மற்றவை வெண்திரையில் -12: மோகன்... காதலர்களின் பாடல் பிரதி!

மற்றவை வெண்திரையில் -12: மோகன்... காதலர்களின் பாடல் பிரதி!

நீலகிரி எக்ஸ்பிரசில் இறங்கி ஸ்டேஷன் எதிரில் இருந்த தேவி ஹோட்டலில் சூடான டீ குடித்தபோது நான் நாடுகடத்தப்பட்டது போல உணர்ந்தேன். வருடம் 1982.

“மணி என்னங்க?” என்று ஒரு பெரியவர் என்னிடம் மரியாதையோடு கேட்டது எனக்கு சின்ன கலாச்சார அதிர்வை தந்தது. குளிரில் என் பற்கள் தந்தியடித்தன. கோவை நகரம் என்னை அன்புடன் வரவேற்றது.

கோவையின் என் முதல் காதல் அங்கு இயங்கிக்கொண்டிருந்த தனியார் பேருந்துகள் மீதுதான். ஒவ்வொன்றும் நடமாடும் இசைக் கூடங்கள்.. ‘சாலையோரம் சோலை ஒன்று வாடும்’ என்று பாடி அழைக்கும். பல்லவன் பஸ்ஸில் காய்ந்து கிடந்த எனக்கு கோவை பாலைவனச்சோலையே தான். ஓடும் பேருந்தில் இசையின் தாள கதிக்குப் பயணிகள் ஒத்திசைவான நகர்வுகள் கொடுப்பது போலத் தோன்றும். பேருந்தில் முன் பாதி பெண்கள் பகுதி என்பதால் சில ஓட்டுனர்கள் ‘அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்’ ரேஞ்சில் சிம்மாசனத்தில் உட்கார்ந்து கியர் போடுவார்கள்.

என் கல்லூரிக் காலங்கள் இசையால் நிரம்பி வழிந்தவை. சென்னை நகர சூழலில் வளர்ந்த எனக்குக் கோவையை முழுதான ஒரு பெரு நகரமாக அன்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சின்ன ஊர், எட்டிப் பார்த்தால் மலைகள் தெரியும். அவினாசி சாலையிலேயே விவசாய நிலங்கள் இருந்தன. எங்கள் கல்லூரிக்கு எதிரில் சூரிய காந்தி பயிரிட்டிருப்பார்கள். பல இடங்களில் சோளக்காடுகள் இருக்கும். காலையிலும் மாலையிலும் வானில் மேகக்கூட்டங்கள் நவீன சித்திரங்கள் வரைந்திருக்கும்.

சாலையில் வாகனங்கள் குறைவு. பாட்டு வண்டிக்காகக் காத்திருந்து ஏறுவோம்.

வண்டி வருவதற்கு முன் சாலையில் பாட்டு சப்தம் கேட்கும். பேருந்தின் முன்பகுதி பெண்களுக்குப் பின்பகுதி ஆண்களுக்கு. எங்கள் கல்லூரி வாசலில் ராஜு கடை இருக்கும். சாலையின் சுவரில் நாங்கள் வரிசையாக உட்கார்ந்திருப்போம். கல்லூரி நேரத்தில் போட்டி போட்டுக்கொண்டு பேருந்துகள் சீறி வந்து வட்டமடிக்கும். முன்னால் இறங்கும் தேவதைகளுக்கென பாடல்களை முன்னரே தயாராக வைத்திருப்பார்கள். பல நூறு கண்கள் மொய்க்க பேருந்து படிகளில் ராஜா இசையில் இறங்கிவரும் பெண்களுக்கு இணையான ராம்ப் வாக் எதுவும் இல்லை.

பெரும்பாலும் நடிகர் மோகன் நடித்த படப் பாடல்கள்தான் அதிகம் ஒலிக்கும். கேட்கும் ஒவ்வொருவருக்கும் இது தனக்கான பாட்டு என்று நினைக்க வைப்பவை அவை.

‘விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா...’

‘என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகும்...’

‘என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்...’

‘உன்னைத் தேடி தேடியே எந்தன் ஆவி போனது...’

‘இளமை நெருக்கம்... இருந்தும் தயக்கம்...’

‘தெரிந்த பிறகு திரைகள் எதற்கு?’

‘கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது...’

