மற்றவை வெண்திரையில் -14: இயக்குநர்களின் நடிகன்!

மற்றவை வெண்திரையில் -14: இயக்குநர்களின் நடிகன்!
ஓவியம்: வெங்கி

படம் பார்த்து திகிலடைந்த அனுபவம் வாழ்வில் முதல் முறை ஏற்பட்டது ‘நூறாவது நாள்’ பார்த்தபோதுதான். பிறகு பார்த்த பல ஆங்கிலப் படங்கள் கூட அவ்வளவு பாதிக்கவில்லை. கோவை மாருதி தியேட்டரில்தனியாகப் பார்த்தேன். இளையராஜா மிரட்டியிருந்தார். திகில் காட்சிக்கு வித்தியாசமாய் மிருதங்க ஒலியைச் சேர்த்திருப்பார். Extra Sensory Perception (புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு) அடிப்படையாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் அது. மோகன் மற்றும் விஜயகாந்த் நடித்திருந்த படத்தில் என்னை பெரிதும் கவர்ந்தவர் அந்த மொட்டைத் தலை வில்லன் நடிகர் சத்யராஜ் தான்.

அந்தப் படத்தின் மூலம் திடீரென்று மிகப்பெரிய கவனம் பெற்றார் சத்யராஜ். அடுத்த அவர் வில்லத்தனத்தை மையமாக அமைத்து மீண்டும் ஒரு பெரும் வாய்ப்பை அளித்தார் இயக்குனர் மணிவண்ணன். 24 மணி நேரம். ‘என் கேரக்டரையே புரிஞ்சுக்கமாட்டேங்கறயே!’ என்ற சத்யராஜ் வசனம் அன்று எங்கள் எல்லார் உதடுகளிலும் ஒட்டிக்கொண்டது. அந்த மாடுலேஷன் மணிவண்ணனுடையது என்பதை பிறகு அவர் நடிக்கவந்த பின்னர்தான் தெரிந்தது.

நாங்கள் ரசிக்கத் தொடங்கிய காலத்திலேயே எங்கள் ஊர் நாயகன் சத்யராஜ் எங்கள் கல்லூரிக்கு வந்தார். ‘கேஸ்கால்’ கலை நிகழ்வில் ஒரு மதிய வேளையில் வந்து பேச ஆரம்பித்தார்: “கிளாச கட்அடிங்க, தம் அடிங்க, படத்துக்குப் போங்க எல்லாம் ஓகே...கூடவே படிச்சு பாஸ் பண்ணுங்க!” என்று சின்னதாய்அட்வைஸ் செய்கையில் மாணவர் கூட்டம் அங்கங்கே கூக்குரல் எழுப்பத் தொடங்கியது. உடனே ஆடியன்ஸ் மனநிலையைப் புரிந்துகொண்டு, “என்னப்பா நீங்க... என் கேரக்டரையே புரிஞ்சுக்கமாட்டேங்கறீங்க!” என்றதும் கூட்டம் அரங்கு அதிர கைத்தட்டியது.

ஓவியம்: வெங்கி

தமிழ்ப் படவுலகின் பெரிய வில்லன் / எதிர்மறை நாயகன் என்ற இடத்தை அடி மேல் அடி எடுத்து வந்துதான்  பிடித்தார் சத்யராஜ்.  அவரின் வசன உச்சரிப்பும், நக்கலும், அதிகம் அலட்டிக்கொள்ளாமல் செய்யும் வில்லத்தனமும் அன்று புதிதாய் தெரிந்தது. இப்படி வில்லனான சத்யராஜ் ‘முதல் மரியாதை’ யில் ஒரு சின்ன கேமியோ வேடத்தை கிளைமாக்சுக்கு முன் செய்திருப்பார். அர்ச்சனா தியேட்டரில் அவர் முகம் தெரிந்தவுடன் கிடைத்த கைத்தட்டல் அவரின் அடுத்தகட்ட நகர்வை உறுதிப்படுத்தியது.

‘உங்கள் சத்யராஜ் எங்கள் பார்வையில்’ என்று பாரதிராஜா அவரை நேர்மறை நாயகானாக்கினார் ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில். ‘பாறையில பூ மொளச்சு பாத்தவுக யாரு... அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு!’ என்று பாடும் ரேகாவுடன் உருகும் சத்யராஜ் நடிப்பில்புதுப் பரிமாணம் காட்டினார். அவருக்கு அதுவரை கிடைக்காத வாய்ப்பு அது. கொஞ்சம் சுருதி குறைத்து, காதலுக்கு ஏங்கும் மிருதுவான பாத்திரம். அதை மிகச் சரியாகச் செய்திருப்பார் சத்யராஜ். வில்லத்தனம் மட்டுமே காட்டிவந்தவர் அந்தச் சின்னஞ்சிறு கண்களில் ஏக்கத்தைப் பிரமாதமாக வெளிப்படுத்தியிருப்பார். அதற்கு ஏற்றாற்போல காந்த சக்தி கொண்ட காதல் பாடல்களும் அந்தப் படத்தில் அவருக்கு அமைந்தன.

