மற்றவை வெண்திரையில்-10: மனித உணர்வுகளை வைத்து மாயாஜாலம் நிகழ்த்திய மகேந்திரன்!

இயக்குநர் மகேந்திரன்
இயக்குநர் மகேந்திரன்

படம் போட்ட பின் தியேட்டர் இருட்டில் சீட்டை தேடித் தடவி உட்கார்ந்து பக்கத்து சீட்காரரிடம்,“இதுவரை என்னாச்சு சார்?” என்று கேட்டிருப்பீர்கள். அது போல இந்தத் தொடரை திடீரென்று ஆன்லனில் 8-வது கட்டுரையிலிருந்து படிக்க ஆரம்பித்தவர்களுக்கு ஒரு ‘முன்கதைச் சுருக்கம்’ உதவும். இந்தத் தொடர் ‘படம் பார்த்த கதை பகிரல்’ என்று சொல்லலாம். இவை திரை விமர்சனங்கள் அல்ல. இது ஒரு ரசிகனின் கதைத் தொடர்கள். அதனால் இந்த கட்டுரைகளை வகைமைப்படுத்துவது சிரமம். இவற்றைப் படிக்கும்போது, ‘இந்தப் படத்தை நான் பார்த்தபோது’ என்று உங்கள் நினைவுகள் பின்னோக்கிப் போவதுதான் இயல்பு. ('காமதேனு'வின் அச்சுப்பிரதியில் இந்தத் தொடரை ஆரம்பித்தபோது ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. கரோனாவில் நின்றது இரண்டு வருடங்களுக்கு பின் மீண்டும் இப்போது தொடர்கிறது).

கரோனா காலத்தில் அடைந்து கிடைந்தபோது, பார்க்கத் தவறிய மலையாளப் படங்கள் அனைத்தும் பார்த்தேன். கருந்தேள் ராஜேஷ் ‘அயல் சினிமா’ இதழில் தமிழில் ஏன் நல்ல feel good படங்களே வருவதில்லை என்று ஆதங்கப்பட்டு ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் பார்க்க வேண்டிய அவ்வகை மலையாளப் படங்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் தந்திருந்தார். அவற்றில் பலவற்றைத் தேடிதேடிப் பார்த்தேன். இதமான மன நிலையைத் தரும் ஸ்தல சித்திரங்கள் அங்கு ஏராளம்தான். ஒரு சின்ன சிறுகதையைப் பிரமாதமான சினிமாவாக மாற்றுகிறார்கள். எல்லாருமே அங்கு நிஜமாகவே மெனக்கெட்டு நடிக்கிறார்கள். அதிலும் பகத் பாசில் என்ற ஒரு அரக்கன் போதும்.

தமிழில் பலர் நடிகர்கள் ஆவதற்கு முன்னரே நட்சத்திரங்கள் ஆக அவசரப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது. நட்சத்திரங்களுக்குப் படம் பண்ணும் வித்தையைத் தெரிந்தவர்கள் தான் இங்கு தமிழில் நிலைக்க முடிகிறது. ஆனால் நட்சத்திரத்தை நடிக்க வைத்த இயக்குநர்களும் இங்கு இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள்.

’முள்ளும் மலரும்’ திரைப்படத்தில் ரஜினி, ஷோபா
’முள்ளும் மலரும்’ திரைப்படத்தில் ரஜினி, ஷோபா

காளி பாத்திரத்திற்கு ரஜினிகாந்த் என்ற நடிகரைத் தேர்ந்தெடுத்தவர் இயக்குநர் மகேந்திரன். வளர்ந்துவரும் சூப்பர் ஸ்டாரை இடைவேளைக்குப் பின்னர் கை இழந்த பாத்திரத்தில் நடிக்கவைக்க எவ்வளவு தைரியம் வேண்டும்? ‘பாசமலர்’ போல அண்ணன் தங்கை சென்டிமென்ட் கதை என்று நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர் முதல் பிரதி பார்த்து அதிர்ந்ததில் நியாயம் இருந்தது. ‘முள்ளும் மலரும்’ வெறும் அண்ணன் தங்கை கதையா? தான் விரும்பாத ஒருவனுக்கு தன் தங்கையைக் கட்டிக்கொடுக்க தடுமாறும் அண்ணனின் கதை அது. என்ன தான் கனமான கதை என்றாலும் முள்ளும் மலரும் ஒரு இதமான திரை அனுபவத்தை பார்வையாளர்களுக்கு அளித்தது என்று சொல்வேன்.

ஓவியம்: வெங்கி

ராக்சி தியேட்டரில் ஒரு மாலைக் காட்சிக்கு அழைத்துச் சென்றார்கள். அரும்பாக்கத்திலிருந்து 14A பிடித்து புரசைவாக்கம் செல்ல வேண்டும். நல்ல குடும்ப படம் என்று அப்பா அழைத்து சென்றாலும் ஆக்ரோஷமான சில சண்டை காட்சிகளை நான் உள்ளூர எதிர்பார்த்தேன். பள்ளி நாட்களில் ஒரு படம் போவது என்பது பல மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் பரவச அனுபவம். புது படத்தை முதல் சில வாரங்களில் பார்ப்பது என்பது கும்பாபிஷேக நிகழ்வு போல. கதை கேட்காமல், படம் பற்றி எதுவும் தெரியாமல் பார்த்த முதல் புதிய படம் என்று சொல்லலாம். அந்த கன்னி நிகழ்வுதான் ராக்சி தியேட்டரில் நடந்தது.