‘முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்...’

பாடல்களுக்கு மோகன் தரும் உணர்வுபூர்வமான வாயசைப்பைப் பெரிதாக ரசித்தோம். மிகையில்லா நடிப்பு, இயல்பான முகபாவங்கள், ஒரு பாடகருக்கான வசீகரம் என ஒரு இளம் காதலனுக்கு வேண்டிய எல்லா அம்சங்களும் அவருக்கு இருந்தன.

ஓவியம்: வெங்கி

யாருமே உணராத பொழுதில் நடிகர் மோகன் தமிழ் உலகின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆனார். அது அறிமுக இயக்குநர்களின் பொற்காலம். மோகன் நடிக்க, இளையராஜா இசையமைத்தால் அந்தக் கூட்டணியில் சுமாரான படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்கள் ஆகிவிடும்.

ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், மனோபாலா, ரங்கராஜ் என்று எல்லா பாரதிராஜா பள்ளி இயக்குநர்களுக்கும் பாதுகாப்பான தேர்வு மோகன் தான்!

எம்ஜிஆர்- சிவாஜி போட்டியை மீறி ஜெமினி கணேசன் ஒரு காதல் மன்னனாக ஜெயித்தது போல ரஜினி - கமல் போட்டியை மீறி மோகன் ஒரு காதல் நாயகனாக வலம் வந்தார். ரஜினிக்கும் கமலுக்கும் கிடைக்காத அளவு இளையராஜாவின் தித்திக்கும் பாடல்கள் அவருக்குக் கிடைத்தன. ரஜினியும் கமலும் வசூல் நட்சத்திரங்களாக உருமாற பெரிய பேனர் மசாலா படங்களில் நடித்துக்கொண்டிருக்க, கதையும் இசையும் கொண்ட சின்னப்படங்கள் மோகனுக்காகக் காத்திருந்தன.

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் அனைத்துக் கல்லூரி நிகழ்வாக ‘கேஸ்கால்’ 1983-ல் உருவாகியது. அனைத்து கல்லூரி மாணவர்களும் பங்குகொள்ளும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். எங்கள் கல்லூரி திருவிழா கோலம் பூண்டிருக்கும். ஜி.ஆர்.டி ஆடிட்டோரியத்தில் கூட்டம் வழியும். யாராவது ஒரு மாணவன் உச்சஸ்தாயியில் ஒரு பாடல் பாடினால், கேன்டீனில் கொறித்துக்கொண்டிருக்கும் நாங்கள் அரங்கை நோக்கி ஓடுவோம்.

‘வைகறையில் வைகை கரையில்

வந்தால் வருவேன் உன்னருகில்’

என்று பாடி முடிக்கையில் பாதிக் கூட்டம் கலங்கியிருக்கும். இறுதியில் ஒலிக்கும் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். மோகனை நினைக்காமல் இந்தப் பாடலைக் கேட்க முடியுமா என்ன?

‘மெளன ராகம்’ மணிரத்னத்தை அடையாளப்படுத்திய படம். இசை, ஒளிப்பதிவு, நடிப்பு என ஒவ்வொரு துறையைப் பற்றி சிலாகித்து அவரை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்ற படம். ஆனால் இளையராஜாவின் ஆழமான இசையில், மோகனின் பண்பட்ட நடிப்பில் வெளிவந்த மணிரத்னத்தின் முந்தைய படம் - ‘இதயகோயில்’. அது ஒரு கோவை இயக்குநரின் சராசரி படம் போலவும், கவுண்டமணி காமெடி, காதல் தோல்வி என மணிரத்னத்தையும் ரசிகர்களையும் (தயாரிப்பளரையும்) ஏமாற்றிய படம். ஆனால் என் மனதுக்கு நெருக்கமான படம்.

