மௌனம் கலைத்த சினிமா - 10: ‘ஷீலா’ என்கிற ‘பிண்ட் தீ குடி’

நூர்ஜஹான்
நூர்ஜஹான்

பஞ்சாப் சினிமா உலகம் என்பது வங்க சினிமா உலகைப் போலவே இரண்டு புவிப் பிரதேசங்களைக் கொண்டது. இந்தியப் பகுதி பஞ்சாப், பாகிஸ்தான் பகுதி பஞ்சாப் என்று இரு கூறுகளாகப் பிரிந்து வளர்ந்த பட உலகம் அது. ஆனால், முதல் பஞ்சாபி சினிமா எடுக்கப்பட்டதென்னவோ கொல்கத்தாவில்தான். அதுவும் வெளியானது அன்றைய பாகிஸ்தான் பஞ்சாபின் தலைநகரமான லாகூரில். லாகூர் பட உலகத்தை லாலிவுட் என்றழைப்பார்கள்.

வருடத்திற்கு ஏறத்தாழ 10 படங்களைக் கொடுத்துவந்த பஞ்சாபி சினிமா உலகம் 2000-ம் ஆண்டு தொடங்கி பெருவளர்ச்சி கண்டுள்ளது. உருவாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமிருக்கிறது. படங்களுக்கான முதலீடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. உள்ளூர் நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட்டைச் சேர்ந்த பஞ்சாபி நட்சத்திரங்களும் பங்களிப்பு செய்யும் பெரும் திரையுலகமாக பஞ்சாபி சினிமா இன்று வளர்ந்துள்ளது. அதன் ஆரம்ப காலம் எப்படியிருந்ததெனப் பார்ப்போம்.

பேசாப் படமும் பேசும் படமும்...

1928-ல் ‘டாட்டர்ஸ் ஆஃப் டுடே’ எனும் படம் லாகூரில் வெளிவந்தது. இதுதான் பஞ்சாபி மொழியில் வெளிவந்த முதல் பேசாப் படம். இதில் அப்துர் ரஷித் கார்தர் முன்னணிப் பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ஜி.கே.மேத்தா, ரஷித்துக்கு உதவி இயக்குநராகப் பணியாற்ற வாய்ப்பளித்தார். இதனை இயக்கியது சங்கர்தேவ் ஆர்யா. கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்ததால் இந்தப் படம் எடுத்து முடிய மூன்று ஆண்டுகள் ஆயின.

ஏ.ஆர்.காதர்
ஏ.ஆர்.காதர்

கே.டி.மெஹரா எடுத்த முதல் படம்தான் ‘ஷீலா’. அது பஞ்சாபின் முதல் பேசும் படம். இதை ‘ஷைலா’ என்றும் அழைத்தார்கள். அதற்கு அந்த நாளைய வழக்கப்படி இன்னொரு பெயரும் வைக்கப்பட்டிருந்தது. அது ‘பிண்ட் தீ குடி’. இந்தப் படம் வெளிவந்தது 1935-ல். இந்திரா மூவி டோன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்தப் படம், கல்கத்தாவில் (இன்றைய கொல்கத்தா) எடுக்கப்பட்டது. ‘ஷீலா’வுக்கு முன்னமேயே பாகிஸ்தான் பகுதி பஞ்சாபில் ஒரு பேசும் படம் எடுக்கப்பட்டு வெளிவந்தது. ஆனால், அதை பஞ்சாபின் முதல் பேசும் படம் என்று வரலாறு குறிக்கவில்லை. ஏன் தெரியுமா? காரணம், அது பஞ்சாபி மொழியில் எடுக்கப்படவில்லை. பஞ்சாபிகளால் பஞ்சாப் மண்ணில் தயாரானபோதிலும் அது உருது மொழியில் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தின் பெயர் ‘ஹீர் ரஞ்சா’. பிளே ஆர்ட் ஃபோட்டோ டோன் சார்பில் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தை ஏ.ஆர்.காதர் இயக்கினார். அதன் பின் நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன.

லாகூரிலும் ‘இஷ்க் இ பஞ்சாப்’ அல்லது ‘மிர்சா சாஹிபான்’ எனும் பெயரில் ஒரு சிறிய பேசும் படம் வெளிவந்தது. அது பஞ்சாபி மொழியும் பேசியது. லாகூரின் நிரஞ்சன் டாக்கீஸில் அந்தப் படம் 1935-ல் திரைக்கு வந்தது. என்றாலும் இந்தி மற்றும் உருது மொழிப் படங்களுக்கு இருந்த பரவலான சந்தை பஞ்சாபி மொழிக்கு இல்லை என்ற அச்சம் காரணமாக லாகூர் தயாரிப்பாளர்கள் முழுநீளப் பஞ்சாபி மொழிப் படத்தை எடுக்க தயக்கம் காட்டினார்கள். அதே சமயத்தில்தான் கல்கத்தாவில் இந்தியப் பகுதி பஞ்சாபி தயாரிப்பாளர்கள் தங்களின் தாய்மொழியான பஞ்சாபியில் சினிமா உருவாக்கும் முயற்சிகளில் இறங்கினார்கள். அப்படியானதொரு முயற்சியின் விளைவுதான் ‘ஷீலா’. பஞ்சாபின் கனவு தேவதை, பஞ்சாபின் நைட்டிங்கேல் நூர்ஜஹான் ‘ஷீலா’வில் ஓர் இளம் நட்சத்திரமாக அறிமுகமானார். அத்துடன் அவர் தனது தேன் குரலில் பாடியும் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார்.

