கிளாசிக்கல் ஜேம்ஸ் பாண்ட் படம்!

மற்றவை வெண்திரையில் -15
ஓவியம்: வெங்கி
ஓவியம்: வெங்கி

கல்லூரி விடுதி பிரமாதமாகத்தான் இருந்தது. ஹாஸ்டல் தினம் போன்ற கொண்டாட்டங்களுக்கும் குறைவில்லை. மாலை நேரத்தில் பால்கனி சுவரில் அமர்ந்து டீ குடிக்கையில் ஏகாந்தமாக இருக்கும். காற்றின் வேகத்திற்கேற்ப தொலைவிலிருந்து பாடல்கள் கேட்கும். ‘சோலை புஷ்பங்களே’ என்ற கங்கை அமரன் குரலும் ‘அரிசி குத்தும் அக்கா மகளே’ எனும் மலேசியா வாசுதேவன் குரலும் இன்னமும் நினைவில் உள்ளவை. இந்தி என்றால் ‘நூரி நூரி’ என்று காதல் வேதனையுடன் ஒரு வடக்கத்திய குரல் கேட்கும். ஊர் வாரியாக பிரிந்த நண்பர்கள் குழாம் அவ்வப்போது அடித்துக் கொள்வதும் ரசனையாக இருக்கும்.

இப்படி சகல சுவாரசியங்கள் இருந்தும் ஹாஸ்டலை விட்டு வெளியேறினோம். ‘பி.ஜி’ ஸ்டூடண்ட் என்று கெத்து காட்ட நினைத்தோம். ஓப் காலேஜ் அருகில் ஒரு மாடி குடித்தனத்தில் நண்பர்களாக நாங்கள் குடிபெயர்ந்தோம். மூர்த்தி கேளிக்கை மன்னன். தனபால் அப்போதே நிதி நிர்வாகி. ரவி மிகவும் அமைதி. நாங்கள் பார்த்த படங்கள் கணக்கில் அடங்காதவை. அடுத்தடுத்த காட்சிகள் தொடர்ந்து பாத்திருக்கிறோம். படம் பார்த்து விட்டு நேரம் கெட்ட நேரத்தில் திரும்பினாலும் கண்ணம்மா மெஸ்ஸில் இரவில் சுடு சோறு கிடைக்கும். ரூம் வாழ்வின் அற்புத தருணங்கள் இப்படி இரவில் தான் வாய்க்கும்.

நள்ளிரவில் மணி பேக்கரியில் டீ குடிக்க செல்வோம், இருக்கின்ற காசுக்கு காரக்கடலை வாங்கி பகிர்ந்து உண்போம். திரைக்கு வரும் முன் பல திரைப்பாடல்கள் கேட்டு அறிமுகமாகும் இடம் அந்த பேக்கரிதான். சந்தைக்கு வந்தவுடன் கேசட்டில் பதிந்து அதை ஒலிப்பரப்புச் செய்வார்கள். அங்குதான் விக்ரம் பாடலை முதன் முறையாகக் கேட்டேன். ஒரு குறட்டை சத்தம் போல ஆரம்பித்த கம்ப்யூட்டர் இசையின் அதிர்வுகள் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ’விக்ரம்ம்ம்ம்..’ என்ற கமலின் பதப்படுத்தப்பட்ட குரல் எங்களை வசியம் செய்தது.

‘நான் வெற்றி பெற்றவன்.. இமையம் தொட்டு விட்டவன்..’ என்ற வரிகளுடன் பின்னிரவில் திரும்பி நடந்து சென்றோம். முதல் நாள் பார்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் படுக்கச் சென்றோம். குமுதத்தில் வந்த விக்ரம் தொடர்கதையை நான் படித்து வந்ததால் பரவச நிலைக்கு தயாரானேன். எழுத்தாளர் சுஜாதாவின் தீவிர வாசகனாக இருந்த காலம் அது. விரைவிலேயே நாங்களும் பாடல்கள் பதிந்து கிடைக்கும் நேரமெல்லாம் கேட்டு மனப்பாடம் செய்தோம். ‘கண்ணே தொட்டுக்கவா? கட்டிக்கவா?’ என்று தொடங்கி, வரி விடாமல் பாட ஆரம்பித்தோம்:

‘குளிக்கிற மீனுக்கு குளிரென்ன அடிக்குது

பசி தாங்குமோ இளமை இனி..

பரிமாற வா இளமாங்கனி.. வனிதாமணி வனமோகினி.. வந்தாடு’

“பாட்டு படத்தில பட்டைய கிளப்ப போகுது மச்சான்” என்று பேசிக்கொண்டோம். விக்ரம் ரிலீசுக்கு காத்திருந்தோம்.

