இதே தேதி... முக்கியச் செய்தி: ‘லோக்நாயக்' ஜேபி பிறந்ததினம்!

இதே தேதி... முக்கியச் செய்தி: 
‘லோக்நாயக்' ஜேபி பிறந்ததினம்!

ஜெயப்பிரகாஷ் நாராயண்- இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் அழிக்கவே முடியாத பெயர். கடும் அடக்குமுறையுடன் அரசு செயல்பட்டாலும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து அடக்குமுறையை வெல்ல முடியும் எனும் நம்பிக்கையை விதைத்தவர் அவர். சமரசத்துக்கு இடம் கொடுக்காமல் களமாட முடியும் எனும் உத்வேகத்தையும் தந்தவர். இந்திய சுதந்திரப் போராட்டம், பிஹார் மாணவர் போராட்டம், பூமிதான இயக்கம், நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டம் என வாழ்நாள் முழுவதும் போராளியாக, சமூகச் செயற்பாட்டாளராக இருந்தவர். ஜேபி என்று அழைக்கப்படும் ஜெயப்பிரகாஷ் நாராயணின் வரலாறு இன்றைய இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியப் பாடம்!

1902 அக்டோபர் 11-ல், அன்றைய ஐக்கிய மாகாணத்தில் இருந்த பலியா மாவட்டத்தின் சிதப்தியாரா கிராமத்தில் பிறந்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயண். அவரது தந்தை ஹர்ஷு தயாள், அரசின் கால்வாய்த் துறையில் இளநிலைப் பொறியாளராக இருந்தவர். பணியின் காரணமாகப் பல ஊர்களுக்கு அவர் பயணிக்க வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் கிராமத்தில் உள்ள பள்ளியில் படித்துவந்த ஜேபி பின்னர் பாட்னாவில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அது கல்லூரியும் இணைந்த பள்ளி. அங்குள்ள சரஸ்வதி பவன் மாணவர் விடுதியில் தங்கிப் படித்தார் ஜேபி. அங்கு தங்கிப் படித்தவர்களில், பின்னாட்களி பிஹாரின் முதல் முதல்வராகப் பதவியேற்ற ஸ்ரீ கிருஷ்ண சின்ஹா, பிஹாரின் முதல் துணை முதல்வர் அனுராக் நாராயண் சின்ஹா போன்றோரும் இருந்தனர்.

கல்வியில் சிறந்தவரான ஜேபி, உயர் கல்விக்காக, 1922-ல் அமெரிக்காவுக்குச் சென்றார். பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வேதியியல் பயின்றார். அங்கு கல்விக் கட்டணம் அதிகம் என்பதால் அதற்காகப் பணம் ஈட்ட மெக்கானிக், விற்பனைப் பிரதிநிதி எனப் பல்வேறு வேலைகளைச் செய்தார். அந்த அனுபவம், தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் குறித்த பார்வையை அப்போதே அவருக்குள் விதைத்தது.

ஒருகட்டத்தில், கல்விக் கட்டணம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டதால் , பெர்க்லி பல்கலைக்கழகத்திலிருந்து விலகி, அயோவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இப்படிப் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாற வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் சமூகவியல் பயிலத் தொடங்கினார். எட்வர்டு ஆல்ஸ்வொர்த் ரோஸ் எனும் பேராசிரியர் அவருக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்தார். அப்போது கார்ல் மார்க்ஸ் நூல்களை ஆழ்ந்துவாசித்த ஜேபி, அவரது ‘மூலதனம்’ (Das Kapital) நூலால் கவரப்பட்டார். மக்களின் துன்பத்தைப் போக்க மார்க்ஸியமே ஒரே தீர்வு எனும் முடிவுக்கு வந்தார்.

ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு மார்க்ஸியராகவே இந்தியா திரும்பினார். ஜவாஹர்லால் நேருவின் அழைப்பின் பேரில் காங்கிரஸில் இணைந்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று பல முறை சிறை சென்றார். 1932-ல் சட்ட மறுப்பு போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ராம் மனோகர் லோஹியா போன்ற சோஷலிஸத் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. சிறையிலிருந்து வெளிவந்த பின்னர், 1934-ல், ஆச்சார்யா நரேந்திர தேவாவைத் தலைவராகக் கொண்டு காங்கிரஸ் சோஷலிஸக் கட்சியைத் தொடங்கினார். அதன் பொதுச் செயலாளராகவும் இருந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்குள் செயல்பட்டுவந்த இடதுசாரி அமைப்பு அது.