ஜமீன்தார் மகனின் காதல் கதை

தாகூரின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் திரைக்கதை இதுதான். பெற்றோரை இழந்து அனாதையான ஷீலா எனும் இளம் பெண்ணுக்கு அவளது கிராமத்து ஜமீன்தார் அடைக்கலம் தருகிறார். அவரது மகன் ராணுவத்தில் பணியாற்றுகிறான். அவன் விடுமுறையில் ஊருக்கு வருகிறபோது ஷீலாவைப் பார்த்து அவள்மீது காதலாகிறான். அவளைத் திருமணம் செய்துகொள்வதாக கிராமத்துப் பெண் தெய்வத்தின் முன் சத்தியம் செய்து கொடுக்கிறான். திருமணத்திற்கு முன்னமேயே அவள் கர்ப்பம் அடைகிறாள். அதற்குமுன் விடுமுறை முடிந்து ராணுவத்திற்குத் திரும்புகிறான் ஜமீன்தாரின் மகன். ஷீலா கெட்டுப்போய்விட்டாள் என்று அவளை வீட்டைவிட்டுத் துரத்துகிறார் ஜமீன்தார். அடுத்த முறை ராணுவத்திலிருந்து ஊர் திரும்பும் நாயகன் அவளைத் தேடி அலைகிறான். அவளைக் கண்டடைகிறானா, ஜமீன்தார் அவளை ஏற்றுக்கொள்கிறாரா என்பதற்கான விடைதான் மீதிக் கதை.

இந்தப் படத்தில் முபாரக், புஷ்பா ராணி, ஹைதர் பண்டி, ஈடன் பாய் போன்றோர் நடித்திருந்தனர். முபாரக் அலி கான் மற்றும் கே.டி.மெஹ்ரா ஆகியோர் இணைந்து இசை அமைத்தனர். பஞ்சாபியர்களின் ஆர்வத்தினைச் சுமந்துகொண்டு வந்த பஞ்சாபின் முதல் பேசும் படமான 'ஷீலா' அன்றைய ஒன்றுபட்ட இந்தியாவின் அழகிய சிறுநகரான லாகூரில் வெளியானது. அதன் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த பலரும் பட உலகை நோக்கி படம் பண்ண வந்தனர்.

சுறுசுறுப்படைந்த பஞ்சாப் சினிமா சந்தை

1938-ல் மெஹரா ‘ஹீர் சியல்’ என்ற தனது இரண்டாவது படத்தை வெளியிட்டார். எம்.எம்.பில்லு மெஹரா உதவியுடன் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் நூர்ஜஹான் மற்றும் புதுமுகங்களான பாலோ, எம். இஸ்மாயில் போன்ற கலைஞர்கள் நடித்தனர். இந்தப் படமும் பெருவெற்றி பெற்றது.

விரைவிலேயே லாகூர் மற்றும் பஞ்சாப் பகுதி பஞ்சாபி மொழிப் படஉலகின் வெற்றிகரமான சந்தையாக மாறத்தொடங்கின. ஸ்டுடியோக்கள் நிறைய முளைத்தன. ஏராளமான கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கல்கத்தாவிலிருந்தும், பாம்பேயிலிருந்தும் லாகூருக்குப் படையெடுக்கத் தொடங்கினர். பாலிவுட் சினிமா உலக முன்னணி பஞ்சாபி கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் தாய் மொழியில் சினிமா வளர உற்சாகமாகப் பங்களிக்கத் தொடங்கினார்கள்.

சாந்தா ஆப்தே, மோதிலால், சந்திரமோகன், ஹீராலால், நூர்ஜஹான், மும்தாஜ் சாந்தி, வாலி, சையத் அட்டஹுல்லா ஷான் ஹஷ்மி, கிருஷ்ணகுமார், ஷங்கர் உசேன் போன்றோர் பஞ்சாபி சினிமாவில் பல வகைகளிலும் பங்கேற்ற சில முக்கியக் கலைஞர்கள் ஆவர். ‘சினி ஹெரால்ட்’ எனும் பத்திரிகையை நடத்திவந்த, பின்னாளில் ஒரு முன்னணி இயக்குநராகப் பரிணமித்த பல்தேவ் ராஜ் சோப்ரா (பி.ஆர்.சோப்ரா) லாகூரில் ஒரு திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார். ஈவினிங் நியூஸ் பத்திரிகையின் ராமானந்த சாகரும் பின்னாளில் இயக்குநரானார். சையத் அட்டஹுல்லா ஷான் ஹஷ்மியும் பஞ்சாபியில் வெளிவந்த சினிமா பத்திரிகையான ‘அதகார்’ இதழில் பணியாற்றியவர்தான். இப்படி பத்திரிகையாளர் பலரது பங்கேற்பும் பஞ்சாபி சினிமாவைச் செழுமைப்படுத்தியது.