நான் திரைப்பட இயக்குனர் ஆவேன் என்று என்னைவிட அதிகம் நம்பிய ரவி என்னை விளிப்பதே ‘எங்க டைரக்டர்’ என்றுதான். அவர்தான் என் முதல் படத்தின் தயாரிப்பாளர் என்பது எங்கள் ஒப்பந்தம். ஐந்து லட்சத்தில் படத்தை முடிக்கலாம் என்று பல கிராமத்து காதல் கதைகள் பேசியிருக்கிறோம். ஒரு படத்தைப் பார்த்து அதை ரசித்து பகுப்பாய்வு செய்வது எங்கள் பகுதி நேர வாழ்வானது. முதுகலைப் படிப்பு தொடராத ரவி எனக்காக ஒரு மாலை நேர பட்டயப் படிப்பு சேர்ந்து தினசரி பெருமாநல்லூரிலிருந்து கோவை வந்து போவார். கிளாஸ் போன நாட்களை விட கே.ஜி போன நாட்கள் தான் அதிகம். அப்படி ஒரு வெள்ளி மாலையில் டிப்ளமா வகுப்பை கட் அடித்து விட்டுத்தான் விக்ரம் பட டிக்கெட்டிற்கு போராடினோம்.

விக்ரம்(1986) படத்தில்
விக்ரம்(1986) படத்தில்

கோவையில் கிடைக்கவில்லை என்றதும் ரவி, “வாய்யா திருப்பூர் போலாம்” என்று ஐடியா கொடுக்க, சில பேருந்துகள் மாறி திருப்பூர் சென்றோம். அங்கும் ஹவுஸ் புல். நான் விடுவதாக இல்லை. தியேட்டர் மேனேஜர் அறைக்கு சென்று ஊரின் பெரிய வக்கீலின் பெயர் சொல்லி டிக்கெட் கேட்டேன். ஆங்கிலத்தில் அதிகம் பேசியதாலோ என்னவோ, சிறிது நேரம் காக்க வைத்து இரண்டு டிக்கெட்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

கனவு மெய்ப்பட்டது போல மிதந்தோம். டைட்டில் போட்டவுடன் கை தட்டலில் அரங்கம் அதிர்ந்தது. கம்ப்யூட்டர் கொண்டு சேர்த்த ஒலிகளில், வித்தியாசமான ஒளி அமைப்புடன் கமல் குழ்வினருடன் ஆடிய நடனமும் எங்கள் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. சில நிமிடங்களிலேயே ‘கண்ணே தொட்டுக்கவா?’ என்று அம்பிகாவுடன் டூயட் ஆடும் பாடலில் விக்ரம் அறிமுகமானது எனக்கு ஏமாற்றத்தை தந்தது. நான் அந்த பாடலை கமலும் டிம்பிளும் ஆடும் ஒரு சரசப்பாடலாய் கற்பனை செய்து வைத்திருந்தேன்.

பாட்டு முடிந்து அம்பிகா குங்குமம் வைத்த இடத்தில் குண்டடி பட்டு இறந்தது, அவசர அவசரமாய் கதை சொன்னதாய் பட்டது. பிறகு தான் படம் சூடு பிடித்தது. சாருஹாசனிடம் “யார் அந்த ........ பையன்?” என்று தொடங்கி, உளவுத்துறையில் உள்ள கருங்காலியை சித்ரவதை செய்து வாக்கு மூலம் பெற முயல்வது, லிசியுடன் மைலாப்பூர் வீதிகளில் துரத்தல் காட்சிகள் என படு விறுவிறுப்பாய் சென்றது. ராக்கெட்டை கடத்திய சுகிரதராஜாவை ஒரு டாக்குமெண்டரி ரீலில் பார்த்து சலாமியா சென்றதும் படம் துவளத் தொடங்கியது. மாமிச மலை போன்ற பேரரசன் அம்ஜத் கான், கவர்ச்சியான இளவரசி டிம்பிள், மூன்றாம் பாலின துபாஷ் ஜனகராஜ் என்று வினோத உலகிற்கு எங்களை இழுத்துச் சென்றது.

பிற்பகுதியில் ‘ஏஞ்சோடி மஞ்சக்குருவி’க்கு கமல் ஆடும் குத்தாட்டமும், டிம்பிளுடன் ஆடும் ’மீண்டும் மீண்டும் வா’ என்ற மிட் நைட் மசாலா பாடல் காட்சியும்தான் ரசிகர்களை திருப்திபடுத்தியது. மதகுரு, எலி கோயில் என்று எங்கெங்கோ தடம் புரண்டு, வில்லனை வானில் துரத்தி வீழ்த்தி, இரு நாயகிகளும் உரிமை கோர தப்பி ஓடுகிறார் அதே விக்ரம் பாட்டுடன்.

படம் முடிந்து சிரமப்பட்டு ரவி வீடு சேர்ந்தோம். படம் பற்றி ரவி நீண்ட நேரம் பேசவில்லை. “பரவாயில்லை. எதிர்பர்த்த அளவு இல்லை” என்று முடித்துக் கொண்டோம். இருந்தும் அதை இரண்டாம் முறை பார்க்க தவறவில்லை.