1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் தொடங்கியபோது, சூரஜ் நாராயண் சிங், குலாப் சந்த் குப்தா போன்றோருடன் இணைந்து தலைமறைவு இயக்கத்தைத் தொடங்கினார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகத் தலைமறைவாக இயங்கிய அந்த அமைப்பில் ராம் மனோகர் லோஹியா போன்ற தலைவர்களும் இணைந்துகொண்டனர். 1943-ல் ஜேபி மீண்டும் கைதுசெய்யப்பட்டார். மூன்று ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பின்னர் விடுதலையான அவர், 1947-ல் இந்திய ரயில்வே தொழிலாளர்களின் கூட்டமைப்பின் தலைவரானார்.

1952-ல் காங்கிரஸ் சோஷலிஸக் கட்சியும், ஆச்சாரியா கிருபளானியின் கிஸான் மஜ்தூர் பிரஜா கட்சியும் இணைந்து பிரஜா சோஷலிஸக் கட்சி உருவானது. ஒருகட்டத்தில், அரசியல் செயல்பாடுகளிலிருந்து விலகி சமூக ரீதியிலான செயல்பாடுகளில் ஆர்வம் காட்டினார். அப்படித்தான் வினோபா பாவேவின் பூமிதான இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். பின்னர் மீண்டும் அரசியல் பக்கம் வந்த அவர், இந்திய அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனக் குரல் கொடுத்தார். மத்திய அரசு, மாநில அரசு என்று மட்டும் அதிகாரம் குவிந்திருக்கக் கூடாது; கிராமம், மாவட்டம், மாநிலம், ஒன்றியம் என அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஒருகட்டத்தில் இந்தியாவின் தவிர்க்க முடியாத தலைவராக உயர்ந்தார்.

1970-களில் நாட்டில் நிலவிய வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தன. பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. 1973-ல் குஜராத்தில் தொடங்கிய நவ நிர்மாண் இயக்கத்தில் பங்கேற்க ஜேபிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் தொடங்கிய பிஹார் மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டார். இந்தச் சூழலில், இந்திரா காந்தி அரசு 1975 ஜூன் 25-ல் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்தது. ஏராளமான தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

அன்றைய தினம் டெல்லி ராம்லீலா மைதானத்தில், ஜேபி கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். மொரார்ஜி தேசாய், அடல் பிஹாரி வாஜ்பாய், சந்திரசேகர் போன்ற தலைவர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், ராம்தாரி சிங் தின்கர் எழுதிய ‘சின்ஹாஸன் காலி கரோ... கி ஜனதா ஆத்தி ஹை’ எனும் புகழ்பெற்ற கவிதை வரியை ஆக்ரோஷத்துடன் வாசித்தார் ஜேபி. ’சிம்மாசனத்தைவிட்டு இறங்குங்கள்... மக்கள் கூட்டம் வருகிறது’ என்பது அதன் அர்த்தம்.

பின்னர் ஜேபியும் கைதுசெய்யப்பட்டார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச அளவில் குரல்கள் எழுந்தன. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நோயல் பேக்கர் உள்ளிட்டோர் அவரது கைதைக் கண்டித்தனர். சிறையில் ஜேபிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 1975 நவம்பர் 12-ல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

1977-ல் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைத் திரும்பப் பெற்று தேர்தல் அறிவித்தார். அதன் பின்னர் நடந்த தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. புதிய அரசை உருவாக்குவதிலும் ஜேபியின் பங்கு இருந்தது.

1979 அக்டோபர் 8-ல் ஜேபி காலமானார். தனது இறுதிமூச்சு வரை தொழிலாளர்களுக்காகவும், சாமானிய மக்களுக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் குரல் கொடுத்தார். அதனால்தான் அவர் லோக்நாயக் (மக்கள் தலைவர்) என அழைக்கப்பட்டார்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in