்சிகரமான கதை

விதவை மறுமணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. கதைப்படி திருமணம் நடந்து முடிந்ததும் மணமகன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறான். முதல் நாளே விதவையாகிற மணப்பெண் சுமித்ராவுக்கு, பின்னாட்களில் இன்னொரு காதல் பிறக்கிறது. அதனால் அவள் சமூகத்தில் சிக்கல்களையும் தடைகளையும் எதிர்கொள்கிறாள். தன் கணவனைக் கொன்ற கொலையாளியாலும் அவளுக்கு இடையூறு. இப்படிப் போகும் கதையில் ஏற்படும் திருப்பங்களும், நாயகனின் கொலையில் உள்ள மர்ம முடிச்சுக்களும், நாயகியின் இரண்டாவது காதலுக்கு உருவாகும் எதிர்ப்பும்தான் கதையின் போக்கைத் தீர்மானித்தன. நாயகிக்கு நியாயம் கிடைத்ததா என்பதற்கான விடையே கதையின் முடிவாகும்.

அந்த நாளிலேயே விதவைப் பெண்ணின் காதலைச் சொன்னதோடு மட்டுமல்லாமல் அத்தகைய காதலைக் கொண்டாடுகிற படமாகவும் இந்தப் படம் அமைந்தது குறிப்பிடத்தக்க விஷயம்.

ஹெலன்
ஹெலன்

தொடக்க காலத்தில் போஜ்புரி மொழிப் படங்களின் அழகியல் குறித்து கேலிப் பேச்சுக்களே நிறைந்திருந்தன. வட இந்திய மொழிகளின் சினிமா உலகம் ஒவ்வொன்றும் இந்தி சினிமாவுடன் நேரடியாகப் போட்டிபோட வேண்டிய நிலை. இந்தி சினிமாவின் அசுரத்தனமான பணபலத்தை எதிர்கொண்டு தாக்குப்பிடிக்கும் உத்திகளை மற்ற மொழிப் படங்கள் மெல்ல மெல்ல கற்கத் தொடங்கின. அதேசமயம், போனால் போகிறது எனும் விட்டுக்கொடுத்தல்களால்தான் அவை பிழைத்துக்கிடக்க வேண்டிய நிலையும் யதார்த்தமாக இருந்தது. போஜ்புரி மொழிப்படங்களை உருவாக்கியவர்கள் அனுபவக் குறைவாலும்
முதலீட்டுப் பற்றாக்குறையாலும் அங்கு உருவான படங்களின் தரம் கேலிக்குள்ளானது. கிண்டல்கள் அடங்க சில காலம் பிடித்தது.

வளர்ச்சியின் நெடிய பயணம்...


60-களில் தொடங்கிய போஜ்புரி திரைப் பயணத்தில் 80-களில்தான் நிதானமான தெளிவினாலும் அனுபவச் செறிவினாலும் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் உருவாயின. ‘சான்வா கே தாகே சகோர்’, ‘ஹமார் பெளஜி’, ‘கங்கா கினாரே மோரா காவ்’, ‘சம்பூர்ண தீர்த் யாத்ரா’ முதலான படங்கள் போஜ்புரி மொழியில் வெளியான சில நல்ல படங்கள் என்கிறார்கள். அண்மைக் காலமாக போஜ்புரி திரையுலகம் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. ரவி கிஷன், மனோஜ் திவாரி போன்றோர் அதனைத் தரமுயர்த்தியவர்கள். 2014 - 2015 காலத்தில் உருவான 'நிரஹூவா இந்துஸ்தானி', 'பட்னா ஸே பாகிஸ்தான்’ போன்ற படங்கள் போஜ்புரியின் சந்தையை முற்றிலும் மாற்றிப்போட்டன. புதிய தடங்களில் புதிய மைல்கற்களை அவர்கள் பதித்தார்கள்.

அவை வடஅமெரிக்காவின் பல பகுதிகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும், ஆசியாவின் பகுதிகளிலும் புலம்பெயர்ந்த - இன்னமும்கூட அந்த மொழியைப் பேச்சுவழக்காகக் கொண்டிருக்கும் போஜ்புரி மக்களின் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் அவர்களின் தாய்மொழியில் வெளியாகும் இந்தத் திரைப்படங்களை விரும்பிப் பார்க்கின்றார்கள். அதேபோல கயானா, டிரினிடாட், டோபாகோ, சூரிநாம், ஃபிஜி, மொரீஷியஸ், தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளில் வாழும் போஜ்புரி மக்களும் இப்படங்களை விரும்பிப் பார்க்கின்றனர்.

பிஹார் அரசின் வியக்கத்தக்க வகையிலான ஆதரவாலும் போஜ்புரி சினிமா மேலும் உயர்ந்தது. நாளந்தாவின் ராஜ்கீர் நகரத்தில் அரசின் முதலீட்டில் உருவான பிரம்மாண்டமான திரைப்பட நகரமும் அரசின் ஆதரவில் நடத்தப்படுகிற திரைப்பட விழாக்களும் படைப்பூக்கத்தை உருவாக்கும் நம்பிக்கைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. நேபாளத்திலிருந்தும் மொரீஷியஸிலிருந்தும் ஃபிஜியிலிருந்தும் நாடு திரும்பிய தொழில் முதலீட்டாளர்கள் பலரும் போஜ்புரி சினிமாவில் கணிசமாக முதலீடுகளைச் செய்ததாலும் அது முன்னிலும் வேகமாக வளர்ந்துள்ளது. பவன் சிங், தினேஷ் லால் யாதவ், கேசரி லால் யாதவ், மது ஷர்மா, அமரபாலி தூபே, காஜல் ராக்வானி போன்ற போஜ்புரி திரை நட்சத்திரங்களும் இதனால் பொருளாதார முன்னேற்றமும் புகழும் அடைந்துள்ளார்கள். துபாயிலும் லண்டனிலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச போஜ்புரி திரைப்பட விருது நிகழ்வுகள் நம்பிக்கைகளை மேலும் உறுதிப்படுத்தத் தவறவில்லை.

பிஹாரின் ஒரு பகுதியின் மக்களால் பேசப்படுகிற, தனியானதொரு மாநில அந்தஸ்தைப் பெறாத, அதே நேரத்தில் உலகின் பல பகுதிகளில் கணிசமான - பரவலான எண்ணிக்கையிலான மக்கள் திரளைக் கொண்ட மொழியான போஜ்புரியின் திரைப்பட முயற்சிகளும் முற்றிலும் வித்தியாசமான வரலாற்று அனுபவங்களைத் தன்னகத்தே கொண்டதாக உள்ளன.

‘கங்கா மையா தோஹே பியரி சடைபோ’ திரைப்படத்துக்குக் கிடைத்த வெற்றிதான், போஜ்புரி திரையுலகின் ஓட்டத்திற்கும் உயர்வுக்கும் வெற்றிக்கும் அடித்தளம் அமைத்தது என்பதைத் திரையுலக வரலாறு அழுத்தமாகவே பதிவுசெய்திருக்கிறது!

(மகஹி மற்றும் மைதிலி மொழிகளின் மௌனம் அடுத்து கலையும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in