
சில இலக்கியப் படைப்புகள், திரைப்படங்கள் எதிர்கால நடப்புகள் குறித்த அவதானிப்பை மிகத் துல்லியமாகச் செய்துவிடும் வல்லமை கொண்டவை. சில படைப்புகளின் தாக்கத்தில் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்படுவதும் உண்டு. ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘1984’ நாவலில் வரும் ‘டெலிஸ்க்ரீன்’ இன்றைய ‘பெகாசஸ்’ வேவு மென்பொருள் போன்ற அனைத்துவிதமான வேவுப் பணிகளையும் செய்யக்கூடியது. ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரான் தண்ணீருக்கு அடியில் பயன்படுத்தும் கேமராக்களின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து தங்கள் திரைப்படங்களில் சித்தரித்த காட்சிகள், உண்மையிலேயே அந்த வகை கேமராக்கள் தொழில்நுட்ப மேம்பாட்டை அடைந்திருக்கின்றன.
ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய ‘2001: எ ஸ்பேஸ் ஒடிசி’ திரைப்படம், விண்வெளி ஆராய்ச்சித் துறையில், குறிப்பாக சர்வதேச விண்வெளி மைய மேம்பாட்டில் பெரும் பங்கு வகித்திருக்கிறது. 1968-ல் வெளியான அந்தப் படத்தில் தட்டையான கம்ப்யூட்டர் திரை, கண்ணாடி ஜன்னல் பொருத்தப்பட்ட காக்பிட், விண்வெளியில் ஜாக்கிங் என அந்தப் படத்தில் சித்தரிக்கப்பட்ட கட்சிகள் பின்னாட்களில் நிஜமாகின. நாசாவே ஒப்புக்கொண்ட உண்மை இது. இந்தத் திரைப்படம், ஆர்தர் கிளார்க் எழுதிய ‘தி சென்டினெல்’ எனும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. எனினும், தனது அபாரமான கற்பனைத் திறனால் அந்தப் படத்தை மேம்படுத்தியிருந்தார் குப்ரிக். இன்றும் உலக சினிமா ரசிகர்களுக்குச் சிலிர்ப்பைத் தரும் படம் அது.
‘ஹாட்லைன்’
அந்த வரிசையில் அமெரிக்க – ரஷ்ய அதிபர்களுக்கு இடையிலான ஹாட்லைனையும் சேர்க்கலாம். ‘அமெரிக்க அதிபரும் ரஷ்ய அதிபரும் யாருடைய குறுக்கீடும் இல்லாமல் பேசிக்கொள்ள பிரத்யேக ஹாட்லைன் இருக்கிறது’ என்பது கடந்த சில தசாப்தங்களாக உலகமெங்கும் உலவிவரும் ஒரு தகவல். இதில் பாதி உண்மை இருக்கிறது. பாதி கற்பிதமும் இருக்கிறது. அது என்ன? பார்க்கலாம்.
1960-களில் அமெரிக்கா - சோவியத் ஒன்றியத்துக்கு இடையிலான பனிப்போர் உச்சத்தில் இருந்தது. 1961-ல் கியூபா அரசைக் கவிழ்க்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியை அடைந்தது. இதையடுத்து, சோவியத் அதிபர் நிகித்தா குருச்சேவின் உதவியை கியூபாவின் அப்போதைய பிரதமர் பிடல் காஸ்ட்ரோ நாடினார். முன்னதாக ரஷ்யாவை அச்சுறுத்தும் வகையில் இத்தாலி, துருக்கி ஆகிய நாடுகளில் அணு ஆயுத ஏவுகணைகளை அமெரிக்கா நிறுவியதால் ரஷ்யா கோபத்தில் இருந்தது. இந்தச் சூழலில், கியூபாவின் இந்த கோரிக்கையை ஏற்று அந்நாட்டில் அணு ஆயுத ஏவுகணைகளை ரஷ்யா நிறுவியது (முன்னதாக இதில் ஏற்பட்ட தாமதத்தால் அதிருப்தியடைந்த பிடல் காஸ்ட்ரோ, சீனாவிடம் உதவி கோரியதும் நடந்தது).
அமெரிக்காவின் அண்டை நாடான கியூபாவில் ரஷ்யாவின் ஏவுகணைகள் நிறுவப்பட்டது அமெரிக்காவை அதிரவைத்தது. இதையடுத்து இரு தரப்புக்கும் இடையில் மோதல் சூழல் உருவானது. 35 நாட்கள் நீடித்த பதற்றம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
இந்தக் காலகட்டத்தில்தான் அமெரிக்க அதிபரும் ரஷ்யா அதிபரும் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் பிரத்யேகமாகத் தொடர்புகொள்ள வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் தாமஸ் ஷெலிங் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லவ்’ படத்தில் வருவதைப் போல இரு நாடுகளின் தலைவர்களும் பேசிக்கொள்ள ஹாட்லைனை உருவாக்கலாம் எனும் யோசனையை முன்வைத்தார். அதன் அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஹாட்லைன் உருவாக்கப்பட்டது. 1963 ஆகஸ்ட் 30-ல் இது பயன்பாட்டுக்கு வந்தது,
‘ரெட் டெலிபோன்’ எனப் பொதுவாக அறியப்பட்டிருந்தாலும், இது உண்மையில் தொலைபேசி அல்ல. டெலிபிரின்டர் உள்ளிட்ட சாதனங்கள் அடங்கிய தகவல் தொடர்பு அமைப்பு. அதேபோல், நாம் கற்பனை செய்துகொள்வது போல அமெரிக்க அதிபரும் ரஷ்ய அதிபரும் படக்கென போன் செய்து உரையாடிக்கொள்ள மாட்டார்கள். இரு நாடுகளின் உயதிகாரிகள்தான், அவரவர் தாய்மொழியில் தகவல்களை அனுப்பி உரையாடிக்கொள்வார்கள். அது பின்னர் மொழிபெயர்க்கப்படும். பின்னாட்களில் ஃபேக்ஸ் போன்ற சாதனங்கள் வந்துவிட்டாலும், இது தொலைபேசியாக வடிவம் பெறவில்லை. ஆனால், பொதுவெளியில் இது ‘சிவப்புத் தொலைபேசி’ எனும் உருவகத்தாலேயே காட்சிப்படுத்தப்படுகிறது.
இதேபோல் 1971 இந்திய – பாகிஸ்தான் போருக்குக்குப் பின்னர் இரு தரப்பும் தொடர்புகொள்ள பிரத்யேக ஹாட்லைன் உருவாக்கப்பட்டது.
இதில் ஒரு கொசுறுத் தகவல் உண்டு. ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லவ்’ திரைப்படத்தை இயக்கியதும் ஸ்டான்லி குப்ரிக்தான்!