படித்தேன்… ரசித்தேன் 18: தேநீரைக் கொண்டாடுவோம்!

படித்தேன்… ரசித்தேன் 18:  
தேநீரைக் கொண்டாடுவோம்!

‘தேநீர் அருந்தும்போது தேநீராக மாறிவிடுங்கள்’ என்பது ஜென் செய்தி. சீனர்கள் இன்றைக்கும் தேநீர் அருந்துவதை தேவ கணமாகவே… கருதுகின்றனர். அத்தருணத்தை - வாழ்வின் ஓர் அங்கமாகவே கருதி வீட்டினர் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு தேநீரை ரசித்து ருசித்து அருந்துவார்கள். பவுத்தம் படர்ந்திருக்கும் சீனாவிலும் ஜப்பானிலும் தேநீர் ஒரு கொண்டாட்ட பானம். நம் நாட்டில் தீர்த்தத்துக்குக் கொடுக்கும் மரியாதையைவிட அதிகமாகத் தேநீருக்கு மதிப்பு அங்கே.

‘லஸ் இஸ் மோர்’ என்பது தேநீருக்குப் பெரிதும் பொருந்தும். கிராமத்து டீக்கடையாகட்டும் நகரத்து நாயர் கடையாகட்டும் தேநீர் கடைகளை சமரசம் உலாவும் இடமாகவே பார்க்கிறேன். ‘கைப் பள்ளத்தில் அள்ளிய கடல்’ என்று தனது கவிதையொன்றில் சுகுமாரன் பதிவு செய்திருப்பார். தேநீர் அருந்துகிறபோதெல்லாம் இக்கவிதை எனக்கு ஞாபகத்து வந்துவிடும். கூடவே - பாக்கியம் சங்கர் எழுதிய ‘தேநீர் இடைவேளை’ எனும் புத்தகமும், கவிஞர் ஆழியூர் சத்தியன் எழுதிய ‘தேநீர் எனப் பெயரிட்டுக்கொண்டவன்’ என்கிற புத்தகமும், கவிஞர் நா.கோகிலன் தனது பதிப்பகத்துக்கு ‘தேநீர் பதிப்பகம்’ என்று பெயர் வைத்திருப்பதும் நினைவில் எட்டிப்பார்க்கும்.

தேநீரைப் பற்றி இவ்வளவு ஆலாபனை எதற்கு என்று யோசிக்கிறீர்களா? ‘தேநீர் – எளிமையான அன்பு – வலிமையான நம்பிக்கை’ - எனும் சிறு நூலை வாசித்தேன். தேநீரைப் பற்றிய கொண்டாட்ட கருத்துகளைக் கொண்ட அச்சிறுப்புத்தகம் ஏற்படுத்திய ஆனந்த அதிர்வலைதான் இதற்குக் காரணம்.

தமிழ் அலை பதிப்பகத்தின் மூலம் – இசாக் மற்றும் ஜோசப் ராஜாவும் இச்சிறு தொகுப்பு நூலை கொண்டுவந்திருக்கிறார்கள்.

அதில் இருந்து சில தேநீர் துளிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்:

தேநீர் தாகமுள்ளவர்களே

வாருங்கள்

பாத்திரத்தில்

கொதித்துக்கொண்டிருக்கிறது தேநீர்

கொதிக்கும் தேநீரின் குமிழ்களோ

இசையாய்

ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

- ரவீந்திரநாத் தாகூர்


பரவசம் என்பது

ஒரு கோப்பைத் தேநீரும்

ஒரு துண்டுச் சர்க்கரையும்

உதடுகளைத் தொடுவதுதான்.

- அலெக்ஸாண்டர் புஷ்கின்

தேநீரில்

இயல்பிலேயே

ஏதோ ஒன்று இருக்கிறது

அது -

அமைதியாகச் சிந்திக்கும் உலகத்துக்கு

வாழ்க்கையை அழைத்துச் செல்கிறது.

- லின்யுடங்


நிறைய தேநீர் குடிக்காமல்

என்னால் எழுதவே முடியாது

தேநீர் -

என் ஆன்மாவின்

ஆழத்திலுள்ள சக்திகளையெல்லாம்

கட்டவிழ்த்துவிடுகிறது.

- லியோ டால்ஸ்டாய்

அவன் மகிழ்ச்சியை

விரும்புவதைப் போல

நான்

தேநீரை விரும்புகிறேன்.

- கேரி டிஃப்பனி


எப்போதும்

என் விருப்பத்துக்குரிய

தேநீரைக் குடித்துக்கொண்டே

இந்த உலகம்

நாசமாய்ப் போகட்டும் என்று

சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

- பியோதர் தஸ்தயெவ்ஸ்கி

அழகான பெண்

தேநீர் தயாரிக்கும்போது

இன்னும்

இன்னும்

அழகாகிறாள்.