ஒரு முரட்டுக் குரலில் தொடங்கும் டைட்டில் பாடலில் ஒரு கோபக்கார சிறுவன் அறிமுகமாகிறான். மிக எளிமையான காட்சிகளில் ஒரு அண்ணன் - தங்கை வாழும் அழகான சூழலுக்குப் பயணமாகிறோம். சின்னச் சின்ன வசனங்களில் ஒரு அழுத்தமான கதை உருவாகும் வித்தை நடக்கிறது. காளி நான் எதிர்பார்த்த ரஜினி இல்லை; இருந்தும் பிடித்தது. ஷோபா காட்டிய முகபாவங்கள் அது வரை திரையில் நான் காணாதது. சரத் பாபு காட்டிய கண்ணியமான நவீனம், குமரிமுத்து, வெண்ணிற ஆடை மூர்த்தி காட்டிய நிஜ மனிதர்களின் பரிமாணங்கள், படாபட்டின் தீனிப் பண்டார பாத்திரத்தன்மை யாவும் அடுத்த வீட்டு ஜன்னல் வழியே ஒரு கதையைப் பார்ப்பது போன்ற உணர்வை அளித்தது. படம் நெடுக தோன்றும் இதமான வெளிச்சமும் வண்ணமும் அப்படி ஒரு நெகிழ்வைத் தந்தன. யாரோ பாலு மகேந்திரா என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். எல்லாமே சோலோ பாடல்கள். சரத்பாபுவிற்குக் கிடைத்த, ‘செந்தாழம் பூவில்’ தான் அதிகப் பிரபலம் அப்போது.. ரஜினிக்கு கிடைத்த, ‘ராமன் ஆண்டாலும்’ மற்றும் படாபட் பாடும், ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு’ பாடல்களும் அன்று வெகுவாக ஈர்த்தாலும், என்று அழியா ஆன்மாவின் வெளிப்பாடாக என்றும் ஒலிப்பது, ‘அடிப் பெண்ணே!’ பாடல் தான். அதில் ஷோபாவின் நுண்ணுர்வுகளின் யதார்த்த வெளிப்பாடு தமிழ்ப் படச் சூழலுக்குப் புதிது.

அண்ணன் தங்கை பாசத்தை ஆழமாய் சொன்ன படத்தில் அவர்கள் பாடுவதாக சென்டிமென்ட் பாடல் கிடையாது. ரஜினிக்கு டூயட்டே கிடையாது. நாயகனுக்கு எதிரியாகத் தோன்றும் சரத்துடன் ஒரு சண்டைக் காட்சி கிடையாது. சபலபுத்திக்கார பெட்டிக் கடைக்கார நண்பரைத் தங்கைக்குக் கட்டிவைக்க நினைக்கும் அளவு முரட்டு முட்டாள் அண்ணன் பாத்திரம் எவ்வளவு சவாலானது? ஆனால் அதன் அடிநாதமான அன்பும் ஆக்கிரமிப்பு உணர்வும் நமக்குப் புரிவதால் காளி பாத்திரத்தை நம்மால் ஏற்க முடிகிறது.

பெரிய சம்பவ திருப்பங்கள் இல்லாமல், பக்கம் பக்கமாக வசனங்கள் இல்லாமல், நமக்குப் பழக்கப்பட்ட சினிமாத்தனங்கள் எதுவுமே மில்லாமல் காட்சிபூர்வமாக ஒரு கதையை இதமான தொனியில் சொல்ல எத்தனை தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்திருக்க வேண்டும்? அதுவும் ரஜினிகாந்த் போன்ற வெகு ஜன நட்சத்திரத்தை முதல் படத்திலேயே கையாண்ட விதம் இன்றும் எனக்கு வியப்பைத் தருகிறது.

மகேந்திரன் எனும் அற்புதப் படைப்பாளியின் வாழ்க்கை சரிதத்தை அவர் வாயால் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 2000-ல் கார்ப்பரேட் வேலை சலித்து வெளியே வந்தபோது நண்பர்களோடு சேர்ந்து சில குறும்படங்கள் மற்றும் ஒரு தொலைக்காட்சித் தொடர் இயக்கித் தயாரித்தேன். ‘சினிமாவில் பெண்கள்’ என்ற ஆவணத் தொடரில் முதலில் நான் அழைத்தது இயக்குநர் மகேந்திரனைத்தான். மிக எளிதில் ஒப்புக்கொண்ட அவர், ஷூட்டிங்கில் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். அவரை நான் நேர்காணல் செய்ததுதான் முதல் அனுபவம். அவர் பேச்சை இடைமறிக்க மனம் வராமல் நான் ரசிக்க... ஒளிப்பதிவாளர் நேரம் ஆகிக்கொண்டிருப்பதை, தொடர்ந்து செய்கை காட்டிக் கொண்டிருந்தார். 50 நிமிடமாக வெட்ட வேண்டிய நிகழ்ச்சிக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் பேசினோம். என்னால் ரசிக மனோ பாவத்திலிருந்து கடைசி வரை பேட்டியாளர் மனோபாவத்திற்குச் செல்ல முடியவில்லை.

