மௌனம் கலைத்த சினிமா - 11: நரசின்ஹ மேத்தா

மௌனம் கலைத்த சினிமா - 11: நரசின்ஹ மேத்தா

இந்தியாவின் மாநில மொழிகளில் குஜராத்தியும் குறிப்பிடத்தக்க முக்கிய மொழியாகும். குஜராத்தி மொழி சினிமா உலகமும் ஏனைய இந்திய மொழிகளின் பட உலகைப் போலவே நெடிய வரலாறுடையது. அதனை தோலிவுட் என்றும் கோலிவுட் என்றும் செல்லமாக அழைப்பார்கள். 1932 முதல் 2011 முடிய குஜராத்தி மொழியில் 1,030 படங்கள் வெளிவந்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

இந்தி ஆதிக்கத்தால் உண்டான மூச்சுத்திணறல்...

குஜராத்தி திரையுலகுக்கு நீண்ட வரலாறு இருந்தாலும் குறைந்த அளவிலான படங்களே தயாரிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்க வேண்டும். பொதுவாக வடமாநிலங்களில் இந்தி சினிமாவின் ஆதிக்கமே நிலவுகிறது என்பதைப் புரிந்துகொண்டால் மாநில மொழிகளின் திரைப்பட உலக அவல நிலைக்கு அதுவே காரணம் என்பதை உணர முடியும். இந்தி சினிமாவின் நிலைக்களமாக மும்பை இருப்பதால் அந்த மாநிலத்தின் மொழியான மராத்தியின் திரையுலகம் மூச்சுத்திணறியதில் வியப்பு ஏதுமில்லை. கசப்பானதுதான் என்றாலும் வடமாநிலங்களின் மொழிகளின் அழிவுக்கு இந்திதான் முக்கியக் காரணம் எனும் உண்மையை ஏற்கத்தான் வேண்டும்.

அப்படித்தான் குஜராத்தி சினிமாவும் தக்கி முக்கி நடைபோட்டு முன்னேறத் துடிக்கிறது. தயாரிக்கப்பட்டுள்ள ஆயிரத்து சொச்சம் படங்களுள் வெகு சிலவற்றைத்தான் பாதுகாக்க முடிந்திருக்கிறது அவர்களால். மற்ற மொழிகளைப் போலவே குஜராத்தியிலும் பேசாப்பட யுகத்தின் சினிமாக்கள் ஒன்றுகூட கைவசமில்லை. நினைவுகளில் நிலைப்பதல்லாமல் நிஜத்தில் எல்லாமே அழிந்துவிட்டன.

நம் ஊர் ஆழ்வார்கள்போல குஜராத்தின் நரசிங்கர்...

குஜராத்தி மொழியின் முதல் பேசும் படம் ‘நரசின்ஹ மேத்தா’ (Narsinh Mehta) என்பதாகும். குஜராத்தில் வைணவ மரபு சார்ந்து பக்தி இலக்கியத்தை வளர்த்ததில் பெரும்பங்காற்றியவர் நரசின்ஹ மேத்தா. 15-ம் நூற்றாண்டில் (கி.பி 1408 -1475) வாழ்ந்த மேத்தா, வைணவ சம்பிரதாயம் சார்ந்து ஏராளமான பாடல்களைப் புனைந்தவர். நம் ஊர் ஆழ்வார்கள்போல குஜராத்தில் வைணவம் தழைத்தோங்க குஜராத்தி மொழியில் மிகச் சிறந்த செய்யுட்களை இயற்றிய
முக்கியமான பக்தி இலக்கியப் படைப்பாளி. அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவானதுதான் ‘நரசின்ஹ மேத்தா’.

நரசின்ஹ மேத்தா
நரசின்ஹ மேத்தா

மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான ‘வைஷ்ணவ ஜனதோ...’ எனும் பாடல் வரிகள் நரசின்ஹ மேத்தாவுக்குச் சொந்தமானவை என்பது இங்கே குறிக்கத்தக்கது. திருமாலை வணங்கும் வைணவனாகப் பிறந்த ஒருவன் பிறரது துன்பங்களைக் கண்டு இரங்குபவனாவான், இந்த உலகையே நேசிப்பவனாவான், தூய வாழ்க்கையை வாழ்பவனாவான் என்றெல்லாம் அந்தச் செய்யுளின் வாயிலாக அறிவிக்கிறார் நரசின்ஹ மேத்தா. அந்த வரிகளில் அடங்கிய மனிதநேயக் கருத்துக்கள் மகாத்மா காந்தியைக் கவர்ந்ததில் வியப்பில்லைதான்.

