இதே தேதி... முக்கியச் செய்தி: அகிலம் விரும்பும் அமைதி!

இதே தேதி... முக்கியச் செய்தி: அகிலம் விரும்பும் அமைதி!

அமைதி - இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரும் எதிர்பார்க்கும் விஷயம். புவி அரசியல் ரீதியாகச் சொன்னால் ஒவ்வொரு நாடும் விரும்பும் அம்சம் இதுதான். ஆனால், இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் ஏதேனும் ஒரு விதத்தில் அமைதியின்மையை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, உள்நாட்டுக் கலகங்கள், அண்டை நாட்டுடன் போர்ச் சூழல் போன்ற பிர்ச்சினைகளில் சிக்கித் தவிக்கும் நாடுகள் அமைதிக்கு ஏங்கித் தவிக்கின்றன. எனவேதான், ஆண்டுதோறும் சர்வதேச அமைதிக்கான நாள் என ஒரு நாளை ஐநா அனுசரிக்கிறது!

அமைதி, ஒற்றுமை எனும் பதங்களின் அர்த்தம், அனைத்துத் தரப்பினரும் வன்முறைச் சம்பவங்களின்றி ஒன்றாக இணைந்து வாழ்வதுதான். உலகம் எத்தனையோ போர்களைச் சந்தித்திருக்கிறது. இன்றும் சந்தித்துவருகிறது. ஆனால், முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் உலக நாடுகள் மீது ஏற்படுத்திய நேரடி மற்றும் மறைமுக பாதிப்புகள் இன்று வரை ஏதேனும் ஒரு வகையில் தாக்கம் செலுத்திக்கொண்டே இருக்கின்றன. எனவே, போர்களின் பாதிப்பு இல்லாத அமைதியான உலகத்தை உருவாக்க, அக்கறையுள்ள தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்றனர்.

அதன் நீட்சியாக, 1981-ல் ஐநா தீர்மானித்த விஷயம் இது. அந்த ஆண்டில், ஐநா பொதுச் சபையில், பிரிட்டனும் கோஸ்டாரிகா நாடும் இணைந்து ஒரு தீர்மானத்தை அறிமுகப்படுத்தின. உலக அமைதியின் லட்சியத்தை நினைவுகூர்வதற்கும் வலுப்படுத்துவதற்குமான ஒரு சர்வதேச தினத்தை அறிவிக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது. அதன்படி ஐநா பொதுச் சபையின் வருடாந்திரக் கூட்டத்தின் தொடக்க நாளில் இந்த தினத்தை அனுசரிப்பது என ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டது. 1982-ம் ஆண்டிலிருந்து அந்த தினத்தில் இது கொண்டாடப்பட்டுவந்தது.

அமைதியின் முக்கியத்துவத்தை உலக மக்கள் மனதில் அழுந்தப் பதிவுசெய்வதுதான் இதன் அடிப்படை நோக்கமாக இருந்தது. உலக அமைதிக்காக ஆலிவ் இலைகளைக் கவ்வியபடி பறக்கும் அமைதிப் புறா இந்த நாளின் அடையாளங்களில் ஒன்று. ஒவ்வொரு நாட்டின் மக்களும் தங்கள் சக குடிமக்களை மதிக்க வேண்டும்; ஒவ்வொரு நாடும் பிற நாட்டை மதிக்க வேண்டும் என்பது இதன் அடிப்படை நோக்கம்.

உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த தினத்தைக் கொண்டாடுகின்றன. அமைதியின் அவசியம் குறித்த கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. அமைதி நிலவும் மண்ணில்தான் மக்கள் தங்கள் பணிகளை ஒழுங்காகச் செய்ய முடியும். அமைதி தவழும் நாட்டில்தான் தொழில் வளர்ச்சி சாத்தியமாகும். பொது நோக்கம் ஒன்றுதான் என்றாலும் ஆண்டுதோறும், அவ்வப்போதைய பிரச்சினைகள், நெருக்கடிகள் போன்றவற்றை மையமாகக் கொண்டு சர்வதேச அமைதி தினத்தின் நோக்கங்கள் தீர்மானிக்கப்பட்டன. அதற்கேற்ப ஐநா பொதுச் சபை மற்றும் உலக நாடுகளின் தலைவர்களின் உரைகள் அமைந்தன.

வழக்கம்போல, 2001-ம் ஆண்டிலும் ஐநா பொதுச் சபைக் கூட்டம் தொடங்கும் நாளில் சர்வதேச அமைதி தினத்தைக் கொண்டாட திட்டமிடப்பட்டிருந்தது. அதாவது, 2001 செப்டம்பர் 11-ம் தேதி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அன்றைய தினம்தான் 9/11 தாக்குதல்கள் என அழைக்கப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அமெரிக்காவில் நடந்தன. இதையடுத்து, செப்டம்பர் 21-ம் தேதியை சர்வதேச அமைதி தினமாகக் கொண்டாட அதே பிரிட்டனும், கோஸ்டாரிகாவும் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அந்தத் தீர்மானத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி அன்று, சர்வதேசத் தலைவர்கள் அமைதியின் முக்கியத்துவம் குறித்து காத்திரமான உரைகளை வெளியிடுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான சர்வதேச அமைதி தினச் செய்தியில், ‘இனவெறியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்’ என வலியுறுத்தியிருக்கிறார் ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குத்தேரஸ். குறிப்பாக, கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான காலகட்டத்தில், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை உலக நாடுகள் எதிர்கொண்டிருக்கும் காலகட்டத்தில் இனவெறி, வன்முறை, வறுமை போன்றவற்றுக்கு முடிவுகட்ட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

உலகம் சமநிலை பெறட்டும்; உயர்வு தாழ்வில்லா நிலை மலரட்டும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in