பட்ஜெட்... பட்ஜெட் 2: ரகசியம் காக்கப்படுவது ஏன்?

நிதிநிலை அறிக்கை குறித்த மினி தொடர்
பட்ஜெட்... பட்ஜெட் 2: ரகசியம் காக்கப்படுவது ஏன்?

பட்ஜெட்டில் எந்தெந்த பொருள் மீது வரிகள் விதிக்கப்படும், ஏற்கெனவே விதிக்கப்பட்ட வரி எவ்வளவு அதிகமாகும் என்பதை அரசு ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பது உலக ஜனநாயக நடைமுறை. ஆளும் கட்சி அல்லது கூட்டணி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றால் எப்படி பதவி விலக வேண்டுமோ அப்படியே பட்ஜெட் ரகசியங்கள் கசிந்தாலும் பதவி விலக வேண்டும். (பட்ஜெட்டுக்கு மக்களவையின் ஒப்புதல் கிடைக்காவிட்டாலும் பதவி விலக வேண்டும்.) பள்ளியிறுதி அல்லது கல்லூரிகளின் பொதுத் தேர்வுகளில் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவது எப்படி தவறோ, நிர்வாகக் கோளாறோ அப்படியே பட்ஜெட் ரகசியம் வெளியாவதும் கருதப்படுகிறது.

இதனால்தான் பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் தயாரித்த பிறகு அதன் இறுதி வடிவத்தை நாடாளுமன்றத்தில் அளிப்பதற்காக அச்சிடும்போது, நிதித் துறையின் முக்கிய அதிகாரிகள், அச்சக ஊழியர்கள் அவரவர் அலுவலகத்திலேயே சில நாட்களுக்குத் தங்க வைக்கப்படுவார்கள். அவர்கள் வீட்டுக்குக்கூட செல்ல முடியாது. இப்போது மொபைல் போன்களின் பயன்பாடு வந்துவிட்டதால் பட்ஜெட் ரகசியங்கள் கசியாமல் காப்பது மேலும் பெரிய சவால்தான்.

வகை வகையான வரிகள்

பட்ஜெட்டில் அரசுக்கு வருமானம் வரும் இனங்கள் ஏற்றுமதி வரி, இறக்குமதி வரி, பொருள்குவிப்பு தடுப்பு வரி, வருமான வரி, நிறுவனங்களின் வருமானம் மீதான நிறுவன வரி, உற்பத்தி வரி (எக்சைஸ் – கலால்) செல்வ வரி, நன்கொடை வரி, மூலதன ஆதாய வரி, பங்கு பரிமாற்றங்கள் மீதான வரி, பொது சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) போன்றவையாகும். அவை மட்டுமின்றி வெளிநாடுகளுக்குத் தரும் கடன் மீது வசூலாகும் வட்டி, அசல் போன்றவையும் வருமானமே. இந்தியாவுக்கு அப்படி அதிகம் வருவதில்லை என்பது வேறு விஷயம். இவற்றில் வருமான வரி, நிறுவன வரி, சுங்க வரி, உற்பத்தி வரி போன்றவை நேர்முக வரிகளாகும். பொது சரக்கு சேவை வரி மறைமுக வரியாகும். செஸ் என்று அழைக்கப்படுவது கூடுதல் வரியாகும். ஒரு பொருளின் மீது விதிக்கப்படும் வரிக்கும் மேல் இது இருப்பதால் இதை மேல் வரி என்றும் கூடுதல் தீர்வை என்றும்கூட அழைப்பார்கள்.

