ஏனெனில்-10: ‘விழா’ இருக்க ‘பண்டிகை’ எதற்கு?

ஏனெனில்-10: ‘விழா’ இருக்க ‘பண்டிகை’ எதற்கு?

குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் 3-வது தொகுதியை 1971-ல் வெளியிட்டு, அன்றைய முதல்வர் மு.கருணாநிதி ஆற்றிய உரையைப் பற்றிய செய்தியொன்று ‘தி இந்து’ நாளேட்டின் ‘50 இயர்ஸ் எகோ’ பகுதியில், கடந்த வாரம் வெளியாகியிருந்தது. ‘கூடுமானவரையில் இத்தொகுதிகளில் இனிமேலாவது தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் புரிந்துகொள்ளும் வகையிலுள்ள - பழக்கத்திலுள்ள தமிழ்ச் சொற்களையே இந்தத் தொகுதிகளில் இடம்பெறச் செய்தல் வேண்டும்’ என்பது, அன்று அவர் ஆற்றிய உரையின் சாராம்சம்.

குறிப்பாக, “இதில் ‘பண்டிகை’ என்று ஒரு சொல் வருகிறது. ‘பண்டிகை’ என்பதை ‘விழா’ என்று சொன்னால், இன்றைக்குச் சிறு குழந்தைக்குக்கூட விளங்கக்கூடியதாய் இருக்கிற சொல்தான். அதுபோலவே, ‘எந்திரங்கள்’ என்னும் சொல்- “பொறிகள்” என்று சொன்னால் புரிந்துகொள்ளக்கூடிய அளவில்- பொறி, பொறியாளர் என்ற அளவில் வளர்ந்திருக்கிறது. தமிழில் தற்போது ஏற்பட்டுள்ள தமிழ் வளர்ச்சியை நாமெல்லாம் ஒப்புக்கொண்டிருக்கிறோம். எனவே, அடுத்தடுத்து வருகின்ற புதிய புதிய விளக்கங்களைக் குழந்தைகளுக்கு நாம் தந்தாக வேண்டும்” என்று அந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார் மு.கருணாநிதி.

சட்ட மறுப்பு இயக்கத்தில் கலந்துகொண்ட தலைவர்கள், கடலூர் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தபோதுதான் தமிழில் கலைக்களஞ்சியம் கொண்டுவருவதற்கான எண்ணம் உதித்தது. தி.சு. அவினாசிலிங்கத்தின் அந்த எண்ணத்துக்கு, ம.பெ.பெரியசாமித்தூரன் தனது பேருழைப்பாலும் தமிழறிஞர்களின் தன்னலமற்ற ஆதரவாலும் உருவம் கொடுத்தார். சிற்பி பாலசுப்பிரமணியனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கும் ‘ம.பெ.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள்’ பெரிதும் கலைக்களஞ்சியத்தைப் பற்றிப் பேசுகிறதேயொழிய, குழந்தைகள் கலைக்களஞ்சியத்துக்கான உருவாக்கத்தைப் பற்றி அதில் குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால், ‘தமிழ்க் களஞ்சியத்தின் கதை’ என்ற தலைப்பில் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய குறுநூலில், குழந்தைகள் கலைக்களஞ்சியத்தைப் பற்றி சில குறிப்புகள் உள்ளன. தூரனைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, பல வண்ண அச்சில் 1968 முதல் 1976 வரையிலான காலப் பகுதியில் அது வெளியாகியுள்ளது, 1981-1988 ஆண்டுகளில் திருந்திய பதிப்பொன்றும் வெளியாகியுள்ளது.