நூர்ஜஹான் எனும் பஞ்சாபின் அழகிய இசையரசி...

பஞ்சாபி சினிமாவின் முதல் பேசும் படமான ‘ஷீலா’ பெருவெற்றி பெற்றதன் பலனாக பஞ்சாபி படஉலகிற்குக் கிடைத்த பெரும் வெகுமதி பிரபல பாடகியும் தாரகையுமான நூர்ஜஹான். அல்லா வாசை எனும் இயற்பெயரைக் கொண்ட நூர்ஜஹான் பிரிட்டிஷ் இந்தியாவிலும் பின்னாளில் பாகிஸ்தானிலும் ரசிகப் பெருமக்களால் கொண்டாடப்பட்ட இசைக்குயிலாகத் திகழ்ந்தார். 1930-ல் தொடங்கிய அவரது இசைப்பயணம் 1996 வரையில் ஏழு தலைமுறைகளை வென்ற இசையரசியாக நூர்ஜஹானை மின்னச் செய்தது. பாரம்பரிய இசைக் குடும்பத்தில் பிறந்த நூர்ஜஹான் தனது குடும்பத்திலிருந்தே இசைப் பயிற்சியைப் பெற்றார்.

மனம் மயக்கும் குரலால் புகழ் உச்சத்திற்குச் சென்றாலும் அவருக்கு நடிப்பில்தான் அதிக நாட்டமிருந்தது. தொடக்கத்தில் பாகிஸ்தானி படங்களிலும் நடித்தார். உருது, பஞ்சாபி, இந்தி, சிந்தி என்று பல மொழிகளிலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடிச் சாதனை படைத்த நூர்ஜஹான், பாகிஸ்தானி சினிமாவின் பிரபல பாடகர் அகமது ருஷ்டியுடன் இணைந்து அதிகமான பாடல்களைப் பாடினார்.

முதலில் கல்கத்தாவிலும், பின்னர் பாம்பேயிலும் வசித்துவந்தார் நூர்ஜஹான். 1947-ல் விடுதலை பெற்ற இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்துசென்றபோது பஞ்சாப் மாகாணமும் இரு கூறுகளானது. பஞ்சாபின் மேற்குப் பகுதி பாகிஸ்தானிலும், கிழக்குப் பகுதி இந்தியாவிலும் இணைந்துகொண்டன. மிகப் பெரிய துயரங்களும் சோகங்களும் அரங்கேறிய அந்தப் பிரிவினை பஞ்சாபி சினிமாவையும் கடுமையாகப் பாதித்தது.

பஞ்சாபி பட உலகின் இஸ்லாமியக் கலைஞர்கள் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்தனர். அதேபோல சீக்கிய, இந்துக் கலைஞர்கள் இந்தியாவின் பாம்பேயில் குடியேறினர். இந்தப் பிரிவினை பஞ்சாபிய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. இதனால் இந்திய பஞ்சாப் ரசிகர்கள் தங்களின் பொக்கிஷமாகக் கருதிவந்த நூர்ஜஹானையும் இழக்க வேண்டியதாயிற்று.


பாகிஸ்தானில் குடியேறிய நூர்ஜஹான் நடிப்பு, நடனம், பாடல் என்று கொடிகட்டிப் பறந்தார். ‘மெலடி குயின்’ என்று பாகிஸ்தான் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அவர், திரைப்படங்களுக்குத் திறம்பட இசையமைக்கவும் செய்தார். தனது முதல் பாகிஸ்தானியப் படமான ‘சான்வே’யில் சந்தோஷ் குமாருடன் நடித்ததோடு ஷெளகத்துடன் இணைந்து அந்தப் படத்தை இயக்கி அந்நாட்டின் முதல் பெண் இயக்குநர் என்ற பெயரையும் பாகிஸ்தான் சினிமா வரலாற்றில் பெற்றார். பஞ்சாபின் முதல் பேசும் படம் தந்த அந்த இசை ராணியின் பன்முகத் திறன்களைப் பாகிஸ்தான் சினிமா உலகம் மிகவும் போற்றிப் பாதுகாத்துப் பெருமை சேர்த்தது.

(குஜராத்தி மொழியின் மௌனம் அடுத்து கலையும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in