மற்றவை வெண்திரையில் - 13: அலட்டிக்கொள்ளாத பெருங்கலைஞன்!

மற்றவை வெண்திரையில் - 13: அலட்டிக்கொள்ளாத பெருங்கலைஞன்!
ஓவியம்: வெங்கி

முதல் நாள் படம் பார்ப்பது என்பது எல்லா காலத்திலும் திருவிழாதான். சிட்டியில் புக்கிங் இல்லாமல், பிளாக்கில் வாங்க பைசா இல்லாத எங்களைப் போன்ற பள்ளி மாணவர்களுக்கு அன்று கைகொடுத்தவை பல்லாவரம் ஜனதா, குரோம்பேட்டை வெற்றி, தாம்பரம் வித்யா போன்ற புறநகர் திரையரங்குகள்தான். அலங்காரில் கிடைக்காததால்தான் பல்லாவரத்துக்கு பஸ் ஏறினோம். சற்று தள்ளுமுள்ளு நடந்து டிக்கெட் கிடைத்தது. படம் ‘அலைகள் ஓய்வதில்லை’.

போதை எதுவென்று இன்றளவும் சொல்லத் தெரியவில்லை. கதைக் களமா, அலைகள் அடிக்கும் முட்டம் கடற்கரையா, அறிமுக நடிகை ராதாவா, இளையராஜாவின் இசையா, மணிவண்ணனின் வசனமா, வைரமுத்து வரிகளா அல்லது இத்தனையும் சாத்தியமாக்கிய இயக்குனர் ரசனையா, அல்லது எங்களின் பதினாறு வயது பருவமா? ஆனால் நிச்சயம் அறிமுக நாயகன் கார்த்திக் இல்லை. வெடவெட தேகத்தில் ஒடுங்கிக் கிடந்த கார்த்திக்குக்கு ராதா கிடைத்ததை மனம் ஏற்கவில்லை. நானும் அப்படித்தான் இருந்தேன் என்பது வேறு விஷயம். அந்தக் காலத்து தமிழ்ப் பையன் ஆசைப்படும் பக்கத்து வீட்டு மாநிறப் பெண்ணாக இருந்தார் ராதா. கிராமத்துக்கும் நகரத்துக்கும் ஏற்ற தோற்றம். தன்னம்பிக்கை. இயல்பான கவர்ச்சி. ராதா அறிமுகமான முதல் காட்சியிலேயே நட்சத்திரமாய் ஜொலித்தார்.

‘வாடி என் கப்பங்கிழங்கே’ என்ற கங்கை அமரன் பல்லவி எங்கள் தேசிய கீதமானது. ஆனாலும் பிறகு ஆழப் பதிந்தவை வைரமுத்துவின், ‘விழியில் விழுந்து’, ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ மற்றும் ‘காதல் ஓவியம்’ பாடல்கள்தான். இன்று யோசித்துப் பார்க்கையில் கார்த்திக்கின் காதல் துடிப்புதான் அந்தப் பாடல்களுக்கு மட்டுமல்ல, படத்துக்கே அடிநாதமாகத் திகழ்ந்தது என்று தோன்றுகிறது.

படம் சிட்டி மட்டுமில்லாமல் பட்டி தொட்டியெல்லாம் ஓடியது. அரசு விருது வாங்கியது. சிலுவை செயினையும் பூணூலையும் அறுத்த காட்சி கைத்தட்டலுடன் வரவேற்கப்பட்டது. அந்தக் காலகட்டத்துக்குச் சற்று தூக்கலான கவர்ச்சியும் படம் ஓட வழி செய்தது. கார்த்திக்கும் ராதாவும் தமிழ் சினிமாவின் அடுத்த அலைகள் என ஆனார்கள்.

நான் கோவை வந்த பின்னர்தான், ‘நினைவெல்லாம் நித்யா’ வெளியானது. பெரும் இளமைக் கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். பாடல்கள் ஏற்கெனவே பிரபலமாகி இருந்தன. இளையராஜாவும் வைரமுத்துவும் பட்டையைக் கிளப்பியிருந்தார்கள். ஶ்ரீதர் படம் வேறு. கார்த்திக் மெல்லிய மீசையோடு சுமாராய் தென்பட்டார். நண்பர்கள் பட்டாளமாய் நாஸ் தியேட்டரில் படம் பார்த்தோம். படம் பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. நாங்கள் பேசிக்கொண்டது போல படம் தோல்வியைத் தழுவியது.

படம் படுத்தாலும் படப்பாடல்கள் காலம் காலமாய் ஒலிக்கத் தொடங்கின. ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘பனி விழும் மலர் வனம்’, ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ ஆகிய பாடல்கள் பாடப்படாத மெல்லிசைக் கச்சேரிகளே இல்லை. இருந்தும் அன்று நாங்கள் பெரிதும் கொண்டாடிய பாடல்: ‘தோளின் மேலே பாரம் இல்ல... கேள்வி கேட்க ஆளுமில்ல!’ ஏனென்றால் அது நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சாராம்சம்.