முதல் பதிப்பின் 3-வது தொகுதி வெளியீட்டு விழாவில் கருணாநிதியால் கலைக்களஞ்சியத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள், ஏற்கெனவே திராவிட இயக்கத்தினரால் கூறப்பட்டு வந்ததுதான். கலைக்களஞ்சியத்தின் மாதிரி இதழை வெளியிட்டபோதே, க.அன்பழகன் தனது ‘புதுவாழ்வு’ இதழில் அது குறித்து சந்தேகங்களை எழுப்பினார். அவினாசிலிங்கத்தையும் டி.கே.சி-யையும் கடுமையாக விமர்சித்தார். களஞ்சியப் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய அறிஞர்களின் பெயர்களையும் அவர் பரிந்துரைத்தார். அவர்களில் சிலர் கலைக்களஞ்சியப் பணியில் பங்கெடுத்துக்கொண்டார்கள் என்றாலும் அன்பழகனின் விமர்சனங்களில் எந்த மாற்றமும் இல்லை.

திராவிட இயக்கத்தின் மற்ற இதழ்களும் கலைக்களஞ்சியத்தின் மாதிரி இதழ் குறித்து, தீவிர விமர்சனங்களை முன்வைத்தன. கலைச்சொற்கள் இயன்றவரை தமிழாக இருக்கும் என்ற நிலைப்பாட்டை மறுத்து, முழுவதுமாகத் தனித்தமிழ் கையாளப்பட வேண்டும் ‘பொன்னி’ இதழில் எழுதினார் கண.இராமநாதன். அதே இதழில் கா.அப்பாத்துரையார் எழுதிய விமர்சனத்தில், ‘பகுத்தறிவு இயக்கத்தார் எவரும் களஞ்சியப் பணியில் இல்லை’ என்று சுட்டிக்காட்டினார். கலைக்களஞ்சியம் குறித்த கருணாநிதியின் விமர்சனத்துக்குப் பின்னால் இப்படி ஒரு நெடுங்கதை இருக்கிறது.

மொழியின் மீதான உச்சபட்ச அதிகாரம் அறிஞர்களிடம் அல்ல, மக்களிடமே இருக்கிறது.

தனித்தமிழ் இயக்கத்தவர்களைப் போல திராவிட இயக்கத்தினர் அடிப்படைவாதிகள் அல்லர் என்பதையும் அன்று கருணாநிதி ஆற்றிய உரையிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

“விஞ்ஞானம் வளர்ந்துவரும் இந்த யுகத்தில் புதுமையாக வருகின்ற சொற்களைக் கூடுமானவரையில், வழக்கத்திலிருக்கின்ற எளிமையான விளக்கத்துடன் அனுமதித்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, ‘சைக்கிள்’” என்ற சொல் தமிழாகவே ஆகிவிட்ட ஒன்று. இதை ‘துவிச்சக்கர வண்டி’ என்று தமிழாக எண்ணிச் சொல்லிக்கொண்டிருந்துவிட்டு, அப்புறம் இதை ‘ஈருருளி’ என்றும் அது ஈருருளியா - ஈருளியா என்று குழம்பி, மற்றவர்களும் குழம்பும்வகையில் சொற்களை மொழிபெயர்க்கின்ற நிலை உருவாக வேண்டாம். ‘சைக்கிள்’ என்ற சொல்லை நான் உதாரணத்துக்குச் சொன்னதால், இதையும் தமிழாக நான் ஒப்புக்கொண்டுவிட்டதாகக் கருதவேண்டாம். அத்தகைய குழப்பமான மொழிபெயர்ப்புகள் வேண்டாம் என்பதற்காக இதைச் சொன்னேன்.” ( நம் நாடு, அக்.20, 1971)

ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அல்ல, இப்போதும்கூட ‘ஈருருளிக்காரர்கள்’ இருக்கவே செய்கிறார்கள். ஆனால், அவர்களின் விருப்பத்தையும் தாண்டி ‘மிதிவண்டிகள்’ ஓடிக்கொண்டிருக்கின்றன. மொழியின் மீதான உச்சபட்ச அதிகாரம் அறிஞர்களிடம் அல்ல, மக்களிடமே இருக்கிறது.

(வெள்ளிக்கிழமை சந்திப்போம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in