இதே தேதி... முக்கியச் செய்தி: பழிவாங்கப்பட்ட பத்திரிகையாளர்!

இதே தேதி... முக்கியச் செய்தி: பழிவாங்கப்பட்ட பத்திரிகையாளர்!

அரசையோ அதிகாரவர்க்கத்தையோ நோக்கி கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்கள் ஏதேனும் ஒரு விதத்தில் பழிவாங்கப்படுவது உலகமெங்கும் நடக்கும் விஷயம். ஜனநாயகம் குறித்து உலகுக்கே வகுப்பெடுக்கும் அமெரிக்காவும் இதில் விதிவிலக்கல்ல. அமெரிக்க மண்ணின் பூர்விக மக்களான சிகானோ சமூகத்தினருக்காகக் குரல் கொடுத்த பத்திரிகையாளர் ரூபன் சாலஸார் வெறுமனே பழிவாங்கப்படவில்லை; பலி கொடுக்கப்பட்டார் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.

‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ நாளிதழின் நிருபராகப் பணிபுரிந்த ரூபன் சலாஸார், மெக்ஸிக – அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்தவர். மெக்ஸிகோவிலிருந்து குடிபெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என்பதால் தேசப்பற்று மிக்க அமெரிக்கராகவே வாழ்ந்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் ராணுவத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.

ரூபன் சாலஸார்
ரூபன் சாலஸார்

1959 முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நாளிதழின் நிருபராகப் பணியாற்றத் தொடங்கிய அவர், அந்நாளிதழில் பல முக்கியக் கட்டுரைகளையும் எழுதினார். அந்தக் காலகட்டத்தில் சிகானோ இயக்கத்தினருடன் பரிச்சயம் கிடைத்தது. அந்தச் சமூகத்தினர் அமெரிக்க மண்ணில் எதிர்கொள்ளும் பாரபட்சமான நடவடிக்கைகள் குறித்து விரிவாக அறிந்துகொண்டார். குறிப்பாக, லாஸ் ஏஞ்சல்ஸ் மாநில அரசு அம்மக்களை நடத்தும் விதம் குறித்துத் தொடர்ந்து விமர்சித்து எழுதிவந்தார்.

வெளிநாட்டு சிறப்பு நிருபராகப் பணியாற்றிய அவர், டொமினிகன் குடியரசு நாட்டில் அமெரிக்கா நிகழ்த்திய அடக்குமுறை, வியட்நாம் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அமெரிக்க அரசு குறித்து காத்திரமான விமர்சனங்களை முன்வைத்தார்.

அந்தக் காலகட்டத்தில் வியட்நாம் மீதான அமெரிக்காவின் போரை எதிர்த்து அமெரிக்க மக்கள் சமூகம் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியது. அப்படியான ஒரு போராட்டத்தின்போது, அவர் கொல்லப்பட்டதுதான் அமெரிக்க ஊடகச் சமூகத்தையும் ஜனநாயகவாதிகளையும் அதிரவைத்தது.

1970-ல் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழிலிருந்து விலகி, கேமெக்ஸ் எனும் ஸ்பானிய மொழி செய்தி சேனலில் செய்தி இயக்குநர் பணியில் சேர்ந்திருந்தார். அங்கும் சிகானோ மக்கள் மீதான அடக்குமுறைகளைச் செய்தியாக்கினார். பொதுச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் கேள்விகளை முன்வைத்தார். அவரது செயல்பாடுகளை கவனித்த அரசு எஃப்.பி.ஐ மூலம் அவரைக் கண்காணிக்கத் தொடங்கியது.

1970 ஆகஸ்ட் 29-ல், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிகானோ அமைப்பு ஒன்று வியட்நாம் போருக்கு எதிராக நடத்திய போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்தார். பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள் மீது லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டியின் ஷெரீப் உத்தரவின்பேரில் கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. கலவரம் வெடித்தது. அருகில் இருந்த கடைகள், வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன.

அப்போது, அருகில் இருந்த சில்வர் டாலர் பார் மதுவிடுதியில் சிலர் நுழைந்து பொருட்களைத் திருடுவதாக பார் உரிமையாளர்கள் போலீஸாருக்குத் தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது (போலீஸாரைத் தாங்கள் அழைக்கவில்லை என பார் உரிமையாளர்கள் பிற்பாடு கூறினர்). அப்போது அங்கிருந்தவர்களை நோக்கி கண்ணீர் புகைக் குண்டு துப்பாக்கி மூலம் சுட்டார் ஷெரீஃபின் உதவியாளர் ஒருவர். இதில் ரூபன் சாலஸார் கொல்லப்பட்டார். வேறு இருவரும் அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தனர்.

அவர் கொல்லப்பட்டது எப்படி என்பது குறித்து வெவ்வேறு தகவல்கள் உண்டு. எப்படிப் பார்த்தாலும், அந்தப் போராட்டத்தின்போது வெடித்த வன்முறையால் வெறுப்படைந்த அவர், மன அமைதிக்காக பாரில் அமர்ந்து பீர் அருந்தத் தொடங்கிய நேரத்தில்தான் அவரது கதை முடிக்கப்பட்டது. அவரது மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை. அவரது மரணத்துக்குக் காரணமான காவலருக்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படவில்லை. எனினும், அவரது குடும்பத்தினரிடம் சமரசம் பேசி ஒரு தொகையை லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி வழங்கியது.

மரணத்துக்குப் பின்னர் அவருக்குப் பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டன. வெளிப்படையான, துணிச்சலான பத்திரிகையாளராகப் பலர் உருவெடுக்க அவரது வாழ்வும் மரணமும் ஒரு பாடமாகின.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in