விக்ரம் படம் ஒரு கிளாசிக்கல் ஜேம்ஸ் பாண்ட் டெம்ப்ளேட். தேச நலனை காக்க ஏஜண்ட் விக்ரம் குமார் அழைக்கப்படுகிறார். இந்த திரைக்கதையில் செகாவ்ஸ் கன் உத்தி பின்பற்றப்படுள்ளது. ராக்கெட்டைத் தேடி படம் நகர்கிறது. எதிரி நாட்டுக்கு கடத்தப்படும் ராக்கெட்டை கண்டுபிடிக்க கலைக்குகுழு உறுப்பினர்களாக ஏஜண்டும், கம்ப்யூட்டர் யுவதியும் செல்கிறார்கள். துரத்தல், சாகசம், முத்தம், கலவி, கொலை என பாண்ட் படத்தின் அத்தனை அம்சங்களும் உள்ளன.

ஆனால் 1986-இல் இதை தமிழில் அப்படியே தர தயக்கங்கள் இருந்திருக்கும். சுஜாதா அநாயசமாக எழுதிய கதையை தமிழ் ரசிகர்கள் விரும்பும் வண்ணம் தயாரித்து வெற்றி பெறச் செய்ய கமல் நிறைய முயற்சித்திருக்கிறார். ராக்கெட்டை புரிய வைக்க அரசியல்வாதி வி.கே.ராமசாமி மூலம் “இங்க வெடிச்சா ஆம்பூர் வரைக்கும் பாதிக்குமா?” என்று கேட்க வைத்தது, அம்பிகா சுமங்கலியாய் சாவது (தீர்க்க சுமங்கலி பவா வாழ்த்து), ஜனகராஜின் இரட்டை அர்த்த வசனங்கள் உள்ளிட்ட யாவும் பி, சி சென்டர்களை குறி வைத்து எடுக்கப்பட்டவை.

கமல் - சுஜாதா
கமல் - சுஜாதா

படம் வெற்றி என்றாலும் கோவையில் சுமாராகப் போனது. சிற்றூர்களில் சரியாகப் போகவில்லை. படம் கலவையான விமர்சனம் பெற்றாலும், இளையராஜாவின் இசையும், பாடல்களும், கமலின் macho லுக்கும், டிம்பிள் கபாடியா வரும் காட்சிகளுமாக ரசிகர்களை திரையரங்குக்கு இழுத்தன. விக்ரம், தமிழின் ஒரு நல்ல முயற்சி என்று சொல்லலாம்.

விக்ரம் படமாக்கம் பற்றி எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கதை விவாதம் நடந்ததைப் பற்றிய சுவாரசிய தகவல்கள் பல அதில் இருந்தன. கமல் கதை சொல்ல ஆரம்பித்தால் தடல் தடால் என்று பாத்திரங்கள் கொல்லப்படுவார்களாம். இயக்குனர் ராஜசேகர் எல்லாவற்றையும் உடனுக்குடன் மாற்றுவாராம். இவர்கள் மத்தியில் சுஜாதா எழுதிய அசலான முதல் பாதி குமுதத்தில் வந்தது. அது வாசகர்களை(தமிழ் பட ரசிகர்களில் மிகச்சிறிய விழுக்காடு என்றபோதும்) படம் பார்க்கத் தூண்டியது.

எனக்கு விக்ரம் கதையை விட விக்ரம் படம் பார்த்த கதை சுவாரசியமானது. கமலின் முதல் சாய்ஸ் இயக்குனர் மணிரத்னம் என்று படித்தேன். அன்று அவர் பிரபலம் அல்ல. அவர் இயக்கியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? என் நண்பன் ரவி படிப்பை நிறுத்தாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? நான் மேலே படிக்காமல் அப்போதே சினிமாவைத் தேடி வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்து கணக்கிடும் யூகங்கள் சுவாரசியமானவை.

’விக்ரம் 2’ படத்துக்கு மகனுடன் முதல் நாள் முதல் காட்சி தியேட்டரில் பார்த்தேன். ’கைதி’யின் வடிவத்தில் புதிய விக்ரமை உருவாக்கிய லோகேஷ் கனராஜின் புத்திசாலித்தனம் பிடித்திருந்தது. விக்ரம்1-க்கு கிடைக்காத வெற்றி விக்ரம் 2-க்கு கிடைத்ததற்கு பல காரணங்கள். பல நல்ல படங்களில் தவறவிட்ட வெற்றியை, கமல் இந்த படத்தின் மூலம் ருசித்திருக்கிறார்.

ரவியுடன் பெரிய தொடர்பு இல்லை. அடுத்த முறை சந்திக்கையில் நான் கண்டிப்பாக கேட்பேன்.

”விக்ரம் 2 பார்த்தாயா ரவி?”

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in