பேசாப்பட காலத்திலேயே பேசப்பட்ட பட உலகம்...

பேசாப் பட காலத்திலேயே குஜராத்தி சினிமா மிகச் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றிருந்தது. பேசும் படங்கள் உருவாவதற்கு முன்னால் அங்கே குஜராத்தி மக்களின் பண்பாடு சார்ந்து பேசாப் படங்கள் பல வெளிவந்தன. குஜராத்தின் பேசாப் படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடிகர்களும் பெரும்பாலும் குஜராத்திகளாகவும் பார்சி இனத்தினராகவும் இருந்தார்கள். 1913 தொடங்கி 1931 முடிய ஏறத்தாழ இருபது முன்னணி சினிமாக் கம்பெனிகளும், படப்பிடிப்பு நிலையங்களும் இயங்கி வந்திருக்கின்றன. மும்பை நகரத்தில்தான் அவை பெரும்பாலும் அமைந்திருந்தன. அந்தச் சமயத்திலேயே நாற்பதுக்கும் அதிகமான புகழ்பெற்ற இயக்குநர்கள் அங்கே பணிசெய்துகொண்டிருந்தார்கள்.

1920-லேயே பேசாப் படமாகவும் இந்த ‘நரசின்ஹ மேத்தா’ குஜராத்தி மக்களிடையே ஒரு சுற்று வந்திருக்கிறார். அந்தப் படம் பேசவில்லை என்றாலும் திரையரங்குகளில் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் பொருத்தமான காட்சியின்போது ‘வைஷ்ணவ ஜனதோ’ பாடலைக் கோரஸாகப் பாடினார்களாம். இசை மேதைகள் பலர் தங்களது இசைக் கருவிகளுடன் வந்து அதற்கேற்ப இசை முழங்கினார்களாம். பேசாப் படத்தின் பின்னணிக் குரலை ரசிகர்களே நேரடியாக வழங்கிய பக்தியின் பெயரிலான அதிசயமும் நடந்தது அங்கே.

‘ஆலம் ஆரா’வை முந்திக்கொண்டு பேசிய குஜராத்தி குறும்படம்
குஜராத்தி சினிமா உலகிற்கு இன்னொரு வரலாற்றுச் சிறப்பும் உண்டு. இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’
வெளியாவதற்கு முன்னரே, அதாவது 1931 பிப்ரவரி 4-ல் மும்பையில் ஒரு சின்னஞ்சிறிய ஒலிப்படம் வெளியிடப்பட்டது. அது குஜராத்தி மொழியில் எடுக்கப்பட்ட பேசும் குறும்படம். இதுவே இந்தியாவின் முதல் ஒலி சினிமா. இதில் ‘மானே மாங்கட் கர்தே’ (என்னை மூட்டைப்பூச்சி ஒன்று கடித்தது) என்று தொடங்கும் பாடல் இடம்பெற்றது. இதுதான் இந்தியாவின் முதல் சினிமா பாடலுமாகும். சினிமா கொட்டகைகள் அந்த நாளில் மூட்டைப் பூச்சிகளின் மொத்த விநியோகத் தலங்களாக இருந்ததை முன்உணர்ந்து எழுதப்பட்ட பாடலோ என்னவோ! (அட, அப்பவே சினிமாப் பாட்டு இப்படித்தானா என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்கிறது!)

இந்தக் குறும்படத்தின் பெயர் ‘சௌ சௌநோ முராப்போ’. அதேபோல, குஜராத்தியின் முதல் பேசும் படம் வெளியாவதற்கு முன்னர் பேசும் இரண்டு குஜராத்தி குறும்படங்களும் வெளிவந்தன. அவற்றைத் தொடர்ந்துதான் ‘நரசின்ஹ மேத்தா’ வெளிவந்தது. தலைமுறைகள் கடந்து தாங்கள் அறிந்து மதிக்கும் ஒரு கவிமேதையின் வாழ்க்கையை ஒலி - இசை எனும் அம்சங்களோடு திரைப்படமாகக் கண்ட மக்கள் பரவசத்தையே உணர்ந்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