நிதிக் குழுக்கள்

மத்திய அரசு நிறைய இனங்களில் வருமானம் கண்டாலும், அவற்றை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்வது கட்டாயம். இதைத் தீர்மானிப்பதுதான் நிதிக் குழுக்களின் வேலை. இதை ஃபைனான்ஸ் கமிஷன் என்று அழைப்பார்கள். இந்த அமைப்புக்கு நிதி நிர்வாகம் தெரிந்த அல்லது நிதித் துறையைச் சேர்ந்த அனுபவஸ்தரைத் தலைவராகவும் பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், மூத்த அதிகாரிகளை உறுப்பினர்களாகவும் நியமிப்பார்கள். அவர்கள் மாநில அரசுகளுடன் ஆலோசனை கலந்து அவர்களுக்கு மத்திய வருவாயில் கிடைக்கும் பங்கு போதுமானதா, இன்னும் எவ்வளவு அதிகம் தர வேண்டும், அதற்கு எதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு இறுதிப் பரிந்துரையை அளிப்பார்கள். இதை முழுக்க முழுக்க அமல்படுத்த வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றாலும் மத்திய அரசுகள் பெரும்பாலான பரிந்துரைகளை ஏற்கும், சிலவற்றைப் பரிசீலிப்பதாக வாக்குறுதி தந்து ஒத்திப்போடும். நிராகரிப்பதாக இருந்தால் காரணத்தைக் கூறும். எனவே நிதி ஒதுக்குவது என்பது மத்திய அரசின் தன்னிச்சையான, எதேச்சாதிகாரமான செயலாக ஒருபோதும் இருந்துவிடாது.

வரிகளை உயர்த்துவதும் குறைப்பதும் ஆளுங்கட்சியின் விருப்பமாக இருந்தாலும் அவற்றால் உற்பத்தியில் சரிவு வேலைவாய்ப்பு இழப்பு, வருவாய் சரிவு போன்றவை ஏற்பட்டால் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்பதால் அரசுகள் இதில் கவனமாக இருக்கும். நாடாளுமன்றத்தில் அதிலும் குறிப்பாக மக்களவையின் ஒப்புதல் இல்லாமல் அரசுகளால் நிதிநிலை அறிக்கையை அமல்படுத்தவே முடியாது. இப்படி நிதியாண்டுக்குத் தேவைப்படும் நிதியை அந்த ஆண்டுக்குள் அந்தந்தத் துறைகள் செலவழிக்காவிட்டால் அது மீண்டும் அரசுக்கே திரும்பிவிடும். அதற்காக வீண் விரயமும் செய்துவிடக் கூடாது என்பதால் கட்டுப்பாடுகள் உண்டு. அரசு செய்யும் செலவுகளைக் கண்காணிக்கவும் கேள்வி கேட்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் கணக்குக் குழு இருக்கிறது. பெரும்பாலும் இதற்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவரையே தலைவராக ஏற்பது மரபு. எனவே பெரும்பான்மை வலு இருந்தாலும் அரசுகள் தங்கள் விருப்பப்படி பொதுப் பணத்தைச் செலவழித்துவிட முடியாது.

பொறுப்பும் கடமையும்

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கும் பொது விநியோகத்துக்கும் முதலில் ஒதுக்கிய தொகை முழுக்க செலவாகிவிட்டதால் கூடுதல் தொகையை ஒதுக்க நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகே அரசு அவற்றைச் செலவழித்தது. இதை கூடுதல் செலவு அனுமதி கோரிக்கை அல்லது துணை மானியக் கோரிக்கை என்று அழைப்பார்கள். நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றம் ஏற்ற பிறகு, துறைவாரியாக செலவுகளுக்கு அந்தந்தத் துறை அமைச்சர்கள் மசோதாக்களைத் தாக்கல் செய்து நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவார்கள். செலவு ஒதுக்கீட்டு அனுமதி என்று இதற்குப் பெயர்.

அதாவது நிதி தொடர்பான அனைத்தும் நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் - அதற்குத் தெரிந்தும், அதன் கண்காணிப்பிலுமே மேற்கொள்ளப்படும். ஒதுக்கிய நிதியை முழுக்கச் செலவு செய்யாமலிருப்பதும் நிர்வாகக் கோளாறாகவே பார்க்கப்படும். அதே போல செலவுகளைக் கட்டுக்கடங்காமல் பெருக்கிக்கொண்டே போகும் ஊதாரித்தனமும் கண்டிக்கப்படும். அரசுகள் அறிவிக்கும் திட்டங்கள், சலுகைகள், மானியங்கள் என்று அனைத்துமே மக்களுடைய வரிப்பணத்திலிருந்து பெறப்படுவதால் நாடாளுமன்றத்துக்கு அரசு பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது.

சரி, மத்திய அரசு கவிழ்ந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுமா? நாளை பார்க்கலாம்.

முந்தைய பகுதியை வாசிக்க...

பட்ஜெட்... பட்ஜெட் 2: ரகசியம் காக்கப்படுவது ஏன்?
பட்ஜெட்... பட்ஜெட் (பகுதி 1)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in