கல்லூரி வாசல் அருகே இருந்த ராஜு கடைக்கு நாங்கள் உள் சுவர் பிடித்து ஏறி இடம்பிடிப்போம். டீ, சிகரெட், பப்ஸ் என அவரவர் விருப்பத்துக்குப் பலரும், எதுவும் வாங்காமல் வேடிக்கை பார்க்க என்று சிலருமாய் கூட்டம் எப்போதும் நிறைந்திருக்கும். பல திரை விமர்சனங்கள் அங்கு இயல்பாக நடக்கும். “படமா அது? மண்டை காஞ்சு போச்சு. இத பாத்ததுக்கு பாக்யான் படத்த இன்னொரு ட்ரிப் பாக்கலாம்!”

ராஜு கடையை விட்டால் உள்ளே கேன்டீனும் வண்ணமயமாக் இருக்கும். எங்கள் கல்லூரி கேன்டீனில் டீ கேக்கும், முட்டை போண்டாவும் அவ்வளவு பிரபலம். பில் போடும் பாபும் எங்களை கண்டவுடன் ஒரு சின்ன சலாம் அடித்துவிட்டு, “ நேத்து வல்லீங்களா? மூர்த்தி வந்தார். உங்களைக் காணோம்” என்பார். எங்களைப் போன்ற சிலர் மட்டும் பெண்கள் பகுதியில் தாரளமாய் உட்கார்ந்து கடலை போடலாம். டேபிளுக்கே டீ சூடாக வரும். வெளியே வந்தால் சின்னதாய் புகை அன்பர்கள் திரியில் கொளுத்தியவாறு தத்துவம் பேசிக் கொண்டிருப்பார்கள்.

கல்லூரியில் உள்ள புல் வெளிகளில் நாங்கள் தாராளமாகப் படுத்து உருளுவோம். கவிஞர் எழிற்கோ நோட்டு நிறைய காதல் கவிதைகள் வைத்து படித்துக் காட்டுவார். அல்ல, நடித்துக் காட்டுவார். புரிந்தும் புரியாமலும் கூட்டம் புல்லரித்துப் போகும். கவிஞர் அப்போதே கலகக்காரர்தான். ஒரு கலை விழாவில் பால்கனியில் நின்று முழுக் கூட்டத்தையும் தன் வசம் ஈர்த்தபடி ஓர் ஆட்டம் போட்டார். ‘வந்தனம் என் வந்தனம்’ பாடல் என்று நினைக்கிறேன். கீழே முதல் வரிசையில் இருந்த கல்லூரி முதல்வர் டி.கே.பி. ஒரு துண்டுச் சீட்டை எழுதி மேலே அனுப்பினார்: ‘தொடர்ந்து ஆடினால் சஸ்பெண்ட் செய்யப்படுவாய்!’ கவிஞர் அசரவில்லையே. சீட்டை கிழித்துப் போட்டுவிட்டு ஆட்டத்தைத் தொடர்ந்தார். பிறகென்ன? சஸ்பென்ஷன்தான். அந்த காலம் முழுதும் ராஜு கடையிலேயே தம் பணிகளை தொடர்ந்தார். பை த வே, அந்தக் கவிஞர் எழிற்கோ தான் இன்று பாமரன் என்ற பெயரில் பல சமூகப்பணிகள் செய்துவரும் ஷண்முக சுந்தரம்.

இன்னொரு புறம் சசி நாடகத் துறையில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தார். ‘மனைவி அமைவதெல்லாம் புரோக்கர் கொடுத்த வரம்’ அப்போது பிரபலம். நாங்கள் அண்ணாந்து பார்த்த நடிகர்களிடம் சசி நல்ல நட்பில் இருந்தார். “ராஜண்ணே ( நடிகர் சத்யராஜ்) கூட தான் டிராவல். நைட் பூரா தூங்கல” என்று பந்தாவாக எங்களிடமிருந்து சிகரெட் வாங்கிப் பற்றவைப்பார். பின்னர் ஶ்ரீதேவ் என்ற பெயரில் சில படங்களை இயக்கினார்.

வைரமுத்து, மு.மேத்தா, மீரா என கவிப்பித்து நிறைந்த காலம் அது. பாடல் கேசட் முன்னுரையில்கூட பாரதிராஜா கவி வரிகளில் எங்களைக் கலங்கடிப்பார். பெண்கள் காதலில் சுலபமாக வசப்படாத காலம். அதனால் ஜனத்தொகையில் குத்துமதிப்பாக 33.3 சதவீதம் பேர் காதல் கவிதை எழும் கவிஞர்களாக இருந்தார்கள். மைனாரிட்டியாக சிலர் நாட்டையே புரட்டிப் போடும் சீர்திருத்த வரிகள் எழுதுவார்கள்.