நானுபாய் வகீல்
நானுபாய் வகீல்

மாறுபட்ட சாதனையாளர் நானுபாய் வகீல்

குஜராத்தி மொழியின் இந்த முதல் பேசும் படத்தை மிகவும் நேர்த்தியாக இயக்கியவர் அந்நாளைய பிரபல இயக்குநர் நானுபாய் வகீல். குஜராத்தி சினிமாவில் மட்டுமல்ல, இந்தித் திரையுலகிலும் அவரது சாதனைகள் ஏராளம். அதுமட்டுமல்ல... பேசாப்பட காலத்திலும் நிறையப் படங்களை இயக்கியவர் அவர். படங்களை இயக்கியதோடு தயாரிக்கவும் செய்தவர். அந்த நாளில் பார்சி நாடகங்கள் பிரபலமானவை. அவற்றில் பலவும் பேசாப் படங்களாக வந்துகொண்டிருந்தன. அவற்றைத் தேர்வுசெய்து பேசும்படங்களாக மறுஆக்கம் செய்து வெளியிட்டார் நானுபாய்.

அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல இன்னொரு சாதனையையும் செய்தார் அவர். இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’ (1931) திரைப்படத்தை 1973-ல் மீண்டும் அதே பெயரில் எடுத்தார். மஃபத்லால் ஷா இதைத் தயாரித்தார். இக்பால் குரேஷி இசையமைத்தார். பழைய ‘ஆலம் ஆரா’வில் முதன்முதலாகப் பாடி, இந்தியாவின் முதல் பின்னணிப் பாடகர் என்ற பெருமையைப் பெற்றவர் டபிள்யூ.எம்.கான். ‘தே தே அல்லா கே நாம் பே பியார்...’ - என்று தொடங்கிய பாடல் அது. அந்தப் பாடகருக்கு, புதிய ‘ஆலம் ஆரா’வை எடுக்கிறபோது வயது 71 ஆனது. அவரை அதே பாடலை மீண்டும் இந்தப் படத்தில் பாடவைத்தார் நானுபாய். இப்படியான புதுமை முத்திரைகளை எப்போதும் பதித்துவந்தவர் அவர்.

நரசின்ஹ மேத்தா சிலை
நரசின்ஹ மேத்தா சிலை

‘நரசின்ஹ மேத்தா’வில் மாஸ்டர் மன்ஹர் படத்தின் நாயகன் நரசின்ஹராக நடித்தார். கிருஷ்ணராக உமாகாந்த் தேசாய் நடித்தார். மேலும், மோகன் லாலா, காதூன், மாஸ்டர் பச்சு, மிஸ் ஜமுனா, மிஸ் மேஹ்தாப், மாருதிராவ், திரிகம்தாஸ் மற்றும் மிஸ் தேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தார்கள். ரவிஷங்கர் ராவல் அரங்க அமைப்புகளை உருவாக்கியிருந்தார். இந்தப் படத்தை சாகர் மூவிடோன் நிறுவனம் தயாரித்தது.

நரசின்ஹ மேத்தா செய்யுட்கள்
நரசின்ஹ மேத்தா செய்யுட்கள்

மகாத்மா காந்தியின் மனச்சித்திரத்தில் மனிதம் மிளிரும் வண்ணம் பதிந்திருந்த நரசின்ஹ மேத்தாவை இந்தப் படம் பிரதிபலித்ததாக குஜராத்தின் பிரபல எழுத்தாளர், அறிஞர் ஆனந்த்ஷங்கர் துருவ் குறிப்பிடுகிறார். அதே சமயத்தில் நரசின்ஹரின் கதையுடன் தொடர்புடைய ஆன்மிக மாயாஜால அதிசயங்கள், அற்புதங்கள் இந்தப் படத்தில் தவிர்க்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இந்தப் படம் அந்த வகையில் முற்போக்குத் தன்மை கொண்டதாகத் தோன்றுகிறது. இதுவும் இயக்குநர் நானுபாய் வகீலின் நவீன அணுகுமுறையைக் காட்டுகிறது என்றே சொல்லலாம். அதுவும் முதல் பேசும்படமே மாறுபட்ட அம்சங்களோடு வெளிவந்திருப்பது குஜராத்திய சினிமாவின் பெருமைதான்!

(அசாமி மொழியின் மௌனம் அடுத்து கலையும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in