இதே தேதி... முக்கியச் செய்தி: ஜேம்ஸ் பாண்டாக உயர்ந்த பால்காரச் சிறுவன்!

இதே தேதி... முக்கியச் செய்தி: ஜேம்ஸ் பாண்டாக உயர்ந்த பால்காரச் சிறுவன்!

ஜேம்ஸ் பாண்ட் - இந்தப் பாத்திரத்தில் எத்தனையோ பேர் நடித்திருந்தாலும், ‘மை நேம் இஸ் பாண்ட்’ எனும் வசனம் ஒலிக்கும்போது நம் மனதில் நடிகர் ஷான் கானரியின் உருவம்தான் தோன்றும். முதன்முதலாக ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தைத் திரையில் பிரதிபலித்து முத்திரை பதித்தவர் ஷான் கானரி. மிகப் பெரிய ஹாலிவுட் நட்சத்திரமாகப் பெருவாழ்வு வாழ்ந்த ஷான் கானரி, மிக ஏழ்மையான பின்புலத்திலிருந்து வந்தவர். நினைத்துப் பார்த்திராத உயரங்களை எட்ட அவரது தன்னம்பிக்கைதான் வழிநடத்தியது.

1930 ஆகஸ்ட் 25-ல் ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்கின் ஃபவுன்டெய்ன்பிரிட்ஜ் பகுதியில் பிறந்தவர் ஷான் கானரி. அவரது தந்தை லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்தவர். தாய் துப்புரவுத் தொழிலாளி. அவர்கள் வசித்த வீட்டில் தனியான கழிப்பறை கூட இல்லை. பொதுக் கழிப்பறையைத்தான் பயன்படுத்த வேண்டியிருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில் நிலைமை மேலும் மோசமானது.

13 வயதில் பள்ளியைவிட்டு வெளியேற நேர்ந்தது. அதன் பின்னர் வீடுகளுக்குப் பால் விநியோகம் செய்யும் வேலை பார்த்தார். 17-வது வயதில் பிரிட்டனின் கடற்படையான ராயல் நேவியில் சேர்ந்தார். எனினும், சிறுகுடல் புண் காரணமாக இரண்டு ஆண்டுகளிலேயே கடற்படைப் பணி முடிவுக்கு வந்தது.

அதன் பின்னர் லாரி ஓட்டுநர் முதல் சவப்பெட்டியை பாலிஷ் செய்வது வரை பல்வேறு பணிகளைச் செய்தார். சொற்ப சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டினார். இளம் வ்யதிலிருந்தே துடிப்பும் துணிச்சலுமாக வளர்ந்தார். வம்புச் சண்டைகள் வந்தால் பதிலடி கொடுக்கத் தயங்காத குணம் கொண்டிருந்தார்.

கட்டுடலும் வசீகரமான தோற்றமும் கொண்டவர் என்பதால் எடின்பர்க் ஓவியக் கல்லூரியில், ஓவியங்களுக்கான மாடலாகவும் அவர் இருந்தார். லண்டனில் நடைபெற்ற மிஸ்டர் யூனிவெர்ஸ் போட்டியில் ஜூனியர் பிரிவில் மூன்றாவது இடம் பிடித்தார்.
இடையில் கால்பந்து விளையாட்டில் வய்ப்புகள் வந்தன. எனினும், இதையெல்லாம் தாண்டி எப்படியேனும் திரைத் துறையில் நுழைந்துவிட வேண்டும் என்று முடிவுசெய்தார். ஆரம்பத்தில் சின்னச் சின்ன வாய்ப்புகள் கிடைத்தன. ’நோ ரோட் பேக்’ (1953) படத்தில் கவனம் ஈர்த்தார். அதன் பின்னர் பிரிட்டனில் தயாரான ஒரு சில படங்களில் நடித்தவருக்கு ஜேம்ஸ் பாண்ட் பட வாய்ப்பு கிடைத்தது. வாழ்க்கை அடியோடு மாறியது.