இளையராஜா பாடிய சிறந்த பாடல்கள் என்று வரிசைப்படுத்தினால், ‘இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்’ நிச்சயம் இருக்கும். ‘ஊரோரமா ஆத்துப்பக்கம் தென்னந்தோப்பு’ ஒரு வித்தியாசமான கம்போசிங், ‘பாட்டுத் தலைவன் பாடினால்’ ஒரு உற்சாகமான டூயட். ‘வானுயர்ந்த சோலையிலே’ காதல் வலியை பழைய நினைவுகளுடன் பாடும் பாடல். ‘கூட்டத்திலே கோயில் புறா’ ஓர் அருமையான கிளாசிக்கல் ரகம்.  எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் துயர இசை - ‘நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா?’ நாற்காலிகள் காலியாக உள்ள எந்த அரங்கைக் கண்டாலும் எனக்குள் ஒலிக்கும் பாடல் இது. அத்தனை பாடல்களிலும் மிகச்சிறப்பாக நடித்திருப்பார் மோகன்.

இரண்டாம் முறை இந்த படத்தைக் காண தனியாக ஒரு பகல் காட்சிக்கு, வகுப்பை கட் அடித்துவிட்டு சென்றிருந்தேன். அட்டெண்டன்ஸ் எடுத்து இளங்கோ மாஸ்டர் நான் எங்கே என்று கேட்டிருக்கிறார். நண்பன் உடனே, “கார்த்தி ‘இதயகோயில்’ பார்க்கப் போயிருக்கான் சார்!” என்று சொல்லியிருக்கிறான். “ஓஹோ அவன் காதலி கிளாசுக்கு வர்லேன்னு இந்த இதயக்கோயில பாக்க முடியாம அந்த இதயக்கோயில பார்க்கப் போயிட்டானா?” என்றதும் வகுப்பே சிரிப்பில் அதிர்ந்ததாம்.

அன்று எனக்குக் கிடைத்த ஆசிரியர்களிடம் எதையும் மனம் விட்டுப் பேச முடியும். எங்கள் எல்லா சுக துக்கங்களிலும் பங்கு கொள்வார்கள். கேட்டால் கருத்து சொல்வார்கள். ஒப்பீடுகள் இல்லாத அன்பு இருந்தது. வகுப்பில் பாடம் நடத்தவிடாமல் பேசிக்கொண்டிருந்த என்னை, “ மேடையில் பேசு” என்று ஏற்றிவிட்டார்கள். அவர்களை மிமிக்ரி செய்தே நான் நாடகம் போட்டேன். அதையும் ரசித்தார்கள். பி.எஸ்.ஜி டெக்கில் ‘ஸ்பெக்ட்றா 85’ ல் நான் கலந்துகொண்டு நடித்து ‘சிறந்த நடிகர்’ விருது வாங்கி வந்தபோது என்னை ஆரவாரமாக வரவேற்றார்கள். உளவியல் வகுப்புகளின்போது நிறைய நாடக பாணி பயிற்சிகள் அளிக்கையில் தவறாமல் என்னை அழைத்து வாய்ப்பு தந்தார்கள். என் அதீதங்களைப் பொறுத்து என்னை வழி நடத்தினார்கள்.

நடிகர் மோகன் எண்பதுகளின் கடைசியில் மார்கெட் இழக்க ஆரம்பித்தார். அவர் படங்களில் சண்டை காட்சிகள் கேட்டதாகவும், அதனால் மணிவண்ணன் மற்றும் மனோபாலா இருவரும் சத்யராஜையும், ஆர்.சுந்தர்ராஜன் விஜயகாந்தையும் பிடித்துக்கொண்டு பயணித்தார்கள் என்று ஒரு பேட்டியின் மூலம் அறிந்தேன். சுரேந்தரின் குரல் கிடைக்காமல் சொந்த குரலில் நடித்து ஒரு படம் படுத்தது என்றார்கள். உண்மைக் காரணம் தெரியவில்லை.

தொண்ணூறுகளுக்குப் பின் அவர் திரை இருப்பு தமிழ் திரையுலகில் முற்றிலும் குறைந்தது. இப்போது மீண்டும் சில படங்களில் நடிப்பதாக தகவல் அறிந்தேன். இன்றும் நல்ல உடல்கட்டும் வசீகரமும் கொண்ட அவர் நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்து நடித்தால் இன்னொரு சுற்று வரலாம் என்று நம்புகிறேன்.

அன்று நாடகப் போட்டியில் எனக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது என்று கூறினேன் அல்லவா? என் பாத்திரத்திற்கும் நடிப்பிற்கும் அன்றைய ஊக்கமும் தாக்கமும் முழுக்க முழுக்க நடிகர் மோகனையே சேரும்!

(திரை விரியும்...)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in