- மேரி எலிசபெத் பிராடன்


வாழ்வின்

அசாதாரண நேரத்தில்

ஒரு கோப்பை

தேநீர் குடிப்பது

வாழ்வைச்

சமநிலைப்படுத்துவதாகும்.

- அர்னால்ட் பென்னட்


தேநீர் இல்லாத நாட்டில்

வாழ்வது

பயங்கரமானதல்லவா!

- நோயல் கோவர்ட்


அன்பானவர்களே

என் குழப்பத்தைப் போக்க

ஒரு கோப்பைத் தேநீர்

கொடுத்தீர்களென்றால்…

உங்களைப் புரிந்துகொள்ள

எளிமையாக இருக்கும்

எனக்கு.

- சார்லஸ் டிக்கன்ஸ்


குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கிறாயா

தேநீர் -

உன்னைச் சூடாக்கும்.

வெப்பத்தில் தகித்துக்கொண்டிருக்கிறாயா

தேநீர் -

உன்னைக் குளிரச்செய்யும்

பெருங்குழப்பத்தில் இருக்கிறாயா

தேநீர் –

உன்னை ஆற்றுப்படுத்தும்

படபடப்பாக இருக்கிறாயா

தேநீர்

உனக்குள்

அமைதியைப் பாய்ச்சும்.

- வில்லியம் எட்வர்ட் கிளாட்ஸ்டோன்


தேநீர் -

மனித நாகரிகத்தின்

தவிர்க்க முடியாத

ஒன்றாகும்.

- ஜார்ஜ் ஆர்வெல்


ஒரு

நல்ல

உரையாடல்

ஒரு கோப்பை

தேநீரில்தான்

தொடங்குகிறது.

- மைஷாகார்லோஸ்


நம் ஒவ்வொரு வார்த்தையாலும்

நுரையின்

ஒவ்வொரு குமிழாக உடைத்து

தேநீருக்குப் போவோம்

மௌனங்களில் விலகும்

நுரைகளின் கீழிருப்பது

வெறும் தேநீரின் நிறம்.

- ஆண்டன் பெனி


மழை போன்ற தூய நட்பின்

சுவையும் உற்சாகமும்

கொஞ்சம் கொஞ்சமாக

தொண்டையை நனைத்துக்கொண்டு

உள்ளிறங்குவதை

உணர்ந்திருக்கிறேன்

தேநீர் அருந்தும் கணங்களில்.

- இசாக்


குளிரில்

இளம்வெயிலை ஊற்றி

பக்குவமாகக் கலந்திருக்கிறது

தென்னங்கீற்று.

ஒரு மிடறு கிளிச்சுவை

ஒரு மிடறு குயிற்சுவை

ஒரு மிடறு அணிற்சுவை

ஒரு மிடறு குக்குறுவான் சுவை

செம்பருத்தி நிறத்தோடும்

பவளமல்லி மணத்தோடும்

பருகிக்கொண்டிருக்கிறேன்

அதிரூபமான

இந்த அதிகாலையை

ஒரு கோப்பைத் தேநீரில்.

- பழநிபாரதி

தேநீர்க் குடுவைக்குள் நீரை ஊற்றுகிறோம்; கொதிநிலையை அது ஏற்கிறது. தேயிலையைப் போடுகிறோம்; அதன் நிறத்தையும் மணத்தையும் ஏற்கிறது. பாலை ஊற்றுகிறோம்; அதன் தன்மையை ஏற்கிறது. சர்க்கரையைக் கலக்கிறோம் ; அதன் இனிமையை ஏற்கிறது. ஒரு தேநீர்க் குடுவைக்குள் ஏற்படும் மாற்றங்கள் தாம் எத்தனை... எத்தனை!

வாழ்க்கையும் அப்படித்தான்.

செம்புலப் பெயல்நீர் போலத்தான் அன்பின் ஒரு கோப்பைத் தேநீரும்.

- கி.சுமதி

* * *

என்ன நண்பர்களே…

தேநீரைப் பற்றிய தித்திப்பு செய்திகளை வாசித்த பிறகு… தேநீரைப் பற்றி சொல்வதற்கு உங்களிடமும் சுடச்சுட சில செய்திகள் இருக்கின்றனதானே.

ஒரு கோப்பைத் தேநீருடன் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே!


நூல்: தேநீர் - எளிமையான அன்பு - வலிமையான நம்பிக்கை

தொகுப்பாசிரியர்கள்: இசாக் - ஜோசப் ராஜா

வெளியீடு: தமிழ் அலை

80 / 24 பி. பார்த்தசாரதி தெரு,

தேனாம்பேட்டை

சென்னை 600 086.

அலைபேசி: 9486838801

(திங்கள்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in