நானும் எல்லா வகையிலும் எழுத ஆரம்பித்த காலம். அவற்றில் பல கல்லூரி இதழிலும் வெளி வந்தன. ஒரு முறை எழுதினேன்:

“இந்தியா

ஏழை நாடாக இருப்பது

ஒரு வகையில் நல்லதுதான்.

இல்லை என்றால் இங்கு

தடமெல்லாம் தாஜ்மகால் தோன்றியிருக்கும்!’

இதைப் படித்துவிட்டு என் ஹாஸ்டல் சீனியர் ஒருவர் அர்த்த ராத்திரியில் அறைக் கதவைத் தட்டி எழுப்பி என்னைக் கட்டிக்கொண்டார். வேட்டி நழுவியது தெரியாது “அருமை அருமை” என்றார். ஹாஸ்டல் அறை, கேன்டீன், ராஜு கடை, ஆடிட்டோரியம், சித்ரா அருகில் இருந்த நிஷா பேக்கரி என ஒவ்வொரு இடத்திலும் சொல்ல ஸ்தல புராணங்கள் இருந்தன.

‘தோளின் மேலே பாரமில்லே’ பாடலின் நாயகர்கள் அன்று நாங்கள்தான்.

நடிகர் கார்த்திக் சரியான படங்களில் நடிக்காமல் மார்க்கெட் இழந்துகொண்டிருந்த சமயத்தில்தான் ‘மெளன ராகம்’ வெளியானது. மெருகேறிய உடல், துடிப்பான நடிப்பு, வசீகரப் புன்னகை, தொற்றிக்கொள்ளும் உற்சாகம் என யாரும் எதிர்பார்க்காத surprise package ஆகத் தோன்றினார். படத்தில் இருபது நிமிடங்கள்தான் தோன்றியிருப்பார். தமிழ்ப் படவுலகில் தன் இருப்பை அடுத்த 20 வருடங்கள் உறுதிசெய்த ஆழமான நடிப்பு அது. இயல்பான காதலர்களைக் காட்சிப்படுத்திய பெருமை மணிரத்னத்தைச் சேரும். அதற்கு முழுமையாக உயிர் கொடுத்த பெருமை கார்த்திக்கையும் ரேவதியையும் சேரும்.

அடுத்த வந்த ‘அக்னி நட்சத்திர’த்தில் ஶ்ரீராமின் லைட்டிங்கில் இளையராஜா குரலில், ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ என்று அவர் ஆடுகையில் அடுத்த காதல் நாயகனைத் திரையுலகம் கண்டெடுத்தது. ஆனால் கார்த்திக் அதற்குப் பின் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. ‘கிழக்கு வாசல்’, ‘பொன்னுமணி’, ‘கோபுர வாசலிலே’, ‘கோகுலத்தில் சீதை’ என சில தரமான படங்களில் நடித்தாலும் அதிகம் அலட்டிக்கொள்ளாமல், வந்த படங்களில் நடித்துக்கொடுத்தார் என்றுதான் தோன்றுகிறது. ‘உள்ளத்தை அள்ளித்தா’ அவரை காமெடி படங்களில் நடிக்கும் ஊட்டிக்காரர் என்று ஆக்கியது. அவரைப் பற்றி நிறைய எதிர்மறைச் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் ரசிகைகளின் உள்ளம் கவர் கள்வன் என்றால் கமலுக்குப் பிறகு கார்த்திக் தான் என்று அடித்துச் சொல்ல முடியும்.

காதலின் ஏக்கத்தையும், தவிப்பையும், சோகத்தையும், அவலத்தையும் காட்டும் அவரின் ஆழமான நடிப்பை, சில பாடல் காட்சிகளைப் பார்த்தாலே தெரியும். ‘பாடிப் பறந்த கிளி’ (கிழக்கு வாசல்) , ‘தாலாட்டும் பூங்காற்று நானல்லவா’ (கோபுர வாசலிலே), ‘சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே (நாடோடித் தென்றல்) என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

அரசியல், படத்தயாரிப்பு, பிற வணிகம் என எதிலும் பெரிதாகச் சோபிக்கவில்லை அவர். 40 ஆண்டுகளில் அவர் நடித்த படங்களில் தரமான படங்கள் குறைவானவைதான். ஆனால் தனித்த ஆளுமையும், நிரம்பிய திறமையும் கொண்ட அவருக்கு இன்னமும் நல்ல படங்கள் வாய்த்திருக்கலாம். அது நிகழாததற்கு அவரேகூட காரணமாக இருந்திருக்கலாம்!

(திரை விரியும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in