இதே தேதி... முக்கியச் செய்தி: திரைப்படங்களுக்கு முன்னதாகவே திரைக்கு வந்த அனிமேஷன் படங்கள்!

இதே தேதி... முக்கியச் செய்தி:  திரைப்படங்களுக்கு முன்னதாகவே திரைக்கு வந்த அனிமேஷன் படங்கள்!

அனிமேஷன் திரைப்படங்களுக்கு வயது வித்தியாசம் இன்றி எல்லாத் தரப்பிலிருந்தும் ரசிகர்கள் உண்டு. முன்னணி ஹாலிவுட் இயக்குநர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரோன் தொடங்கி பாலிவுட்டின் முக்கிய இயக்குநரான அனுராக் காஷ்யப் வரை பலரும் அனிமேஷன் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்கள். மிக்கி மெளஸ், பாப் ஐ தொடங்கி மோட்டு - பத்லு வரை எண்ணற்ற அனிமேஷன் கதாபாத்திரங்கள் அந்தந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த சிறார்களின் வாழ்க்கையில் ரசனையையும் நகைச்சுவை உணர்வையும் விதைத்தவை. உண்மையில், வழக்கமான திரைப்படங்களின் வரலாறு தொடங்குவதற்கு முன்பே அனிமேஷன் வரலாறு தொடங்கிவிட்டது.

ஆம்! 1895 டிசம்பர் 28-ல் லூமியர் சகோதரர்கள் காட்சிப்படுத்திய திரைப்படக் காட்சித் தொகுப்புகளுக்கு முன்னதாக, 1892-லேயே அனிமேஷன் படங்கள் ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கிவிட்டன. வரைகலை, வியக்கவைக்கும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் துணையுடன் அதைச் சாத்தியமாக்கியவர் சார்லஸ் எமிலி ரெனாட்.

1844 டிசம்பர் 8-ல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகில் உள்ள மோன்ட்ரயில் சோஸ் போய்ஸ் எனும் நகரில் பிறந்தவர் ரெனாட். அவரது தந்தை புரூட்டஸ் ரெனாட் ஓர் இன்ஜினியர். தாய் மேரி ஆசிரியையாகப் பணியாற்றிவந்தார். ரெனாடை வளர்ப்பதற்காகப் பணியிலிருந்து விலகிய மேரி, தனது மகனுக்கு ஓவியக் கலையைப் பயிற்றுவித்தார். தந்தை சின்னச் சின்ன நீராவி இன்ஜின்களை உருவாக்க கற்றுக்கொடுத்தார். இப்படி கலையையும் தொழில்நுட்பத்தையும் கற்றறிந்த ரெனாட், பின்னாட்களில் ஒரு புகைப்படக் கலைஞராக உருவெடுத்தார்.

அத்துடன், இயற்பியலறிஞரும் கத்தோலிக்கப் பாதிரியாருமான அப்பே மோய்க்னோவின் உதவியாளராகப் பணியாற்றிவந்தார். பாரிஸ் நகரில் மேஜிக் லேன்ட(ர்)ன் என அழைக்கப்பட்ட ப்ரொஜக்டரை வைத்து உரையாற்றும் வழக்கம் கொண்டிருந்த அப்பே மோய்க்னோ இரண்டு முக்கிய விஷயங்களைச் செய்தார். மதப் பின்னணி இல்லாமல் பெற்றோரால் வளர்க்கப்பட்ட ரெனாடை கத்தோலிக்கக் கிறித்துவராக மாற்றினார். ப்ரொஜெக்டர்கள் மூலம் புகைப்படங்களைத் திரையில் காட்டும் கலையையும் அவருக்குக் கற்றுத்தந்தார்.

சார்லஸ் எமிலி ரெனாட்
சார்லஸ் எமிலி ரெனாட்

பின்னாட்களில் ரெனாடும் அறிவியல் தொடர்பான உரைகளை மேஜிக் லேன்ட(ர்)ன் புரொஜக்டர்களின் துணையுடன் மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் நிகழ்த்திவந்தார். அந்தக் காலகட்டத்தில் ’லா நேச்சர்’ எனும் அறிவியல் இதழில் ‘ஆப்டிக்கல் டாய்ஸ்’ (உருவங்களைத் திரையில் காட்ட பயன்படுத்தப்பட்ட சாதனம்) தொடர்பாக வெளியான கட்டுரைகள் அவரது கவனத்தை ஈர்த்தன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு, 1876-ல் பிராக்ஸினாஸ்கோப் எனும் கருவியை அவர் உருவாக்கினார். அதற்கான காப்புரிமையையும் பெற்றார்.

பின்னர் அந்தக் கருவியை மேம்படுத்தி ‘தியேட்டர் ஆப்டிக்’ எனும் சாதனத்தை 1888-ல் உருவாக்கினார். உண்மையில் அந்த சாதனத்தை விற்கவே ஆரம்பத்தில் அவர் விரும்பினார். எனினும், அந்த முயற்சி கைகூடாததால் அவரை அதை வைத்து திரையிடல்களை நடத்த முடிவெடுத்தார். அதுதான் உருவங்களைத் தொடர்ச்சியாகத் திரையில் விழவைத்து, அசைவுகளுடன் கூடிய சித்திரங்களாகக் காட்சிப்படுத்திய சாதனமாக அமைந்தது. இதற்கு முன்னரும் பலர் இதுபோன்ற முயற்சிகளைச் செய்திருந்தாலும் ரெனாடின் சாதனம், எந்தத் தடங்கலும் இல்லாத வகையில் அனிமேஷன் அசைவுகளை உருவாக்கியது.