அதேசமயம், அந்த வாய்ப்பும் அவருக்குச் சுலபமாகக் கைகூடிவிடவில்லை. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கிய எழுத்தாளர் இயான் பிளெமிங்குக்கு ஷான் கானரியின் உருவம் உவப்பாகத் தோன்றவில்லை. “கமாண்டர் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்துக்கு ஏற்ற நடிகர் கிடைப்பார் என நினைத்திருந்தேன்- அதீத வளர்ச்சி கொண்ட ஸ்டன்ட்மேனை அல்ல” என்று சலித்துக்கொண்டார். ஆனால், 6 அடி 2 அங்குலம் கொண்ட அசத்தலான அந்த உருவத்துடன், தனது இயல்பான முரட்டுத்தனம், இழையோடும் நகைச்சுவை ஆகியவற்றைக் கொண்டு அந்தப் பாத்திரத்தின் தன்மையையே பல மடங்கு சுவாரசியப்படுத்தினார் ஷான் கானரி. ‘டாக்டர் நோ’ (1962) படத்தில் தொடங்கி வரிசையாக 7 படங்களில் தொடர்ந்தது. இடையில், ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் ஒரே மாதிரி எழுதப்படுவதால் சலிப்படைந்து அதில் நடிப்பதில்லை என மறுத்துவிட்டார். அதன் பின்னர் ரோஜர் மூர் போன்ற நடிகர்கள் அந்தப் பாத்திரத்தில் நடித்தனர். எனினும், மீண்டும் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் ‘நெவர் ஸே நெவர் எகெய்ன்’ (1983) படத்தில் நடித்தார். ஆனால், அவரது திரைச் சாதனைகள் வெறுமனே ஜேம்ஸ் பாண்ட் படங்களுடன் முடிந்துவிடவில்லை. ஹிட்ச்காக்கின் ‘மரீன்’ முதல் ‘தி ராக்’ வரை ஏராளமான படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் மிகச்சிறப்பாக நடித்தார். பிரையான் டி பால்மா இயக்கத்தில் கெவின் காஸ்ட்னருடன் இணைந்து அவர் நடித்த ‘அன்டச்சபிள்ஸ்’ (1987) திரைப்படம் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்றுத் தந்தது.

பல விஷயங்களில் மிகவும் உறுதியான நிலைப்பாடு கொண்டவர். ஸ்காட்லாந்து விடுதலைக்காக இறுதிவரை குரல் கொடுத்தார். அதேசமயம் சில விஷயங்களில் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. ‘நெவர் ஸே நெவர் எகெய்ன்’ படத்தில் நடித்தபோது அவருக்கு வயது 52 தான். எனினும், ஓய்வுபெற்றுவிட்ட ஜேம்ஸ் பாண்ட் என அவரது பாத்திரத்தின் வயது ஏற்றப்பட்டிருந்தது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் நடித்தார். இத்தனைக்கும், இடையில் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடித்த ரோஜர் மூர், ஷான் கானரியைவிட 3 வயது மூத்தவர். அதேபோல், தன்னைவிட 12 வயதே இளையவரான ஹாரிஸன் போர்டின் தந்தையாக ஸ்பீல்பெர்க்கின் ‘இண்டியானா ஜோன்ஸ்: க்ருஸேட்’ (1987) திரைப்படத்தில் நடித்தார்.

பிரிட்டன் பட உலகத்தைத் தாண்டி, ஹாலிவுட்டிலும் கொடிநாட்டி பிற்பாடு, ‘சர்’ பட்டம், ‘நைட்’ பட்டம் என்றெல்லாம் அங்கீகாரங்கள் கிடைத்தாலும், அதிகம் படிக்கவில்லை எனும் வருத்தம் அவருக்குள் இருக்கவே செய்தது. “அறிவுஜீவிகளைச் சந்திக்கும்போதெல்லாம் என்னை ஒரு சிறுவனாக உணர்வேன்” என்று கூறியவர் அவர்.

அதேசமயம், “நான் வாழ்க்கை எனும் பெரும் பள்ளியில் கல்வி கற்றவன். எனது அனுபவங்களே நான் இந்த அளவுக்கு உயர வழிவகுத்தன” என்றும் அவர் பதிவுசெய்திருக்கிறார். எந்த நிலையில், எப்படியான பின்னணியிலிருந்து வந்தாலும், உழைப்பும் தனித்தன்மையும் இருந்தால் உலகம் போற்றும் அளவுக்கு உயரலாம் என்பதற்கு ஷான் கானரி சிறந்த எடுத்துக்காட்டு!

ஆகஸ்ட் 25: நடிகர் ஷான் கானரி பிறந்தநாள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in