இதே தேதி... முக்கியச் செய்தி: அதிகம் பேசப்படாத அணு உலை விபத்து!

இதே தேதி... முக்கியச் செய்தி: அதிகம் பேசப்படாத அணு உலை விபத்து!

அணு உலை எதிர்ப்பாளர்களால் பெரும்பாலும் முன்னுதாரணமாகக் காட்டப்படுபவை - சோவியத் ஒன்றியத்தின் செர்னோபில் அணு உலை விபத்து (1986) மற்றும் ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட அசம்பாவிதம் (2011). இவற்றைத் தவிர மேலும் சில அணு உலை விபத்துகள் உண்டு. அவற்றில் முக்கியமானது, மிக மோசமான விளைவை ஏற்படுத்தியது சோவியத் ஒன்றியத்தின் கிஷ்டிம் அணு உலை விபத்து. இன்னும் தெளிவாகச் சொன்னால் உலகிலேயே மிகப் பெரிய அளவில் நடந்த முதல் அணு உலை விபத்து இது. மயாக் அணு உலை விபத்து என்றும் இது அழைக்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அணு ஆயுத உற்பத்தியில் அமெரிக்கா அசுர பலம் பெற்றுவந்தது. இதற்குப் போட்டியாக சோவியத் ஒன்றியம் அணு உலை விஷயத்தில் அவசரம் காட்டியது. அப்படித்தான் மயாக் அணு உலையை அவசரகதியில் சோவியத் அரசு உருவாக்கியது. 1945-ல் தொடங்கிய கட்டுமானப் பணிகள் 1948-ல் முடிவடைந்தன. அணு ஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் மற்றும் புளுட்டோனியம் அந்த உலையில் உற்பத்தி செய்யப்பட்டன.

விழிப்புணர்வு மிக்க இன்றைய காலகட்டத்திலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அக்கறையை அதிகம் பார்க்க முடியவில்லை. அன்றைய காலகட்டத்தில் நிலைமை எப்படி இருந்திருக்கும் எனச் சொல்ல வேண்டியதில்லை. அணு உலைக் கழிவுகளை வெளியேற்றும் விஷயத்தில் அத்தனை அலட்சியமாக இருந்தது மயாக் உலை நிர்வாகம். ஆரம்பத்தில், அருகில் உள்ள டெச்சா ஆற்றில் கதிரியக்கக் கழிவுகள் சென்று கலக்கும்படி வடிவமைக்கப்பட்டது. கழிவுகள் அந்தப் பகுதியின் முக்கிய நதியான ஓபில் சென்று கலந்தன. அந்த நதி ஆர்க்டிக் பெருங்கடலில் சங்கமிக்கும் நதி என்பது கவனிக்கத்தக்கது.

அது மட்டுமல்ல, கைஸில்டாஷ் ஏரிக் கரையில் அமைந்திருந்த ஆறு உலைகளையும் குளிர்விக்க திறந்தவெளி குளிர்விப்பான்களே அமைக்கப்பட்டிருந்தன. இன்னொரு ஏரியான கராச்சாய், இந்த அணு உலையின் திறந்தவெளி சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டது. விரைவிலேயே இரண்டு ஏரிகளும் மாசுபாடு அடைந்தன. குறிப்பாக, உலகிலேயே மிக மாசுபாடு அடைந்த பகுதியாக கராச்சாய் ஏரி மாறியது.

அதன் பின்னர் அணு உலையின் திரவக் கழிவுகளைச் சேமிக்க, 1953-ல் பூமிக்குக் கீழ் 8.2 மீட்டர் ஆழத்தில் உருக்கு இரும்பைக் கொண்டு 14 தொட்டிகள் அமைக்கப்பட்டன. கதிரியக்கம் காரணமாக திரவக் கழிவுகள் வெப்பமடையும் என்பதால், அந்தத் தொட்டிகளைக் குளிர்விக்கும் வசதி செய்யப்பட்டது. ஆனால், அந்தக் குளிர்விப்பான்களையும், தொட்டிகளில் இருந்த திரவக் கழிவுகளைக் கண்காணிக்கும் அமைப்பை உருவாக்குவதில் அணு உலை நிர்வாகம் கோட்டைவிட்டுவிட்டது. இதுதான் பின்னாளில் ஒரு பெரும் விபத்துக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது.

1957 செப்டம்பர் 29-ம் தேதி மாலை 4.22 மணிக்கு அந்தத் தொட்டிகள் வெடித்துச் சிதறின. ஒரு தொட்டி முற்றிலும் சேதம் அடைந்தது. கதிரியக்கம் காற்றில் பரவியது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்துவந்த 10,000 பேர் வெளியேற்றப்பட்டனர். சில பகுதிகளிலிருந்து ஒரே வாரத்தில் மக்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும், சற்று தொலைவில் உள்ள பகுதிகளில் வசித்துவந்த மக்களை வெளியேற்ற ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் பிடித்தன. இந்த விபத்தின் காரணமாக, என 52,000 சதுர கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனல் துகள்கள் பரவின.

மிக மோசமான இந்த விபத்தில் உடனடியாக உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் பதிவாகவில்லை. ஆனால், கதிரியக்கப் பாதிப்புக்குள்ளான பலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்த தகவல்கள் வெளியே பரவாமல் சோவியத் அரசு கெடுபிடி காட்டியதாகவே பதிவாகியிருக்கிறது.

செர்னோபில் அணு உலை
செர்னோபில் அணு உலை

அதன் பின்னர், 1986 ஏப்ரல் 25-ல், உக்ரைனின் கீவ் நகருக்கு வடக்கே 130 கிலோமீட்டர் தொலைவில் பிரிப்யாட் ஆற்றின் கரைப் பகுதியில் இயங்கிவந்த செர்னோபில் அணு உலையில் விபத்து ஏற்பட்டது (அப்போது சோவியத் ஒன்றியத்தில் அங்கம் உக்ரைன் அங்கம் வகித்தது). செனோபில் உலையின் நான்காம் எண் உலையில் ஒரு மின் பொறியியல் சோதனையை நடத்த சில பொறியாளர்கள் திட்டமிட்டனர். அதிக அனுபவம் இல்லாத அந்தப் பொறியாளர்கள் மேற்கொண்ட அந்தச் சோதனையின்போது, எதிர்பாராதவிதமாக அணு உலையில் பெரும் வெடிப்பு ஏற்பட்டு, 50 டன்னுக்கும் அதிகமான கதிரியக்கப் பொருட்கள் காற்றில் பரவத் தொடங்கின. இந்த விபத்தின் காரணமாக ஓரிரு நாட்களில் 32 பேர் உயிரிழந்தனர். கதிரியக்கத்தால் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகளால் இதுவரை 5,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தையும் மூடி மறைக்கவே சோவியத் ஒன்றியம் முயற்சிசெய்தது. சுமார் 1,180 கிலோமீட்டர் தொலைவில் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகருக்கு அருகில் உள்ள ஃபோர்ஸ்மார்க் அணு உலையில் பணிபுரிந்த கிளிஃப் ராபின்ஸன் என்பவர்தான், இப்படி ஒரு விபத்து நடந்ததைக் கண்டறிந்தார். அதன் பின்னர் உலகத்துக்கு செர்னோபில் விபத்து குறித்து தெரியவந்தது.

இன்றைக்கு உக்ரைன் மீது மூர்க்கமாகத் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, அந்நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்போவதாகவும் மிரட்டிவருவது சமகாலப் பேரவலம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in