1892 அக்டோபர் 28-ல் பாரிஸின் மியூஸி க்ரெவின் எனும் கலையரங்கில் முதன்முறையாகத் தனது அனிமேஷன் படங்களைத் திரையிட்டார். சொல்லப்போனால், அப்போது வசனம், பாடல்கள், பின்னணி இசை போன்ற அம்சங்களையும் அந்தப் படங்களில் அவர் சேர்த்து வழங்கினார். வெறுமனே கதாபாத்திரங்கள் மட்டும் அல்ல; கட்டிடங்கள், பூங்காக்கள் என கதை நடக்கும் இடங்கள் பின்னணியில் ஒரு லேயரில் இருக்கும். இதற்காக, இன்று ப்ளூ மேட், கிரீன் மேட் பயன்படுத்தப்படுவதுபோல, கறுப்பு காகிதத்தில் கதாபாத்திரங்களை வரைந்தார். கதாபாத்திரங்கள் முதன்மை லேயரில் அசைவுகளுடன் காட்டப்படும். காஸ்டன் பாலின் எனும் இசைக்கலைஞர் பியானோ வாசிக்க, ரெனாடின் உதவியாளர்கள் இருவர் அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு ‘டப்பிங்’ கொடுத்தனர். வெறுமனே ப்ரொஜெக்ட் செய்யும் பணியல்ல இது. அந்த சாதனத்தை இயக்கும் முழுப் பொறுப்பும் ரெனாடைச் சார்ந்தது. எனவே, ஒவ்வொரு காட்சிக்கும் அவர் தனது உடல் உழைப்பையும் செலுத்த வேண்டியிருந்தது.

அவரது இந்த அபார முயற்சிக்குப் பலன் கிடைக்கவே செய்தது. ரசிகர்கள் ஏராளமாகக் குவிந்தனர். சில வினாடிகளே ஓடும் அந்தக் குறும்படங்களை ரசித்தார்கள். தினமும் ஐந்து காட்சிகளாக அனிமேஷன் படங்கள் திரையிடப்பட்டன. எனினும், 1895-ல் லூமியர் சகோதரர்களின் திரைப்படங்களின் வருகை ‘தியேட்டர் ஆப்டிக்’ தொழில்நுட்பத்தை வழக்கொழிந்ததாக ஆக்கியது. ஏற்கெனவே, மியூஸி க்ரெவின் அரங்குடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் ரெனாடுக்குக் கிடைத்துவந்த தொகை குறைவுதான். கேமராவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட, நிஜ மனிதர்கள் தோன்றும் திரைப்படங்களின் வருகையால், அவரது அனிமேஷன் படங்களுக்கான வரவேற்பு குறைந்தது.

எல்லா முன்னோடிகளையும் போலவே வறுமையில் வாடிய ரெனாட், தனது கலை மக்களால் மறக்கப்பட்டுவிட்டதை எண்ணி வேதனையில் ஆழ்ந்தார். தன்னிடம் மிச்சம் இருந்த சில அனிமேஷன் படங்களை செய்ன் ஆற்றில் தூக்கி எறிந்தார். அந்த ஆற்றின் கரையில் அமைந்திருந்த மருத்துவப் பராமரிப்பு இல்லம் ஒன்றில் இறுதிநாட்களைக் கழித்த ரெனாட், 1917 மார்ச் மாதம் மரணமடைந்தார்.

அவரது தொழில்நுட்பத்தை சினிமா தொழில்நுட்பமாக அங்கீகரிக்க நவீனத் திரையுலகம் மறுத்துவிட்டது. எனினும், திரைப்படங்களுக்கான தொடக்கப்புள்ளியாக இருந்தது அவரது ‘தியேட்டர் ஆப்டிக்’ தான் எனப் பின்னாட்களில் பலரும் ஒப்புக்கொண்டனர். அவர் உருவாக்கிய சில அனிமேஷன் படங்கள் இன்றைக்கு யூடியூபிலும் பார்க்கக் கிடைக்கின்றன.

ரெனாடின் அனிமேஷன் படங்கள் முதன்முதலில் திரையிடப்பட்ட அக்டோபர் 28-ம் தேதியை, சர்வதேச அனிமேஷன் தினமாக சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம் கொண்டாடுகிறது. இந்நிகழ்வின்போது உலமெங்கும் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அனிமேஷன் கலை குறித்த பயிலரங்குகளும் நடத்தப்படுகின்றன.

இன்றைக்கு இருபரிமாணம் (2டி), முப்பரிமாணம் (3டி), ஸ்டாப் மோஷன் என ஏராளமான தொழில்நுட்பங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், 130 ஆண்டுகளுக்கு முன்னர் தனது அபாரக் கற்பனை வளத்தாலும், தொழில்நுட்பத் திறனாலும், அயராத உழைப்பாலும் அனிமேஷன் படங்களுக்குத் தொடக்கப் புள்ளி வைத்தார் ரெனாட். அற்புதங்கள் மனிதர்கள் மூலம்தானே நிகழ்கின்றன!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in