கல்லூரிக் காலத்தில் எனக்கு அவரின் எதிர்மறைப் பாத்திரங்களைத்தான் அதிகம் ரசித்தேன். அந்தக் காலகட்டத்தில் சத்யராஜின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் எது என்றால், ‘முதல் வசந்தம்’ என்று தான் சொல்வேன். அதில் வரும் குங்குமப்பொட்டு கவுண்டர் பாத்திரத்தில் மனிதர் வாழ்ந்திருப்பார். முழுமையான வில்லன் பாத்திரத்தை அவ்வளவு ரசிக்க வைத்திருப்பார். படம் சுமாராகப் போனது. இன்று இந்தப் படம் பெரிதாகப் பேசப்படுவதில்லை. ஆனால் படத்தை தன் ஆளுமையால் நகர்த்திச் செல்லும் தந்திரத்தை இந்தப் படத்தில் காணலாம்.

அவரும் மலேசியா வாசுதேவனும் ஊருக்குள் பரம எதிரிகள். எதிரியின் மகள் ஒரு வேலைக்காரனை காதலிப்பதை சத்யராஜ் அறியும் காட்சியில் அவர் பேசும் வசனங்களைப் பாருங்கள்:

“இவங்கய்யன் நீ மாடு மேக்கப் போறதா நெனச்சிட்டிருக்கான்... நீ என்னென்னா இவளையே...”

“சரி... சந்தோசமாஇருங்க... ஆனா சாக்கிரதையாஇருங்க.”

“நான் வெளிய சொல்ல மாட்டேன்... ஆனா தண்ணி மப்புல சொன்னாலும் சொல்லிடுவேன். எதுக்கும் சாக்கிரதையாவே இருந்துக்க.”

கடைசியில் அரை டிராயர் போட்ட பண்டியனைப் பார்த்து வைப்பார் பாருங்க ஒரு பஞ்ச்:

“ஏய்.. கல்யாணத்தன்னிக்காவது வேட்டிய கட்டு!”

 தியேட்டர் அல்லோகலப்படும். என்னால் அந்தப் படத்தில் அவர் பேசும் அத்தனை வசனங்களையும் இப்படி சொல்ல முடியும். காரணம் படம் பார்த்த சமயத்தில் சில மாதங்கள் அதே மாடுலேஷனில் தான் சுற்றித்திரிந்தேன்.

மணிவண்ணன் –சத்யராஜ்ரசவாதத்தை அவர்கள் இணைந்து பணிபுரிந்த அத்தனை படங்களிலும் இப்படி ரசமான காட்சிகளில் காணலாம். அது அவர்களின் நெருக்கமான நட்பையும் புரிதலையும்தான் காட்டின. இயக்குநர் மணிவண்ணன் எல்லா ஜானரிலும் படம் எடுத்தவர். இயக்குநர் ஸ்ரீதருக்குப் அப்படி பலதரப்பட்டபடங்கள் இயக்கியவர் இவர் ஒருவரே! அதில் பெரும்பாலான படங்களில் சத்யராஜ் நடித்திருப்பார்.

‘24 மணி நேரம்’, ‘ஜனவரி 1’, ‘முதல் வசந்தம்’, ‘விடிஞ்சா கல்யாணம்’, ‘பாலைவன ரோஜாக்கள்’, ‘சின்ன தம்பி பெரிய தம்பி’, ‘ஜல்லிக்கட்டு’, ‘அமைதிப்படை’ என எத்தனை வகைமை?

கமலுடன் ‘விக்ரம்’ படத்தில் சுகிர்தராஜா எனும் வில்லன் வேடம், ரஜினியுடன் ‘மிஸ்டர் பாரத்’ அப்பா பாத்திரம், பாரதிராஜா இயக்கத்தில் ‘வேதம் புதிது’ படத்தில் குணசித்திர வேடம், பாசில் இயக்கத்தில் ‘பூவிழி வாசலிலே’ படத்தில் வித்தியாசப் பரிமாணம் என வெளுத்துக்கட்டியிருப்பார். ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் கணவனாகவும் தத்துப்பிள்ளைக்குத் தகப்பனாகவும் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