மகேந்திரன் இலக்கியப் படைப்புகளைக் கையாண்டதால்தான் திரையில் வெற்றி கண்டார் என்று ஒரு கருத்து உண்டு. அதை நான் ஏற்க மாட்டேன். உமா சந்திரனின் ‘முள்ளும் மலரும்’ கதையை வெகுவாக மாற்றியவர், புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ கதையின் பாத்திரப் படைப்புகளை மட்டுமே வைத்து ‘உதிரிப்பூக்கள்’ செய்தார். அவர் மிகச்சிறந்த கதைகளை முழுதாக அப்படியே எடுக்கவில்லை. மாறாக சுமாரான கதைகளை அற்புதமான காட்சி மொழியால் பிரமாதப்படுத்தினார் என்றுதான் சொல்வேன்.

இயக்குநர் மகேந்திரன்
இயக்குநர் மகேந்திரன்

வெற்றி பெற்ற, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘ஜானி’ படங்களைப் போலவே தோல்வியுற்ற ‘நண்டு’, ‘மெட்டி’ போன்றவையும் நிறைவான படைப்புகளே. ‘கை கொடுக்கும் கை’ படம் ஹீரோ(யிசம்) கைவைத்ததால் அதன் வெற்றி கைநழுவிப் போனது என்று தெரிந்துகொண்டேன். அவரின் கடைசி சில படங்கள் எனக்கு பார்க்கக் கிடைக்கவில்லை. கடைசி 20 வருடங்கள் பெரிதாகப் படங்கள் இயக்காமல் இருந்தும், சில படங்களில் நடிகராக பிரகாசித்தாலும், அவரின் பாதிப்பு திரை உலகில் அழுத்தமாகப் பதிந்துவிட்டதாக நினைக்கிறேன். ‘உதிரிப்பூக்க’ளைக் கொண்டாடாமல் ஒரு திரை ரசனைப் பயிற்சி நிறைவு பெற்றதில்லை.

அந்தப் படம் பற்றி எழுத்தாளர் அசோகமித்ரன் பாராட்டி எழுதினாலும் ஒரு மாற்றுக் கருத்தை முன்வைத்திருந்தார். படத்தில் விஜயன் நடித்த கதாபாத்திரம் ஊர் கூடி தண்டிக்கும் அளவிற்கு யாரும் செய்யாத தவறைச் செய்யவில்லை; தவிர மச்சினி மேல் ஆசைப்படும் வக்கிர புத்திக் கணவன் என்பது கிராமத்தில் பெரிதும் காணப்படாத பாத்திரம் அல்ல என்று எழுதியிருந்தார். இத்தனை வருடங்கள் கழித்து யோசிக்கையில் அது எனக்குச் சரி என்றுதான் தோன்றுகிறது. ஆனால் விஜயன் பிள்ளைகளிடம் குளிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு இறக்கப் போகும் அந்த கடைசிக் காட்சியில் மனசைப் பிசைய வைத்ததுதான் மகேந்திரனின் மேதைமை.

‘உதிரிப்பூக்கள்’ திரைப்படக் காட்சி...
‘உதிரிப்பூக்கள்’ திரைப்படக் காட்சி...

அவர் கதைகளில் குறை இருக்கலாம். ஆனால் கதை மாந்தர்களின் மன இயல்புகளை அறிந்து அசோக்குமாரும், லெனினும், இளையராஜாவும் அவர் படைப்புகளுக்கு வலு சேர்த்தார்கள். ‘நண்டு’ படத்தில் வரும் ‘மஞ்சள் வெயில்’, ‘ஜானி’யின் ‘ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்’, ‘உதிரிப்பூக்க’ளின் ‘அழகிய கண்ணே’, மெட்டியில் இடம்பெற்ற ‘மெட்டி ஒலி காற்றோடு’ என எந்தப் பாட்டைக் கேட்டாலும் உங்கள் உள்ளம் குழையும். நெகிழும். இளையராஜா சொல்லில் விவரிக்க இயலாத அளவு மென்மையான இசையைப் படத்திற்குப் படம் கொடுத்திருப்பார்.

மகேந்திரனின் நாயகர்கள், நாயகிகள் யாவரும் மென்மையானவர்கள். அது மகேந்திரனின் சொந்த இயல்பு என்று சொல்வேன். குறைப்பிரசவத்தில் பிறந்த தன்னை ஒர் செவிலி எப்படி அடைகாப்பது போல வெம்மையாக அணைத்து ஆளாக்கினாள் என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் படங்களும் அதைத்தான் நமக்கு செய்கிறதோ?

(திரை விரியும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in