இதே தேதி... முக்கியச் செய்தி: ஈழத் தமிழர்களின் இதயம் கவர்ந்த சிங்கள கிரிக்கெட் வீரர்!


இதே தேதி... முக்கியச் செய்தி: ஈழத் தமிழர்களின் இதயம் கவர்ந்த சிங்கள கிரிக்கெட் வீரர்!

அந்தச் சிறுவனுக்கு அப்போது 6 வயது இருக்கும். அவனது வீட்டுக்குச் சில குடும்பங்கள் வந்திருந்தன. அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த சிறுவன், ஒவ்வொரு ஆண்டும் விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தால் நன்றாக இருக்குமே என்று தனது பெற்றோரிடம் வெகுளியாகச் சொன்னான். தனது பெற்றோர், சிங்கள இனவெறியர்கள்1983 ஜூலையில் நடத்திய கலவரத்தின்போது தமிழ்க் குடும்பங்களைத் தங்கள் வீட்டில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்த விஷயமும், அந்த வீட்டில் தங்கியிருந்த குடும்பங்கள் பெரும் அபாயத்திலிருந்து தப்பிய விவரமும் அவனுக்கு அப்போது தெரியாது.

இன வேறுபாடுகளைக் கடந்த மனிதநேயம் கொண்ட அந்த சிங்களக் குடும்பத்தில் பிறந்துவளர்ந்தவர்தான் பின்னாட்களில் இலங்கைக்குப் புகழ்தேடித் தந்த கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கரா!

இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி நகர் அருகே உள்ள மாத்தளையில் 1977 அக்டோபர் 27-ல் பிறந்தவர் சங்கக்கரா. இளம் வயதிலிருந்தே இசை, விளையாட்டு ஆகியவற்றின் மீது ஆர்வம் காட்டினார். பள்ளி கிரிக்கெட் அணிகளில் இடம்பெற்றார். கண்டியில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் பயின்ற பின்னர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். கூடவே கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தினார். சிறந்த பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் விளங்கினார். சட்டப்படிப்பு முடியும் முன்பே இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

2000 ஜூலை 20-ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன்முதலாகக் களமிறங்கினார். பின்னர், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். பின்னர் நடந்த சிங்கர் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 85 ரன்கள் குவித்தார். மேன் ஆஃப் தி மேட்ச் விருது பெற்றார். அதன் பின்னர் இலங்கை அணிக்குப் பல முறை வெற்றி தேடித் தந்திருக்கிறார். சொந்த மண்ணில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு கிரிக்கெட் மைதானங்களிலும் இலங்கையால் வெல்ல முடியும் என அந்நாட்டு கிரிக்கெட் ரசிர்கள் பெருமிதம் கொள்ள சங்கக்கராவும் முக்கியக் காரணியாக இருந்தார். மஹிளா ஜெயவர்த்தனேவுக்குப் பின்னர் இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பு சங்கக்கராவுக்குக் கிடைத்தது. அதிகம் உணர்ச்சிவசப்படாமல் உறுதியுடன் விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தரும் தலைவனாக அறியப்பட்டார்.

15 ஆண்டுகளில் ஏறத்தாழ 500 சர்வதேசப் போட்டிகளில் ஆடியிருக்கிறார். சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாராவுக்குப் பின்னர் விரைவாக 10,000 ரன்களைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் எனும் புகழ் சங்கக்கராவைச் சேரும். டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகலிலும் 10,000-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்த மிகச் சில கிரிக்கெட் வீரர்களில் அவரும் ஒருவர்.

அது மட்டுமல்ல, ஆஸ்திரேலிய கிரிக்கெட் டான் பிராட்மேனுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை இரட்டை சதம் அடித்தவர் எனும் பெருமையும் சங்கக்கராவுக்கு உண்டு. டான் பிராட்மேன் 12 இரட்டை சதங்களை அடித்திருக்கிறார். சங்கக்கரா 11 இரட்டை சதங்களை அடித்தவர். இது அவரது சாதனைகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்ட சங்கக்கரா, இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான அர்ஜுனா ரணதுங்கா, சனத் ஜெயசூர்யா ஆகியோருடன் ஒப்பிடப்படுகிறார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார்.

புன்னகை தவழும் முகத்துடன் அமைதியான மனிதராகக் காட்சியளிக்கும் சங்கக்கரா, இயல்பிலேயே மிகவும் துணிச்சல் மிக்கவர். தனது கருத்துகளை எவருக்கும் அஞ்சாமல் பேசக்கூடியவர். 2011-ல் லண்டனில் உள்ள மாரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) அரங்கில் உரையாற்றுகையில், இலங்கை கிரிக்கெட் விளையாட்டு உலகில் ஊழல் மலிந்துவிட்டதாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான் உரை என்றும் போற்றப்பட்டது. அதே உரையின்போது, “நான் ஒரு தமிழன், சிங்களவன், முஸ்லிம் மற்றும் பரங்கியர். நான் ஒரு பவுத்தன், ஒரு இந்து, இஸ்லாம் மற்றும் கிறித்துவத்தைப் பின்பற்றுபவன். இன்றும், என்றும் நான் ஒரு பெருமைக்குரிய இலங்கையன்” என்று அவர் முழங்கியது இன வேறுபாடுகளைக் கடந்து இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆம்! இனவெறி மிகுந்த இலங்கையில், அனைவரும் சமம் எனும் எண்ணம் கொண்ட சிங்கள ஆளுமைகளில் சங்கக்கராவும் ஒருவர். தனது பெற்றோரின் வழியே அவருக்குக் கிடைத்த உயரிய பண்பு அது. சிறுவனாக இருந்தபோது தனது பெற்றோர் தமிழ்க் குடும்பங்களைப் பாதுகாத்ததைப் பெருமையுடன் நினைவுகூரும் சங்கக்கரா, சிங்கள ராணுவத்தால் உருக்குலைக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் தன்னாலான சேவைகளைச் செய்திருக்கிறார். குறிப்பாக, முத்தையா முரளீதரனுடன் இணைந்து மாங்குளம் பகுதியைத் தத்தெடுத்துக்கொண்ட அவர், அங்கு புனரமைப்புப் பணிகள் முதல், அங்குள்ள இளைஞர்களுக்குக் கிரிக்கெட் பயிற்சி அளிப்பது வரை பல சேவைகளைச் செய்திருக்கிறார். சம்பிரதாயமாக அல்லாமல் மனப்பூர்வமாக தமிழர்களுடன் நல்லுறவைப் பேணும் சங்கக்கராவை ஈழத் தமிழர்கள் நேசிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

அதேபோல், 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை வன்மையாகக் கண்டித்தவர் சங்கக்கரா. இனவெறிக்கு முடிவுகட்ட குழந்தைப் பருவத்திலிருந்தே நல்லிணக்கப் பார்வையை விதைக்க வேண்டும் என்று கூறியவர் அவர்.

விளையாட்டு என்பதே நல்லிணக்கத்துக்கான அம்சம்தான். இயல்பிலேயே மனிதாபிமானமும் நல்லிணக்கமும் வாய்க்கப்பெற்ற சங்கக்கரா உலகின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர் என்பதில் சந்தேகம் இல்லை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in