‘அமைதிப்படை’ தமிழில் வந்த அரசியல் படங்களில் ஒரு ‘கல்ட் கிளாசிக்’ இடத்தைப் பிடித்துவிட்டது. அதே போல கலப்படமில்லாத நகைச்சுவை என்றால் பி.வாசு இயக்கத்தில் ‘நடிகன்’ படத்தைச் சொல்லலாம். கவுண்டமணியுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியை யாரால் மறக்க இயலும்? குறிப்பாக அந்த ‘புளி பிரியாணி’ சீன்! அதே போல சத்யராஜ் நடித்த பல சுவாரசியான படங்களை வரிசைப்படுத்த முடியும்: ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘மக்கள் என் பக்கம்’, ‘வேலை கிடைச்சுடுச்சு’, ‘வால்டர் வெற்றிவேல்’, ‘பிரம்மா’, ‘ஏர்போர்ட்’, ‘அண்ணாநகர் முதல் தெரு’, ‘தாய் மாமன்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’.

சத்யராஜை ஏன் ஒரு சிறப்பான நடிகர் என்று கருதுகிறேன் என்றால் அவர் இயக்குநரின் எதிர்பார்ப்புகளுக்குத் தன்னை அழகாகப் பொருத்திக்கொள்கிறார். அதனால்தான் அவரால் எல்லா வகை இயக்குநர்களிடமும் சிறப்பாகப் பணிபுரிய முடிகிறது. ஏறத்தாழ 50 வருடங்கள்  ஒரு  துறையில் நின்று  நிலைக்க வேண்டும்  என்றால் அதற்குத் தனித்திறமை மட்டும் காரணமாகாது. புதிதாய்த் தோன்றும் போக்குகளுக்குத் தன்னை தயார்படுத்திக்கொள்ளும் தன்மையும் முக்கியக் காரணம்.

பல மோசமான படங்களிலும் அவர் நடித்தார். பல வருடங்கள் பெரிய படங்கள் இல்லாமலும் இருந்தார். சில நல்ல வாய்ப்புகளைக்கூட இழந்தார். ஆனால் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருந்தார். உடற்பயிற்சியின் மூலம் தன் உடலை, மனதைப் பக்குவமாய் வைத்துக்கொண்டதையும் இங்கே குறிப்பிடலாம்.

ஷங்கர் இயக்கத்தில் ‘நண்பன்’, அட்லீயின்  ‘ராஜா ராணி’ மற்றும் ராஜமெளலியின் ‘பாகுபலி’ ஆகிய படங்கள் இளைய சந்ததியினரிடம் சத்யராஜைக் கொண்டுபோய் சேர்த்தது. ‘வீட்ல விசேஷம்’ மற்றும் ‘லவ் டுடே’ படங்களில் அவரது பங்களிப்பைக் காண்கையில் இன்னொரு பெரிய ரவுண்டு வருவார் என்று தோன்றுகிறது.

கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட சத்யராஜுக்கு  ‘பெரியார்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை அவர் வெகு சிறப்பாகச் செய்தார். அவருக்குத் தீவிர அரசியல் கருத்துக்கள்  இருந்தாலும் அதையெல்லாம் தன் படங்களில் திணிப்பதை அவர் விரும்பவில்லை. ஒரு படத்திற்கு எது தேவையோ அதை அவர் மட்டும் செய்தார்… செய்கிறார்! தனக்கு சரி என்று தோன்றும் எந்த பாத்திரத்தையும் செய்ய அவர் தயங்கியதில்லை. ஒரு படத்தில் நடிகை ஜோதிகா போல ‘சந்திரமுகி’ படத்தின்  ‘ராரா சரசுக்கு ராரா’ பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். ‘இமேஜ்’ என்ற வளையத்தில் சிக்காமல் இயல்பாக எதையும் செய்வார். அது அவர் வேலை பற்றிய சித்தாந்தம் மட்டுமல்ல, வாழ்வு பற்றிய மதிப்பீடு என்றும் சொல்லலாம்.

இதை எழுதிக்கொண்டிருக்கையில் நண்பர் ஒருவர் கேட்டார்: “ஓயாமல் பயணம் செய்கிறீர்கள். தொழில் ஆலோசனை, நிர்வாகப் பயிற்சி, அலுவல் பணி இப்படி பல வேலைகள். இதற்கிடையே எப்படி உங்களால் இத்தனை நினைவுக்குறிப்புகளுடன் நோஸ்டால்ஜியாவாக இந்தத் தொடரை எழுத முடிகிறது?”

கூலாக பதில் சொன்னேன்: “என் கேரக்டரையே புரிஞ்சுக்கமாட்டேங்கறீங்க!”

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in